Published:Updated:

சூறாவளிகளின் பலம் கூட்டும் கடல் வெப்பம்... ஃபுளோரன்ஸுக்கும் இதுதான் காரணமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சூறாவளிகளின் பலம் கூட்டும் கடல் வெப்பம்... ஃபுளோரன்ஸுக்கும் இதுதான் காரணமா?
சூறாவளிகளின் பலம் கூட்டும் கடல் வெப்பம்... ஃபுளோரன்ஸுக்கும் இதுதான் காரணமா?

அமெரிக்காவின் கரோலினா மாகாணங்களில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட சூறாவளிகளை விடவும் ஃபுளோரன்ஸ் சூறாவளி சக்தி வாய்ந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்த வருடம் மட்டும் உலகம் முழுவதும் நிறைய இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அவை அனைத்துமே வரலாறு காணாத இயற்கைப் பேரிடர்களாக இருப்பதுதான் சோகம். கேரளா பெருவெள்ளம், அசாம், நாகாலாந்து வெள்ளம், ஜப்பானில் ஜெபி சூறாவளி, வங்கதேச வெள்ளம் என இந்த வரிசையில் இணைந்திருக்கிறது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் ஃபுளோரன்ஸ் சூறாவளி (Hurricane Florence). 

அமெரிக்காவின் கரோலினா மாகாணங்களில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட சூறாவளிகளை விடவும் ஃபுளோரன்ஸ் சூறாவளி சக்தி வாய்ந்ததாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். ஃபுளோரன்ஸ் சூறாவளியால் பெருவெள்ளமும் புயலும் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கலாம் என்றும் முன்னமே எச்சரித்தனர். அதனால் தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 17 லட்சம் மக்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டனர். ஆனால், வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததைவிடவும் அதிக பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது ஃபுளோரன்ஸ் சூறாவளி. வியாழன் இரவில் வடக்கு கரோலினாவைத் தாக்க ஆரம்பித்த ஃபுளோரன்ஸ் சூறாவளி மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது. அதன் வேகம் தற்போது மணிக்கு 110 கிமீ ஆகக் குறைந்துள்ளது. இதன் வேகம் இன்னும் குறையலாம் என்றும் சொல்லப்படுகிறது. சூறாவளியின் வேகம் குறைந்தாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பின் அளவு குறையாது. ஏனெனில் அதன் பரப்பு அதிகரித்துள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

வடக்கு கரோலினா மாகாணத்தில் பலத்த காற்று மற்றும் கனமழையினால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடலோரம் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் சாலைகளில் கடல்நீர் புகுந்துள்ளது. வீட்டின் மேல் மரம் விழுந்ததில் தாயும் குழந்தையும் உயிழந்துள்ளனர். லெனோர் கவுண்டியைச்( Lenoir County) சேர்ந்த 70 வயதிற்கும் மேற்பட்ட இரு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு பெண் அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இப்படி ஃபுளோரன்ஸ் சூறாவளியால் இதுவரை குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிட்டுள்ளனர். 

வெள்ளிக்கிழமை காலை ஃபுளோரன்ஸ் சூறாவளி வடக்கு கரோலினா மாகாணத்தின் விரிட்ஸ்வில்லி கடற்கரையில் (Wrightsvilli Beach) மண்சரிவை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கரோலினா மாகாணத்தில் இதுவரை 16 இன்ச் அளவிற்கு மழை கொட்டியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மழை அளவு இன்னும் 20 முதல் 25 இன்ச் வரை அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வுகள் கூறுகின்றன. 30,000 மக்களின் வாழ்விடமாக இருந்த நியூ பெர்ன் (New Bern) நகரம் இப்போது பத்து அடி உயர வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நியூ பெர்ன் நகரத்தில் இருந்து இதுவரை 360 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 140 பேர் உள்ளே சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு மேத்யூ சூறாவளி தாக்கியபோதுதான் 20 இன்ச் அளவிற்கு லும்பெர்டன் (lumbertan) பகுதியில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தற்போதும் லும்பெர்டன் நகரம் வெள்ளத்தில்தான் தத்தளிக்கிறது. அங்கிருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரங்கள் எல்லாம் சூறாவளியில் வீழ்ந்து கிடக்கின்றன. 

நல்லவேளையாக ஃபுளோரன்ஸ் சூறாவளி குறித்த எச்சரிக்கை வந்தபோதே முன்னெச்சரிக்கையாக தெற்கு கரோலினாவின் 2,200 நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 20,000 பேர் வடக்கு கரோலினாவின் 150 நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இன்னும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். வடக்கு கரோலினாவில் 7,75,000 வாடிக்கையாளர்களும் தெற்கு கரோலினாவில் 1,10,396 வாடிக்கையாளர்களும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. 

வடக்கு கரோலினா மாகாணத்தின் பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளன. மோசமான வானிலையால் 2,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய அவசரகால மேலாண்மை நிறுவனம் (Federal Emergency Management Agency (FEMA) மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஃபுளோரன்ஸ் சூறாவளியானது தென்கிழக்காக தெற்கு கரோலினா நோக்கி நகர்ந்து வருகிறது. தெற்கு கரோலினா மாகாணமானது சுற்றுலாத்தலங்கள் நிறைந்தது. அருகில் இருக்கும் ஜியார்ஜியா, வெர்ஜினியா ஆகிய மாகாணங்களிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபுளோரன்ஸ் சூறாவளியின் தாக்கம் குறித்து, 'அடுத்து வரும் சில நாட்களில் 18 டிரில்லியன் கேலன் மழைநீர் அளவிற்கு மழைப்பொழிவு நிகழலாம் என எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வாளர் ரியான் மியூ(Ryan Maue) கூறியுள்ளார். ஃபுளோரன்ஸ் சூறாவளியால் 2 மில்லியன் டன் அளவிற்கான நச்சு நிலக்கரி சாம்பல் லும்பெர்டன் நகரத்தில் குவிந்துள்ளது. ஃபுளோரன்ஸ் சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அடுத்த வாரத்தில் பார்வையிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற அவசரக் காலங்களில் அரசு மக்களுக்கு உதவியாகச் செயல்படும் என்றும் தெரிவித்தார் 

இவ்வளவு சக்தி வாய்ந்த சூறாவளிக்கு என்ன காரணம்? 

கடல் வெப்பத்திற்கும் சூறாவளிக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக சில ஆய்வுகள்  தெரிவிக்கின்றன. புவி வெப்பமாதல் காரணமாக உலகமெங்கிலும் இருக்கும் கடற்பரப்பின் வெப்பநிலை உயர்வதும் துருவப் பகுதிகளின் பனிக்கட்டிகள் உருகுவதும் அனைவரும் அறிந்ததே. பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் உயரும் அபாயம் வேறு இருக்கிறது. கடலின் வெப்பம் அதிகரித்தால் அது சூறாவளியின் பலத்தையும் அதிகரிக்கும். சாதரணமாக ஆரம்பிக்கும் சூறாவளி வலுவில்லாமல் முடிவதும் வலுவான சூறாவளியாக மாறுவதும் சூழலைப் பொறுத்தே அமைகிறது. அப்படி இருக்கையில் ஹெர்வி சூறாவளி, ஜப்பானின் ஜெபி சூறாவளி, ஃபுளோரன்ஸ் சூறாவளி என சமீபகாலமாக உருவாகும் சூறாவளிக்கள் எல்லாம் வலுவானதாகவே இருக்கின்றன. அவை ஏற்படுத்தும் பாதிப்பின் அளவும் பெரிதாகவே இருக்கிறது. கடலின் வெப்பம் அதிகரிப்பதுதான் வலுவான சூறாவளிகளுக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் புவி வெப்பமாதலும் காலநிலை மாற்றமும் பூமியில் இதுவரை நிகழ்ந்த இயற்கை சீற்றங்களைக் கூட மாற்றி வருகின்றன.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு