46-வது சென்னைப் புத்தகக் காட்சியில் கவிஞர் மனுஷ்யபுத்திரனுடன் ஒரு சிறிய நேர்காணல்.
மின்னூல்களின் வளர்ச்சியால் அச்சு நூல்கள் மீதான வாசகர்களின் ஆர்வம் குறைந்துவிட்டதாகப் பதிப்பாளர்கள் கருதுகிறார்களே. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"தொழில்நுட்பம் வளர்ச்சியடைவதற்கு முன்பாக புத்தகங்கள் கோடிக்கணக்கில் விற்பனையானதா என்ன? எந்தக் காலத்தில் நம் வாசிப்பு பழக்கம் மிக அதிக அளவிலிருந்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம். 1-2 சதவிகித மக்கள் புத்தகங்கள் வாசித்தாலே பெரிய விஷயம். இருப்பினும், சமூக ஊடகங்களின் வரவுக்குப் பின்னால் நம் வாசிப்பில் சிறிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. சிறிது சிறிதாகப் படித்து மக்கள் அதற்கு நன்கு பழகிவிட்டார்கள். அவர்களால் 100 பக்கங்களை ஒன்றாகப் படிக்க முடிவதில்லை. ஆனாலும், ஆண்டுதோறும் நடக்கும் இப்புத்தகக் காட்சியில் புத்தகங்களின் விற்பனை அதிகரிக்கவே செய்கிறது.

மக்கள், புத்தகங்களைப் படிக்கிறார்களோ இல்லையோ அவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். வாசிப்பது என்பது இன்று பல்வேறு வடிவங்களைப் பெற்றுவிட்டன. இ-புக்ஸ் மற்றும் ஆடியோ புத்தகங்களின் வரவுக்குப் பின் மக்கள் அதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே, வாசிப்பு பழக்கம் குறைந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. சிறிதளவு, கவனச்சிதறல் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்."
எழுத்திலும் சரி, தொழில்நுட்ப வளர்ச்சியோடு ஈடு கொடுப்பதிலும் சரி, இத்தலைமுறைக்கு ஏற்றவாறு உங்களை எப்படி மாற்றிக் கொள்கிறீர்கள்?
"காலத்திற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டால்தான் அவன் மனிதன். எழுத்தாளன் என்பதைத் தாண்டி முதலில் நான் ஒரு வாசகன். சரஸ்வதியின் அருளால் நாங்கள் ஒன்றும் எழுதுவது கிடையாது. நிறைய வாசித்து, கற்றுக்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் வாயிலாகத்தான் எழுதத் தொடங்குகிறோம். இக்கால தலைமுறையைப் பற்றி அதிகம் எழுதுவதற்குக் காரணம், நான் இன்றும், என்றும் அவர்களுடன் பழக்கத்திலேயே இருக்கிறேன். 'Generation Gap' என்பது எனக்கு இதுவரையில் இருந்தது கிடையாது, இனியும் இருக்கப்போவதில்லை."

நூறு பக்கங்கள் படிப்பதே கடினமாகிவிட்டது என்கிறீர்கள், உங்களின் ‘மிஸ் யூ’ புத்தகத்தில் 2000 பக்கங்களுக்கும் மேல் இருக்கிறதே?
"சென்ற ஆண்டு 2000 பக்கம் எழுதினேன், தற்போது 3000-க்கும் அதிகமான பக்கங்களை எழுதியிருக்கிறேன். நீங்கள் வருவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பாகத்தான், என் மற்ற புத்தகங்களைப் படித்திருப்பதாகக் கூறி ‘மிஸ் யூ’-வை வாங்கிச் சென்றார் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர். எனவே, இப்படியான புத்தங்களை இவர்கள்தான் படிப்பர் என்று பிரிப்பது இயலாத காரியம். படிக்க வேண்டும் என்ற ஆர்வம், வளரும் சூழல் தொடங்கி எங்கிருந்தோ ஒரு சிறிய புள்ளியில் தொடங்கும் ஒன்று. எனவே, வாசிப்புக்கு ஆர்வம் மட்டுமே பிரதானம்."