சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

‘பசங்க’ கதைகள்

 ‘பசங்க’ கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
‘பசங்க’ கதைகள்

ஓவியம்: AI (artificial intelligence)

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

 ‘பசங்க’ கதைகள்

சன்டே ஸ்பெஷல்!

வினோதினியும் மாலதியும் ஸ்கூல்விட்டு பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார்கள்.

``நாளைக்கி என்ன புரோக்ராம் மாலதி?’’

``சன்டேன்னாலே எங்க வீட்ல ஜாலிதாம்ப்பா. ஹோட்டல் சாப்பாடு...’’

``என்ன சாப்பிடுவீங்க?’’

``செம வெரைட்டி... சிக்கன் 65, மட்டன் பிரியாணி. சில நாள்ல பீட்சா, பர்கர், பார்பிக்யூ ஐட்டம்ஸ்... நாளைக்கி ஷவர்மா.’’

``இதெல்லாம் உடம்புக்கு நல்லதில்லை மாலதி.’’

``வாரத்துக்கு ஒரு நாள்தானே... வாய்க்கு ருசியா சாப்பிட்டா என்னவாம்?’’

``சாப்பிடலாம்தான். ஆனா, எதையெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு ஒரு லிஸ்ட் இருக்கோ, அதைத்தான் உங்க வீட்ல இருக்கறவங்க சாப்பிடுறீங்க.நீ சொன்னதெல்லாம் நம்ம நாட்டு தட்பவெப்பத்துக்கும், உடம்புக்கும் ஆகாத உணவுகள். இதைப் பழக்கப்படுத்திக்கிட்டா `ஒபிசிட்டி’ங்கிற உடல்பருமன் ஏற்படும். சுகர், பி.பி-னு தொற்றா நோய்கள் வந்து இதயம்கூட பாதிக்கப்படுறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு டாக்டர்கள் சொல்றாங்க.’’

``என்ன பயமுறுத்துறியா?’’

``ஹோட்டல்ல சாப்பிடுறதே தப்பு மாலதி. சாப்பாட்டுல ருசிக்காகவும், பளிச்சுனு தெரியறதுக்காகவும் என்னென்ன கலக்குறாங்க, சுத்தமான பொருள்கள்லதான் செய்யறாங்களா எதுவுமே நமக்குத் தெரியாதுல்ல... வீட்டுலயே தரமான பொருள்களைவெச்சு சமைச்சு சாப்பிடுறதுதான் பெஸ்ட்.’’

மாலதி மெல்ல தலையசைக்க, வந்து நின்ற பஸ்ஸில் இருவரும் ஏறிக்கொண்டார்கள். பஸ் ஸ்டாப்பின் மூலையில் ஒரு பொந்தில் இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த எலி ஒன்று கேட்டது... ``என்னாண்ணே அந்தப் பொண்ணு இப்பிடி சொல்லிட்டுப் போகுது?’’

``ஆமாடா தம்பி. தெருவுக்கு நாலு ஷவர்மா கடை இருக்கே... நாமளும் ஒரு கடையை ஆரம்பிச்சுருவோம், `Ratatouille’ மாதிரி பெரிய ஆளாகிடலாம்னு ஐடியா வெச்சுருந்தேன். உடம்பைக் கெடுக்குற தொழில் வேணாம்தானே?’’

``வேணவே வேணாம்ணே. பொரி கடலைக்கடை போட்டுடலாம். அப்பப்போ நமக்கும் கொறிக்க வசதியா இருக்கும்ல?’’

 ‘பசங்க’ கதைகள்

களத்துல நில்லு கண்ணு!

சென்னை வளசரவாக்கம். அந்த 8 மணி பஸ் அன்றைக்கும் ஸ்டாப்பில் நிற்கவில்லை. வழக்கம்போல நூறு அடி தள்ளி நின்றது. தமிழ்ச்செல்வனும் அவன் நண்பர்களும் மூச்சிரைக்க ஓடிப்போய் பேருந்தில் ஏறினார்கள். தமிழ்ச்செல்வன் கடைசிப் படியில் கால்வைத்து கம்பியைப் பற்றுவதற்கு முன்பாகவே டிரைவர் பஸ்ஸைக் கிளப்பிவிட்டிருந்தார்.

கண்டக்டரிடம் கேட்டான்... ``ஏன் சார், டெய்லி ஸ்டாப்பைத் தாண்டியே நிறுத்துறீங்க?’’

``ம்... ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு... நாலடி ஓடி வர்றதுக்கு இப்பிடி சலிச்சுக்கிறியே... நீயெல்லாம் என்னத்தைப் படிச்சு...’’

``சார், எங்களை விடுங்க சார். வயசானவங்க நிக்கிறாங்களே... அவங்க?’’

``அடுத்த பஸ்ஸுல வருவாங்கடா. அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படுறே?’’

அடுத்த நாள், 8 மணி பஸ். ஸ்டாப்பைத் தாண்டும்போதுதான் டிரைவர் அதை கவனித்தார். ரோட்டின் நடுவே தமிழ்ச்செல்வனும் அவன் நண்பர்களும் உட்கார்ந்திருந்தார்கள். டிரைவர் அவசரமாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார். தமிழும் அவன் நண்பர்களும் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள்.

``மறியலாடா பண்றீங்க... ஸ்டேஷன்லயும், உங்க ஸ்கூல்லயும் கம்ப்ளெயின்ட் குடுக்குறேன்.’’

``குடுங்க சார். ஜனங்களுக்காகத்தான் பஸ்ஸு... பஸ்ஸுக்காக ஜனங்க இல்லை. இந்த ஐடியாவைக் குடுத்ததே நம்ம சிட்டி கமிஷனர்தான்.’'

பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த பாட்டியின் பழக்கூடையில் மாம்பழங்கள். அதன் மேல் அமர்ந்திருந்த இரண்டு ஈக்கள் பேசிக்கொண்டன. ``ஏம்மா, ஸ்கூல் டாய்லெட் ரொம்ப கண்றாவியா இருக்கு. கேர்ள்ஸெல்லாம் ரொம்ப அவஸ்தைப்படுறோம். டீச்சர்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா?’’

``பண்ணு.’’

``அவங்க கேட்கலைன்னா, ஹெச்.எம்-கிட்ட போகலாமா?’’

``போ. எதையும் கேள்வி கேளு, முறையிடு. போராடு. எல்லாம் சரியாகும்.’’

``அப்ப சரிம்மா.’’ மகள் ஈ, அம்மாவின் கன்னத்தில் பச்சக்கென்று ஒரு முத்தம் பதித்தது.

 ‘பசங்க’ கதைகள்

இது வேணாம்டா செல்லம்!

அப்பா மூக்குக்கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொண்டு புராக்ரஸ் ரிப்போர்ட்டைப் பார்த்தார். ``என்னடா மார்க் வாங்கியிருக்கே?’’

பாலாஜி தலையைக் குனிந்துகொண்டான். அம்மா சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார்... ``இப்போ கேளுங்க... புள்ளைங்களை சுதந்திரமா வளர்க்கணும்னு சொல்லிச் சொல்லிக் கெடுத்து வெச்சிருக்கீங்க.’’

அப்பா கேட்டார். ``அடுத்த வருஷம் நீ டென்த்டா. லாங்வேஜ் தவிர எல்லா சப்ஜெக்ட்லயும் மினிமம் மார்க்ஸ். என்ன பண்ணப்போறே?’’

மறுபடியும் அம்மா. ``ஆன்லைன் கிளாஸுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தீங்கல்ல... இப்போ புள்ளை கேம்ஸ்ல எக்ஸ்பர்ட்.’’

``ஆமா... ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஸ்கூல்ல `ஸ்போர்ட்ஸ் டே’ன்னு நடந்துச்சே... நீதான் பாட்மின்டன்ல கில்லியாச்சே... கலந்துக்கிட்டியா?’’

``அன்னிக்கி பூரா ஸ்கூலை எட்டிக்கூடப் பார்க்கலை. வீட்டுல செல்போன்ல விளையாட்டு. ஏதாவது சொன்னா கோபம் வந்துடுது. உங்ககிட்டயும் சொல்லக் கூடாதுங்கறான்...’’

``பாலாஜி... விளையாட்டு நம்ம உடலுக்குக் குடுக்குற ஒரு பயிற்சி. உடல் உறுப்புகளையும் மனசையும் ஆரோக்கியமா வெச்சுக்க உதவுற பயிற்சி. ஆனா, செல்போன் கேம் மனசைப் பாழடிச்சிடும். அடிமையாக்கிடும். தினமும் சாயந்தரம் நல்லா உடம்பு வியர்க்க விளையாடு. அப்புறம் வீட்ல வந்து படி... அடுத்த பரீட்சையில நீ நல்ல மார்க் வாங்குவேன்னு நம்புறேன்.’’

அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஓரடி தூரத்தில் இருந்தது சுவர். அதன் ஓரமாக சிற்றெறும்புகள் வரிசையாகப் போய்க்கொண்டிருக்க, இரண்டு எறும்புகள் மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்தன. ஒற்றை அரிசியைத் தலையில் வைத்திருந்த அப்பா எறும்பு சொன்னது... ``கேட்டியாடா மகனே..?’’

``அப்பா மன்னிச்சுக்கோங்கப்பா. இனிமே செல்போன் வேண்டாம்ப்பா. ஒரு பேட்டும் பாலும் மட்டும் வாங்கிக் கொடுத்துடுங்க. நேரம் கிடைக்கும்போது விளையாடப்போயிடுறேன்.’’ அப்பா எறும்பு தன் தலை மேலிருந்த அரிசியைத் தூக்கிப் போட்டுவிட்டு, மகனை வாரி அணைத்துக்கொண்டது.

 ‘பசங்க’ கதைகள்

அலங்கார மீன்கள்!

``ஏம்மா, சுதந்திரம்னா என்னம்மா?’’ பத்தாம் வகுப்பு படிக்கும் லட்சுமி, அம்மாவிடம் கேட்டாள்.

``அதாவது இந்த நாட்டுல இருக்குற எல்லாரும் சுதந்திரமான மனுஷங்க. எங்கே வேணாலும் போகலாம்; மனசுக்கு நல்லதுன்னு படுற கருத்துகளை எங்கே வேணாலும் எடுத்துச் சொல்லலாம்; யாரை வேணாலும் கேள்வி கேட்கலாம். நம்ம இஷ்டப்படி வாழலாம். இதுதான் சுதந்திரம்.’’

``அப்பிடின்னா, நான் எங்கே வேணாலும் தனியா போகலாமா?’’

``போகலாம். ஆனா...’’

``சரிம்மா... நான் எப்பிடி வேணாலும் டிரெஸ் போடலாமா?’’

``போடலாம். ஆனா...’’

``நான் என் இஷ்டப்படி எப்பிடி வேணாலும் இருக்கலாமாம்மா?’’

``இருக்கலாம். ஆனா...’’

``அது என்னம்மா ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு ஆனா..?’’

``நீ ஒரு பொம்பளைப் புள்ளைம்மா.’’

``அதுக்கு?’’

``பொம்பளைப் புள்ளைன்னா இப்படித்தான் இருக்கணும்னு எழுதப்படாத ஒரு விதி இங்கே இருக்கும்மா...’’

அம்மாவும் மகளும் பேசிக்கொண்டிருந்ததை அந்த அறையின் ஓரம் கண்ணாடித் தொட்டியில் இருந்த மீன்களும் கேட்டுக்கொண்டிருந்தன. தங்க மீனிடம் ஃபைட்டர் மீன் சொன்னது... ``சுதந்திரம் சுதந்திரம்னு பேசுறாங்களே... நம்மளை மட்டும் இப்பிடி கண்ணாடிப் பெட்டிக்குள்ள நீந்தவிட்டு அழகு பார்க்குறாங்களே... இது நியாயமா?’’

``நம்மை மாதிரி அலங்கார மீனுக்கெல்லாம் வெளியில பாதுகாப்பு இல்லை கண்ணு. ஆறு, கிணறு, ஏரி எங்க இருந்தாலும் பெரிய மீனுங்களே நம்மை சாப்பிட்டுடும். இந்த நாலு கண்ணாடி சுவத்துக்குள்ளயாவது வேளா வேளைக்கு சாப்பிட்டுட்டு நிம்மதியா இருக்கோமேன்னு சந்தோஷப்பட்டுக்கோ. நீ மட்டும் அந்தப் பொண்ணு மாதிரி மனுஷியாப் பொறந்திருந்தேன்னு வையி... வாழ்க்கையே நரகம்தான்.’’

 ‘பசங்க’ கதைகள்

ஹேப்பி ஹோம்!

மணிகண்டனுக்குப் பிறந்தநாள். அன்று மாலை அவன் வீட்டில் நடந்த விழாவுக்கு வகுப்பிலிருந்து நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள். கிளாஸ் மிஸ் வாட்ஸ்அப்பில் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். மணிகண்டன் கேக் வெட்ட, நண்பர்கள் பலூன் வெடித்து `ஹேப்பி பர்த்டே’ பாடினார்கள். அம்மாவும் அப்பாவும் கேக் ஊட்டிவிட்டார்கள். கிஃப்டுகள் குவிந்தன. ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு ஒவ்வொருவராகக் கிளம்பிப்போனார்கள். ராஜேஷும் விடைபெறுவதற்காக அவனருகே வந்தான். ``இருடா போகலாம். பக்கத்து தெருவுலதான வீடு...’’ என்றான் மணிகண்டன்.

``இருக்கேன்’’ என்றான் ராஜேஷ்.

``ஏன் ராஜேஷ், நீ வடபழனி ஏரியாவுக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு. உன்னோட பர்த்டேவுக்கு நீ ஏன் என்னைக் கூப்பிடவே இல்லை?’’

``பர்த்டே கொண்டாடுவோம். ஆனா, இப்பிடி கேக்கெல்லாம் வெட்ட மாட்டோம்.’’

``பின்னே?’’

``எங்க வீட்டுல அம்மா, அப்பா, நான், என் தம்பி... யாரோட பர்த்டேன்னாலும் குடும்பத்தோட காலையிலயே கெளம்பிடுவோம்.’’

``எங்க போவீங்க?’’

``வண்டலூர் பக்கத்துல ஒரு ஹோம் இருக்கு. அங்கே அம்மா, அப்பா இல்லாத, ஆதரவற்ற குழந்தைங்க நிறைய பேர் இருக்காங்க. அன்னிக்கி ஒருநாள் அவங்களோட சாப்பாட்டுச் செலவு எல்லாத்தையும் நாங்கதான் பார்த்துப்போம். காலையில இருந்து சாயந்தரம் வரைக்கும் அங்கேயே பசங்ககூட இருந்துட்டு அப்புறம் கெளம்புவோம். இதுக்காகவே அப்பா மாசா மாசம் ஒரு தொகையைத் தனியா பேங்க்ல போட்டுடுவாரு...’’

ராஜேஷ் சொல்லிக்கொண்டே போக அவனையே பார்த்துக்கொண்டிருந்தான் மணிகண்டன். அறையிலிருந்த வாஷ்பேசின் அடியிலிருக்கும் குழாயிலிருந்து இதை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தது ஒரு கரப்பான்பூச்சி. அதற்கு மேல் அதனால் உரையாடலைக் கேட்க முடியவில்லை. கண்களில் நீர் திரண்டது. குழாய் வழியே கிடுகிடுவென இறங்கி ஓடிப்போனது.