தலைவலியோடு சித்தார்த் மேனன் அறையில் தாட்சா, மார்க்ஸ், பிரசாத்தோடு போனாள் சூசன். சித்தார்த் தனது லேப்டாப்பில் மூழ்கியிருந்தார். திவ்யா சோஃபாவில் உட்காராமல் அவரது அறையின் கண்ணாடி சுவர் அருகே நின்று வெளியே பார்த்தபடி இருந்தாள்.
கருப்பு நிற பேன்ட், வெள்ளை சட்டை என மிகவும் ஃபார்மலாக உடை அணிந்திருந்தாள் திவ்யா. சின்ன புள்ளியாய் மூக்குத்தி அவள் தலையை அசைக்கும் போதெல்லாம் டாலடித்தது. எப்போதும்போல் கண்ணாடியை கண்ணுக்கு அணியாமல் நெற்றிக்கு அணிந்திருந்தாள். மார்க்ஸ் ஓரக் கண்ணால் அவளைப் பார்த்து ரசித்தபடி இருந்தான்.
அதை கவனித்த பிரசாத் எரிச்சலானான்.
தாட்சா மெல்லிய குரலில் “பிரசாத் உன்ன பாக்குறான்” என்றாள். “நான் திவ்யாவை பாக்குறேன்” என பார்வையை விலக்காமல் சொன்னான் மார்க்ஸ்.
“அதைதான் அவன் பாக்குறான்னு சொன்னேன்!”
“ தெரியும்... அதனாலதான் வச்ச கண்ணு வாங்காம பாக்குறேன் ” எனச் சொல்லிவிட்டு மார்க்ஸ் திரும்பி புன்னகைத்தான் மார்க்ஸ்.
“உனக்கு இருக்குற நக்கல் இருக்கு பாரு” என தாட்சா பல்லைக் கடித்தாள்.
லேப்டாப்பை மூடிய சித்தார்த் மேனன் அவர்கள் பக்கமாகத் திரும்பி, “சொல்லுங்க” எனப் பொதுவாகச் சொன்னார்.
தொண்டையைச் செருமிய தாட்சா “என்னோட ரெசிக்னேஷன் லெட்டரை நான் HR-க்கு மெயில் பண்ணிருக்கேன்” என்றாள்.
“ரிசைன் பண்றீங்களா ஏன்?” என மேனன் புரியாதவராக கேட்க...
தாட்சா அந்த கேள்வியை எதிர்பாராமல், சற்று தடுமாறி “நீங்க புது பிஸினஸ் ஹெட்டா பொறுப்பு எடுத்ததுக்கு அப்புறம் பழைய பிஸினஸ் ஹெட் நான் ரிசைன் பண்றதுதான சரி?!” என்றாள்.
“நான் புது பிஸினஸ் ஹெட்டுன்னு யார் சொன்னது” என மேனன் கேட்டார். அனைவரும் புரியாமல் பார்க்க சூஸன் மட்டும் புன்னகைத்தாள்.
மேனன் சின்ன சிரிப்புடன் “தாட்சா நீங்க இந்த சேனலை நாலு வருஷமா சிறப்பா நடத்திட்டிருக்கீங்க... லாபம் சம்பாதிச்சு கொடுத்திருக்கீங்க... எதுக்காக உங்களை வெளியே அனுப்பணும்?''
மார்க்ஸ் முகத்தில் சந்தோஷம். தாட்சா முகத்தில் சந்தோஷத்தை விட சந்தேகமே அதிகம் இருந்தது. மேனன் தொடர்ந்தார்.
“நான் சவுத் ஹெட். நம்மளோட மளையாளம், கன்னடா சேனலை எல்லாம் நான் தான் பார்த்துக்கணும். தெலுங்குல புதுசா ஒரு சேனலை இன்னும் 6 மாசத்துல ஆரம்பிக்கணும். இதுதான் இந்த வருஷத்துக்கான என்னோட கேஆர்ஏ (Key Result Area). நீங்கதான் ஆரஞ்சு டிவியோட பிஸினஸ் ஹெட்டா தொடரப் போறீங்க. நான் உங்களுக்கு சப்போர்ட்டா கொஞ்ச நாள் சென்னையில இருப்பேன். அவ்வளவுதான்” என்று சொன்ன மேனன் கண்களில் உண்மை தெரிந்தது.
மார்க்ஸ் தன்னை அறியாமல் “சூப்பர்” என்றான். மேனன், சூஸன் இருவரும் புன்னகைத்தார்கள்.
“சார் என்னடா இவன் ஓவரா பேசுறானேன்னு தப்பா எடுத்துக்காதிங்க... உங்க கம்பெனி எடுத்ததுலயே ஒரே சரியான முடிவுன்னா அது இதுதான் சார். இந்த மார்கெட்ல இந்த வேலையை செய்றதுக்கு தாட்சாவைவிட பெஸ்ட்டான ஆள் யாரும் கிடையாது” என்றான் மார்க்ஸ்.
கொஞ்சம் தடுமாறியா தாட்சா “நான் கொஞ்சம் யோசிக்கணும்” என்றாள்.
“ஒண்ணும் தேவையில்ல... .உங்களுக்காக இல்ல உங்களை நம்பி இருக்கிற நம்ம ஆட்களுக்காகவாவது இதை நீங்க ஏத்துக்கிட்டுதான் ஆகணும். முதல்ல கையைக் குடுங்க... வாழ்த்துகள்” என மார்க்ஸ் அவளது கரம் பற்றி குலுக்கினான்.

தாட்சாவுக்கும் அவனுக்கும் இடையில் இருந்த நட்பு அந்த அறையில் இருந்த அனைவரது மனதையும் தொட்டது, பிரசாத்தைத் தவிர. மேனனின் இந்த முடிவு பிரசாத்துக்கு ஏமாற்றமளிப்பதாகத்தான் இருந்தது.
தாட்சா மேல் அவனுக்கு பெரிதாக கோபம் எல்லாம் கிடையாது.
பொதுவாகவே யாருக்கு நல்லது நடந்தாலும் கவலைப்படும் இயல்பு
அவனுடையது.
“மார்க்ஸ் நீங்களும் வேலையில கன்ட்டின்யூ பண்றீங்க” என்றார் மேனன்.
“சார்” என மார்க்ஸ் ஏதோ சொல்ல வர...
“தாட்சா உங்களைப் போகக் கூடாதுன்னு சொன்னாரு இல்ல... இது உங்க சான்ஸ் நீங்க அவரை விடாதீங்க” எனச் சொல்லி சிரித்தார் மேனன்.
தாட்சா புன்னகையுடன் மார்க்ஸைப் பார்த்து ஏதோ சொல்ல வர திவ்யா குறுக்கிட்டாள்.
“ஸாரி சார்.. அவர் இங்க கன்ட்டின்யூ பண்றதா இருந்தா என்ன விட்டிருங்க சார். நான் கிளம்புறேன் ” என்றாள் திவ்யா. அவள் சட்டென அப்படி சொல்வாள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.... பிரசாத் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“திவ்யா ஐ வில் எக்ஸ்ப்ளெய்ன்” என்றாள் சூஸன்.
“வேணாம் சூஸன் எல்லாரும் சேர்ந்து என்னை கன்வின்ஸ் பண்ணப் போறீங்க அதான... வேண்டாம். என்ன விட்ருங்க.''
“திவ்யா லிசன் ” என மேனன் பேச வர திவ்யா இடைமறித்தாள்.
“என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னு எனக்குப் புரியுது சார். அவரே புரோகிராமிங் ஹெட்டா இருக்கட்டும், நான் திரும்பவும் மும்பைக்கே போறேன்” என கோபமாக அவள் சட்டென கதவை திறந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. என்ன பேசுவது எனத் தெரியாமல் அனைவரும் திகைத்து போனார்கள்.
“சார் ” என்றான் மார்க்ஸ்.
சித்தார்த் மேனன் அவனை ஏறிட்டு பார்த்தார்.
“திவ்யாவை தப்பா எடுத்துக்காதிங்க சார். அவங்க இடத்துல நான் இருந்தாலும் இதையேதான் சார் சொல்வேன். கிரியேட்டிவான ஒரு ஆளை நம்பலைன்னா அது அவங்களுக்கு ரொம்ப சங்கடமா இருக்கும். ஒரு குகை, ரெண்டு சிங்கம் சரியா வராதுதான் சார். நான் ஏற்கனவே பிளான் பண்ண மாதிரி கிளம்புறேன். அவங்க வேலை செய்யட்டும்.”
“மார்க்ஸ்” என ஏதோ சொல்ல வந்த மேனன் சொல்ல முடியாமல்
தயங்க...
“எனக்குப் புரியுது சார். உங்க அன்புக்கும் வாய்ப்புக்கும் நன்றி. தாட்சா நான் அப்புறமா உங்க கிட்ட பேசுறேன்... பிரசாத் என்னோட ரிலீவிங் மெயில் ஏற்கனவே அனுப்பிட்டேன். தேங்யூ சூஸன்... வரேன்” எனப் படபடவென அனைவரிடமும் விடைபெற்று அறையை விட்டு நகர்ந்தான் மார்க்ஸ்.
அடுத்தடுத்து திவ்யாவும், மார்க்ஸும் வெளியே சென்றுவிட அந்த அறை கனத்த மெளனத்தில் உறைந்தது.
திவ்யா கான்ஃபிரன்ஸ் ரூமில் அமர்ந்திருந்தாள். தான் அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது என்று அவளுக்குத் தோன்றியது. ஒரு சாதாரண
ட்ரெய்னியாக ICE நெட்வொர்க்கில் சேர்ந்த நாள் முதல் இன்றைக்கு அந்த நிறுவனத்தின் முக்கியமான நபராக அவள் வளர்ந்தது வரை அனைத்துமே சித்தார்த் மேனன் அவளுக்கு கொடுத்த வாய்ப்புதான். அவரிடம் அப்படி பேசியதை யோசிக்கவே அவளுக்கு அசிங்கமாக இருந்தது. 'செல்ஃபிஷ்' எனத் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். இரண்டு கரங்களால் நெற்றியைப் பிடித்தபடி அவள் யோசனையில் இருக்க கதவை திறந்து கொண்டு பிரசாத் உள்ளே நுழைந்தான்.
திவ்யா நிமிர்ந்து என்ன என்பது போல பார்த்தாள்.

டேபிளில் மார்க்ஸின் ஐடி கார்டை வைத்தவன், “அவன் ரிசைன் பண்ணிட்டான்... இனி அவன் ஆபிஸுக்குள்ள வரணும்னாகூட விசிட்டர் பாஸ் போட்டுட்டுத்தான் உள்ள வரணும். தொல்லை ஒழிஞ்சுது நீங்க நிம்மதியா வேலை செய்யலாம்!” என்றான்.
திவ்யா மெதுவாகக் கண்களை திருப்பி டேபிளில் இருந்த ஐடி கார்டைப் பார்த்தாள். மார்க்ஸ் எப்போதும்போல அதில் சிரித்தபடி இருந்தான். ஒரு கணம் மார்க்ஸ், மேனனுக்கு அருகாமையிலும், தான் அவரை
விட்டுத்தள்ளி வந்துவிட்டதைப்போலவும் உணர்ந்தாள் திவ்யா.
அவள் சட்டென எழுந்தாள். எதுவும் சொல்லாமல் கான்ஃபரன்ஸ் அறையை விட்டு நகர்ந்தாள். பிரசாத் புரியாமல் பார்த்தான்.
***************************************
மேனனின் அறைக்கதவை தட்டிவிட்டு பதிலுக்கு காத்திராமல் திவ்யா உள்ளே நுழைந்தாள். அறையில் இருந்த தாட்சாவும் சூஸனும் அவளை நிமிர்ந்து பார்த்தார்கள்.
கொஞ்ச நேரத்துக்கு முன் எதுவுமே நடக்காததைப் போல மேனன் ''யெஸ் திவ்யா'' என்றார். “சார் நான்...” மேற்கொண்டு பேச முடியாமல் திவ்யாவுக்கு அழுகை வர “ஸாரி சார் ” என கண்கலங்கி, அருகில் இருந்த சேரில் சரிந்தாள். கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
“ஏய் என்னது இது... இட்ஸ் ஒகே... இட்ஸ் ஒகே” எனத் தனது நாற்காலியில் இருந்து எழுந்து அவள் அருகே வந்த சித்தார்த் மேனன் அவளைத் தட்டிக் கொடுக்க...
“ஸாரி சார்” என்ற திவ்யாவால் தொடர்ந்து பேச முடியவில்லை. அவள் முகத்தை திருப்பி கண்ணீரை மறைக்க முயல, தாட்சாவுக்கும் சூஸனுக்கும் திவ்யாவின் இன்னொரு முகம் புரிந்தது... அவள் மேனன் மேல் வைத்திருக்கும் மரியாதையை அவளது கண்ணீர் அவர்களுக்குத் தெளிவாக சொன்னது.
“சார், நீங்க என்ன முடிவு வேணாலும் எடுங்க சார் எனக்கு ஓகே” என உடைந்து போன குரலில் சொன்னாள் திவ்யா .
“நோ திவ்யா... நீ தான் முடிவு எடுக்கணும். நீ தான் கம்பெனிக்கு வேணும்னு நாங்க முடிவு எடுத்தாச்சு. கம்பெனிக்கு மார்க்ஸ் வேணுமா இல்லையான்னு நீ முடிவு பண்ணிக்கோ” என சொல்லிப் பந்தை திவ்யாவிடமே தூக்கிப்போட்டார் மேனன்.
திவ்யா அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
மேனன் புன்னகையுடன் அவளைப் பார்த்தார்.
“உன்னோட கால்தான்... நாங்க யாரும் தலையிட மாட்டோம்!”
எத்தனை பெரிய பிரச்னையையும் கொஞ்சம் கூட பதற்றப்படாமல் புன்னகையுடன் எதிர்கொள்கிற மேனனின் இயல்பு தாட்சாவை ஆச்சர்யப்படுத்தியது.
சற்று நேரம் யோசித்தவள், தாட்சாவைப் பார்த்து “மார்க்ஸோட போன் நம்பர் கொடுங்க” என்றாள். புன்னகையுடன் தாட்சா அவனது எண்ணை சொல்ல, திவ்யா தனது செல்போனில் அவனது நம்பரை தட்டி காதில் வைத்தாள்.
அனைவரும் அவளை சின்ன புன்னகையுடன் வாஞ்சையாகப் பார்த்தபடி இருந்தனர்.
“நம்பர் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது”
“அவன் அப்படித்தான்” என்றாள் தாட்சா.
“எப்படி அவரை கான்டாக்ட் பண்றது, திரும்ப எப்ப போன் ஆன் பண்ணுவாரு!”
“அது அவன் மூட பொறுத்தது... இரண்டு நாள் மூணு நாள், சில சமயம் ஒரு வாரம் எல்லாம் கூட போனை ஆஃப் பண்ணி வெச்சிருக்கான்'' என்றாள் தாட்சா.
“இப்ப என்ன சார் பண்றது?” என திவ்யா மேனனைப் பார்த்து கேட்க, அவர் தெரியவில்லை என்பதுபோல தோள்களைக் குலுக்க...தாட்சாவைப் பார்த்து “மார்க்ஸ், அட்ரஸ் கிடைக்குமா” என்றாள்.
***************************************
கால் டாக்ஸி அண்ணா நகர், வசந்தம் அப்பார்ட்மென்ட் வாசலில் வந்து நின்றது. திவ்யா இறங்கினாள். அவள் அப்பார்ட்மென்ட்டை நிமிர்ந்து பார்த்தாள். பத்து, பதினைந்து ஆண்டுகள் ஆன கொஞ்சம் பழைய அப்பார்ட்மென்ட் அது. 200 வீடுகளுக்கு மேல் உள்ளே இருக்கும்போல இருந்தது... மதிய நேரம் என்பதால் பெரிதாக ஆள் நடமாட்டம் இன்றி அமைதியாக இருந்தது. அப்பார்ட்மென்ட் பெயர் மட்டும்தான் சொன்னார்களேத் தவிர அவனது வீட்டின் எண் அலுவலகத்தில் யாருக்கும் தெரியவில்லை... எப்படி அவன் வீட்டை கண்டுபிடிப்பது என திவ்யா யோசித்தபடி இருக்க,
அவளை கவனித்த வயதான செக்யூரிட்டி “யாரும்மா வேணும்” எனக் கேட்டார்.
திவ்யா தயக்கமாக “இங்க மார்க்ஸ்ன்னு” என இழுத்தாள்.
''E பிளாக், தேர்ட் ஃப்ளோர், நாலாம் நம்பர் வீடு'' என யோசிக்காமல் சொன்னார் செக்யூரிட்டி.
“அவர் வீட்லதான் இருக்காரா?”
“இல்லைன்னா, வீட்ல வெயிட் பண்ணும்மா வருவாரு”
திவ்யா புரியாமல் பார்த்தாள்.
“என்னம்மா பாக்குற... அவரைப் பார்க்க யார் வந்தாலும் அதுதான் வழக்கம்... அவர் ஊட்டுக்கு பூட்டும் கிடையாது, சாவியும்
கிடையாது... வர்றவங்க காத்திருந்து பார்த்திட்டு போவாங்க. ஃபிரிட்ஜ்ல எதுனா சாப்பாடு இருக்கும், பசிச்சா சாப்பிட்டுக்கலாம்..
தூக்கம் வந்தா படுத்து தூங்கலாம். போரடிச்சா டிவி பார்க்கலாம். அது ஊடு கிடையாது சத்திரம்'' திவ்யா ஆச்சர்யத்தோடு, தலையாட்டிவிட்டு நகர்ந்தாள்.
E பிளாக் லிஃப்டில் ஏறி நாலாவது மாடியில் இறங்கினாள் திவ்யா. லிஃப்ட்டில் இருந்து நேராக 4-வது எண் வீடு இருந்தது. திவ்யா தயக்கமாக நடந்து வந்தவள் கதவருகே நின்று மெல்லமாகத் தட்டினாள்.
எந்த பதிலும் வராமல் இருக்க அவள் கதவில் கை வைக்க கதவு
திறந்து கொண்டது.
திவ்யா மெதுவாக உள்ளே நுழைந்தாள். ஹாலை அடைத்தபடி
பெரிய புத்தக அலமாரி ஒன்று இருந்தது. அது முழுக்க புத்தங்களால் நிரம்பி இருந்தது. அது தவிர புத்தகங்கள் டேபிளிலும், தரையிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன... ஒரு பக்க சுவரில் மிகப்பெரியதாக பெரியாரின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதற்கு அருகே கனல் கண்களுடன் பாரதி படம் ஒன்றும் சேகுவேராவின் புகைப்படம் ஒன்றும்
இருந்தது. ஒரு புறம் டிவி அதற்கு மேல் மார்க்ஸின் ஓவியம் ஒன்று
மாட்டப்பட்டிருந்தது. யாரோ அவனை தத்ரூபமாக வரைந்திருந்தார்கள்.
பழைய ப்ரொஜக்டர் ஒன்று ஹாலின் ஒரமாக இருந்தது. அறை அலங்கோலமாக இருந்தாலும் அதில் ஒரு அழகியல் இருந்தது.
உள்ளே அறையில் ஃபேன் ஓடும் சத்தம் கேட்டது. திவ்யா அறைக் கதவை திறக்க, ஃபேனுக்கு நேராக கீழே மெத்தை ஒன்றில் மார்க்ஸ் மல்லாக்கப் படுத்திருந்தான். வேட்டியும், கறுப்பு ரவுண்ட் நெக் டீ-ஷர்டும் அணிந்து இரண்டு கைகளையும் மார்பில் வைத்தபடி மெல்லிய குறட்டையுடன் அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
வேலையைத் தூக்கிப்போட்டு விட்டு அது பற்றி எந்த யோசனையும் இல்லாமல் பட்டப்பகலில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் மார்க்ஸை திவ்யா வித்தியாசமாகப் பார்த்தாள்.
“யாருடா நீ” என்று ஆச்சரியமாக கேட்டது அவள் மனம். அவளது மைண்ட் வாய்ஸ் மார்க்ஸுக்கு கேட்டிருக்கும் போலும். அவன் மெல்ல கண்களை திறந்து திவ்யாவைப் பார்த்தான்!