தமிழகத்தில், வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து 2022 செப்டம்பர் 31-ம் தேதி வரை நடைபெற்ற அகழாய்வில் தோண்டப்பட்ட 15 குழிகளிலிருந்து, நுண்கற்காலம் முதல் இடைக்கற்காலம் வரை இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.

அதன்படி, சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள், காதணிகள், சிறு பானை, சுடு மண்ணாலான தொங்கட்டான், வளையம், பெண்ணின் உருவம், தந்தத்தாலான தொங்கட்டான், செவ்வந்திக்கல், கை கோடரி, சூது பவளமணி, அரவைக்கல், தங்க அணிகலன், சுடுமண்ணாலான முத்திரை, ஆண் உருவம் உள்பட இதுவரை 3000 மேற்பட்ட வகையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெம்பக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. கண்காட்சியினை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து, வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச பேருந்து வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற அகழாய்வில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த அழகிய வேலைப்பாடுடைய சங்குவளையல துண்டுகள், யானைத் தந்தத்திலான பகடைக்காய் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், "தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் பல அரிய பொருள்கள் அகழாய்வில் கிடைத்து வருகின்றன. விரைவில் பொருள்கள் அனைத்தும் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு அதன் உண்மையான வரலாற்றுக்காலம் கண்டறியப்படும்" என்றார்.