Published:Updated:

``நிழலுக்கு கூட இங்க மரங்கள் இல்லப்பா!" - 'கஜா'வால் நிர்க்கதியாகி நிற்கும் மீனவ கிராமங்கள்

``நிழலுக்கு கூட இங்க மரங்கள் இல்லப்பா!" - 'கஜா'வால் நிர்க்கதியாகி நிற்கும் மீனவ கிராமங்கள்

உணவு, உடை இருப்பிடம் என அடிப்படைத் தேவைகளை முற்றிலும் இழந்தவர்கள் 25 நாள்களாகப் பகலில் வீதிகளிலும் இரவில் பள்ளிக்கூடத்திலும் தங்கியிருக்கிறார்கள். காற்றில் இழுத்துவரப்பட்ட படகுகள் வீடுகளின் மீது கிடக்கின்றன. 

``நிழலுக்கு கூட இங்க மரங்கள் இல்லப்பா!" - 'கஜா'வால் நிர்க்கதியாகி நிற்கும் மீனவ கிராமங்கள்

உணவு, உடை இருப்பிடம் என அடிப்படைத் தேவைகளை முற்றிலும் இழந்தவர்கள் 25 நாள்களாகப் பகலில் வீதிகளிலும் இரவில் பள்ளிக்கூடத்திலும் தங்கியிருக்கிறார்கள். காற்றில் இழுத்துவரப்பட்ட படகுகள் வீடுகளின் மீது கிடக்கின்றன. 

Published:Updated:
``நிழலுக்கு கூட இங்க மரங்கள் இல்லப்பா!" - 'கஜா'வால் நிர்க்கதியாகி நிற்கும் மீனவ கிராமங்கள்

ஜா புயல் பாதித்த பகுதிகளை 22 நாள்களுக்கு முன்பு சென்று பார்வையிட்டு சில உதவிகள் செய்து, ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருந்தோம். புயல் கடந்து 25 நாள்ளைத் தாண்டிய வேளையில் ஏற்கெனவே சென்று வந்த புயல் பாதித்த இடங்களை மீண்டும் பார்வையிடச் சென்றிருந்தோம். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் என்கிற இடத்துக்கு அருகில் இருக்கிற காரங்குடா பகுதியில் இருக்கிற மீனவ குடும்பங்களைச் சந்தித்தோம். தன்னார்வத் தொண்டர்களின் நிவாரணப்பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாக நின்றுவிட்டது. சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. ஆங்காங்கே சீரமைப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. சாலையெங்கும் விழுந்த மரங்களின் தடயங்கள் அப்படியே கிடக்கின்றன. தெருக்களில் தேங்கிய நீர் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் சகதியாக கிடக்கிறது. அதில்தான் குழந்தைகளும், மனிதர்களும் நடக்கிறார்கள்.

கழுமங்குடா மீனவ கிராமம் முற்றிலும் சிதைந்து கிடக்கிறது. வீட்டை இழந்து பொருள்களை இழந்து நிற்கிற 16 குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் பகலில் வீதிகளிலும், இரவில் பள்ளிகளிலும் தங்கி இருக்கிறார்கள். எல்லா வீடுகளும் இடிந்து கிடக்கின்றன.  பிள்ளைகளோடு பனைமரத்துக்கு அடியில் உட்கார்ந்திருக்கிற ஒவ்வொருவரும் அடுத்த நாள் பற்றிய கவலையோடு இருக்கிறார்கள். புயல் வந்த அன்று ஒட்டுமொத்த மீனவ கிராம மக்களும் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளை மட்டும் எடுத்துக்கொண்டு முகாம்களுக்குச் சென்றிருக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தவர்கள், மொத்தமாக இடிந்து விழுந்தவர்கள்தான். இப்போது வரை நிமிரமுடியாமல் இருக்கிறார்கள். கடல்நீர் எல்லாப் பொருள்களையும் சுருட்டிக் கொண்டு போயிருக்கிறது. உணவு, உடை இருப்பிடம் என அடிப்படைத் தேவைகளை முற்றிலும் இழந்தவர்கள் 25 நாள்களாகப் பகலில் வீதிகளிலும் இரவில் பள்ளிக்கூடத்திலும் தங்கி இருக்கிறார்கள். காற்றில் இழுத்துவரப்பட்ட படகுகள் வீடுகளின் மீது கிடக்கின்றன. 

ஊரில் இருக்கிற ஒற்றைப் பனை மரத்தின் நிழலில் பத்து பேர் அமர்ந்திருக்கிறார்கள். அதில் இருந்த அமராவதி என்கிற பெண்மணி இரண்டு பிள்ளைகளையும் அரவணைத்துக்கொண்டு பேசும்போது  ``நிழலுக்கு கூட இங்க மரம் இல்லப்பா, மொட்டை வெயிலுல உக்காந்திருக்கோம், வீடே இல்ல, ஒரு பொருளும் இல்ல, எல்லாமே கடல் தண்ணியில போய்டுச்சு, எங்களுக்கு ஒரு தார்பாய் வாங்கி குடுக்க சொல்லுங்க. இப்படி ஒரு இழப்பை வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை எனச் சொல்லி அழுகிறார். தன்னார்வ தொண்டர்கள் மூலம் கிடைத்த சில உடைகளைத்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். இவற்றையெல்லாம்விட யாராவது வாகனங்களில் வருபவர்கள் குழந்தைகளுக்கு உடை கொடுப்பார்கள் என ஒவ்வொரு நாளும் சாலைகளில் வருகிற வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உச்சகட்ட வேதனை. 

தனம் என்கிற 70 வயது மூதாட்டி பேசும்போது ``புயல் வந்த அன்னைக்கு எல்லாரும் முகாமுக்கு போய்ட்டாங்க, வீட்ல 10 ஆடு வச்சிருந்தேன், என்னால ஆடுகளை விட்டுட்டு போக மனசில்லை, நைட் 2 மணிக்கு என்ன நடக்குதுனே தெரியாம போச்சு, என்னோட ஆடுகள் எல்லாமே தண்ணியில போய்டுச்சு, அந்த நேரத்துல என்னால  ரெண்டு ஆட மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சிது, உயிர் பிழைத்ததே என்னால நம்ப முடியல” என்கிறார். கஜா புயலில் மீனவ கிராமங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது வரை அவர்களுக்கான எந்த அரசு நிவாரணப் பொருள்களும் கிடைக்கவில்லை. மீனவர்களின் வலை, மீன்பிடி படகுகள் என எல்லா உபகரணங்களும் மோசமாகப் பாதிப்படைந்துள்ளன. குழந்தைகளை வைத்துக்கொண்டு கடும் வெயிலில் உடைந்த வீடுகளுக்கு வெளியே சமைத்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். இதுவரை எதுவும் கிடைக்காத மக்கள் எங்களுக்கு தார்ப்பாய் கிடைத்தால் போதும் நாங்கள் எப்படியாவது சமாளித்துக்கொள்கிறோம் என்கிறார்கள். 

ராமச்சந்திரன் என்பவர் மூன்று குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தவர். புயலின்போது ஒட்டுமொத்த வீடும் பலத்த சேதமடைந்திருக்கிறது. வீட்டில் இருந்த எல்லாப் பொருள்களும் நீரில் மூழ்கி நாசமாகிக் கிடக்கின்றன. குடும்பத்தில் இருக்கிற ஐந்து பேரும் பகலில் உறவினர்கள் வீட்டிலும் இரவில் பள்ளிக்கூடத்திலும் தங்கிக் கொள்கிறார்கள். புயல் கடந்த 25-வது நாளில் தன்னுடைய வீட்டைத் திரும்பவும் கட்ட முயற்சி செய்துகொண்டிருக்கிறார். குடும்பமாகச் சேர்ந்து தங்களின் இடிந்த வீட்டை எப்படியாவது கட்டியெழுப்ப போராடிக்கொண்டிருக்கிறார்கள். சுனாமியின்போதுகூட நாங்கள் இவ்வளவு பாதிப்புகளைச் சந்திக்கவில்லை என்கிறார்கள் கிராம மக்கள். 25 நாட்களைக் கடந்தும் டெல்டா மாவட்டங்களில் உள்ள பல மீனவ கிராமங்களுக்கு இன்றுவரை தேவையான  நிவாரணப் பொருள்கள் முறையாகப் போய்ச் சேரவில்லை. 25 நாள்களில் இதுவரை பல மீனவ கிராமங்கள் இன்னும் கொஞ்சம் கூட மீளவில்லை. 

இன்பமோ, துன்பமோ ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய வீடுதான் மிகப்பெரிய பலமே. வேறு எதை இழந்திருந்தாலும் இவ்வளவு துயரப்பட்டிருக்க மாட்டார்கள். வீட்டையே இழந்து நிற்பதுதான் மிகப்பெரிய துயராகப் பார்க்கிறார்கள். வீட்டை  இழந்து நிற்கிற மக்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே எல்லோருடைய பிரார்த்தனையாகவும் இருக்கிறது.