கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

தமிழ் ஹரிஜன்: மகாத்மா காந்தி நடத்திய வார இதழின் தொகுப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் ஹரிஜன்: மகாத்மா காந்தி நடத்திய வார இதழின் தொகுப்பு

‘தீண்டாமை ஒழிப்பு’ என்னும் கட்டுரையில் காந்தி ‘நான் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வராத பட்டியலின மக்களைக் குறைகூற மாட்டேன், உங்களைத்தான் குறைகூறுவேன்.

பட்டியலின மக்களுக்காக மகாத்மா காந்தி 1933-ம் ஆண்டு ஆங்கிலத்தில் ‘ஹரிஜன்' எனும் வார இதழைத் தொடங்கினார். அதில் இந்து - முஸ்லிம் ஒற்றுமை, அகிம்சையின் அடிப்படை, சாதியச் சிக்கல்கள் எனப் பரந்து விரிந்த பாரத தேசத்தின் அனைத்து சிக்கல்களையும் பேசியிருப்பார். அக்காலகட்டத்தில் காந்தியை நேரில் சந்தித்த விடுதலைப் போராட்டத்தில் இணைந்த தியாகி சின்ன அண்ணாமலை, இந்த இதழைத் தமிழில் கொண்டு வரவேண்டும் என்னும் விருப்பத்தைத் தெரிவித்தார். காந்தி அதற்கு சம்மதம் சொல்ல, அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘தமிழ் ஹரிஜன்’ எனும் வார இதழ். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், பொ.திருகூடசுந்தரம் இவ்விதழில் பொறுப்பாசிரியராக இருந்துள்ளனர். 1946 முதல் 1947 வரை ஓராண்டில் வெளியான 52 இதழ்களை இதில் கிருங்கை சேதுபதி, அருணன் கபிலன் ஆகியோர் தொகுத்திருக்கின்றனர்.

இதில் ‘தீண்டாமை ஒழிப்பு’ என்னும் கட்டுரையில் காந்தி ‘நான் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வராத பட்டியலின மக்களைக் குறைகூற மாட்டேன், உங்களைத்தான் குறைகூறுவேன். அவர்கள் வராததற்குக் காரணம் ஆயிரக்கணக்கான வருடங்களாக அவர்களை மதத்தின் பெயரால் ஒதுக்கி வைத்திருப்பதுதான்' என்று தனது பிராத்தனைக் கூட்டத்திற்குப் பட்டியலின மக்கள் வராததைக் குறித்து எழுதியிருக்கிறார். ‘ஜாதி ஒழிக’ எனும் கேள்வி பதில் தலைப்பில் ‘இந்து மதம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் ஜாதி அழிய வேண்டும்’ என்று கூறுகிறார். மற்றொரு தலைப்பில் சாதி மறுப்புத் திருமணங்களையும் ஆதரித்துப் பேசுகிறார்.

தமிழ் ஹரிஜன்: மகாத்மா காந்தி நடத்திய வார இதழின் தொகுப்பு
தமிழ் ஹரிஜன்: மகாத்மா காந்தி நடத்திய வார இதழின் தொகுப்பு

அக்காலகட்டத்தில் ஓய்வே இன்றி தேசம் முழுக்கச் சுற்றி வந்த காந்தி, பயண நேரத்தை வீணாக்காமல் எழுதியது, கூட்டங்களில் ஆற்றிய உரையை செய்தியாகக் தொகுத்தளித்தது என இதழின் பெரும் பங்கை அவரே செய்தார். மேலும் பட்டியலின மக்களுக்கு இவ்விதழ் இலவசமாக வழங்கப்பட்டது . ஒவ்வொரு படைப்புக்கும் இறுதியில் உலக அறிஞர்களின் தத்துவங்கள் கூடுதலாக இடம்பிடித்து இருப்பதையும் இதில் காணலாம். இவ்விதழில் எந்த ஒரு விளம்பரமும் கடைசிவரை இடம்பெறவில்லை.

சுதந்திரத்தை நெருங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் என்ன நடந்தது, இந்து-முஸ்லிம் மதநல்லிணக்கம் குறித்த காந்தியின் அறிவுரைகள் என்ன, இந்துஸ்தானி என்ற ஒரு புதிய மொழியை காந்தி முன்மொழியக் காரணம் என்ன என்பது போன்ற வரலாற்றுக் கேள்விகளுக்கு அக்காலகட்டத்திற்கே கூட்டிச் சென்று பதிலைக் காட்டும் காலக்கண்ணாடியாகத் திகழ்கிறது தமிழ் ஹரிஜன். இப்படி காந்தியின் இறுதி நாள்களின் கருத்தோட்டங்களைச் சேமித்து வைத்த இந்தத் தகவல் களஞ்சியம் ஒரு வரலாற்று ஆவணம் என்றே சொல்லலாம்.

தமிழ் ஹரிஜன்: மகாத்மா காந்தி நடத்திய வார இதழின் தொகுப்பு

தொகுப்பு: கிருங்கை சேதுபதி, அருணன் கபிலன்.

வெளியீடு: முல்லை பதிப்பகம்,

323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600040.

விலை: ரூ.1,500

பக்கங்கள்: 940

தொடர்புக்கு: 98403 58301