Published:Updated:

`பணம் இல்லைனாலும், ஆளாப் போய் நிப்போம்!’ - `கஜா’ மீட்புப் பணியில் ஈஞ்சம்பாக்கம் மீனவர்கள்

`பணம் இல்லைனாலும், ஆளாப் போய் நிப்போம்!’ - `கஜா’ மீட்புப் பணியில் ஈஞ்சம்பாக்கம் மீனவர்கள்
`பணம் இல்லைனாலும், ஆளாப் போய் நிப்போம்!’ - `கஜா’ மீட்புப் பணியில் ஈஞ்சம்பாக்கம் மீனவர்கள்

ருடம்தோறும் வருந்தத்தக்கச் செய்தி ஒன்று, தவறாமல் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பலரின் வாழ்வாதாரத்தை அழித்துச் சென்றுவிட்டது கஜா புயல். உறவுகளுக்குள்தான் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டுமா, நட்புகளுக்குள்ளும் நலம் விரும்பிகளுக்குள்ளும்கூடப் பகிர்ந்துகொள்ளலாம். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மீனவப் பெருமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயற்கைப் பேரழிவின் பிடியில் உருகுலைந்திருப்போரை மீட்டெடுக்க, அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை வழங்க ஒன்றுகூடியிருக்கிறார்கள்.

``எங்கள மாதிரி உழைக்கக்கூடிய மக்கள், எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்வாங்க. ஏன்னா, நாங்க நடுக்கடல்லயே எப்பேர்ப்பட்ட எதிர்ப்பையும் எதிர்கொள்றவங்க. ஆனாலும், எங்களையே நம்பி இருக்கும் மக்க, மனுஷால காப்பாத்தணுங்கிற  உணர்வுதான் எங்களை உருக்கிடுது. புயல் மாதிரியான இயற்கை பேரிடர் காலங்கள்லதான் மண்ணையே நம்பி இருக்கக்கூடிய விவசாயிங்க அதிகமா பாதிக்கப்படுறாங்க. அவங்களுக்கு உதவ, உடன்பிறவா சகோதரர்களா நாங்க இருக்கோம்'' என்கிறார் ஈஞ்சம்பாக்கம் மீனவப் பெருமக்கள் நலவாழ்வு மன்றத்தின் தலைவர் புஷ்பலிங்கம்.

``நாங்க ஒவ்வொருத்தரும் இயல்பாவே எதிர்நீச்சல் போட்டுதான் எங்க வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோம்.  அதனால பாதிப்புங்கிறது எப்போ, எப்படி, எந்த ரூபத்துலவேணும்னாலும் வரும். அதைப் பார்த்து மனசு ஒடிஞ்சு உட்கார்ந்துட்டா, அப்புறம் வாழ்க்கையை வாழவே முடியாது. அப்படி ஒரு முன்னெச்சரிக்கை உணர்வோடுதான் மீனவ மக்களாகிய நாங்க ஒவ்வொரு முறையும் கடலுக்குள்ள போறோம். அப்படிப்பட்ட பாதுகாப்பு உணர்வோடு வாழ்நாளைக் கடத்திக்கிட்டு இருந்தவங்களோட வாழ்வாதாரத்தை அப்படியே வாயில போட்டு முழுங்கிடுச்சு இந்தக் கஜா புயல். எவ்வளவுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு சார்புல எடுத்திருந்தாலும், எங்களை மாதிரி மீனவர்கள் உட்பட, விவசாயிகள், தினக்கூலிகள், மீனவர்கள் எல்லாரும் வாழ்க்கையையே வாரிக்கொடுத்துட்டு வழி தெரியாம நிற்கும் உழைக்கும் வர்க்கத்து மக்களின் இழைப்பை ஈடுசெய்யவே முடியாது.

இந்தப் பயிரை அறுவடை செஞ்சா, அந்தக் கடனை அடைக்கலாம், அந்த வாழையை நம்பி தங்கச்சிக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கொடுக்கலாம், மகனுக்கு ஒரு கடையை அமைச்சுத் தரலாம், மகளுக்கான பேறுகாலத்தை சுலுவா முடிக்கலாம்னு இருந்த எத்தனையோ மக்களோட கனவுகளை எல்லாம் வெறும் கானல்நீரா மாத்திடுச்சு, இந்தக் கஜா புயல். புயல்னால ஏற்பட்ட  உயிர் இழப்பு ஒருபக்கம் இருந்தாலும், அந்த உயிர்களுக்கான ஆதாரமா இருந்த அத்தனை வளங்களையும் கஜா புயல் கழிச்சுக்கட்டிட்டுப் போயிருச்சு.

இந்த மக்களுக்காக, சென்னை ஈஞ்சம்பாக்கம் மீனவ நலவாழ்வு மன்றம் சார்புல ஏதோ எங்களால முடிஞ்ச உதவிகளை, அதாவது உணவு, உடை, மெழுகுவத்தி, முதலுதவி மருந்து, தீப்பெட்டி, தொற்றைத் தடுக்கும் மருந்து, முதியவர்களுக்கான தற்காப்பு உடைகள், குழந்தைகளுக்கான பால் பவுடர், பிரெட், தண்ணீர் பாக்கெட்/கேன், மருத்துவ சிகிச்சைனு எங்களுக்குத் தெரிஞ்சவரைக்கும் எங்களால முடிஞ்சவரைக்கும் அவங்களுக்கு உதவி செய்துக்கிட்டிருக்கோம். இதோ இப்பகூட, ஏற்கெனவே எடுத்துட்டுப்போன அடிப்படைப் பொருள்கள் பத்தாததுனால, இன்னும் கொஞ்சம் பொருள் எடுத்துட்டுப்போக வந்திருக்கேன்.

என்கூட எங்க மன்றத்து நண்பர்கள் அத்தனை பேரும் வேலை செய்றதுனால பாதிக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் ஆறுதல் அடைஞ்சிருக்காங்க. எங்க மன்றத்தின் சார்புல சுமார் 75 பேர் மீட்புப் பணி களத்துல உதவி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்சம் ஆள் தேவைப்படுறதால நண்பர்கள் மட்டுமல்லாம, உறவினர்களையும் அங்க கூட்டிக்கிட்டுப் போக வந்திருக்கேன்.

எங்க மன்றத்தின் சார்பா உதவி செய்றதைக் கேள்விபட்ட ஈஞ்சம்பாக்கம் மேல்நிலை மக்கள், அவங்க பங்குக்குப் பண உதவி செஞ்சிருக்காங்க. இப்படி அவங்கவங்க விருப்பப்பட்டுக் கொடுத்த பணத்தையும் எங்க மன்றம் சார்ப்புல திரட்டிய ஒண்ணரை லட்சம் ரூபாயையும் வெச்சுதான் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செஞ்சுக்கிட்டிருக்கோம். ஒருவேளை அவங்களோ, இல்லை எங்ககிட்டயோ எந்தப் பணமும் இல்லைன்னாலும், அவங்களுக்கு உதவுற மாதிரி எங்க உடல் உழைப்பையாவது நிச்சயம் தருவோம்.''