
குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் ஆண்டுதோறும் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் சார்ந்து போட்டிகள் நடக்கும்
‘ஆரிராரோ’ தாலாட்டு எந்த வீட்டிலாவது ஒலித்துக் கேட்கிறோமா? தமிழ் சினிமாவில்கூட தாலாட்டும் தொட்டிலும் அந்தரத்தில் நின்றுவிட்டன. மக்களின் மனதில் குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்கள் பொற்கால நினைவுகளாய் உறைந்துவிட்டன. குழந்தை இலக்கியம் என்று எழுதப்படுபவை எத்தனை குழந்தைகளைச் சென்று சேர்கின்றன என்று தெரியவில்லை. ரைம்ஸ் வீடியோக்களும் மொபைல்போன் கேம்களும் உலகமாய் வாழும் குழந்தைகளுக்காக சற்றும் மனம் தளராமல் சிறார் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தனைக்கும் மற்ற இலக்கியவாதிகளுக்குக் கிடைக்கும் மதிப்புமிக்க இடம் கிடைக்கவில்லை என்றாலும் சிறார் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் ஒரு சங்கமாகவும் இணைந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடியாகப் போற்றப்படும் ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பாவின் முயற்சியில் 1950-ம் ஆண்டு ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ தொடங்கப்பட்டது. இந்தியாவில் குழந்தை எழுத்தாளர்களுக்கென்று தொடங்கப்பட்ட முதல் சங்கமாக இது கருதப்படுகிறது.
“குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் ஆண்டுதோறும் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் சார்ந்து போட்டிகள் நடக்கும். சிறந்த படைப்புகளுக்கு ஏ.வி.எம் சார்பில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் பரிசளிக்கப்படும்; சில மாதங்களில் அந்தப் படைப்புகள் நூலாக வெளியிடப்படும். இந்தச் செயல்பாடு அந்தக் காலகட்டத்தில் நிறைய பேரை குழந்தை இலக்கியத்துக்குள் கொண்டுவந்தது” என்கிறார் குழந்தை இலக்கியத்துக்கான சாகித்திய அகாடமியின் ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருதைப் பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான மா. கமலவேலன்.
1975-ல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டில் வெளியிட்டப்பட்ட கையேடு ஒன்றில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டுக் குழந்தை எழுத்தாளர்களின் எண்ணிக்கை 375. இப்படி, தமிழ்நாட்டுக் குழந்தை இலக்கியச் சூழல் ஆரோக்கியமாக இயங்கிவந்த நிலையில், 1989-ல் வள்ளியப்பாவின் மறைவுக்குப் பிறகு, சங்கத்தின் செயல்பாடுகள் செயலிழக்கத் தொடங்கின; ஒரு கட்டத்தில் அவை முற்றாக நின்றுபோயின.

இன்னொருபுறம் மிகக்குறைவாக எழுதப்பட்டாலும் இந்தியாவில் வேறெந்த மொழிகளிலும் இல்லாத வகையில் சூழலியல், அரசியல், ஆட்டிசம் உள்ளிட்ட பலதரப்பட்ட தலைப்புகளை மையப்படுத்தி எழுதப்பட்ட சிறார் இலக்கியப் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில், தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கியச் சூழலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் உருவாகியிருக்கிறது ‘தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்.’ தமிழ்ச் சூழலில் குழந்தைகள் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் போன்றோரை இது உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டை (2022) ஒட்டி, இச்சங்கம் தொடங்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு!
“குழந்தைகள் சார்ந்து இயங்கும், சிந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் (இசை, நாடகம், நடனம், விளையாட்டு, கோமாளி, கதை சொல்லி, ஓரிகாமி-ஓலை மடிப்பு போன்ற நுண்கலை நிபுணர்கள் என அனைத்துத் துறைக் கலைஞர்கள்), ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள், சிறார் இதழ் நண்பர்கள், பத்திரிகையாளர்கள், சிறார் இலக்கியப் பதிப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முந்தைய குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர்கள் என யார் வேண்டுமானாலும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகலாம். எல்லோரையும் உள்ளடக்கும் இந்த முயற்சி உண்மையிலேயே தமிழ்க் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை வளமாக்கும் என்று நம்புகிறோம்” உற்சாகமாகப் பேசுகிறார் சிறார் நூல் எழுத்தாளரும், இச்சங்கத்தின் செயலாளருமான விழியன்.

சங்கத்தின் செயல்திட்டங்கள் குறித்து எழுத்தாளரும், சங்கத் தலைவருமான உதயசங்கர் பேசும்போது, “குழந்தைகளின் நலன்களுக்கு எதிரான அனைத்துச் செயல்பாடுகளையும் களைவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். குழந்தை இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சாதி மதப் பாகுபாடுகளின்றி உருவாக வழிசெய்வோம். இன்றைக்குப் பெரும்பாலும் வசதியான வீட்டுப் பிள்ளைகளே சிறார் இலக்கியங்களை அணுகும் சூழல் நிலவுகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கோ, கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகளுக்கோ இவை முழுமையாகச் சென்றடைவதில்லை. எனவே, எந்த இடைவெளியும் இன்றி, குழந்தைகள் அனைவரிடமும் சிறார் இலக்கியத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்படும்.
மேலும், குழந்தைகளுக்கான தனிப் புத்தகக் காட்சி, நூலகத் துறையில் சிறார் நூல்களுக்கென்று தனி விதிமுறைகள், பாடநூல் உருவாக்கத்தில் சிறார் எழுத்தாளர்கள் பங்கு பெறுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த அரசிடம் வலியுறுத்துவோம்” என்றார்.
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூப் பூத்திருக்கிறது; ஆயிரம் பூக்கள் மலர்ந்து சோலை ஆகட்டும் தமிழ்க் குழந்தை இலக்கிய உலகம்!