தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“அமெரிக்காவில் குழந்தைகளை தமிழோடு வளர்க்குறோம்!” - தன்னார்வல தமிழாசிரியர்கள்

தமிழாசிரியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழாசிரியர்கள்

- விஜி ராஜா

அமெரிக்காவில் தமிழ்ச் சங்கங்கள், தன்னார்வலர் குழுவினர்கள், திருக் கோயில்களால் நடத்தப்படும் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களாகப் பலர் சேவையாற்றி வருகின்றனர். புலம்பெயர்ந்த நம் முன்னோர்களின் முன்னெடுப்பு களால் அமெரிக்கா முழுவதும் இப்படி இயங்கி வரும் பல்வேறு தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும், வாரம் ஒருமுறை வார இறுதி நாளில் நடத்தப்படுகின்றன. இப்பள்ளிகள் அமெரிக்க தமிழ் அகாடமி அல்லது கலிஃபோர்னியா தமிழ் அகாடமி பரிந்துரைத்த பாடத்திட்டத்தை பின் பற்றுகின்றன.

- விஜி ராஜா
- விஜி ராஜா

சில மாநிலங்கள் தங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப சொந்த பாடத்திட்டத்தை வைத்துள்ளன. தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் கலைகள் உட்பட தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பாடத்திட்டங்கள் இருக்கும். இந்தப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தங்களது வார இறுதி நாள்களை அர்ப்பணிக்கும் தன்னார்வலர்களே இந்த முயற்சியின் முதுகெலும்பு. இவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள், வணிக வல்லுநர்கள், இல்லத்தரசிகள் என அனைத்துத் தரப்பு மற்றும் பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இங்கே அதுகுறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள்.

டாக்டர் தீபா ராஜாகிருஷ்ணன்

‘`நான் சென்னை பெண். என் தமிழ் ஆர்வத்துக்குக் காரணம் என் அப்பா. அவர் நாமக்கல் அருகே அல்லாலபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அமெரிக்கா வந்தபோது என் மகனைத் தமிழ்ப் பள்ளியில் சேர்த்து, பாட்டு சொல்லிக்கொடுக்கும் ஆசிரி யராகத்தான் முதலில் ஆரம்பித்தேன். அடுத்த ஆண்டே பள்ளியில் தமிழ்ப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகும் பயணம், ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் ஆரம்பமானது. 16 வருடங்களாக இந்தப் பணியில் உள்ளேன். அமெரிக்காவில் நம் அடுத்த தலைமுறையினரிடம் தமிழை எடுத்துச் செல்வதில் பங்களிப்பது, மனம் மிகவும் நிறையும் ஓர் அனுபவம். மருத்துவராக இன்று 20 மருத்துவ மையங்களை மேற்பார்வையிடும் பணி, அலுவல் நிமித்தப் பயணங்கள் என்று பல வேலைகளுக்கு இடையிலும் வாரம் ஒருநாள் மிகுந்த ஆர்வத்தோடு தமிழ்ப் பள்ளிக்கு வந்துவிடுவேன். அமெரிக்காவில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஏற்றாற்போல் பாடத்திட்டத்தை வழங்குவதிலும் பங்காற்றி வருகிறேன். சாஸ்தா தமிழ் அறக்கட்டளை கடந்த 16 ஆண்டுக்காலமாக, வருடம்தோறும் நடத்தும் திருக்குறள் போட்டியின் செயற்குழு உறுப்பினர், போட்டி நடுவர் என இதில் இன்னும் பல பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறேன். என் தமிழ்ப் பணிகளில் எனக்கு பலமாக இருக்கும் கணவர், முனைவர் ராஜுக்கு நன்றி.’’

டாக்டர் தீபா ராஜாகிருஷ்ணன் - ரெங்கநாயகி பாண்டுரெங்கன்
டாக்டர் தீபா ராஜாகிருஷ்ணன் - ரெங்கநாயகி பாண்டுரெங்கன்

ரெங்கநாயகி பாண்டுரெங்கன்

``நான் கோவில்பட்டி பள்ளியில் படித்து வளர்ந்தவள். அங்கு என் பெற்றோர் தமிழ் ஆசிரியர்களாக இருந்தனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்து, அமெரிக்காவில் ஹூஸ்டனில் குடியேறியபோது, வட அமெரிக்காவில் நீண்டகாலமாக இயங்கி வரும் பாரதி கலை மன்றம் (BKM) என்ற தமிழ்ச் சங்கத்தின் தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் பணிகளில் என்னை இணைத்துக்கொண்டேன். அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளாக, சுகர் லேண்ட் தமிழ்ப் பள்ளியின் ஓர் அங்கமாக இருந்து வருகிறேன். எங்கள் பள்ளி முன்பள்ளி, கே.ஜி மற்றும் தரம் 1 முதல் 8 வரை கல்வியை வழங்குகிறது. எங்கள் மாணவர்கள் தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் பள்ளிகளுக்கு இடையே போட்டிகளை நடத்துகிறோம். அதில் குழந்தைகள் தங்கள் தமிழ்மொழி மற்றும் கலாசார திறன்களை வெளிப்படுத்தும்போது, எங்கள் முயற்சிகள் இங்குள்ள தமிழ்க் குடும்பங்களில் தமிழ் வாழ எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கின்றன என்பதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கும். இந்த நோக்கத்துக்குப் பங்களிப்பதற்கும், அடுத்த தலைமுறை தமிழ்க் குழந்தைகளை அவர்களின் வேர்களில் பெருமைகொள்ளத் தூண்டுவதற்கும் பெருமைப்படுகிறேன்.’’

ஸ்ரீதேவி சுப்ரமணியன்

``கோவைப் பெண், 23 ஆண்டுகளாக அமெரிக்கவாசி. தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய அனுபவத்துடன் இப்போது பணியாளர் நிறுவனம் நடத்தி வருகிறேன். பள்ளி, கல்லூரி நாள்களில் இருந்தே தமிழின் மீது மிகுந்த ஆர்வம். பல பேச்சுப் போட்டிகள் மற்றும் பட்டிமன்றங்களில் பேசி யுள்ளேன். என் பிள்ளைகளுக்கு அமெரிக்காவில் எப்படி தமிழ் சொல்லிக் கொடுப்பது, தமிழ் ஆர்வத்தைத் தூண்டுவது என்ற தேடலில்தான் பாரதி கலை மன்றம் ஹூஸ்டன் மாநகரில் நடத்தி வரும் தமிழ்ப் பள்ளி பற்றி தெரியவந்தது. அவற்றை பல வருடங்களாக நடத்தி வருவது தன்னார்வலர்கள்தான் என்று தெரிந்தபோது, நானும் அங்கு தன்னார்வல ஆசிரியராகச் சேர்ந்தேன். 12 ஆண்டுக்கால ஆசிரிய அனுபவத்துடன் இப்போது ஹூஸ்டன் மாநகரில் அனைத்துப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இயக்குநராகவும் உள்ளேன். அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 2 மணி நேர வகுப்பாக நடத்தப்படுகின்றன. மழலை முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டம் மட்டுமல்லாது, சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழை மையமாக வைத்து அங்கீகரிக்கப்பட்ட மொழியியல் பாடத்திட்டத்தையும் அகாடமியினர் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க சாதனை.’’

இராஜி முத்துராமன்

``சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் சொந்த ஊர். டெக்சஸ் மாநிலம், ஹூஸ்டன் மாநகரில் பல ஆண்டுகளாகக் குடும்பத்தினருடன் வசித்துவருகிறேன். கணித இளநிலைப் பட்டதாரியான நான், ஹூஸ்டன் - பியர்லேண்ட் கல்வி மாவட்டப் பள்ளிகளில் மாற்று ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். தமிழ்த் தன்னார்வச் சேவையில் இங்கு பலருக்கும் நான் சீனியர். நகரில் லாப நோக்கமற்ற அமைப்பின் சார்பில் தன்னார் வலர்களால் இயக்கப்படும் தமிழ்ப் பள்ளிகளில் 2008-ல் தொடங்கி இன்று வரையிலும் கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழாசிரியையாகப் பணியாற்றுகிறேன். என் பணியைப் பாராட்டி `நெடுநாள் ஆசிரியர் விருது’ வழங்கப்பட்டபோது, இங்கு அமெரிக்காவில் அடுத்த தலைமுறை தமிழ்ப் பிள்ளைகள் பலரை தமிழுடன் வளர்த்தெடுத்ததுதான் அத்தருணத்தின் நிறைவாக இருந்தது. தமிழ்ப் பள்ளியில் கலை ஒருங் கிணைப்பாளர், பாடத்திட்டக்குழு உறுப்பினர், துணை முதல்வர், முதல்வர் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறேன்.’’

ஸ்ரீதேவி சுப்ரமணியன் - இராஜி முத்துராமன் - பிரமிளா சதீஷ்
ஸ்ரீதேவி சுப்ரமணியன் - இராஜி முத்துராமன் - பிரமிளா சதீஷ்

பிரமிளா சதீஷ்

``தமிழ்ப் பாடங்களை நான் ஆடல், பாடல் மூலமாகச் சொல்லிக் கொடுப்பதால், குழந்தைகளுக்கு என் மீது பிரியம் அதிகம். அதுவே என் தனித்துவமாகவும் அமைந்துவிட்டது. கும்பகோணத்துப் பெண் ணான நான், இங்கு ஒரு முழு நேர கணினிப் பொறியாளர். அதைவிட தமிழ் ஆசிரியர் என்ற அடையாளம் எனக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நான் தமிழை வேடிக்கையாகப் பேசி, நடித்து, பாட்டுப் பாடி கற்றுத் தருவதால், பிள்ளைகள் என்னிடம் மிகுந்த ஆர்வத்துடனும், உரிமையோடும் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டு தமிழ் கற்பார்கள். பாடங்கள் மட்டுமல்ல, பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கும் என் குடும்பத்தின் உதவியுடன் பிள்ளைகளுக்கு, என் வீட்டிலேயே கலைப் பயிற்சிகள் அளித்து, அவர்கள் சிறப்பாக மேடையில் நடிக்கவும், பேசவும் உறுதுணையாக இருப்பேன். நான் பள்ளிக்குச் செல்வது மட்டுமல்லாது, என் வீட்டுக்கே வந்து பிள்ளைகள் தமிழ் கற்பதும் நடக்கும். தமிழ்த் தேர்வுகள் நடக்கும்போது பிள்ளைகளிடம், ‘உண்மையில் இது எனக்கான தேர்வு’ என்பேன். அவர்கள் வாங்கும் மதிப்பெண்ணை, எனக்கான மதிப்பெண்ணாகவே கொள்வேன். நானும் என் மாணவர்களும் எப்போதும் சிறப்பான மதிப்பெண்களே பெறுவோம்!”

அமெரிக்காவில், வாரம் முழுவதும் ஓடி உழைத்துவிட்டு `அக்கடா’ என்று உட்காரும் விடுமுறை நாளிலும் ஆர்வமாகத் தமிழ் கற்பிக்கச் செல்லும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது இங்குள்ள இளைய தலைமுறை!