Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

நூல் முழுக்கவே பழங்குடியின மக்களின் தொன்மம், வழிபாடு, உணவுப் பழக்கம், சடங்குகள் எனப் பலவற்றை எவ்விதப் பூச்சுகளுமின்றி அவர்களுடன் உரையாடிச் சேகரித்திருக்கிறார் நூலாசிரியர் வெ.நீலகண்டன்

`நாம் நம் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டால் என்னாவோம்?' நினைத்துப் பார்க்கையிலேயே திசைகள் இருளும் இந்த நிலைக்குப் பல்லாயிரம் மக்கள் குடும்பம் குடும்பமாகத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஆம், மலைகள், காடுகளில் வாழ்ந்த இந்நிலத்தின் தொல்குடி மக்கள் பலரும் இன்றைய நவீன நிலத்தில் நாடோடிகளாக வாழ்கின்றனர். தங்கள் வாழ்க்கை, பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றை இழந்திருக்கின்றனர். முறையாக ஆவணப்படுத்தப்படாத இப்படிப்பட்ட தொல்குடி இனங்கள் குறித்த விரிவான பதிவே, `பேய்க்காட்டுப் பொங்கலாயி' நூல். பூம் பூம் மாட்டுக்காரர்களாக அறியப்படும் ஆதியன் இனக்குழு, ஜவ்வாது மலை மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் வாழும் மலையாளிகள், நீலகிரியின் முதன்மை மூதாதைச் சமூகமான கோத்தர், திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களில் வசிக்கும் காணிக்காரர்கள் என்ற நான்கு இனக்குழுக்களின் வாழ்வியல் தொகுப்பு இது.

படிப்பறை
படிப்பறை

இயற்கை வழிபாடுகளும், குழுக்களாகச் சேர்ந்து வாழ்வதும் இவர்களின் சாரம். ஆதியன் மக்களின், `கடவுள் கொடுத்த சாபம்', காணிக்காரர்களின் `ஏழு சகோதரிகள் கதை' என அவர்களின் வாய்மொழிக் கதையுடன், மானுடவியலாளர் எட்கர் தர்ஸ்டனின் தரவுகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வெறும் 3,000 மனிதர்களை மட்டுமே கொண்ட கோத்தர் இனக்குழு, காணிக்காரர்களின் `ஆவி வழிபாடு', ஆதியன்களின் `திருமணத்துக்கு ஆண்கள் வரதட்சணை கொடுப்பது' என்பன ஆச்சரியமளிக்கும் வகையிலானவை. ஒவ்வொரு இனக்குழுவின் பாடல்கள், இசை, நாடகம் என அவர்கள் மரபின் அத்தனை வேர்களும் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இயற்கையின் மீதும், அதைக் காப்பதிலும் இம்மக்களுக்குள்ள பொறுப்புணர்வை அறிந்துகொள்ள முடிகிறது.

நூல் முழுக்கவே பழங்குடியின மக்களின் தொன்மம், வழிபாடு, உணவுப் பழக்கம், சடங்குகள் எனப் பலவற்றை எவ்விதப் பூச்சுகளுமின்றி அவர்களுடன் உரையாடிச் சேகரித்திருக்கிறார் நூலாசிரியர் வெ.நீலகண்டன். அதோடு சேர்த்துத் தரவுகளும் புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டிருப்பது நூலின் பலம். வெறும் பண்பாட்டுத் தடங்களாக மட்டுமல்லாமல், சமகாலத்தில் பழங்குடியின மக்களின் பாடுகள் குறித்துக் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன. `இருளர் பெண் சிவப்பாக இருக்க மாட்டாள்' என சாதிச் சான்றிதழ் மறுக்கப்பட்ட பெண்ணும், உயிரை மாய்த்துக்கொண்ட இருவரும் நம் உறக்கத்தைக் கலைப்பர். பழங்குடியின மக்கள் வாழ்வைத் தெரிந்துகொள்ள மிக முக்கிய ஆவணம் இந்நூல்.

பேய்க்காட்டுப் பொங்கலாயி

ஆசிரியர்: வெ.நீலகண்டன்

வெளியீடு: தேநீர் பதிப்பகம்
24/1, மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர்
ஜோலார்பேட்டை - 635851.

தொடர்புக்கு: 9080909600

பக்கம்: 136

விலை: ரூ. 150