சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை - இருளைக் கிழித்த நட்சத்திரம்

இருளைக் கிழித்த நட்சத்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
இருளைக் கிழித்த நட்சத்திரம்

சமீராவும் யுத்தக்களத்துக்கு மத்தியில் இருந்துதான் சினிமா எடுத்தார். ஆப்கானிஸ்தானில் ஷூட்டிங் நடந்தபோது மிகப்பெரும் வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது.

திரைக்கலையைத் தங்கள் சமூகத்தின் சுய விழிப்புக்காகக் கையாண்ட 14 பெண் ஆளுமைகளின் கதையை சிறுகதைக்குரிய தொனியில் எழுதியிருக்கிறார் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பாலு சத்யா. சினிமாப் படைப்பாக்கத்தில் ஏன் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது என்ற கேள்விக்கு இந்த முழுநீள புத்தகத்தில் விரிவான பதில் இருக்கிறது. ஆணாதிக்கமும் மதமும் நிறவெறி அரசியலும் பெண் படைப்பாளிகளின் முனைமுறிக்க எந்த அளவுக்கு நிறுவனமயமாக இயங்குகின்றன என்பதற்கு இந்நூலில் இடம்பெற்றுள்ள பெண் படைப்பாளிகளின் கதைகள் உதாரணம்.

‘தி ஹிட்டன் ஹாஃப்' படத்தை இயக்கிய ஈரானிய இயக்குநர் தஹ்மினே மிலானி, ‘தி ஆப்பிள்' படத்தை இயக்கிய சமீரா மக்மல்பாஃப் இருவரின் கதையும் படிக்க பிரமிப்பாக இருக்கிறது. ‘தி ஹிட்டன் ஹாஃப்' வெளிவந்து ஒருமாதம் கழித்து தஹ்மினேவின் வீடு புகுந்து ஸ்கிரிப்ட்டைப் பறிமுதல் செய்யும் காவல்துறை, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. சிறையில் அவரை அடையாளம் கண்டுகொள்ளும் பிற பெண் சிறைவாசிகள் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து ‘எங்கள் சிரமம் வெளியே தெரியும்படி ஒரு சினிமா எடுங்கள்' என்று கோரிக்கை விடுக்கிறார்கள். ஈரானுக்கு வெளியே இருக்கும் புரட்சிகர அமைப்புகளோடு சேர்ந்து கூட்டுச்சதி செய்ததாக அவர்மீது குற்றம் சுமத்துகிற அதிகார வர்க்கம், உலகம் முழுதுமிருந்து ஏராளமான படைப்பாளிகள் தஹ்மினேவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிய பிறகு பணிகிறது.

சமீராவும் யுத்தக்களத்துக்கு மத்தியில் இருந்துதான் சினிமா எடுத்தார். ஆப்கானிஸ்தானில் ஷூட்டிங் நடந்தபோது மிகப்பெரும் வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. சமீரா நூலிழையில் தப்பினார்; படக்குழுவினர் 6 பேர் உயிரிழந்தார்கள். சமீரா இயக்கிய ஐந்து திரைப்படங்களும் உலகப்பட விழாக்களில் பெரும் வரவேற்பையும் விவாதத்தையும் உருவாக்கின.

படிப்பறை
படிப்பறை

மர்லின் மன்றோ குறித்த கட்டுரையை இந்த நூலின் மையமெனக் கொள்ளலாம். திரையுலகில் எண்ணற்ற சாதனைகள் செய்து பல்லாயிரம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த மர்லின் 36 வயதில் தற்கொலை செய்துகொண்டபோது அவர் உடலருகில் வெகுசில நண்பர்களே நின்றார்கள். மனதில் தோன்றி உலுக்குகிறது அந்தக் காட்சி.

பாலு சத்யாவின் எழுத்திலிருக்கிற வசீகரம், 110 பக்க நூலையும் ஒரே மூச்சில் படிக்க வைக்கிறது. பெண்கள் படைப்புத்துறையில் இயங்கும்போது அதிகார வர்க்கம் அவர்களை எப்படியெல்லாம் மூர்க்கமாக ஒடுக்க முனைகிறது என்ற சர்வதேச வரலாற்றை முன்வைப்பதிலும் இந்த நூல் முக்கியமானது.

இருளைக் கிழித்த நட்சத்திரம் - பாலு சத்யா

வெளியீடு: அம்ருதா பதிப்பகம், எண்-12, கோவிந்த் ராயல் நெஸ்ட் அபார்ட்மெண்ட், 3வது பிரதான சாலை, 2வது விரிவு, கிழக்கு சி.ஐ.டி நகர், நந்தனம், சென்னை-600035

தொடர்பு எண்: 94440 70000; 044- 24353555

பக்கங்கள்: 110

விலை: ரூ.125