
அவசரத்துக்கு பக்கத்து வீட்டி லிருந்து குடையைக் கடன் வாங்கு வதுகூட எனக்குப் பிடிக்காது. எனக்குத் தெரியாமல் இவள் வங்கியில் கடன் வாங்கலாமா?
நான் அநியாயத்துக்கு நியாயஸ்தன். எதிலும் ஓர் ஒழுங்குமுறையும், நேர்மை யும் அப்பாவிடமிருந்து வந்தது. தபால் ஸ்டாம்பில் முத்திரை குத்த விடுபட்டிருந்தால் அவரே பேனாவால் பெருக்கல் குறி போட்டுவிடுவார்.
நள்ளிரவில் அநாதை சாலையிலும் பச்சை வர சிக்னலில் காத்திருப்பேன். மூன்று தினங்களுக்கு ஒருமுறை நகம் வெட்டுவேன். சுசித்ராவுக்கு போன் வந்தால் யாரிடமிருந்து என்று பார்க்காமல் எடுத்துச் சென்று கொடுப்பேன். பொதுக் குழாய்களில் ஒரு சொட்டு நீர் கசிந்தாலும் சென்று சரியாக மூடுவேன். விடிந்த பிறகும் சாலை விளக்கெரிந்தால் போன் செய்து சொல்வேன். பஸ்ஸில் சரியான சில்லறை வைத்திருப்பேன். விளைவுகளை யோசிக்காமல் எதையும் செய்ய மாட்டேன்.
எதெல்லாம் தவறோ, அதெல்லாம் சரியென்று மாறிப்போன உலகில் மற்றவர் பார்வையில் நான் கேலிப்பொருள். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அலுவலகத்தில் எனக்கு மியூசியம் என்று பட்டப் பெயர். மியூசியத்தின் அருமை தெரியாத முட்டாள்கள்!
சுயபுராணம் போதும்.

இதோ ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறாள் சுசித்ரா. அய்யோ... எத்தனை ரத்தம். எட்டு குரூப்களில் அபூர்வமான ஏபி நெகட்டிவ் குரூப் ரத்தம். இரண்டு நோயாளிகளுக்காவது பயன்பட்டிருக்கும். அதற்காக கொலை செய்யும் முன்பாக அழைத்துச் சென்று ரத்த தானம் செய்து கூட்டிவரவா முடியும்?
ஆமாம். கொலைதான். நான்தான். என் கையால்தான். அதன் பிறகு நடுக்கத்தில் கீழே போட்டுவிட்ட இந்தக் கத்தியால்தான். என் குணத்துக்குச் சற்றும் பொருந்தாத செயல். ஆனால், கதைகளின் கற்பனை களை விடவும் நிஜம் என்பது விசித்திரமானது என்பார்களே...
சுசித்ராவுக்கும் எனக்குமான வாக்குவாதத்தின் கொதிநிலை உச்சத்தை நோக்கிச் சென்ற சமயம் தோதாக நான் கத்தியால் ஆப்பிள் வெட்டிக்கொண்டிருந்ததுதான் தப்போ?
அவசரத்துக்கு பக்கத்து வீட்டி லிருந்து குடையைக் கடன் வாங்கு வதுகூட எனக்குப் பிடிக்காது. எனக்குத் தெரியாமல் இவள் வங்கியில் கடன் வாங்கலாமா? அதுவும் எவ்வளவு? ஐம்பது. பெரிய ஐம்பது! ஆமாம்... ஐம்பது லட்சம்! எப்படி? தன் பெயரில் இருக்கும் வீட்டை பிரைவேட் ஃபைனான்சில் அடகு வைத்து!
எதற்கு? கண்ணனுக்கு தனியார் மருத்துவக் கல்லூரி யில் குறுக்கு வழியில் சீட் வாங்க ரகசியமாகப் பேசி வைத்திருக்கிறாளே, அதற்கு!
அவன் தகுதிக்கும் திறமைக்கும் சீட் கிடைத்தால் மட்டுமே மருத்துவம் படிக்க அனுமதி என்று நான் சொன்னது எந்த விதத்தில் தவறு?
கண்ணன் தன் நண்பனிடம் போனில் பேசியதைக் கேட்டேன். “எம்.எஸ் முடிச்சிட்டு நம்பர் ஒன் ஹாஸ்பிடல்ல சேர்ந்துட்டா அஞ்சு வருஷத்துல நானே ஒரு ஹாஸ்பிடல் கட்டி செட்டிலாய்டுவேன். ஃபார்மா கம்பெனிஸோட ஒத்துழைச்சா போதும். வருஷத்துக்கு ஒரு ஃபாரின் டூர், கார், பிராண்டட் கேட்ஜெட்ஸ்னு செமயா என்ஜாய் மச்சி.’’
பார்த்தீர்களா இவன் கனவை? கிராமத்துக்குப் போய் இலவச வைத்தியம் செய்வேன். ஆராய்ச்சிகள் செய்து ஏதாவது ஒரு மருந்து கண்டுபிடிப்பேன் என்றெல்லாம் சொன்னானா? மருத்துவம் படித்து மல்ட்டி மில்லி யனராக வேண்டுமாம்.
“அதுக்கு போதை மருந்து வித்து கேங்ஸ்டராயிடேன். இல்ல... கூலிப்படையா கொலைகள் செஞ்சா இன்னும் சம்பாரிக்கலாம். அரசியல்வாதிக்கு பினாமியாகலாம். பணம் சம்பாரிக்கிற உருப்படாத லட்சியத்துக்கு புனிதமான மருத்துவப் படிப்பு எதுக்குடா?’’
குடும்ப சபையில் நான் கடுமையாகக் கண்டித்ததால் நான்கு நாள்களாக மைனர் என்னுடன் பேசுவதில்லை.
சுசித்ரா அவனோடு கூட்டுச் சதியாக பணம் ஏற்பாடு செய்தது தெரியவந்தபோது கோபம் வருமா வராதா? ஆத்திரம் பொங்குமா பொங்காதா? வாக்குவாதத்தில் தீப்பொறி பறக்குமா பறக்காதா?
“உங்க உருப்படாத ஐடியாலஜிக்காக அவனோட ஃப்யூச்சரையே கெடுக்கறிங்க!’’
“நேர்மையா வாழறது உருப்படாத ஐடியாலஜியா சுசித்ரா? அது முதல்ல ஐடியாலஜியே இல்லடி மண்டு. அதான் மனுஷனோட அடிப்படையான இயல்பு.’’
“இருக்க வேண்டிய இயல்புன்னு சொல்லுங்க. ஆயிரம் வருஷம் முன்னாடியும் திருடன் உண்டு. இன்னிக்கு தேதிக்கு நேர்மைன்றது பழங்காலத்துப் பொருள். நீங்க ஒருத்தர்தான் தோண்டி மடில வெச்சிக்கிட்டு கொஞ்சுறிங்க. இன்னிக்கு அப்படி ஒரு ரேஸ் நடக்குது. முந்திக்கிட்டு ஜெயிக்கணும். அப்போ ஊருக்கு ஒரு அறிவாளிப் பையன்தான் இருந்தான். இப்போ பசங்களோட ஐ.க்யூ லெவலே வேற. இரு நூறுக்கு மேல எகிறுது. ஐன்ஸ்டின், டாவின்சிக் கெல்லாம் சவால் விடறானுங்க.’’’

“அதுக்காக? லஞ்சம் கொடுத்துப் படிச்சா... நாளைக்கு நிறைய தப்பு செய்ய மாட்டானா? ஸ்கேன் சென்டர் ஆரம்பிப்பான். ஒரு ஆண்டாசிட்ல முடியற அஜீரணத்துக்கு பயமுறுத்தி ஸ்கேன்
செய்ய வெப்பான். வர்றவன் வீட்டை வித்தாலும் கவலைப்பட மாட்டான், தாலியை அடகு வெச்சாலும் கவலைப்பட மாட்டான்.’’
“அதான் சமூகத்துக்காகக் கவலைப்படறதுக்கு நீங்க இருக்கீங்களே... அவனை விட்ருங்க!’’
“அதெப்படி எங்கிட்ட சொல்லாம லோன் வாங்கலாம்?’’
“எங்கப்பா என் பேர்ல எழுதி வெச்ச வீடுதானே?’’
“அப்பறம் இந்தக் குடும்பத்துல எனக்கென்னடி மரியாதை?’’
“சும்மா எல்லாத்துக்கும் தத்துவம் பேசிக்கிட்டு ஒத்துவராத அட்வைஸ்லாம் பண்ணிட்டிருந்தா இந்த மரியாதைதான் கிடைக்கும். சும்மா லூசு மாதிரி கத்திக்கிட்டு?’’
“என்னடி சொன்னே?’’
சலனமற்று உறைந்து போயிருக்கும் சுசித்ராவின் திறந்த விழிகள் என்னையே பார்க்கின்றன.
இப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?
கொஞ்ச நேரத்தில் கல்லூரியிலிருந்து மஞ்சு திரும்புவாள். அதன் பிறகு பள்ளி யிலிருந்து கண்ணன் வருவான்.
என்ன பதில் சொல்வது?
“ரொம்ப மரியாதை இல்லாம பேசினாப்பா. நானே இப்படி ஆத்திரப் படுவேன்னு நினைக்கல. ஒரு விநாடி யோட பின்னத்துல எல்லாம் நடந்துடுச்சு’’ என்று சொல்ல முடியுமா?
கதையில், சினிமாவில் போல சாமர்த் தியமாக இந்த உடலை அப்புறப்படுத்தி விட்டு, “கோயிலுக்குப் போன அம்மா என்ன இன்னும் காணோம்?’’ என்று
ஒரு நாடகத்தை பசங்களிடம் ஆரம்பிக் கலாமா?
முதல் காரியமாக அவளுக்கு போன் செய்வார்கள். சிம் கார்டைத் தனியாக எடுத்து கடலில் வீசிவிடலாம். போனை சுத்தியல் வைத்து பீஸ் பீஸாக உடைத்து பொட்டலம் கட்டி வட மாநிலம் போகும் ரயிலின் குப்பைத் தொட்டியில் போட்டுவிடலாமா? கத்தியை ஏதாவது பாதாள சாக்கடையில் போட்டுவிடலாம்.
எல்லோருக்கும் போன் செய்து விசாரிப்பார்கள். நானும் பலரிடம் விசாரிக்க வேண்டும். பிறகு போலீஸில் புகார் தர வேண்டும். எந்தக் கோயில், எத்தனை மணிக்குப் புறப்பட்டார்கள் என்று நூறு கேள்விகள் கேட்பார்கள். நானே ஒரு போலீஸ்காரனாக மாறி மனதில் கேள்விகளை எழுப்பி அவற்றுக் கெல்லாம் பொருத்தமான பதில்களைத் தயார் செய்ய வேண்டும். அதைவிட முக்கியம்... கொஞ்சமும் தடுமாறாமல் நடுக்கம் வெளிப்படுத்தாமல் அந்தப் பதில்களைச் சொல்ல வேண்டும்.
“மிஸ்டர் கதிரவன்... உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஏதாவது சண்டை, கருத்து வேறுபாடு உண்டா?’’
“அப்படியெல்லாம் எதுவுமே இல்ல சார். நாங்க ஆதர்ச தம்பதி.’’
அதே கேள்வியை மஞ்சு, கண்ணனிடம் கேட்டால் அப்படியா சொல்வார்கள்?
மஞ்சு இப்படித்தான் சொல்வாள்.
“சார்... எந்த ஒரு விஷயத்துலயும் ரெண்டு பேருக்குமே ஒத்துவராது. அப்பா நிறைய கொள்கை பேசுவார். அதை அவர் மட்டும் கடைப்பிடிச்சா பிரச்னை இல்ல. வீட்ல எல்லாரும் அப்படியே கடைப்பிடிக்கணும்னு வற்புறுத்துவார். அம்மா ரொம்ப பிராக்ட்டிகல் டைப். ரெண்டு பேருக்கும் தினம் ஒரு தடவையாவது வாக்குவாதம் வந்துடும்.’’
கண்ணன் இப்படித்தான் சொல்வான்.
“சார்... நான் நாலு நாளா அவர் கூட பேசறதில்ல. மேனேஜ்மென்ட் கோட்டால மெடிக்கல் சீட் வாங்க நினைச்சேன். அதுக்கு அம்மா ஓகே சொல்லியாச்சு. ஒரு காலேஜ்ல ஹை ரெக்கமென்டேஷனோட தொகையும் பேசியாச்சு. அப்பா தப்புன்னு தாண்டவ மாடினாரு. அவருக்குத் தெரியாம அம்மா தன் பேர்ல உள்ள வீட்டை பேங்க்ல வெச்சு லோன் வாங்கிட்டாங்க. அது அவருக்குத் தெரிஞ்சுபோச்சு. நாலு தெருவுக்கு கேக்கற மாதிரி கத்திக்கிட்டே இருந்தாரு.’’
நான் என்ன சொல்ல வேண்டும்?
“நான் அவளைத் திட்டறது ஒண்ணும் புதுசில்லை சார். பதிலுக்கு பதில் பேசுவா. தைரியமானவ. கோபிச்சுக்கிட்டு போயிருக்க சான்ஸ் இல்ல சார்.
ஆறு பவுன் செயின், நாலு பவுன் வளையல் போட்ருப்பா சார். அதுக்கு ஆசைப்பட்டு யாராச்சும் கடத்தியிருக்க லாமான்னு எனக்கு பயமா இருக்கு சார்.’’
பாடி கிடைக்கும் வரை இது மிஸ்ஸிங் கேஸ்தான். பாடி கிடைத்து போஸ்ட் மார்ட்டம் செய்த பிறகுதான் மரணம் எதனால் எப்படி நிகழ்ந்தது என்பது தெரிய வரும். இன்றைக்கு இருக்கும் ஃபாரன்சிக் தொழிற்நுட்ப வளர்ச்சியில் கொலைதான் என்று நிமிடங்களில் கண்டு பிடித்துவிடுவார்கள்.
அதற்குப் பிறகுதான் விசாரணையின் கோணம் மாறும். எதற்குப் பிறகு? கொலை என்று தெரிந்த பிறகு. அது எப்போது தெரியும்? பாடி கிடைத்ததும்!
சுசித்ராவின் திறந்த விழிகளில் ஒன்றின் மீது முதல் ஈ வந்து உட்கார்ந்தது.

போலீஸுக்கு பாடி கிடைக்காமல் டிஸ்போஸ் செய்ய வேண்டும். அதெப்படி செய்வது? நான் தினம் இரண்டு கொலை செய்பவனா என்ன? கூகுளில் ஐடியா கேட்கலாம். நாளைக்குத் தேடும் ஹிஸ்டரியிலிருந்து தோண்டி இதை எதற்குத் தேடினாய் என்று கேட்பார்கள். மணிமேகலைப் பிரசுரத்தில் ‘போலீஸுக்குக் கிடைக் காமல் பிரேதத்தை மறைப்பது எப்படி?’ என்று புத்தகம் போட்டிருப்பதாகத் தெரியவில்லை.
செய்திகளில் படித்ததில் தொட்டி நிறைய ஆசிட் நிரப்பி அதில் பிரேதத்தை ஒரு சதைத் துணுக்குக்கூட கிடைக்காமல் கரைத்திருக்கிறான் ஒருவன். நல்ல யோசனைதான். அத்தனை பெரிய தொட்டிக்கு எங்கே போவேன்? அவ்வளவு ஆசிட்டை என்ன காரணம் சொல்லி வாங்குவேன்? இதெல்லாம் உடனடியாக நடக்கிற காரியமா?
காரில் தூக்கிப்போட்டு கூவத்தில் வீசலாம். சில தினங்கள் கழித்தாவது கிடைத்துத் தொலைத்துவிடுமே...
இத்தனை யோசிப்பதற்குப் பதிலாக ஒரே ஒரு போன் செய்தால் போதுமே!
“அவசர போலீஸ்? அட்ரஸ் சொல்றேன். குறிச்சிக்கங்க. இங்க ஒரு கொலை நடந்துடுச்சு. நானா? அந்தக் கொலைகாரன்தான் பேசறேன். வந்து கைது செஞ்சிக்கங்க. ஏன் நடந்துச்சின்னு எல்லாம் விவரமா சொல்றேன். என்ன தண்டனை கிடைச்சாலும் சரிங்க.’’
நாளையே அத்தனை செய்தித்தாள்
களிலும் நான் செய்தியாவேன். உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் என் மீது வைத்திருக் கும் மரியாதை தூள் தூளாகி விடும்.
அந்த மரியாதை கெட்டுப்போவது இருக் கட்டும்... கொலைகாரன் பெற்ற பிள்ளைகள் என்று மகளுக்கும் மகனுக்கும் நிரந்தர முத்திரை விழுமே. அவர்களின் எதிர்காலம், திருமணம் எல்லாமே பாதிக்குமே!
ஒரே ஒரு விநாடி உணர்ச்சிபூர்வமான செயலால் எத்தனை எத்தனை மோசமான விளைவுகள்!
“இத பாருங்க... நீங்க கோபப்படுங்க. திட்டுங்க. வேணும்னா அறைஞ்சிடுங்க. ஆனா, நான் செஞ்சது தப்புன்னு எனக்குப் படலை. எல்லா காலத்துக்கும் ஒரே நியாயம் கிடையாது. இதுதான் இந்தக் காலத்துக்கான நியாயம். இவ்வளவு நேரம் நீங்க எதுவுமே பேசாம அமைதியா யோசிச்சிட்டிருந்ததுலயே அந்த நியாயம் புரிஞ்சிருக்கும்னு நினைக் கிறேன். நான் கோயிலுக்குப் போயிட்டு வந்துடறேன்’’ என்றாள் சுசித்ரா.
“நான் உன் குப்பை நியாயத்தைப் பத்தி யெல்லாம் யோசிக்கல. விளைவுகளைத்தான் யோசிச்சேன். ஆனா, எல்லாரும் ஒண்ணு ஞாபகத்துல வெச்சுக்கங்க. பாவத்துக்கு கண்டிப்பா தண்டனை உண்டு. உடனே கிடைக்கலாம். இல்ல லேட்டாகலாம்.’’
“ஒண்ணு செய்யுங்க. இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம்னு விசாரிச்சு வைங்க. செஞ்சுடலாம்.’’
அவள் செருப்பணிந்து போனதும், நான் ஆப்பிளைத் தொடர்ந்து `கட்' செய்வதை நிறுத்தினேன். கத்தியைக் கழுவி கிச்சனில் வைத்துவிட்டு வந்து கடித்துத் தின்னத் தொடங்கினேன்.