
- வி.உஷா
எனக்காகவே இரண்டு மாடி வளர்ந்து எங்கள் உப்பரிகையில் கிளை நீட்டி பூத்துக் கொட்டியிருந்தது நந்தியாவட்டை. விழுந்து கிடக்கும் மலர்களை எடுத்து நிமிர்ந்தபோதுதான் கவனித்தேன். பக்கத்து அபார்ட்மென்ட்டில் சிறு கூட்டம் கூடியிருந்தது. மெல்லிய அழுகை ஒலி. அய்யோ என்று மனம் பதைத்தது. அது சபர்மதியின் ஃப்ளாட் அல்லவா? அவள் அம்மா… செல்பேசி அழைத்தது. ஓடினேன். எதிர்பார்த்தது போல, அவள்தான்.
“அத்தை... அத்தை… அநாதை ஆகிட்டேன் அத்தை... அம்மா என்னை விட்டுப் போய் விட்டாள் அத்தை” என்று கதறினாள்.
“சபர்மதி... தைரியமாக இரு… அம்மா எங்கேயும் போய்விட மாட்டாள். உன்னுடனேதான் இருப்பாள்” என்றேன். உடனே என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உள்ளே ஒரு நடுக்கம். என்னதான் பட்டினத்தார், சித்தர் என்று படித்தாலும் நடைமுறையில் மரணம் என்பது அதிர்ச்சியூட்டும் சம்பவம்தான்.
“இனி என் வாழ்க்கை… அம்மாதானே என் உலகம்… இப்படி என்னைவிட்டு போய்விட்டாளே… என்ன செய்யப் போகிறேன் அத்தை?” என்று அவள் விம்மியபோது எனக்கும் அழுகை கொப்பளித்தது.
“தைரியமாக இரு சபர்மதி… துன்பம் இல்லாத வாழ்க்கையே இல்லை… இதோ வருகிறேன்.”
ஒரு வகையில் பூரணியம்மாவின் மரணம் என்பது, அந்த உயிரின் விடுதலைதான் என்றே உடனே தோன்றியது. கிட்டத் தட்ட ஆறு வருடங்களாக அந்த தாய் - மகளைத் தெரியும் எனக்கு. ஒரே நேரத்தில்தான் இரண்டு குடும்பங்களும் அங்கு குடித்தனம் வந்தோம். பூரணியம்மாவை ஸ்ட்ரெச்சரில்தான் தூக்கிக்கொண்டு வந்தார்கள். தாமதமான திருமணம், தாமதமான பிள்ளைப் பேறு, கர்ப்பப்பை அகற்றும் சர்ஜரி, பை பாஸ் சர்ஜரி, முதுகெலும்பு முறிவு சர்ஜரி என்று அவள் உடலை கத்தரிகள் குதறிப் போட்டிருந்தன. சிறுவயது முதலே கூடவே வரும் சுவாசப் பிரச்னை. நல்ல வெயில் காலத்திலேயே கூட கையில் எப்போதும் நாசில் கருவி வைத்திருக்க வேண்டிய அளவுக்கு நுரையீரல் கோளாறு. இப்படி ஒரு நிரந்தர நோயாளியை வைத்துக் கொண்டு பராமரித்து, ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் போல மலர்ந்த முகத்துடன் வாழ் வது எப்படி என்பதை இந்த வருடங்களில் சபர்மதி என்கிற இளம்பெண்ணிடம் தான் கற்றுக் கொண்டேன்.
என் வீட்டு பணிப்பெண் புனிதாவுக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு உதவியது, மாடி செபாஸ்டின் தாத்தாவின் வங்கிப் பணிகளுக்கு தொடர்ந்து உதவு வது, அபார்ட்மென்ட் காவலாளி யின் மனைவிக்கு சுகர் மாத் திரைகளை தான் வேலை செய்யும் மருந்து நிறுவனத்திட மிருந்து மலிவு விலையில் வாங்கித் தருவது என்று அவள் செய்யும் சமுதாயப் பணிகள் தினந்தோறும் காதில் வந்து விழும்.
எதிர் எதிர் ஃப்ளாட்டு கள் என்பதால் மிகச் சுலபமாக நாங்கள் பேசிக்கொள்வோம்.
``என்ன அத்தை வெந் தயக்குழம்பா பண்ணுறீங்க? வாசனை அப்படி துளைக்குது. அப்படியே சொல்லுங்க ரெசிப் பிய ரெகார்ட் பண்ணிக்கிறேன்” என்று சிரிப்பாள்.
``அத்தை எங்க ஆபீஸ் பக்கத்துல பழக்கடை ஒண்ணு புதுசா வந்திருக்கு. மாமாவுக்கு தினம் நாகப்பழம் வாங்கிட்டு வந்து தரேன். குளூகோஸ் லெவல் நல்லா குறையும் அத்தை” என்று அக்கறையாகச் சொல்லி செயலிலும் காட்டுவாள்.
“எல்லாரையும் `ஆன்ட்டி'ன்னு ஈசியா கூப்பிடறேன். உங்களைப் பாத்தா அப்படிக் கூப்பிட வரலே. அத்தைன்னுதான் வருது.. என் அப்பா மாதிரியே சிகப்பா, ஒல்லியா இருக்கீங்க. அதான் அத்தைன்னு கூப்பிடறேன் போல” என்று ஆத்மார்த்தமாகச் சொல்லி சிரிப்பாள்.

பூரணியம்மாள் அப்படியே மகளுக்கு நேர் எதிர். எப்போதும் சிடுசிடுப்பு. வா என்று சொல்லிவிட்டு உடனே தூங்குவது போல கண்களை செயற்கையாக மூடிக் கொள்வாள். உள்ளே அலையும் கருவிழிகள் அவள் போடும் நாடகத்தை உடனே காட்டிவிடும். ஆனால் எனக்குக் கோபம் வராது. ஐம்பது வயதிலேயே படுக்கையில் விழுந்து விட்ட ஒருத்தி, மலம் மூத்திரம் என்று அனைத்துக்கும் மகளை எதிர்பார்க்கும் ஒருத்தி, வலியும் மருந்தும் நோயும் மட்டுமே வாழ்க்கை என்று ஆகிவிட்ட ஒருத்தி வேறு எப்படி புன்னகை பூத்து இனிமையாக இருக்க முடியும்?
“தப்பா நினைக்காதீங்க அத்தை” என்று சபர்மதி என் கைகளை மென்மையாகப் பற்றிக் கொள்வாள். அவள் குரல் வழுவழுக்கும்.
“பாவம் அத்தை அவங்க… எவ்வளவு நல்ல வங்க தெரியுமா? ஏன் அப்பாவும்தான்… அம்மா தன் கிராமத்தில் மகளிர் அமைப்பு தொடங்கி பெண் ஏழை விவசாயிகளுக்கு சொசைட்டில கடன் வாங்கிக் கொடுப்பாங்க. தானே அவங்களுக்கு கடனைக் கூட அடைப் பாங்க சில சமயங்கள்ல. அப்பாவோட அப்பா பெரிய செல்வந்தர். நிறைய நிலபுலன் வெச்சிருக்கும் குடும்பம். வினோபா பாவே தெரியுமில்ல உங்களுக்கு, அவரோட பூதான் மூவ்மென்ட்டுக்கு தன் நிலங்களைக் கொடுத் துட்டாராம் என் தாத்தா. என் அப்பாவும் அதே மாதிரிதான். மலைவாழ் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கறது, அவங்க நிலங் களை மீட்டுக் கொடுக்கறதுன்னு எப்பவும் சமூகப்பணிதான். அப்பா இறந்தது கூட மலைல நிலச்சரிவுலதான். அம்மா உடல்நலம் அப்போதான் ரொம்ப மோசமாச்சு. நல்ல வர்கள் மேல் இயற்கை ஏன் இப்படித் தாக்குதல் தொடுக்குது அத்தை... பதில் தெரியுமா உங் களுக்கு...” என்று அவள் விம்மியபோது எனக்கு உண்மையிலேயே பதில் தெரியவில்லை.
அந்த நற்பண்புகள் அவளை விட்டு அகலா திருக்கின்றன என்பதுதான் என்னால் நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. சொல்லப் போனால் இவள் இன்னும் அதியற்புதமான வளாக இருப்பது அதிசயம்தான். இரண்டு முறை கேட்டிருக்கிறேன்.
“சபர்மதி… இப்படியே உன் வாழ்க்கை பாலைவனமாகப் போய்விட வேண்டுமா? இருபத்தொன்பது வயதில் சந்நியாசினி போல இருக்கிறாய்… உன் மதிப்பு தெரிந்த ஒரு நல்லவன் நிச்சயம் இருப்பான் இந்த உலகத்தில்... ஏன் நானே தேடுகிறேன்… வாழ்க்கையில் காதல் இருந்தே தீர வேண்டும் சபர்மதி. மனித மனத்தின் அற்புதமான நெகிழ்ச்சி உணர்வு அது” என்று நான் மனம்விட்டுச் சொன்ன போது அவள் விழிகளில் இரு சொட்டு நீரைப் பார்த்தேன்.
“எனக்கும் காதல் இருந்தது அத்தை” என்றாள். சட்டென நிலம் பார்த்து உடனே நிமிர்ந்தாள். வியப்புடன் கவனித்தேன்.
“அசோகன் நல்லவர்தான். ஆனால், நல்லவர்கள் தானே அதிகம் பிழியப் படுவார்கள்? அவர் குடும்பம் அப்படித்தான் செய்தது. அவரை ப்ளாக்மெயில் செய்து எங்களைப் பிரித்துவிட்டது.”

“புரியவில்லை கண்ணே...”
“என் அம்மா என்னுடன்தான் எப்போதும் இருப்பார் என்று ஒரே ஒரு நிபந்தனையுடன் தான் அவர் காதலை ஏற்றுக்கொண்டேன். அவரும் மனமாரத்தான் ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் வீட்டுப் பெண்கள் முழுமையாக எதிர்த்தார்கள். கையில் பெட் ரோல் டின் வைத்துக் கொண்டு பயமுறுத் தினார்கள். எனக்கு அவமானம் இல்லையா அது? தாயாரைக் காப்பாற்றுகிற பொறுப்பு மகளுக்கு இல்லையா? இதற்காக போராடுவது தான் தீர்வா என்றால் அதற்கும் சரி என்று தோன்றியது. என்ன... காதல் கொண்ட மனது வெளிப்படுத்தும் துயரங்களுடன் கடைசிவரை போராட வேண்டும். அவ்வளவுதானே? நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் அத்தை… ஆனால், கம்பீரமாக. அசோகன் இதே நகரில், இதே காற்றை சுவாசித்துக் கொண்டு மனைவி, மக்கள், பெற்றோர், குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.”
இவ்வளவு மிருதுவாக ஒருத்தி இருக்க முடியுமா? தாய்மை இவ்வளவு சக்தி கொண் டதா? காதலையும் வாழ்வையும் தூக்கி எறிந்து விட்டு தன்னைப் பெற்ற கிழவிக்காக ஒருத்தி துறவு வாழ்க்கை வாழ்கிறாளே…
மற்றுமொரு நாள் அப்படித்தான்.
பக்கத்து பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எதிர்வரிசையில் சபர் மதியைப் பார்த்தேன். கூடவே எதிர் பிளாட் விமலாவும் நடந்துகொண்டிருந்தாள். தலைகுனிந்து சபர்மதி நடக்க, கைகளை ஆட்டி ஆட்டி விமலா கடுகடுவென ஏதோ சொல்லிவிட்டுப் போவது தெரிந்தது. சபர்மதி அப்படியே உட்கார்ந்து விட்டாள். அந்த ரோஜா முகம் அனல் பட்ட மாதிரி கறுத்து விட்டது.
“என்னம்மா சபர், என்ன? என்ன சொல்லி விட்டுப் போகிறாள் அந்த விமலா?” என்று நெருங்கினேன்.
“அத்தை” என்றாள். நீர் வழிய விழிகள் படபடத்தன.
“சொல்லு...”
“அம்மா வர வர மிகவும் துன்பப்படுகிறாள் அத்தை. நோய், இரவு வேளைகளில் பல மடங்காக சித்ரவதை படுத்துகிறது அம்மாவை... தாங்க முடியாமல் அலறுகிறாள். பக்கத்தில் உட்கார்ந்து கால்களைப் பிடித்து விடுவேன். சமாதானமாகப் பேசுவேன். இதமான வெந் நீர் கொடுப்பேன். அம்மா ஓவென்று அழுவாள். ‘உன் வாழ்க்கையைக் கெடுத்தேன், இப்போது தூக்கத்தை யும் கெடுக்கிறேனே’ என்று விம்மு வாள். ‘இல்லைம்மா, நீ தூங்கு, நானும் தூங்குகிறேன்’ என்று சொல்லிவிட்டு படுப்பேன். பத்தே நிமிடங்களில் மறுபடியும் வலி அவளைப் பதம் பார்க்கும். ஓவென்று அலறுவாள். இதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவுதானே அத்தை? ‘வீடு காலி செய்ய சம்மதமா, நானே வீடு பார்த்து தரட்டுமா’ என்று கேட்கிறார் விமலா ஆன்ட்டி... முடியலை அத்தை” என்று கரகரத்தாள்.
என்ன உலகம் இது என்று கடுப்பாக வந்தது எனக்கு. யார்தான் நிரந்தரம், எதுதான் நிரந்தரம்? இறுதிக்காலம் என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதுதானே யதார்த்தம்? இந்த பூமி உருண்டையே நாம் தற்காலிகமாக தங்கிப் போகும் இடம்தானே?
``பயமாக இருக்கிறது அத்தை… நானும் எவ்வளவோ பொறுமையாகத்தான் இருக் கிறேன். அம்மாவை கைக்குழந்தை போலத்தான் நினைத்து எல்லாம் செய்கிறேன். எங்கே திடீரென பொறுமை இழந்து போய் விடுவேனோ என்று அச்சமாக இருக்கிறது அத்தை... ஏதோ ஒரு கோபத்தில் தன் பிரிய பொம்மையையே பிய்த்துப்போட்டு விடும் குழந்தை போல ஆகிவிடுவேனோ…” என்று தழுதழுத்த சபர்மதியை மெள்ள அணைத்துக் கொண்டு நானும் குரல் வழுக்கச் சொன்னேன்.
“இல்லை கண்ணே... அப்படி எதுவும் நடக்காது. பாரசூட்டில் பயணிப்பவன் பத்திரமாக தரையிறங்குவதை போல நீயும் சரியாக செய்து முடிப்பாய். கவலைப்படாதே… காற்று உன் பக்கம் வீசும் கண்ணே” என்று ஏதேதோ வார்த்தைகள் வந்தன எனக்கு.
“அத்தை… இப்படி ஆகி விட்டதே அத்தை… அம்மா என்னை விட்டுப் போய் விட்டாளா? இனி நான் யாருமற்ற அநாதையா?” என்று என்னைப் பார்த்த வுடன் சபர்மதி ஓடி வந்தாள். தோளில் சாய்த்துக் கொண் டேன். அவள் பட்ட பாடுகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.
கடைசியாக நான்கு நாட் களுக்கு முன்னால் இங்கு நான் வந்தேன். அவளுக்குப் பிடித்த வெந்தயக்குழம்பு கிண்ணத்துடன். அழைப்பு மணி கேட்டு கதவைத் திறந்தவளைப் பார்த்து என் கால்கள் தானாகப் பின் வாங்கின. அவள் கையில் பூரணியின் டயப்பர் இருந்தது. வீடு முழுக்க மலம், சிறுநீர் நாற்றம். பதைத்துப் போய் ``அத்தை… சாரி அத்தை… நானே வரேன்... நீங்க கிளம்புங்க” என்றாள்.

அதேபோல அவளே என் வீட்டுக்கு வந்தாள். ``தப்பா நினைக்காதீங்க அத்தை… உள்ளே கூப்பிட்டிருக்கலாம் உங்களை... ஆனால் நிலைமை சரியாகவே இல்லை. அம்மாவுக்கு இப்போதெல்லாம் மருந்துகள் அலர்ஜியாகி விட்டன. எதை சாப்பிட்டாலும் பேதியாகி விடுகிறது. பாவம், அந்த உடல் அவ்வளவு நைந்து போகிறது. ஒரு மணி நேரம் தொடர்ந்து நான் வீட்டில் இல்லை என்றால் அவள் படுக்கையும் அவளும் மலக்கிடங்காங்கி விடுகிறார்கள். பாவம் அம்மா… தினம் இரண்டு முறை குளித்து, இரண்டு பருத்தி உடைகள் அணிபவள்… இந்த நிலைமை தாங்க முடியாமல் அழுகிறாள்” என்று விம்மினாள்.
“கவலைப்படாதே சபர்மதி … உயிருக்கும் உடலுக்கும் நடக்கும் போராட்டம். அம்மா தைரியமானவர் இல்லையா? ஜெயித்து விடுவார்” என்று ஏதோ சொன்னேனே தவிர எனக்கே அதில் நம்பிக்கை இல்லை... இதோ எல்லாம் முடிந்து விட்டது.
யதேச்சையாக வாசித்த கவிதை ஒன்று திரும்பத்திரும்ப அகக்கண்ணில் தோன்றிக் கொண்டே இருந்தது.
‘ஆழ்ந்த அமைதியில்
தூங்கும் முகத்தை ஒரு கணம்
உற்றுப் பார்த்து
மனம் நெகிழலாம் என
திரும்பிப் பார்க்கையில்தான்
அங்கே யாருமில்லை என்பதை
மூளை எதிர்கொள்கிறது
பிரமை ஒப்புக்கொள்ள மறுக்கிறது’
“உள்ளே வரட்டுமா அத்தை?” என்று நிலைப் படியில் நின்று சபர்மதி கேட்டாள். “வாம்மா… ” என்று விரைந்தேன்.
“நான் கிளம்புகிறேன் அத்தை… சண்டிகரில் என் தோழி வீட்டுக்கு… அங்கே அவள் கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது… உங்களை விட்டுப் போக கடினமாக இருக் கிறது...” என்றபடி என் விரல்களைப் பற்றினாள்.
“உன் மனம் சொல்லும் திசையில் செல் கண்ணே.... இனி உனக்கென ஓர் உலகம் உருவாகும்… துன்பங்கள் குறைவான உலகம்.”
“அத்தை” என்றாள். ஆனால் கண்ணீர் கொட்டிற்று. இருவரும் மென்மையாக அணைத்துக் கொண்டோம். அந்த கதகதப்பும் நடுக்கமும் எனக்குள் புதிய உணர்வைத் தோற்றுவித்தன. மனம் குமுறியது.
சபர்மதி… உன் அழகான பெயருக்குக் காரணம் இருக்கிறது. உன் பெற்றோர் காந்திஜி யின் பக்தர்கள். அவர் ஆசிரமம் அந்த சபர்மதி ஆற்றங்கரையில் இருக்கிறது. அங்கேதான் அவர் சொன்ன சம்பவம் நிகழ்ந்தது. `வலியால் துடிக்கும் கன்றுக்குட்டியைக் கொன்று விடுங்கள், அதற்கு விடுதலை கொடுங்கள்’ என்று சொன்ன சம்பவம். ஆனால், இது ஏன் என் நினைவுக்கு வருகிறது என்று தெரிய வில்லை. உன் வீட்டில் நான் பார்த்த அந்த மருந்து பாட்டில் உண்மையில் நான் கண்ட காட்சியா... இல்லை பிரமையா? அளவுக்கு மேல் எடுத்துக் கொண்டால் உயிரைப் பறித்து விடும் கொடிய மருந்து அது என்று என் மூளை சொல்லும் தகவல் மெய்யா, பொய்யா?
“கிளம்புகிறேன் அத்தை... என்னை மறந்து விடாதீர்கள்!” - வண்டியில் ஏறி, பத்து விநாடிகளில் மறைந்து போனாள்.