Published:Updated:

டிசம்பர் 26, மறக்கமுடியாத ஞாயிற்றுக்கிழமை : சுனாமி நினைவு தினம்! #15YearsofTsunami

கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்

 2004 Tsunami
2004 Tsunami

2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக நெய்தல்குடிகளால் மறக்க இயலாது. அந்த ஞாயிற்றுக்கிழமை எழும்பிய ஆழிப்பேரலை நெய்தல் நிலத்தில் துயர ரேகைகளைப் படரவிட்டது. இப்போதுவரை அந்தப் பாதிப்பில் உழன்றுகொண்டிருக்கின்றனர் அம்மக்கள். இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகளில் சுனாமியும் ஒன்று.

Tsunami
Tsunami

2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிற்குப் பதிவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இன்று வரை டிசம்பர் 26-ம் தேதி மறக்கமுடியாத நாளாக அனைவரின் உள்ளத்திலும் உள்ளது. கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அன்று வந்த சுனாமி அலைகள் சுமார் 30 மீட்டர் (100 அடி) உயரத்துக்கு எழுந்தன.

Tsunami
Tsunami

சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னைதான். ஞாயிற்றுக் கிழமை அதிகாலையான அன்று, கடற்கரையில் நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள், தூங்கிக் கொண்டிருந்த மீனவர்கள், கடற்கரையில் கடை வைத்துள்ளவர்கள் என நூற்றுக்கணக்கான மக்களை அள்ளிச் சென்றது சுனாமி.

Tsunami
Tsunami
வன விலங்குகள், பறவைகளுக்கு உணவு தருவது சரியா..? ஓர் அலசல்!

சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மாவட்டங்கள். இதேபோல், கடலூர், பாண்டிச்சேரி எனச் சென்னை முதல் குமரி வரை கடலோரத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சூறையாடிச் சென்றது. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

சுனாமி
சுனாமி

சென்னையில் 206 பேரும், கடலூரில் 610 பேரும் உயிரிழந்தனர். மேலும் கோடிக்கணக்கான பொருள்கள், இயற்கை வளங்கள், மரங்கள், கால்நடைகள் எனப் பெரும் இழப்பைக் கண்டது தமிழகம். பலர் வீடுகளையும், உறவினர்களையும், வளர்ப்பு பிராணிகளையும் இழந்து தவித்தனர். பாதிப்பின் தாக்கத்திலிருந்து மீண்டு வரவே பல மாதங்கள் ஆகின.

Tsunami
Tsunami

இந்த சுனாமியின் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 14 நாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 2,29,866 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,25,000 பேருக்கு மேல் காயமடைந்தனர். 43,786 காணாமல் போயினர். மேலும் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்விடத்தை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இந்தோனேசியாவில் மட்டும் 1,67,736 உயிரிழந்துள்ளனர். 37,063 பேர் காணாமல் போயினர். மேலும் இலங்கை, தாய்லாந்து, சோமாலியா, மியான்மர் போன்ற நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் 35,322 பேர் இறந்துள்ளனர்.

Tsunami
Tsunami
PH2(AW/SW/PJ) Philip A. McDaniel

நேரடியாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்த பிறநாட்டுக் குடிமகன்களில் ஸ்வீடன் நாட்டு மக்கள் 554 பேரும், ஜெர்மனி நாட்டு மக்கள் 539 பேரும் இறந்தனர். அதேபோல் பின்லாந்து இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, நார்வே, டென்மார்க், இத்தாலி எனப் பல நாட்டு மக்களும் இந்தப் பாதிப்பில் சிக்கி இறந்தது மிகவும் சோகமான விஷயம். பல்வேறு மீனவர்கள் சுனாமியில் சிக்கி உயிரிழந்ததால் அவர்களையே நம்பியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றுவரை அந்தத் துயரத்திலிருந்து மீண்டுவரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பின் நினைவாகக் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுனாமி நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுனாமி பாதிப்பு ஏற்பட்டு இன்றுடன் 15-வது ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், மீனவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கடலுக்குள் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tsunami
Tsunami
சுனாமி பாதிப்பு ஏற்பட்டு 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. மக்கள் மனதில் வடு இன்னும் மறையவில்லை. சுனாமியின் பாதிப்பை நினைக்கும் போதெல்லாம் ஒருவித பதற்றத்தைக் கொடுத்துவிட்டுச் செல்கின்றன நினைவுகள்.

மேலும், பல இடங்களில் உள்ள நினைவிடங்களில், மலர் வளையம் வைத்தும், மெழுகுவத்தி ஏற்றியும் இந்த நாளை கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். மீனவர்கள் இன்று ஒருநாள் கடலுக்குள் செல்லாமல் நினைவஞ்சலி செய்து வருகின்றனர்.