சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

ஆகோள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆகோள்

நாவலின் அடுத்த காட்சி 2032-க்குத் தாவுகிறது. தொழில்நுட்பத்தால் நிறைந்து விளங்கும் நவீன உலகம். அனைத்தும் டிஜிட்டல் என்று மாறிவிட்ட அவசர உலகத்தை ஜெல்லி வைரஸ் என்னும் ஆபத்து சூழ்கிறது.

தமிழில் அறிவியல் புனைவுகள் மிகக் குறைவு. அவற்றிலும் இலக்கியம் என்று பொருட்படுத்தத் தக்கவை மிகச் சிலவே. தமிழ்ச்சூழலுக்கான கதைக் களத்தையும் அறிவியல் புனைவையும் கலந்து நாவலாகச் செய்வது மிகவும் நுட்பமான செயல்பாடு. கொஞ்சம் பிசகினாலும் நகைப்பைத் தந்துவிடும் அபாயம் நிறைந்தது. அப்படிப்பட்ட சிக்கல்களைத் தாண்டி அருமையான நாவலாக வெளிவந்திருக்கிறது கபிலன் வைரமுத்துவின், ‘ஆகோள்.'

குற்றப்பரம்பரையினர் என்று முத்திரை குத்தப்பட்ட தொல்குடி ஒன்றின் மக்களிடம் இருந்த ஆயுதங்களைப் பிடுங்கிய அரசாங்கம், அவற்றை ஒரு இடத்தில் வைத்துப் பாதுகாக்கிறது. அவற்றை தொல்குடியின் சில வீரர்கள் மீட்க முயல்கிறார்கள். துப்பாக்கி தாங்கிய காவலர்களைத் தாண்டி அவர்கள் எப்படி அந்த ஆயுதங்களை மீட்கிறார்கள் என்னும் 1920-ம் ஆண்டில் நடைபெறும் பரபரப்பான காட்சியோடு தொடங்குகிறது நாவல்.

ஆகோள்
ஆகோள்

நாவலின் அடுத்த காட்சி 2032-க்குத் தாவுகிறது. தொழில்நுட்பத்தால் நிறைந்து விளங்கும் நவீன உலகம். அனைத்தும் டிஜிட்டல் என்று மாறிவிட்ட அவசர உலகத்தை ஜெல்லி வைரஸ் என்னும் ஆபத்து சூழ்கிறது. தனிமனிதன் குறித்த தகவல்கள் திருடப்படுகின்றன. இதன் பின்னணியில் மெய்நிகர் உலகை உருவாக்க முனையும் ஒரு கும்பல் செயல்படுகிறது. ஒருகட்டத்தில் ஒட்டுமொத்தமாக உலகின் இயக்கமும் நின்றுபோகும் அபாயம் சூழ்கிறது. அதிலிருந்து தப்பிக்கவும் இந்திய மக்களின் தகவல்களைப் பாதுகாக்கவும் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கும் திட்டம்தான், ‘வீர் ஜடாயு' என்னும் கால ரயில். சுமார் 200 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று திரும்பும் இயந்திரம். இது ஏன் உருவாக்கப்படுகிறது? எங்கு போய்ச் சேர்கிறது? அங்கு நிகழும் குழப்பங்கள் என்னென்ன? அவை எவ்வாறு சரிசெய்யப்படுகின்றன என்று பல சுவாரஸ்யமான முடிச்சுகளோடு நாவல் வேகமாக நகர்கிறது.

குற்றப்பரம்பரையினரின் கைரேகைகளைப் பெற ஆங்கிலேய அரசாங்கம் நிகழ்த்தும் வன்முறையும், திருடப்பட்ட அடையாளங்களைக்கொண்டு நவீன யுக மோசடிக்காரர்கள் நிகழ்த்தும் துஷ்பிரயோகமும் எப்படி மனிதர்களை பாதிக்கின்றன என்பதுதான் நாவலின் மையச்சரடு.

‘‘எல்லாத்தையும் டிஜிட்டலா மாத்தணும்னு அடம்பிடிக்கிறவங்க, அந்த டிஜிட்டல் உலகத்துக்கான பாதுகாப்பு பத்தி கொஞ்சமாவது யோசிச்சாங்களான்னு தெரியலை... ஒரு டிஜிட்டல் அப்போகலிப்ஸுக்கு நாம தயாரா?’’ என்று கேட்கும் செங்காவின் குரல் சமகாலத்தின் அறைகூவல்.

எளிமையான மொழி... வேகவேகமாக நகரும் கதைக்களம்... சமூக அக்கறை மிளிரும் வாக்கியங்கள் என ஆகோள், ஒரே அமர்வில் வாசித்து முடிக்கத் தோன்றும் நாவல்.

ஆகோள் - கபிலன் வைரமுத்து

வெளியீடு:
டிஸ்கவரி புக் பேலஸ்,
1055 - பி, முனுசாமி சாலை,
கே.கே. நகர் மேற்கு,
சென்னை-600078
போன்: 8754507070
பக்கம்: 184
விலை: ரூ. 220