ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மானும் புலியும்! - க்ரைம் ஸ்டோரி

மானும் புலியும்! - க்ரைம் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
News
மானும் புலியும்! - க்ரைம் ஸ்டோரி

சட்டென்று அவள் பார்வை ஓரிடத்தில் நிலைகுத்தியது. பிளாட்பாரக் கடைவாசலில் நின்று தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் அவன்... அவன்தானே?

வந்தனாவுக்கு விழிப்பு வந்தது. முதலில் உறைத்தது முன் மண்டையில் வலி. காற்றில் ஆஸ்பத்திரி வாசம் மிதந்தது.

“வந்தனா... வந்தனா...” அழுகையைச் சுமந்த அம்மாவின் குரல்.

வந்தனாவுக்கு அந்தச் சம்பவம் பளிச்சென்று மனதில் வந்தது.

ஸ்டாப்பிங்கில் அவள் இறங்கும் முன் கிளம்பிவிட்ட பஸ்ஸில் இருந்து அவசரமாய் ரோட்டில் காலை வைத்ததும், அந்தச் செயல் பம்பரம்போல் அவளைச் சுழல அடித்ததும்...

“அந்த ஆளுக்கு ஒண்ணும் ஆகலையே?” - வந்தனா மெள்ள கேட்டாள்.

“என்னையா கேட்டீங்க? ஐயாம் பர்ஃபெக்ட்லி ஓ.கே”

அவனை வந்தனா இப்போதுதான் பார்த்தாள். கிளம்பிவிட்ட பஸ்ஸில் இருந்து அவன் அப்படியே தாங்கிப் பிடித்து, அந்தச் செய்கையில் அவளோடு அவனும் சுழன்று விழுந்த போது இவ்வளவு தெளி வாகப் பார்க்க முடிய வில்லை.

“உங்களுக்கு ஒண்ணும் அடிபடலியே?”

“நத்திங். முழங்கையில சிராய்ப்பு. தட்ஸ் ஆல். நோ அதர் டேமேஜ்” சிரித்தான்.

சுபா , அரஸ்
சுபா , அரஸ்

வந்தனா புன்னகைத்தாள். “தேங்க்யூ வெரி மச். எனக்காக நீங்க பாவம்...”

“இட்ஸ் நத்திங். அப்ப நான் வரட்டுங்களா?” - அவன் புன்னகையுடன் விலகி நடந்தான்.

மறுநாள். வந்தனா நெற்றி பிளாஸ்திரியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். ஹாண்ட் பேக்கை எடுத்துக்கொண்டாள்.

“வரேம்மா...”

பஸ் ஸ்டாண்டில் உறுமீனுக்காகக் காத்திருக்கும் கொக்காகப் பேருந்துகளுக் காகக் காத்திருந்த மக்கள். மெட்ரோ, பறக்கும் ரயில், ஸ்கூட்டி, பைக் என்று எவ்வளவு மாற்றுகள் இருந்தாலும் பேருந்துக்காகக் காத்திருக்கும் கூட்டம் அதிகமாகிக் கொண்டி ருக்கிறதே தவிர குறைவதே இல்லை.

பஸ் வந்தது. ஏறினாள். ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். காலை நேரப் பரபரப் புடன் மக்கள் வரிசை கலைந்த எறும்புகளாய் அலைந்துகொண்டிருந்தார்கள்.

சட்டென்று அவள் பார்வை ஓரிடத்தில் நிலைகுத்தியது. பிளாட்பாரக் கடைவாசலில் நின்று தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் அவன்... அவன்தானே? பேருந்திலிருந்து விழ இருந்த தன்னைக் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தவன்... அவன்தானே?

அவன் பார்வையைத் திருப்பிக் கொண் டான். சலவை மடிப்புடன் சட்டை, ஜீன்ஸை ஷூவுக்கருகில் மடித்து விட்டிருந்தான். ஷூக்கள் பளப்பள. சற்றே விரிந்த தலைமுடிக்கற்றை. அகல முகம். அடர்த்தி மீசை.

கண்டக்டர் விசிலுக்கு பேருந்து நகர்ந்தபோது அவன் மெள்ள பார்வை யைத் திருப்பி அவளைப் பார்த்தான். தான் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்த தும் பார்வையை நகர்த்திக் கொண்டான்.

வந்தனாவுக்கு ஏதோ நெருடுகிற மாதிரி இருந்தது.

அலுவலகத்தில் ஏகப்பட்ட வேலை. பஸ் ஸ்டாப் ரோமியோ அவள் மனதில் இருந்து விலகிப் போனான்.

மொபைல் அழைத்தது.

“என்னம்மா?”

“சாயங்காலம் ஒன் அவர் பர்மிஷன் போட்டுட்டு நேரா நகைக்கடைக்கு வந்துடறியா? வளையல் ரெடியாய்டிச்சாம். போட்டுப் பார்த்துட்டே வாங்கிட்டு வந்துடலாம். அப்பா இன்விடேஷனை வாங்கிட்டு வரப் போயிருக்காரு. நாள் நெருங்க நெருங்க படபடன்னு வருதுடி..”

“அம்மா, மனைல உக்காரப் போறது நானு... எனக்குத்தான் டென்ஷன் ஏறணும். நீ ஏம்மா கெடந்து அல்லாடறே... வந்துடறேன். வச்சிரு...”

அலுவலகத்தை விட்டு வெளிப்பட்ட போது மாலை 4 மணி. எதிரில்தான் பஸ் ஸ்டாண்ட். தற்செயலாக பார்வை எதிர்ப் புறத்தை வருடியது. ஒரு கணம்தான் பார்த் திருப்பாள். ஆனால், அந்த சின்ன விநாடியில் அவனைப் பார்த்து விட்டாள். கண்களில் குளிர்கண்ணாடி. இருந்தாலும் அவன்தான் என்று தெரிந்து விட்டது.

பேருந்தில் இருந்து இறங்கியபோது ஏற் பட்ட விபத்தின்போது அந்த எக்ஸ் தன்னைக் காப்பாற்றியது ஒரு தற்செயலாக இருக்கலாம். காலையில் பஸ் ஸ்டாண்டில் அவன் இருந்ததும் ஒரு தற்செயலான நிகழ்வுதான் என்று மனதைச் சமாதானப்படுத்தி விடலாம். ஆனால், இப்போது அவன் எதிரில் நிற்பது நிச்சயம் தற்செயல் இல்லை. வேண்டுமென்றே தன்னைப் பின்தொடர்கிறான் என்றுதான் தோன்றியது.

மானும் புலியும்! - க்ரைம் ஸ்டோரி

சட்டென்று வந்தனா கடந்து சென்ற ஓர் ஆட்டோவை நிறுத்தினாள். ஏறினாள்.

“டி.நகர்” என்றாள். திரும்பிப் பார்த்தாள். எக்ஸை காணவில்லை. ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. அலுவலக வாசலுக்கே வந்திருக்கிறான் என்றால், தான் வேலை செய்யும் இடத்தைத் தெரிந்துகொண்டிருக் கிறான் என்றுதானே அர்த்தம்?

நகைக்கடையில் காட்டப்பட்ட வளையல் அவளைக் கவரவில்லை. அவ்வப்போது சுற்றுமுற்றும் பார்த்தாள். நகைக்கடையிலிருந்து வெளிப்பட்டபோது அவனை மறந்திருந்தாள்.

“அப்படியே டிபன் சாப்ட்டுப் போய்டலாண்டி...'' என்றாள் அம்மா.

ஹோட்டலில் இட்லி, மைசூர் மசாலா சாப் பிட்டு முடித்துவிட்டு கை கழுவச் சென்றபோது மூலை மேஜை ஒன்றில் அவனைப் பார்த்தாள். காபி குடித்துக் கொண்டிருந்தான். திக் என்று இருந்தது. அவள் இருப்பதே தெரியாதது போல்தான் காட்டிக்கொண்டான். ஆனாலும், அவளுடைய உள்ளுணர்வு அவன் பின் தொடர்ந்துதான் வந்திருக்கிறான் என்றது.

‘அம்மாவிடம் சொல்லலாமா?’ வேண்டாம். அம்மா எல்லாவற்றுக்கும் நெஞ்சைப் பிடித்துக் கொள்பவள். எதற்கு அநாவசியமாக அவளைப் பயமுறுத்த வேண்டும்?

இவ்வளவு மக்கள் புழங்கும் நகரத்தில் அவனால் தன்னை என்ன செய்துவிட முடியும்? கழுத்துச் சங்கிலியை அறுத்துக் கொண்டு போகப்போகிறானா? இல்லை, இருட்டில் தனியாக எங்கேயாவது சிக்கினால் என்னை அப்படியே சாய்த்து... வந்தனா தலையை உலுக்கிக்கொண்டாள்.

வெளியில் வந்தவுடன் ஆட்டோ பிடித்தாள். அம்மாவை ஏறக்குறைய உள்ளே திணித்து விட்டுத் தானும் பாய்ந்து ஏறினாள்.

ஆட்டோ சாலையில் விரைந்தபோது கடந்து சென்ற மோட்டார் பைக்குகளையும் ஸ்கூட்டர்களையும் ஓரக்கண்ணால் பார்த் தாள். எதிலும் எக்ஸ் இல்லை.

அடுத்த நாள் மாலை மெருகு போடக் கொடுத்திருந்த வெள்ளிப்பாத்திரங்களை வாங்கி வர மயிலாப்பூர் போக வேண்டி யிருந்தது.

குளக்கரை பஸ் ஸ்டாப்பில் இறங்கினாள். மெருகுக் கடை இருந்த தெருவில் ஆளரவம் இல்லை. மாநகராட்சி விளக்கு கண் சிமிட்டிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு வீடுகளில் இருந்து சீரியல் அழுகை ஒலி அவளுடைய திகிலை அதிகரித்தது.

இதுவரைக்கும் எக்ஸ் இல்லை. மெருகுக் கடையில் நுழைந்தாள். மெருகேற்றிய வெள்ளிப்பாத்திரங்களை கடைக்காரர் பேக் செய்துகொடுத்தார். பணத்தை செட்டில் பண்ணிவிட்டு, பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தாள். எதிர் பிளாட்பாரத்தில் ஒரு நிழல். வந்தனா திடுக்கிட்டுப் பார்த்தாள்.

எக்ஸ்! தலையில் ஜாக்கி தொப்பி அணிந் திருந்தாலும் அவனேதான் என்று புரிந்தது. இவளுக்கு இணையாக எதிர்ப்புறத்தில் நடக்க ஆரம்பித்தான்.

என்ன செய்யலாம், என்ன செய்யலாம்? ‘ஓ’ என்று கத்திக் கூப்பாடு போடலாமா? இல்லை தைரியமாக அவன் எதிரில் போய் நின்று அவன் சட்டைக் காலரைப் பற்றலாமா?

ரயில்வே ஸ்டேஷனில் ஓட ஓட விரட்டப் பட்டுக் கத்தியால் கொல்லப்பட்ட அந்த இளம் பெண்ணின் செய்தித்தாள் முகம் அவள் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தியது.

காதலிக்க மறுத்ததால் ஓடும் ரயிலுக்கு முன் னால் தள்ளிவிடப்பட்டு துண்டு துண்டாகச் சிதறிப்போன அந்தக் கன்னிப் பெண் வந்தனா வின் நெஞ்சில் ஐஸ் கத்தியைச் செருகினாள்.

குழம்பினாள். பயந்தாள். தவித்தாள். பிர தான சாலை. வெள்ளமாய்க் கூட்டம். அவன் தென்படுகிறானா என்று பார்த்தாள். இல்லை.

பஸ்ஸில் ஏறினாள். அவன் இருக்கிறானா என்று பார்த்தாள். இல்லை. வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் ஊற்றாகப் பொங்கிய வியர்வை அவள் உடலை நனைத்தது.

அவனை எப்படித் தன் வாலிலிருந்து கழற்றிவிடுவது?

மறுநாள். ஆட்டோ ரிக்‌ஷாக்களில் தளும்பத் தளும்பப் பள்ளிக் குழந்தைகள் போனார்கள். வந்தனா கவனமாக இரண்டு பக்கமும் பார்த்துக்கொண்டே பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தாள்.

பஸ் ஸ்டாண்டில் அவன் சற்று மறைப்பாக நின்றிருந்தான். வந்தனாவைப் பார்த்ததும் அவன் முகத்தில் பல்பு. வந்தனா கவனியாதது போல் பஸ் ஸ்டாண்டைக் கடந்து நடந்தாள். அவன் தயங்கிவிட்டு பத்தடி தள்ளிப் பின்னால் நடக்க ஆரம்பித்தான். துரிதமாய் நடந்தாள். துரிதமாய் தொடர்ந்தான். சிக்னல் ஜங்ஷனைத் தாண்டினாள். தாண்டினான்.

சரேலென இடது தெருவில் நுழைந்தாள். எக்ஸும் முனை திரும்பித் தெருவுக்குள் வந்தான்.

வந்தனா தெருவின் மூன்றாவது கட்டடத் தின் வாசலில் நின்றிருந்தாள்.

‘காவல் நிலையம்...’

கான்கிரீட் சுவர்களுக்கு நடுவில் மொபைல் பார்த்துக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர்

துரை அரசன் நிமிர்ந்து பார்த்தார். சிரித்தார்.

“என்னம்மா வந்தனா, ஆபீஸ் போகல..?”

இன்ஸ்பெக்டர், அப்பாவின் கல்லூரி நண்பர். அவரிடம் சொன்னாள். அவர் நெற்றி யில் சிந்தனை வரிகள்.

“அவனை நான் பார்க்கணுமே...”

“இப்பக்கூட என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தான்.”

துரை அரசன் எழுந்தார். அவர்கள் வெளியே வந்தபோது எக்ஸ் இல்லை.

“இந்த மாதிரி பசங்க எல்லாம் இப்படித் தான் போலீஸ்காரன்கிட்ட மாட்டாம

கேம் ஆடுவானுங்க. நான் சொல்ற மாதிரி செய்றியாம்மா?”

“சொல்லுங்க அங்கிள்.”

வந்தனா அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது மாலை 6 மணி.

டிசம்பர் இருட்டு. சாலை விளக்குகள் ஒளிரத் தொடங்கியிருந்தன. நடக்கத் தொடங் கினாள். இன்றைக்கு வீட்டுக்கு நடைப் பயணம்தான்.

அந்த எக்ஸ் இப்போதும் பக்கத்தில் எங்கேயோதான் இருப்பான். இருக்கட்டும். ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும்.

“எக்ஸ்க்யூஸ் மீ...” என்று ஒரு பெண்குரல் கேட்டது. திரும்பினாள்.

சல்வார் கமீஸில் திடகாத்திரமாக இருந் தாள். தோளில் மூன்று வயதுப் பெண் குழந்தை.

“எம் பேரு மல்லிகாம்மா. லேடி கான்ஸ்ட பிள். இப்ப நீ என் பக்கம் திரும்பியிருக்கே. ஒன்னை ஃபாலோ பண்ற பையன் எங்கயாவது இருக்கானான்னு பாரு. இருந்தா, என்ன கலர் பேன்ட், ஷர்ட்டுன்னு சொல்லு. அப்படியே கொழந்தையை என்கிட்டேர்ந்து நீ தூக்கிக்க. நீ இதுக்காகத்தான் ரோட்ல நின்னேன்ற மாதிரி அவன் நெனைக்கட்டும். எம் பொண்ணுதான். ஒங்கிட்ட ஒட்டிக்குவா. நீ அடுத்த தெரு திரும்பியவுடனே நான் வந்து கொழந்தையை வாங்கிக்கிறேன். செல்லம். அக்காகிட்ட போடா. நான் கொஞ்ச நேரம் டூட்டி பார்த்துட்டு வந்து ஒன்னைத் தூக்கிக்க றேன்...” - குழந்தை சிரித்தபடி வந்தனாவின் மேல் சாய்ந்தது.

“ஒம் பேரென்ன..?”

“பெரிபாளையத்தா” என்றது குழந்தை மழலையில்.
“என்னது?” என்றாள் வந்தனா அதிர்ந்து.

“பவானிம்மா. நாங்க செல்லமா பெரி பாளையத்தான்னு கூப்புடுவோம். இருக்கானா பாரு...”

வந்தனா பார்வையால் துழாவினாள். இருந்தான்.

“இருக்கான். லைட் கிரீன் சட்டை. க்ரீம் கலர் பேன்ட். தலைல ஜாக்கித் தொப்பி...''

“சரி... பவானி கண்ணு. அக்கா கூட வர்றியா?”

பவானி அழகாகத் தலையை ஆட்டிவிட்டு, வந்தனாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டது.

மல்லிகா விலகிப் போனாள்.

மானும் புலியும்! - க்ரைம் ஸ்டோரி

“ஐஸ்க்ரீம் வாங்கித் தர்றியா?”

அடுத்த தெரு வருவதற்குள், ஐஸ்க்ரீம், பீப்பி, பலூன் என்று ஒரு பட்டியலே போடலாம் போலிருந்தது. ஆனாலும், பவானி ராட்சசியை வந்தனாவுக்குப் பிடித்துப் போயிற்று.

அடுத்த தெருவில் திரும்பியதும் மல்லிகா எதிர்ப்பட்டாள். “நோட் பண்ணிட்டேம்மா. ஒன் பின்னாலதான் வர்றான். இன்னும் கொஞ்ச தூரத்துல ஹெவன் பார் வரும். அங்கே நம்ம ஏட்டு கைலாசபதி ரெட்

டி-ஷர்ட்ல வெயிட் பண்றாரு. அவர்கிட்ட போய் பேச்சு கொடு. இவன் அங்கயும் தெரிஞ் சான்னா ஒன்னை ஃபாலோ பண்றது பாசிட் டிவ் ஆயிடும்'' என்று சொல்லியபடி மல்லிகா குழந்தைக்காகக் கையை நீட்டினாள். பவானி போக மாட்டேன் என்று அடம்பிடித்தது.

ஹெவன் பார், ஏறக்குறைய வெட்டவெளி யாக இருந்தது. சாலையில் இருந்து பார்த்தால் வட்டமேஜையைச் சுற்றி நின்று ஆட்கள் குடித்தபடி ஆரவாரமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. ஒரு வட்ட மேஜைக்கருகில் ரெட் டி-ஷர்ட் போட்டு நின்றிருந்த கைலாசபதி அவளை அடையாளம் கண்டு கையை உயர்த்தி அழைத்தார்.

தயக்கத்துடன் அவரை நெருங்கினாள்.

“வாம்மா வந்தனா. உண்மையைச் சொல் லணும்னா குடிச்சிருக்கற ஆம்பிளைங்க தான் லேடீஸ் கிட்ட ரொம்ப மரியாதையா நடந் துக்குவாங்க.”

பார் ஆள் ஒருவன் ஒரு கிளாஸைக் கொண்டு வந்து மேஜையில் வைத்தான்.

“குடிம்மா. கூல் ட்ரிங்க்தான். பார்த்துட் டேம்மா. லைட் கிரீன் ஷர்ட். க்ரீம் கலர் பேன்ட். தலைல ஜாக்கி தொப்பி. வெட வெடன்னு ஒயரமா இருக்காப்பல. டம்ளரைக் காலி பண்ணிட்டு இதே தெருல ஸ்ட்ரெய்ட்டா போ. ரெண்டாவது லெஃப்ட் திரும்பு.

அங்க ஒரு பொட்டிக்கடை வரும். நம்ம தீன தயாளன்தான் கடைல இருப்பான்.

கறுப்பு பேன்ட், வெள்ளைச் சட்டை.

அவன்கிட்ட பேச்சு கொடு. அவ்வளவுதான்.

அந்தப் பையனை அங்கயே ரவுண்ட் அப் பண்ணிடலாம்...”

வந்தனாவுக்கு அந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தது. காவல்துறை இப்படி எல்லாம் விநோதமாகச் செயல்படுமா இல்லை, இன்ஸ்பெக்டர் அங்கிள் அவளுக்காக அரங்கேற்றும் பிரத்யேக நாடகமா?

கிளாஸை காலி பண்ணிவிட்டு பாரில் இருந்து வெளியே வந்தாள். எக்ஸ் தன்னை ஃபாலோ பண்ணுகிறானா, இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாமல் நடந்தாள்.

இரண்டாவது இடது சற்றுக் குறுகலான தெரு. நுழைந்தாள். ஐம்பதடி தூரத்தில் பெட்டிக்கடை. தீனதயாளன் நின்றிருந்தார். வெள்ளைச் சட்டை தெரிந்தது. கடையை நெருங்கினாள்.

‘வந்தனாம்மா தானே?”

தலையை ஆட்டினாள்.

“ஒரு சிகரெட் பாக்கெட் தர்றேன். கடைக்கு வந்துட்டு எதுவும் வாங்காமப் போனா டவுட் வரும் இல்ல? சிகரெட் பாக்கெட்டை இன்ஸ்பெக்டர் ஐயாகிட்ட கொடுத்துடு. அந்தத் தொப்பிப் பையன் இப்பத்தான் நம்ம கடையை கிராஸ் பண்ணிப் போறான். இது ஒரு டெட் எண்டு தெரு. திரும்பி இந்தப் பக்கம் தான் வந்தாகணும். நீ என்ன பண்றே. தெருக் கடைசி வரைக்கும் போய்த் திரும்பு. மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்.”

வந்தனா தெருவில் நடந்தாள். எக்ஸைக் காணவில்லை. ஏதாவது இருட்டு நிழலில் பதுங்கி இருப்பான். தெருமுனை வரை போனாள்.

திரும்பினாள். நடந்தாள். எதிரில் தீனதயாளன், கைலாசபதி. கையில் குழந்தை இல்லாமல் மல்லிகா. அவளைப் பார்த்தபடி கடந்தார்கள். பின்னால் திடீரென்று தொம் தொம் என்று சத்தம் கேட்டது.

“ராஸ்கல். எத்தனை பேர்டா இப்படிக் கௌம்பி இருக்கீங்க?” என்ற உரத்த குரல் கேட்டது.

திரும்பினாள். எக்ஸ் அவர்களிடம் சிக்கி யிருந்தான். முகம் வெளிறி இருந்தது. உடல் உதறிக்கொண்டிருந்தது.

போலீஸ் ஸ்டேஷன்.

இன்ஸ்பெக்டர் துரையரசனின் ‘கவனிப்பு’ அவனை அப்படியே மண்டியிட வைத்தது.

“என்னை விட்ருங்க சார். நான் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் சார். இப்ப தான் தொழிலையே ஆரம்பிச்சேன்..”

“என்னடா சொல்றே?” என்று இன்ஸ் பெக்டர் உறுமினார்.

“வந்தனா மேடத்துக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருக்கு சார். அவளைக் கட்டிக்கப் போற மாப்பிள்ளையோட அப்பாதான் என்னைக் கூப்புட்டு வந்தனா மேடத்தை ஃபாலோ பண்ணி அவங்க கேரக்டரை ரிப்போர்ட் பண்ணச் சொன்னார் சார். இதான் சார் அவங்களைப் பத்தி இன்னிக்கு எழுதியிருக்கிற நோட்ஸ்” - இன்ஸ்பெக்டர் அந்தக் குறிப்பு புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்.

‘போஸ்ட் ஆபீஸ் தெரு. மாலை 6.30. வந்தனா தெருவில் ஒரு குழந்தையை வாங்கிக் கொண்டாள். குழந்தை அவளை விட்டுப் பிரிவதற்குப் பிடிவாதம் பிடித்தது. குழந்தை வந்தனாவை அக்கா, அக்கா என்று அழைக்கிறதே. உண்மையிலேயே வந்தனா அதற்கு அக்கா உறவா? அல்லது வேறு ஏதாவது வெளியில் சொல்ல முடியாத உறவா? செக்.’

‘மாலை 6.55. வந்தனா ஓப்பன் ஹெவன் பாரில் ஒரு கிளாஸ் ட்ரிங்க் அடித்தாள். எவ்வளவு தைரியம்? வந்தனாவுக்கு ட்ரிங்கிங்க் ஹாபிட் உள்ளதா? செக்.’

‘நேரம் மாலை 7.05. வந்தனா ஒரு பெட்டிக் கடையில் சிகரெட் பாக்கெட் வாங்கினாள். அப்படியென்றால் சிகரெட் பழக்கம் உள்ளதா? செக்.’

“உன் பேர் என்னடா?”

அவன் ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.

‘சாம்பு. சாம்பு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி’ என்று அதில் அச்சாகி இருந்தது.

இன்ஸ்பெக்டர் துரையரசன், மல்லிகா, கைலாசபதி மற்றும் தீனதயாளன் ஆகியோர் சிரித்த சிரிப்பில் ஸ்டேஷன் கூரையே அதிர்ந்து விழுந்துவிடும் போலிருந்தது.

வந்தனாவும் அந்த வான் அதிரும் சிரிப்பில் கலந்துகொண்டாள்.