Published:Updated:

மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த 7 வயது சிறுவனின் டைரி!- சுனாமி கோரத்தின் சாட்சி

`சுனாமியின்போது கடற்கரையில் ஏற்பட்ட கோரத்தை வரிகளாகவும், ஓவியமாகவும் வரைந்த 7 வயது தன்வீரின் இந்த டைரியை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறோம்'.

2004, டிசம்பர் 26 அன்று கடலூருக்குச் சுற்றுலா சென்றபோது ஆழிப்பேரலைக்கு தாய், தந்தை, சகோதரர் என மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்தவர் தன்வீர். ஒரு மீனவரால் காப்பற்றப்பட்டு உயிர் பிழைத்த தன்வீருக்கு அப்போது 7 வயது. காணாமல் போன தன் தம்பி தல்ஹாவைத் தவிர மற்ற மூவருக்கும் இறுதி மரியாதை செய்துவிட்டு கண்முன் நிகழ்ந்த ஆழிப்பேரலையின் கோரத்தையும், அது ஏற்படுத்திய சேதத்தையும், கண்முன் கொத்துக்கொத்தாய் செத்து மடிந்த மனிதர்களையும் பற்றி வார்த்தைகளாகவும் ஓவியங்களாகவும் வரைந்தார்.

சிவப்பு நிற மையால் ஒன்றரை பக்கத்துக்கு எழுதப்பட்ட அந்த வாக்கியங்களை உறவினர்கள் பொக்கிஷமாய் இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர்.

Tsunami memories
Tsunami memories

அதில், தாங்கள் கடற்கரையில் இறங்கி நின்றவுடன் இரண்டு தென்னை மர உயரத்தில் திறண்டு வந்த ஆழிப்பேரலை, அதில் சிதறடிக்கப்பட்ட மனிதர்கள், கண் முன்னே இறந்த உறவுகள், கையில் கிடைத்த மரத்தைப் பற்றி ஒரு மீனவனால் தான் காப்பாற்றப்பட்டது என அனைத்தையும் விவரித்து எழுதியுள்ளார்.

மேலும் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த, `வெல்கம் டு த சில்வர் பீச்' பெயர் பலகை முதல் பொங்கி எழுந்த பேரலையில் தான் காப்பாற்றப்பட்டதுவரை ஓவியமாகவும் வரைந்து வைத்துள்ளார்.

Tsunami memories
Tsunami memories

மனிதர்கள் கூட்டம் கூட்டமாக சிதறி ஓடியதையும் கொத்துக் கொத்தாக செத்து மடிந்ததையும் அவர் வரைந்துள்ள விதம் காண்போரை நெகிழச் செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து சிறுவனின் உறவினர் ஃபரூக் நம்மிடம் பேசுகையில் ``சுற்றுலா சென்ற இடத்தில் சுனாமியில் சிக்கி என் சகோதரன் கபியுல்லா, அவனின் மனைவி பர்வீன், ஆறு மாத கைக்குழந்தை பிலால் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். கபியுல்லாவின் இரண்டு வயது மகன் உயிர் பிழைத்தும் காணாமல் போய் இன்றுவரை கிடைக்கவில்லை.

Tsunami memories
Tsunami memories

என் சகோதரன் குடும்பத்தில் தன்வீர் மட்டுமே உயிர் பிழைத்தான். தன் கண்முன்னே இத்தனை கொடூரங்களையும் பார்த்து ரணமாகிப்போன தன்வீர் தன் பெற்றோர்களுக்கு இறுதி மரியாதை செலுத்திய அன்று இரவே அமர்ந்து இந்த ஓவியத்தையும், வரிகளையும் எழுதினான். அப்போது ஏழு வயதாக இருந்த தன்வீர் இன்றைக்கு இளைஞராகி தற்போது லண்டனில் உயர் கல்வி பெற்று வருகிறார். மறக்கமுடியாத அவரது படைப்பை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு