Published:Updated:

“தமிழில் ஒரு நூல் இந்த இடத்தை அடைந்தது மகிழ்ச்சி!”

பெருமாள் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
பெருமாள் முருகன்

இதுவரை என் நூல்கள் 10 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அனிருத்தன் எனது 5 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். நானும் அவரும் கலந்துரையாடியே மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வோம்.

சர்வதேச அளவில் இலக்கியத்திற்காகக் கொடுக்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்று, சர்வதேச புக்கர் பரிசு. இந்த ஆண்டுக்கான பரிந்துரைப் பட்டியலில் பெருமாள் முருகன் எழுதிய ‘பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Pyre' இடம்பிடித்துள்ளது. இந்நாவலின் மொழிபெயர்ப்பை அனிருத்தன் வாசுதேவன் செய்துள்ளார். இதுவரையில் புக்கர் விருதினை அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி என இந்தியர்கள் வென்றிருந்தாலும், அவர்கள் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதினர். கீதாஞ்சலி  இந்தியில் எழுதிய ‘Tomb of Sand' நாவல், 2022-ம் ஆண்டு சர்வதேச புக்கர் பரிசினை வென்று இந்நிலையை மாற்றியது. அந்நாவலை டெய்சி ராக்வெல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, இந்திய மொழிகளில் பரிசு பெற்ற முதல் நூல் என்னும் பெருமையை அது பெற்றது.

கடந்த 22 வருடங்களாகக் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு நூல், அகராதி என நவீன இலக்கியத்துக்குப் பெருமாள் முருகன் ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது. அவரிடம் பேசினேன்.

பெருமாள் முருகன், ராகுல் காந்தி
பெருமாள் முருகன், ராகுல் காந்தி

``புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்த முதல் தமிழ் நாவல் உங்களுடையது. இந்தத் தருணம் எப்படி இருக்கிறது?’’

‘‘மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 2013-ம் ஆண்டு ‘பூக்குழி’ வெளியானது. 2017-ல் அனிருத்தன் வாசுதேவன் ‘Pyre’ எனும் தலைப்பில் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புக்கர் பரிசுக்கு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் வெளியாகும் மொழிபெயர்ப்புகளே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 2022-ல் காலச்சுவடு கண்ணன் முயற்சியால் UK எடிஷனில் வெளியாகி வாசகர்களிடம் இது சென்றடைந்ததே சர்வதேச புக்கர் பட்டியலில் இடம்பெறக் காரணம். என் நாவல் என்பதைக் காட்டிலும் தமிழ் மொழியில் ஒரு நூல் இந்த இடத்தை அடைந்தது மகிழ்ச்சி தருகிறது. ‘இந்தியர்கள் என்றால் ஆங்கிலமும் இந்தியும் பேசுவார்கள்’ என்ற எண்ணம் உலகிற்கு இருக்கிறது. தென் இந்திய பிராந்திய மொழிகளும், வட மாநிலங்களில் உள்ள இந்தி அல்லாத பிற மொழிகளும் இப்பட்டியலில் இடம் பெறுவதன் மூலம் இந்த எண்ணம் உடையும் என்று நம்புகிறேன். இது அதற்கான தொடக்கம்.

இதுவரை என் நூல்கள் 10 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அனிருத்தன் எனது 5 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். நானும் அவரும் கலந்துரையாடியே மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வோம். வட்டார மொழிதான் எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தன. உதாரணத்திற்கு, ‘பூக்குழி’ என்பதன் பொருள், கோயில் தீமிதிக்கு ஏற்படுத்தும் நெருப்பு. அதற்கு சரியான ஆங்கிலச் சொல் கிடைக்காத பட்சத்தில் ‘Pyre’ (சிதைக்கு மூட்டப்படும் நெருப்பு) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்தச் சிக்கல்களைக் கடந்து பல மொழிபெயர்ப்பு நாவல்கள் மூலக்கதையைவிடச் சிறப்பாக வந்துள்ளன. நிலப்பரப்பிலும் கலாசாரத்திலும் பெரிய வித்தியாசங்கள் இருந்தாலும் மனித உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதானே. சக மனிதன் சிந்தும் கண்ணீரை உணராத மனிதர்கள் உண்டோ இந்த உலகில்!’’

``2015-ம் ஆண்டு ‘மாதொரு பாகன்’ நூலால் எழுந்த சர்ச்சைக்குப் பிறகு ‘பெருமாள் முருகன் இறந்துவிட்டான், இனி எழுதப்போவதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். சிறிது காலம் எழுத்துலகிலிருந்து விலகி நின்றீர்கள். அது குறித்து?’’

‘‘ஒன்றரை வருடம் எழுதாமல் இருந்தேன். ‘மாதொரு பாகன்’ சர்ச்சையில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானது. ‘Let the author be resurrected to what he is best at. Write’ என்று என்னைப் பாராட்டி, கட்டாயம் எழுத வேண்டும் என்ற தொனியில் தீர்ப்பளித்திருந்தார். அது என் மீது படிந்திருந்த குற்றத்தின் சாயலிலிருந்து விடுபட்ட மனநிலையைத் தந்தது. அதைத் தொடர்ந்து நான் எழுதிய ‘பூனாச்சி என்கிற வெள்ளாட்டின் கதை’ வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. விருதுகளைவிட வாசகர்களிடம் ஒரு நூல் பெறும் பாராட்டுகளே சிறந்த அங்கீகாரம்.’’

பெருமாள் முருகன்
பெருமாள் முருகன்

``உங்களுடைய சிறுகதை ‘வறுகறி’யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘சேத்துமான்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது? ‘திரைப்பட இயக்குநர்கள் இலக்கியத்தில் ஆர்வம் காட்டுவதில்லை’ என்று முன்பு சொல்லியிருந்தீர்கள். அந்த எண்ணம் மாறியுள்ளதா?’’

‘‘நிச்சயமாக மாறியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன், சேத்துமான் இயக்குநர் தமிழ் அதற்கான உதாரணமாக உள்ளனர். உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். ‘பூக்குழி’ நாவல் திரைப்படமாகவும் வரப்போகிறது. சேத்துமானை இயக்கிய தமிழே இயக்குகிறார். கூடுதலாக அதில் நான் வசனமும் எழுதுகிறேன்.’’

``அடுத்து வெளிவரும் படைப்புகள் குறித்து...’’

‘‘கிராமங்களை மையமாக வைத்தே ஒரு நாவலை எழுதுகிறேன். மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு குறுநாவலும் வரவிருக்கின்றன.’’

``ராகுல் காந்தியை பாரத் ஜோடோ யாத்திரையில் சந்தித்தீர்கள்? மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் என்று எண்ணுகிறீர்களா?’’

‘‘பா.ஜ.க ஆட்சியில் மதவாதமும், சாதிய வாதமும் நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. எந்நேரமும் ஒரு பதற்றச் சூழலிலே மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். ராகுல் காந்தி அந்த மாற்றத்தை நிச்சயம் கொண்டுவருவார் என்று எண்ணுகிறேன்.’’