சென்னைத் தரமணியில் அமைந்திருக்கிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் இந்நூலகம், 5,000 சதுர அடி கட்டடத்தில் 4.5 லட்சம் அரிய நூல்கள், ஆவணங்களால் நிறைந்திருக்கிறது.

காரைக்குடி அருகிலுள்ள கோட்டையூரைச் சேர்ந்த முத்தையா, ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் நிறுவனத்தை நடத்தியதால் ‘ரோஜா முத்தையா’ ஆனார். புத்தகச் சேகரிப்பில் எல்லையற்ற ஆர்வம் கொண்டிருந்த அவர், புத்தகங்கள் மட்டுமல்லாமல் எல்லா வகையான ஆவணங்களையும் சேகரிக்கத் தொடங்கினார். ‘எனது வாழ்க்கை, புத்தகம் தேடி இரவு பகல் என்று வித்தியாசமில்லாத உழைப்பாகவே அமைந்துவிட்டது. அது என் பாக்கியம். பயனோ அளவற்றது. ஒரே ஆனந்த மயம். இறைவனின் அருட்கொடைகளில்கூட புத்தகமே மிகமிக மேலானது’ என்பது அவரது பிரகடனமாக இருந்தது.
ரோஜா முத்தையாவின் மறைவிற்குப் பிறகு, அவரது சேகரிப்பைச் சிகாக்கோ பல்கலைக்கழகம் விலைக்கு வாங்கி, ஒருகட்டத்துக்குப் பிறகு அதைத் தமிழ்நாட்டுக்கே திருப்பியளித்தது. ப.சங்கரலிங்கம், சு.தியடோர் பாஸ்கரன் ஆகியோரைத் தொடர்ந்து சுந்தர் கணேசன் இந்நூலகத்தின் இயக்குநராக இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

சுமார் 50,000 நூல்கள், 50,000 இதர ஆவணங்களுடன் தொடங்கிய நூலகத்தின் சேகரிப்பு தற்போது நான்கு மடங்காக விரிந்துள்ளது. மு.அருணாசலம், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், கிஃப்ட் சிரோமணி, ஐராவதம் மகாதேவன், சம்பகலெட்சுமி, ஏ.கே. ராமானுஜன், கவிஞர் சுரதா, பேரா. வீ.அரசு, ராபர்ட் ஹார்ட்க்ரேவ், ருடால்பஸ், எட்வர்ட் மாண்ட்கோமெரி, டென்னிஸ் ஹட்சன், மில்டன் சிங்கர் ஆகியோருடைய தனிப்பட்ட சேமிப்புகள் தற்போது இந்த நூலகத்தில் உள்ளன.
இந்நூலகத்தின் சிறப்புகள், செயல்பாடுகளை முழுமையாக அறிய இந்தக் காணொலியைச் சொடுக்கவும்...