சினிமா
Published:Updated:

தமிழின் மீது இன்னொரு தாக்குதல்!

தமிழ்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்

கருணாநிதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை.

நிலம், கல்வி, மொழி, பண்பாடு எனத் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது தமிழகம். இப்போதைய இலக்கு, தமிழகத்தின் பெருமித அடையாளங்களில் ஒன்றான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

2004 அக்டோபர் மாதம் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது மத்திய அரசு. அதன் தொடர்ச்சியாக 2006 மார்ச்சில் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (Central Institute of Indian Languages) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் அமைக்கப்பட்டது. தமிழ் ஆய்வுகளுக்கு உதவித்தொகை வழங்குதல், சிறந்த தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், இலக்கண இலக்கியச் செம்பதிப்பு, மொழிபெயர்ப்பு, வட்டார வழக்காற்றியல் ஆய்வு என இங்கு பல பணிகள் நடந்தன. தேர்ந்த தமிழறிஞர்கள் இதை நிர்வகித்தார்கள்.

இந்தச் சூழலில், செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தை முழுத் தன்னாட்சி அங்கீகாரத்தோடு தமிழகத்திலேயே அமைக்க வேண்டுமென அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி அழுத்தம் கொடுத்தார். 2007 ஆகஸ்டில் சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தமிழக அரசு பெரும்பாக்கத்தில் 17.5 ஏக்கர் நிலம் தர, மத்திய அரசு 76.32 கோடி நிதி தந்தது. 2008 மே மாதம் தற்காலிகமாக இந்த மையம் செயல்பட ஆரம்பித்தது. அங்கீகரிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளுக்கு மொழிபெயர்த்தல், இணையவழித் தமிழ்க் கல்வி, டிஜிட்டல் நூலகம் எனப் பத்துத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.

காலப்போக்கில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய நான்கு மொழிகளும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன. அந்த மொழிகளுக்கான உயராய்வு மையங்கள், மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திலேயே செயல்படுகின்றன.

கருணாநிதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை. 120 ஊழியர்களோடு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் கட்டெறும்பாகத் தேய்ந்து, இப்போது வெறும் 45 ஊழியர்களே இருக்கிறார்கள். பதிவாளர், நிதி அலுவலர் என எவரும் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை. சமீபத்தில்தான் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆராய்ச்சி அலுவலர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நிர்வாக ஊழியர்கள் எனப் பலரும் பத்தாண்டுகளுக்கும் மேல் தற்காலிக ஊழியர்களாகவே பணியாற்றி வருகிறார்கள்.

இதற்கிடையில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தோடு இந்நிறுவனத்தை இணைக்க நிதி ஆயோக் பரிந்துரைத்தது. கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்தச் சூழலில்தான், மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகமாக்கி, அத்துடன் செம்மொழி நிறுவனத்தை இணைக்கும் முயற்சி நடப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழின் மீது இன்னொரு தாக்குதல்!

1960களில் பள்ளிகளில் மும்மொழித் திட்டம் கொண்டு வரப்பட்டபோது, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகச் சில கல்வி நிறுவனங்களை மத்திய அரசு தொடங்கியது. இந்தி பயிற்றுவிக்க கேந்திரிய இந்தி சனஸ்தான், ஆங்கிலத்திற்காக சென்டர் பார் இங்கிலீஷ் அண்ட் பாரின் லாங்க்வேஜ், பிற இந்திய மொழிகளுக்காக இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் மூன்றும் தொடங்கப்பட்டன. தொடங்கப்பட்டபோதே மற்ற இரண்டுக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் மட்டும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கியது.இதைப் பல்கலைக்கழமாக மாற்றுவது தொடர்பாக ஆராய இப்போது முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், திருப்பதி சம்ஸ்கிருதப் பல்கலைக்கழக வேந்தருமான என்.கோபாலசுவாமி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தி, சம்ஸ்கிருதம், சிந்தி, உருது, தமிழ் தவிர பிற வட்டார செம்மொழிகள், பழங்குடி மொழிகள், பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சிக்காகவும் வளர்ச்சிக்காகவும் இயங்கும் ஒரே நிறுவனம் இதுதான். ‘இதை மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றி, செம்மொழி மையங்கள், நிறுவனங்களை இதன் கீழ் இணைப்பதன் மூலம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தன்னாட்சி அந்தஸ்தைப் பறிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது’ என்பதே தமிழறிஞர்களின் குற்றச்சாட்டு.

‘`நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகு இப்போதுதான் செம்மொழி நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிய கட்டடம்கூடக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் மைசூர் நிறுவனத்தோடு இணைப்பதால் இது பல்கலைக்கழகத்தின் சிறு பிரிவாக மாறிவிடும். இப்போது உயர்கல்வித் துறையில் நடப்பவை எல்லாமே அச்ச மூட்டுபவையாக இருக்கின்றன. பல்கலைக்கழகத் துணைவேந்தர்களோடு மத்தியக் கல்வி அமைச்சகமே நேரடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. இதெல்லாம் முன்பு நடந்ததில்லை. மாநில அரசின் பங்களிப்பை முற்றிலும் தவிர்த்து, நேரடியாகக் கையாள்வதன்மூலம் திராவிட மொழிகளின் தனித்தன்மையை அழித்துவிட்டு ஒற்றைமொழியை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன்” என்கிறார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்மொழித் துறைத்தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்.

மத்திய அரசு சம்ஸ்கிருதம், இந்திக்குக் காட்டும் அக்கறையில் பாதிகூட பிற இந்திய மொழிகளுக்குக் காட்டுவதில்லை என்பதைப் புள்ளி விவரங்கள் மெய்ப்பிக்கின்றன. மத்தியப் பண்பாட்டு அமைச்சரின் அறிக்கைப்படி, கடந்த மூன்றாண்டுகளில் சம்ஸ்கிருத வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கியது ரூ.643.84 கோடி. செம்மொழி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது வெறும் ரூ.22.93 கோடி.

இதுகுறித்துப் பேசிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி ‘`முடங்கிக் கிடந்த செம்மொழி நிறுவனம் தற்போதுதான் உயிர்பெற்றிருக்கிறது. அடுத்து, இந்த நிறுவனத்தைப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டுமே தவிர, வேறொரு நிறுவனத்துடன் இணைத்துக் கீழிறக்கக்கூடாது’’ என்கிறார் அவர்.

தெ.ஞானசுந்தரம் - க.ராமசாமி - ந.தெய்வசுந்தரம்
தெ.ஞானசுந்தரம் - க.ராமசாமி - ந.தெய்வசுந்தரம்

மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் பணியாற்றிய மூத்த தமிழறிஞர்கள் சிலர் இன்னொரு அபாயத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். “உண்மையில் ஆபத்து செம்மொழி நிறுவனத்துக்கு மட்டுமல்ல... இந்திய மொழிகள் நடுவண் நிறுவனமே கைவிட்டுப் போகப்போகிறது. இதுவரை இந்திய மொழிகளுக்காக மட்டுமே இயங்கிவந்த இந்த நிறுவனத்தை ‘பாரதிய பாஷா விஸ்வ வித்யாலயா’ என்ற பெயரில் பல்கலைக்கழகமாக மாற்றுவார்கள்.அதில்இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் பிரதான துறைகளாக்கி, தமிழ் உள்ளிட்ட மற்ற செம்மொழிகளை ஒரே துறையாக மாற்றுவதே திட்டம்” என்கிறார்கள் அவர்கள். இந்த அச்சத்தை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவரும், தற்போது மத்திய அரசு நியமித்துள்ள 11 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளவருமான பேராசிரியர் தெ. ஞானசுந்தரத்தின் முன்வைத்தேன்.

“செம்மொழி நிறுவனம் மைசூர் நிறுவனத்தோடு இணைக்கப்படுமானால், நிச்சயம் தனித்தன்மை போய்விடும். குழுவின் கூட்டம் இன்னும் நடக்கவில்லை. என்னைப் போன்றவர்கள் கருத்து மட்டுமே தெரிவிக்கமுடியும். நிறுவனத்தின் தலைவராக இருக்கிற நம் முதலமைச்சர்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்கிறார் அவர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தரப்பில் இதுபற்றிப் பேசினேன். ‘`தேவையற்ற அச்சம் தமிழகத்தில் பரவியிருக்கிறது. மைசூரில் உருவாக்கப்படவுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒடியா மொழிகளுக்கான மையங்கள் மட்டுமே இணைக்கப்படும். தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் இணைக்கப்படாது. பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான நிதி, நிலம் போன்றவற்றை ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்காக மட்டுமே தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது. நமது செம்மொழி நிறுவனத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை’’ என்றார்கள் அவர்கள்.

இதை செம்மொழி நிறுவனத்தின் தலைவரான முதல்வர் உறுதி செய்யவேண்டும். தமிழர்களின் உரிமையையும் தமிழ்மொழியின் தனித் தன்மையையும் காப்பாற்ற முனைய வேண்டும்!