
50 பக்கமாவது எழுத வேண்டும், 50 கதைகளாவது எழுத வேண்டும், 50 நாவல்களாவது எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்போம்.
இவர் 50 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார். ராஜேஷ்குமார்!
1969 ஜூலையில் முதல் சிறுகதை வெளியாகி, 1500 நாவல்கள், 2000-த்துக்கும் மேல் சிறுகதைகள் என இந்த வருடத்தோடு 50 வருடங்களைத் தொடுகிறது ராஜேஷ்குமாரின் எழுத்துப்பயணம்.
``முதல் சிறுகதைக்கான விதை?”
“ `அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் எம்.ஜி.ஆரைக் கட்டிப்போட்டு `உன்னை விட மாட்டேன்’ என்று கத்தியுடன் பானுமதி பாடிக்கொண்டே இருப்பார். குத்துவார் என்று பார்த்தால் கடைசியில் கட்டை அறுத்துவிடுவார். அது பிடித்துப்போய், 1969-ல் முதல் சிறுகதையிலேயே அதேபோல ஒரு ட்விஸ்ட் வைத்து க்ரைம் கதையாக எழுதினேன். தலைப்பு, அந்தப் பாடல் வரியான ‘உன்னை விட மாட்டேன்’தான். இப்போதுவரை எழுத்தை நான் விடவில்லை!”
``Writer’s Block எனப்படும் கற்பனைப்பஞ்சம் உங்களுக்கு என்றாவது வந்திருக்கிறதா?”
“இல்லவே இல்லை. இருந்திருந்தால் ஓய்ந்திருப்பேனே? நான் எழுதும் க்ரைம் கதைகளுக்குப் புதிய புதிய ஐடியாக்களைத் தேடிக்கொண்டே இருப்பேன். தேடும்போது நிறைய வேறு கதைகளுக்கான ஐடியாக்களும் கொட்டும் என்பதால், ரைட்டர்ஸ் பிளாக் எனக்கு இருந்ததில்லை. இப்போதுகூட கண்ணுக்குத் தெரியாத ‘Invisible Bomb’ என்று ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என கூகுளில் தேடினேன்.

2050-ல் வந்தேவிடும் என்கிறது ஒரு தகவல். இணையம் இல்லாத காலத்திலேயே எனக்குக் கற்பனை வறட்சி இருந்ததில்லை எனும்போது... இப்போதும் இருக்காது என்பதை ஒப்புக்கொள்வீர்கள்.”
``நீங்கள் படிக்கும் எழுத்தாளர்கள்?”
“கல்கி, தி.ஜா, லா.ச.ரா எல்லாரையும் படித்திருக்கிறேன். இவர்களின் பாதையில் போனால் ஜெயிப்பது கஷ்டம் என்று நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதைதான் க்ரைம் எழுத்து.”
“நிறைய குற்றச் சம்பவங்களை எழுதியிருக்கிறீர்கள். காவல்துறையில் இருந்து ஏதேனும் குற்றத்தைக் கண்டுபிடிக்க உங்கள் உதவியை நாடியதுண்டா?”
“25 வருடங்களுக்கு முன் நடந்தது இது. காவல்துறையில் பணிபுரிந்துவந்த ஓர் ஆய்வாளர் என் வாசகர். செல்போன்கள் இல்லாத காலம். ஒரு குற்றம் தொடர்பான பெரிய காகிதக்கட்டு ஒன்றை எனக்கு அனுப்பிவைத்து டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். ‘ஒரு இரட்டைக் கொலையில சில பேர் மேல சந்தேகம் இருக்கு. உங்களுக்கு அனுப்பியிருக்கற கட்டுல தடய அறிவியல் அறிக்கை, Scene of Crime, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்று எல்லாம் இருக்கு. நாங்க சந்தேகப்படற நபர்களின் வாக்குமூலமும் இருக்கு. எல்லாத்தையும் படிச்சு, யாரா இருக்கும்னு உங்க யூகத்தை நீங்க சொல்லணும்’னு கேட்டுக்கிட்டார். நான் சொன்னேன்: ‘நீங்க என் வாசகரா இருக்கிறது எனக்கு மகிழ்ச்சி. ஆனா என் கதைகள்ல குற்றவாளி யார்னு நான் தீர்மானிச்சுட்டுதான் எழுதுவேன். அதை ஒட்டித்தான் கதையே போகும். படிக்கிற உங்களுக்குத்தான் கடைசியா குற்றவாளி யார்னு தெரியவரும். நிஜத்தோட அதை ஒப்பிட்டுப் பார்க்கிறது சரியா இருக்காது. இதை நான் பண்ணவும் கூடாது’ என்று சொல்லி, திருப்பி அனுப்பிவிட்டேன்.
இன்னொரு சம்பவம். ஒரு காவல்துறை உயரதிகாரிகள் மீட்டிங்கில் ‘110 க்ரைம் நடந்திருக்கு. ஆனா பத்துதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. மத்ததெல்லாம் கிடப்புல போட்டுட்டீங்க. ராஜேஷ்குமார் நாவல்கள் படிங்க. ஒரு எழுத்தாளர் சின்னச்சின்ன தடயங்களை வெச்சு எப்படி குற்றவாளியை நெருங்கறதுன்னு எழுதறாரு... நீங்கள்லாம் அதைப் படிச்சா உங்களுக்கு நிறைய விதங்கள்ல உதவியா இருக்கும்’ என்று ஒரு பெரிய அதிகாரி பேசியிருக்கிறார். அதை இன்னொரு அதிகாரி என்னிடம் பகிர்ந்துகொண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இவையெல்லாம்தான் எனக்கு விருதுகள்!”
“இது வெப் சீரிஸ் காலம். வெப் சீரிஸுக்கு யாரேனும் தொடர்பு கொண்டதுண்டா?”
“சத்யஜோதி பிலிம்ஸுடன் ‘தேவை ஒரு தேவதை’ எனும் வெப்சீரிஸுக்கான பணியில் இணைந்திருக்கிறேன். அமேசான் ப்ரைமில் வெளிவரவிருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதுபோக இயக்குநர் அறிவழகன் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் படத்தை அடுத்து, ‘நாம ஒரு படம் பண்ணலாம்’ என்றிருக்கிறார்.”
``விவேக், ரூபலா இருவருக்குமான பெயர்க்காரணம் என்ன?”
“விவேகானந்தரை காட்ஃபாதராக நினைக்கிறேன். அதுதான் விவேக். ரூபலா பெயர்க்காரணம்தான், வித்தியாசமானது. 1981-ல் மதுரை ரயில்நிலையம் எதிரில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை கேட்டுச் சென்றேன். `அறை காலி இல்லை’ என்று சொன்ன ரிசப்ஷனிஸ்ட் சட்டென்று ‘நீங்கள் ராஜேஷ்குமார்தானே?’ என்று கேட்டார். ஆம் என்றதும் ‘இப்பதான் உங்க நாவல் படிச்சிட்டிருக்கேன்’ என்று சொல்லி, எனக்காகப் பேசி ஒரு அறையை ஏற்பாடு செய்துகொடுத்தார்.

அவர் என்னிடம் ‘என் பேர் ரூபலா. என் பேரை ஒரு நாவல் கதாபாத்திரமா எழுதுங்க சார். யாரும் மறக்க முடியாதபடிக்கு இருக்கணும்’ என்று கேட்டுக்கொண்டார். அப்போது இந்தப் பெயர் ரொம்பவுமே மாடர்னான ஒரு பெயர். மறக்காமல் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதால், அடுத்த நாவலில் விவேக்குக்கு ரூபலாவை ஜோடியாக்கிவிட்டேன். அதன்பிறகு ஒருமுறை அந்த ஹோட்டலுக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. அவரது முகவரி குறித்துக் கேட்டபோது, ஹோட்டல் நிர்வாகத்தினர், அவர் பெண் என்பதால் விவரங்களைப் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டனர். சமீபத்தில் முகநூலில்கூட அந்த வாசகி எங்கே என்று கேட்டுப் பதிவிட்டிருந்தேன். இதுவரை அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை!”
“வாசகர் - எழுத்தாளர், எழுத்தாளர் - பதிப்பாளர் உறவு பற்றிச் சொல்லுங்கள்.”
“சென்ற வருடம் என் 70 வது பிறந்தநாளுக்கு அமெரிக்காவிலிருந்து ஜெயகாந்தி என்ற 88 வயது வாசகி தன் மகனுடன் வந்து வாழ்த்திப் பரிசளித்துச் சென்றார். என்னைப் பார்ப்பதற்காக மட்டும் 29 மணிநேரம் பயணித்து வந்த அந்த அன்பை என்னவென்று சொல்வது? பதிப்பாளர் பற்றிக் கேட்டீர்களானால் ஜி.அசோகனுக்கும் எனக்குமான உறவு எல்லோருக்கும் தெரியும். முதல் சந்திப்பிலேயே ‘சார்’ என்று அழைக்காமல் ‘அண்ணே’ என்று அழைத்தவர் அவர். என் நாவல்களில் 33% நாவல்கள் அவர் பதிப்பித்ததுதான்!”
“இலக்கிய எழுத்தாளர்கள் யாராவது உங்கள் எழுத்து பிடிக்கும் என்று உங்களிடம் பகிர்ந்துகொண்டதுண்டா?”
“நானும், சாகித்ய அகாடமி விருது பெற்ற ஓர் எழுத்தாளரும் ஒரு பத்திரிகையின் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டோம். அப்போது நிறைய வாசகர்கள் என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதும், செல்ஃபி எடுத்துக்கொள்வதுமாக இருந்தனர். அவர் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தார். எனக்கு தர்மசங்கடமான நிலைமை. நான் அவரை வாசகர்களிடம் காட்டி ‘சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்’ என்று அவரைப் பற்றிச் சொன்னேன். நான் சங்கடமாக உணர்வதைத் தெரிந்துகொண்ட அந்த எழுத்தாளர் பெருந்தன்மையோடு என்னிடம் வந்து ‘நானும் உங்கள் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். நீங்கள் மக்கள் எழுத்தாளர். நீங்க எழுதறது க்ரைம் அல்ல. `ஒரு தப்பு பண்ணினா இயற்கைல இருந்து நீ தப்பிக்க முடியாது’ன்னு இளைஞர்களுக்கு உணர்த்துற எழுத்து. ஒருதுளி ஆபாசம் உங்க எழுத்துல இல்லை. மக்களுக்கான எழுத்தை எழுதறதாலதான் இத்தனை வருஷமா மக்கள் உங்களை இறக்கி வைக்காம கொண்டாடறாங்க’ என்றார்.”