வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சினிமாவின் பலமே வேறுபாடில்லாமல் கொண்டாடும் அதன் பலதரவகைப்பட்ட சமத்துவம் தான்.
ஏழை பணக்காரன், ஆண் பெண், மேல் ஜாதி கீழ் ஜாதி போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் திறமை இருப்பவர்களை முழுதாக அங்கீகரித்துக்கொள்ளும். நெபோட்டிசம் போன்ற தொல்லைகள் இருந்தாலும் கூட தகுதியுள்ளவர்கள் மகுடம் சூட்டாமல் இல்லை என்பதை மறுக்கவியலாது. இந்த ஒரே காரணம் தான் சினிமாவை தலைமுறை கடந்து கொண்டாட வைத்துக்கொண்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட சினிமாவின் நீட்சியாக கடந்த சில வருடங்களாக வெப் சீரிஸ் கிளர்ந்து எழுந்துள்ளது.
சூழல், விலங்கு, வதந்தி போன்ற தரமான தமிழ் வெபசீரிஸ்களின் வரிசையில், ஏன் அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மகுடம் தான் இந்த அயலி.

பொது வெளியில் பேசத்தயங்குகிற ஒரு விஷயத்தை எல்லோரும் பாராட்டி கொண்டாடும் விதமாக படைத்ததற்கே இயக்குனர் முத்துகுமாருக்கும் தயாரிப்பாளர் குஷ்மாவதிக்கும் பாராட்டுக்கள்.
நடித்திருக்கும் அனைவருமே பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் என்று சொல்லுவதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கதையுடன் ஒன்றிய நடிப்பு. முப்பது நிமிடங்கள் கொண்ட எட்டு அத்தியாயங்கள். மொத்தமாக இருநூற்றி நாற்பது நிமிடங்கள். இரண்டு முழு நீள படங்களுக்கான நேரம். சூப்பர் ஸ்டாரே நடித்தாலும் யோகி பாபு தேவைப்படும் இந்த வேளையிலும் கூட நான்கு மணி நேரம் நம்மை கட்டி போட்டிருக்கும் அயலி திரைக்கதையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் படிப்பை நிறுத்தி உடனுக்குடன் அந்த ஊருக்குள்ளேயே திருமணம் செய்துவைப்பதாக அயலி என்ற பெண் தெய்வத்திற்கு சத்தியம் செய்து அந்த கட்டுப்பாட்டை மீறாமல் வாழும் ஒரு கிராமத்தில், தான் விரும்பும் படிப்பை தொடர்வதற்கும் அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கும் வயதுக்கு வரும் ஒரு பெண் எவ்வாறும் போராடுகிறாள் என்பதே இந்த வெப்சீரிஸின் கதை.

அடர்த்தியான அர்த்தம் நிறைந்த வசனங்கள் மிகப்பெரும் பலம். தமிழ் என்கிற protagonist கதாபாத்திரத்தில் நடிகை 'அபி நக்ஷத்திரா'. ஆகப்பொருத்தமான தேர்வு. முழு வெப் சீரிஸையும் தாங்கி நிற்பது இந்த அபி தான். அயலி என்பது அந்த பெண் தெய்வமாக இருந்தாலும் நமக்கு என்னவோ தமிழ் கதாபாத்திரம் தான் அயலியாகத் தெரிகிறது. பதினைந்து வயது இருக்கலாம். முதிர்ச்சியானதொரு நடிப்பு.
தான் படிக்கச்செல்லும் பள்ளி முதற்கொண்டு ஊரில் உள்ள அனைவருமே வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் கல்விக்கும் வாழ்க்கைக்கும் எதிராக நிற்கிறார்கள் என்பதை உணரும்போது வெளிப்படும் ஆற்றாமையாகட்டும், கணுக்காலில் வழிந்தோடும் குருதியை கண்டு பதட்டப்படும் இடமாகட்டும், சிவப்பு மை மேலே விழுந்த பின் ஆசுவாசப்படுத்தி கொண்டு TSR வாத்தியாருக்கு நன்றி சொல்வதாகட்டும், தாய் குருவம்மாளை செல்லமாக அதட்டி உருட்டி வழிக்கு கொண்டுவருவதாகட்டும் போன்ற இன்னும் பல ஆகட்டும்களில் நடிப்பு தெறிக்கிறது. வெப்சீரிஸ் என்ற ஒரு கேட்டகிரியில் தேசிய விருதென்று ஒன்று இருந்தால் அது யாளி அபி நக்ஷத்திராவுக்குத்தான்.

இவரின் கூட்டாளியாக லவ்லின் சந்திரசேகர். இவர் யாரென்று தெரியவேண்டுமென்றால் நீங்கள் ரஜினியின் 'தில்லு முல்லு' பார்க்க வேண்டும். இறுதி காட்சியில் ஸ்கேட்டிங் ஷூ போட்டுகொண்டு படபடவென்று பேசும் ரஜினியின் தங்கை விஜி சந்திரசேகரின் பெண் தான் இந்த லவ்லின் சந்திரசேகர். சளைக்காமல் பதினாறடி பாய்ந்திருக்கிறார். பதின்ம வயதின் பூரிப்பும், குழப்பமும், கிளர்ச்சியும் என பந்தாடியிருக்கிறார்.
பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்து வளைய வரும் இவர், திருமணம் நிச்சயித்த இரண்டாம் எபிசோட் முதல் இறுதி வரை ஆற்றாமையை கோபத்தில் அழுதுகொண்டே இருக்கிறார். கணவர் இறந்த பின் ஒரு சொம்பில் இருந்து அவர் பூக்களை எடுத்து அழுதுகொண்டே தரையில் விசிறும் தருணம் பேரதிர்ச்சி. ஒருவகையில் இவரின் அழுகை தான் தமிழ் கதாபாத்திரத்துக்கு தனது கூட்டில் இருந்து வெளிவரும் உத்வேகத்தை தருகிறது.

அபியின் அம்மா குருவம்மாளாக 'அனுமோல்'. தனித்துவமான குரலில் ஆரம்பிக்கும் இவரது கதாபாத்திரம் போகப்போக அயலி சீரிஸின் ஆகிருதியாகி விடுகிறது. எங்கே கிரமாத்தில் எல்லோரிடமும் சொல்லி தமிழின் படிப்புக்கு தடையாகிவிடுவாரோ என்ற பதைபதைப்பை பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்தும் ஒரு நடிப்பு. அக்கடத்து தேசத்தில் புடம்போட்ட அனுபவம். பாத்திரத்தில் ஜொலிக்கிறார். தமிழ் சொல்வதுபோல கிராமத்திற்கு அயலியென்றால் தமிழுக்கு அவள் அம்மா குருவம்மாள் தான் அயலி.
டீச்சர் கதாப்பாத்திரத்தில் வரும் TSR நடிகரின் முகபாவனையிலேயே நமக்கு பல உணர்வுகள் பீறிடுகிறது. அவரின் முகத்தை க்ளோஸப்பில் வைத்து சில இடங்களில் கோபத்தையும் பீதியையும் பல இடங்களில் சிரிப்பையும் வரவழைத்திருக்கிறார் இயக்குனர். பெண்களின் கல்விக்கும் வாழ்க்கைக்கும் பங்கம் வைக்கும் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமான தேர்வு TSR.
மைனராக வரும் லிங்கா, தவசியாக வரும் மதன், சிங்கம்புலி, 'உச்' கொட்டும் கணக்கு வாத்தியார் என எல்லோருமே நிறைவான கதாபாத்திரங்களாக மனதில் நிறைகிறார்கள். 'ரேவா'வின் இசை பக்க பலம். சந்தோசம், துக்கம், அதிர்ச்சி, ஆச்சர்யம், கோபம், இயலாமை என எல்லா உணர்வுகளையும் உறுத்தலில்லாமல் பிரதிபலிக்கிறது. மோகன் ராஜா, அமீர், செல்வராகவனின் முதல் தேர்வான ஒளிப்பதிவாளர் ராம்ஜி தான் அயலிக்கும் சினிமாட்டோகிராஃபி. இரவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அயலி கோவிலின் அழகு, சடங்கு மற்றும் திருமண நிகழ்வுகள் எல்லாம் கண்ணை பறிக்கும் செல்லுலாய்டு ஓவியங்கள்.

ஒவ்வொரு பிரேமில் வரும் ஆண்களும் ஆணாதிக்கத்தை முன் நிறுத்துகிறார்கள். அதற்கு அவர்கள் முன் வைக்கும் வாதம் பெண்கள் எங்கே தங்களை மீறிப் போய்விடுவார்களோ என்ற எண்ணம் தான். அது வெறும் எண்ணம் மட்டும் இல்லை. பயம். இந்த பாதுகாப்பற்ற உணர்வே ஆண்களை குதர்க்கமாக யோசிக்க வைத்து பல சித்தாந்தங்களை உருவாக்கி அந்த சித்தாந்தங்களுக்கு துணையாக கோவில், தெய்வம், முன்னோர், வழிபாடு, வழக்கம் என எண்ணாயிரம் கதைகளை இட்டுக்கட்ட வைத்து அப்பப்பா, தலை சுற்றுகிறது. 'உன் அறிவுக்கு எது சரியென்று தெரிகிறதோ அதை செய்' என்று சொல்லும் தமிழ் கதாப்பாத்திரம் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் விடுகிற அளவுக்கு சாங்கியங்கள். இவ்வளவு காலம் இந்த ஆணாதிக்க பேரினவாதத்தை, இத்தனை உரிமை மீறல்களை தாண்டி தனக்கென ஒரு வெளியை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே பெண்களின் அசாத்திய வலிமையை உணர வைக்கிறது.
கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகம் என வெட்டிக்கதை பேசி பெண்களை அடிமையாய் நடத்திக்கொண்டிருக்கும் சமூகத்தின் மேல் விழ ஆரம்பித்திருக்கும் சாட்டையடி தான் இந்த அயலி தொடர். பேசுவதற்கு இன்னும் நிறைய பொதிந்து வைத்திருக்கிறது இந்த சமூகம். முழு வீச்சுடன் உரையாடலை மீண்டும் தொடங்குங்கள் முத்துக்குமார்.
காத்திருக்கிறோம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.