ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

காந்திஜியும் நறுமுகையும்... க்ரைம் ஸ்டோரி

காந்திஜியும் நறுமுகையும்... க்ரைம் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
News
காந்திஜியும் நறுமுகையும்... க்ரைம் ஸ்டோரி

- ஆர்னிகா நாசர்

நிகழ்நாளின் நான்
நேற்றைய நிகழ்வில்
உட்புகுந்து ஹைபுன் கவிதை செய்கிறேன்…
நாளைய நடப்புகளில்
சிரசாசனம் செய்து மோனாலிஸா
பரவசம் அடைகிறேன்...
பௌதிக விதிகளைப் போர்த்தி
பால்வீதியில் முன்னும் பின்னும்
தவளைத்தாவல் நிகழ்த்தும்
நானொரு காலப்பயணி.
- தேஜஸ் சுப்பு

இரவாடையில் இருந்தாள் நறுமுகை. வயது 27. உயரம் 165 செமீ. நடிகை பிரியங்கா மோகனின் மேம்படுத்தப்பட்ட சாயல். டேக் வான்டோ கராத்தேயிலும் தாய் கிக் பாக்ஸிங்கிலும் மார்ஷியல் ஆர்ட்ஸிலும் நிபுணி. விண்வெளி பௌதிகமும் அரசியல் விஞ்ஞானமும் படித்தவள். ‘உலகில் என்ன மாற்றத்தைக் கொண்டு வர விரும்பு கிறாயோ, அந்த மாற்றத்தை முதலில் உன்னில் ஏற்படுத்து’ என்கிற காந்தியத்தின் மீது மெகா காதல் கொண்டவள்.

“இளவேனில்...” தோழியை விளித்தாள் நறுமுகை.

“சொல் நறுமுகை!”

“இந்திய அரசியல் மகாமோசமானதற்கு என்ன காரணம் என நினைக்கிறாய்?”

“லஞ்சம் ஊழல், அரசியல்கட்சிகள், இந்திய தேர்தல் முறை, மதங்கள் முக்கிய காரணம்!”

“இதை நான் வேறு கோணத்தில் பார்க் கிறேன். மகாத்மா காந்திஜி அவரது 78-வது வயதில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படாமல் இருந்திருந்தால் 100 வயதில் இருந்து 110 வயது வரை உயிரோடு இருந்திருப்பார். முதுமையடைந்து 1970-80-க்குள் இறந்திருப்பார். கூடுதல் 22 வருடங்களோ 32 வருடங்களோ அவரது வழிகாட்டல் இருந்திருந் தால் இந்தியா பல வழிகளில் மேம்பட்டிருக் கும். அவர் வன்கொலை இந்திய அரசியலின் மீதான சாபம்!”

“காந்திஜி இறந்து 74 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் நறுமுகை?”

காந்திஜியும் நறுமுகையும்... க்ரைம் ஸ்டோரி

“காரணம் இருக்கிறது இளவேனில். நீ காலப்பயணம் பற்றி என்ன நினைக்கிறாய்?”

“காலப்பயணம் விஞ்ஞானக் கதைகளில் மட்டுமே சாத்தியமான விஷயம். காலத்தின் முன்னும் பின்னும் பயணிப்பது குதிரைக் கொம்பு. மீறி யாராவது இறந்த காலத்துக்குள் பயணித்தால் இறந்த கால நிகழ்வை ஒரு துளியும் மாற்ற இயலாது - வெறும் பார்வை யாளராகத்தான் போய் வரலாம்…”

“காலப்பயணத்தில் பெண்கள் போய் வந்த கதைகளைப் படித்திருக்கிறாயா?”

“ஆணாதிக்க எழுத்தாளர்கள் காலப்பயண சாகசங்களை ஆண்களே செய்வதாக எழுதி யுள்ளனர்.”

“காலப்பயண கதைகளில் பெண்கள் போய் வருவது பெரிய விஷயமா... இதோ நிஜ வாழ்க்கையில் நான் காலப்பயணம் போய் வரப்போகிறேன்!”

“என்ன கதைக்கிறாய் நறுமுகை?”

“நான் ஒரு ரகசியத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய சாக சத்துக்கு ஒரு சாட்சி வேண்டுமல்லவா? நான் கௌசிக் என்கிற விஞ்ஞானியிடம் வேலை பார்ப்பது உனக்கு தெரியும் அல்லவா...”

“ஆமாம்!”

“கெளசிக் காலப்பயணம் போகும் இரு விசேஷ கடிகாரங்களைக் கண்டுபிடித்துள்ளார். அந்த கடிகாரத்தை கட்டிக்கொண்டு இறந்த காலத்தில் பத்தாயிரம் வருடங்கள் எதிர் காலத்தில் பத்தாயிரம் வருடங்கள் காலப்பயணம் உலகின் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் போகலாம்… இறந்த கால நிகழ்வுகளை தாராளமாக மாற்றி அமைக்கலாம்!”

“உன் பாஸின் காலக் கடிகாரங்களை திருடப் போறியா!”

“சரியாக யூகித்து விட் டாய். ஒரு காலக்கடி காரத்தை கட்டிக் கொண்டு இன்னொரு காலக்கடி காரத்தை பத்திரமாக எடுத்துக்கொண்டு இறந்த காலத்துக்குள் பயணிக்க இருக்கிறேன்!”

“இறந்த காலத்துக்கு என்றால்?”

“மத்திய டில்லியிலுள்ள பிர்லா ஹவுஸுக்கு 30.01.1948 மாலை நான்கு மணிக்கு போய் சேரப்போகிறேன். நாதுதராம் வினாயக் கோட்ஸே காந்திஜியை மாலை 5.17 மணிக்கு மூன்று தோட்டாக்களால் சுட்டுக்கொல்வதை தடுக்க போகிறேன். தடுப்பதோடு மட்டுமல்லா மல் நான் கொண்டு போகும் உபரி காலக் கடிகாரத்தை காந்திஜியின் கைகளில் கட்டி அவரை 2022-க்கு அழைத்து வரப்போகிறேன். காந்திஜி 2022-க்கு வந்து இந்திய அரசியல் வாதிகளின் கண்களில் விரலை விட்டு ஆட் டட்டும்...”

“இது சாத்தியமா?”

``முப்பது கிராம் பொறுமை ஒரு டன் பிரசங் கத்தைவிட வீரியமானது என்றார் காந்திஜி. நான் என் காலப்பயணத்தை கடந்த ஒரு வருடமாகத் திட்டமிட்டு கொண்டிருக்கிறேன். ஒரு மென்மையான முறையில் இந்த உலகத்தை ஒரு உலுக்கு உலுக்க முடியும்!”

“இறந்தகாலத்துக்கு காலப்பயணம் போகும் நீ காற்றோடு காற்றாக கரைந்து போகலாம் அல்லது கொல்லப்படலாம்!”

“எண்ணங்களின் விளைவே மனிதன். அவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே மாறுகிறான். எனது நேர்மறை எண்ணங்கள் நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்!”

“நீ எப்போது காலப்பயணம் போகப் போகிறாய் நறுமுகை?”

“நாளை நள்ளிரவு!”

“பரிசோதனைக்கூடம் பலத்த பாதுகாப்பில் இருக்கும். காலக்கடிகாரங்களை எப்படி திருடு வாய்?”

“மீண்டும் காந்திஜியின் ஒரு பொன் மொழியை கூறுகிறேன். எங்கு எண்ணமும் பேச்சும் செயலும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறதோ அங்கு மகிழ்ச்சி பெருக்கெடுத் தோடும். எனது காலப்பயணத்தின் இறுதியில் இந்திய அரசியலின் பொற்காலம் திரும்பும்”

“மிகப்பெரிய அசைன்மென்ட். உன்னுடைய சாகசம். வெற்றி பெற இந்திய மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன் நறுமுகை.''

“ஒரு கண்ணுக்கு ஒரு கண் பழி வாங்க ஆரம்பித்தால் உலகின் ஒட்டுமொத்த மனிதர் களும் குருடர்கள் ஆகிவிடுவர். பழி வாங்கலும் வன்முறையும் இல்லா இந்தியாவை மீண்டும் காந்திஜியின் உதவியுடன் வடிவமைப்போம்...'’ சூளுரைத்தாள் நறுமுகை.

இபைக்கில் சீறிப் பாய்ந்தாள் நறுமுகை.

காம்பவுண்ட் சுவர்களில் இருந்த மின் வேலியை துண்டித்தாள். க்ளோஸ் சர்க்யூட் கேமராக்களில் பொய் காட்சிகளை நிறுவி னாள். காவல்கார ரோபாட்களை லேசர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினாள். கௌசிக்கின் லேடெக்ஸ் கைரேகையை பதித்து பரி சோதனைக்கூடத்தை திறந்து உள்ளோடி னாள். கடவு சொல்லை பதிந்து பெட்டகத்தைத் திறந்தாள்.

இரு காலக்கடி காரங்கள் மின்னின. அவற்றை எடுத்து முத்தமிட்டாள். `செல்லங் களா… உங்களை வைத்து தான் காந்திஜியை 2022-க்கு கொண்டு வரப் போகிறேன். இது மாதிரியான கடத்தல் மனித நாகரிகத்தில் இதுவரை நடந்ததில்லை. மதுரை மீனாட்சி யம்மா... நீதான் என் சாகச பயணத்தை வெற்றிகரமானதாக்கித் தர வேண்டும்!”

ஒரு காலக்கடிகாரத்தை இடது மணிக் கட்டில் எடுத்து கட்டிக்கொண்டாள். இன் னொன்றை இடுப்பு பௌச்சில் பத்திரப்ப டுத்திக் கொண்டாள். லேசர் துப்பாக்கியும் இடுப்பில் அடைக்கலமானது.

நேரத்தையும் இடத்தையும் துல்லியமாக பதிந்து காலக்கடிகாரத்தை இயக்கினாள் நறுமுகை. அவ்வளவுதான்… காட்சியமைப்பு பெரும் சப்தத்துடன் வீறல் விட்டது. மனித அம்பாய் காற்றில் மறைந்தாள் நறுமுகை.

மத்திய டில்லியிலுள்ள பிர்லா ஹவுஸுக்கு 30.01.1948 மாலை நான்கு மணிக்கு போய்ச் சேர்ந்தாள் நறுமுகை.

சர்தார் வல்லபாய் படேலுடன் பேசிக் கொண்டிருந்தார் காந்திஜி. வட்ட வடிவ வொண்டர்ஸ்டைல் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். இடுப்பில் வேட்டி மேற் சட்டைக்கு பதில் ஆஸ்திரேலிய கம்பளி யாலான சால்வை போர்த்தியிருந்தார். இங்கர் சால் டாலர் பாக்கெட் கடிகாரத்தை நூலால் இணைத்து இடுப்பில் சேர்த்து கட்டியிருந்தார். காந்திஜி 49.4 கிலோ எடையும் 1.65 மீட் டர் உயரமும் இருந் தார்.

“தினமும் பிரார்த்தனை அலுத்துப் போக வில்லையா பாபு...” படேல் வினவினார்.

“பிரார்த்தனை என்பது இதயத்தின் ஏக்கம் நண்பரே. ஒரு மனிதனின் பலம், பலவீனத் தின் தினசரி ஒப்புதல் வாக்கு மூலமே பிரார்த்தனை. பிரார்த் தனையில் வார்த்தைகள் இல்லாத இதயம் இருக்க லாம்... இதயம் இல்லாத வார்த்தைகள் வீண்!”

படேல் சிரித்தார். “உங்களிடம் பேசி விட்டுச் செல்லும்போது களில் பரமசாது ஆகி விடுகிறேன் பாபு!”

மனுபென்னும் ஆபா பென்னும் முறுவலித்தனர்.

“பிரார்த்தனைக்கு நேரமாகிறது கிளம்பு கிறேன்!’‘

முப்பத்தியேழு வயதான நாதுராம் வினாயக் கோட்ஸே நின்றிருப்பதை நறுமுகை பார்த்து விட்டாள். கோட்ஸே எம் 1934 பெரட்டா செமி ஆட்டோமேட்டிக் பிஸ் டலை பதுக்கி வைத்திருந்தான். அதில் ஏழு தோட்டாக்கள்.

நறுமுகை கோட்ஸேயின் பக்கவாட்டில் வந்து அவனை சுட முயன்றாள். அதற்குள் யாரோ இருவர் அவளை தடுத்து தூக்கிச் சென்றனர்.

அவர்களுக்கு இறக்கைகள் இருந்தன. பளீர் நிறத்தில் பளபளத்தனர். அவர்களின் கண்களில் இமைகள் இல்லை.

“யார் நீங்கள்?” கூவினாள் நறுமுகை.

நறுமுகையின் நெற்றிப் பொட்டில் கை வைத்தனர். இருதரப்பும் பேசும் மொழி இருவருக்கும் புரிய ஆரம்பித்தது.

“நாங்கள் காலத்தின் முன்னும் பின்னும் பயணித்து கால நிகழ்வுகளை மாற்றிவிடத் துடிக்கும் யாரையும் தடுக்கும் காலக் கண் காணிப்பு தேவதைகள்!”

“விடுங்கள் என்னை... மகாத்மா காந்திஜி யைக் காப்பாற்றி 2022-க்கு கடத்திச் செல்ல இருக்கிறேன். அவரை வைத்து இந்திய அரசியலை தூய்மைப்படுத்தப் போகிறேன்!”

“காந்திஜியை கோட்ஸே கொல்லப்போவதை யாராலும் தடுக்க முடியாது; தடுக்கவும் கூடாது!”

“ஏன்?”

“குப்தர்கள் இந்தியாவை 300 ஆண்டுகளும் மொகலாயர்கள் 300 ஆண்டுகளும் ஆங்கி லேயர்கள் 100 ஆண்டுகளும் ஆண்டனர். சுதந்திர இந்தியாவாகி 74 வருடங்கள் ஆகின்றன. ஒருங்கிணைந்த சுதந்திர இந்தியா உருவாக குப்தர்கள் ஆட்சியும் மொகலாயர் ஆட்சியும் பிரிட்டிஷார் ஆட்சியும் தேவைப் பட்டன. உயிரினங்களுக்கு பரிணாம வளர்ச்சி இருப்பது போல இந்திய அரசியலுக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி இருக் கிறது. அந்தப் பரிணாம வளர்ச்சி காந்திஜியின் மரணத்துக்குப் பிறகுதான் முழுமை பெறும்!”

“முழுமை எங்கே பெறுவது? 2022-ல் இந்திய அரசியலில் ஊழலும் மத தீவிரவாதமும் தலைவிரித்து ஆடுகின்றன. காந்திஜியை அழைத்துப் போய் இந்தத் தொற்றுநோய் களுக்கு மருத்துவம் பார்க்கப் போகிறேன்!”

“காந்திஜியை நீ உயிருடன் 2022-க்கு கொண்டு போன பின் என்னென்ன நடக்கும் தெரியுமா? கடந்த 74 வருட அரசியல் நிகழ்வுகள் மொத்தமும் மாற்றி அமைக்கப் படும். 2022-க்கு கொண்டு வரப்படும் காந்திஜி, அடுத்த சில மாதங்களில் வன்கொலை செய்யப்படுவார். இந்திய அரசியல் குரங்கு போல பழைய கிளைக்குத் தாவிவிடும்!”

“மோசமான அரசியல்வாதிகளிடமிருந்து இந்தியாவை யார் காப்பாற்றுவது?”

“இந்திய அரசியல் மோசமான நிலையின் உச்சம் தொடும். அதுதான் பிரேக்கிங் பாயின்ட். மிகப்பெரிய மக்கள் புரட்சி ஏற்பட்டு அரசியல் களையெடுப்பு நடக்கும்…”

“அது எப்போது?”

“எங்களுக்குத் தெரியாது!”

“இப்ப என்னை என்ன செய்யப் போகிறீர்கள்?”

“உன்னை அழித்தொழிக்க வேண்டும். ஆனால், அதை நாங்கள் செய்யப் போவ தில்லை. உன் இடுப்பிலுள்ள காலக் கடிகாரத்தை எடுத்துக் கொள்வோம். உன் கை காலக்கடிகாரத்தை திருகி உன்னை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அனுப்புவோம். காட்டில் நீ ஆதிவாசியாகத் திரிவாய்!”

காந்திஜியும் நறுமுகையும்... க்ரைம் ஸ்டோரி

நறுமுகை பிடிவாதம் பிடிக்க, அவள் இடுப்பிலிருந்து காலக்கடிகாரத்தைப் பிடுங்கிக்கொண்டு அவளை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அனுப்பினர்.

காந்திஜி இரு பக்கங்களிலும் இரு பெண்களை அணைத்துக்கொண்டு பிரார்த்தனைக் கூடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

காந்திஜியின் முன்போய் கோட்ஸே நின்று “நமஸ்தே காந்திஜி!” என்கிறான். காந்திஜி கை கூப்புகிறார்.

கோட்ஸேயின் வலதுகை துப்பாக்கியை எடுக்கிறது. இடதுகையால் மனுபென்னை நெட்டித் தள்ளுகிறான்.

பாயின்ட் பிளாங் ரேஞ்சில் மும்முறை சுடுகிறான். அடிவயிற்றிலும் இதயத்திலும் தோட்டாக்கள் பாய்கின்றன.

காந்திஜி சரிகிறார்.... “ஹே ராம்!”

`பலவீனமானவர்களால் யாரையும் மன்னிக்க இயலாது. மன்னிப்பு இதய பலமிக்கவர்களின் தலையாய பண்பு!’ என நினைத்த காந்திஜி கோட்ஸேயை முழுமை யாக மன்னித்தார்.

காந்திஜியை காப்பாற்றி 2022-க்குக் கடத்தி வர காலப்பயணம் போன நறுமுகை பற்றிய நினைவுகளை இளவேனில் முற்றிலும் மறந்தாள்.

மருத்துவர் இளவேனிலை சோதித்து விட்டு உதடு பிதுக்கினார். “ஷி இஸ் டோட்டலி சஃபரிங் ஃப்ரம் அக்யூட் அம்னீஷியா… ரெக்கவரி ஒரு சதவிகிதம் கூட சாத்தியமில்லை!”

காலக் கண்காணிப்பு தேவதைகள் புதிர் புன்னகை வெடித்தனர்.

ஒளி வேகத்தில்
ஒரு காலப்பயணம்
கருந்துளைக்குள்
மாம்பழவண்டாய் உள்நுழைவு
காலத்தின் மறுபக்கத்தில்
வெளிப்படும் வேழப் பிரசவம்
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில்
ஆதவனுடன் சிறு தேநீர் விருந்து.

- தேஜஸ் சுப்பு