Published:Updated:

ஆந்திர நதிநீர் இணைப்புத்திட்டம் வெற்றுகூச்சலா... வெற்றிப்பாய்ச்சலா? - அத்தியாயம் 1

ஆந்திர நதிநீர் இணைப்புத்திட்டம் வெற்றுகூச்சலா... வெற்றிப்பாய்ச்சலா? - அத்தியாயம் 1

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

  அத்தியாயம் 1 - வறட்சி அனாதைகளா ? வறட்டு விளம்பரங்களா ? 

ஆந்திராவின் வெப்பத்தைக் கடந்து, சென்னையின் மழையில் நனையத் தொடங்கி சில நாட்கள் ஆகியிருந்தன. அப்படியான ஒரு மழை மாலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு முக்கியமான சூழலியல் பத்திரிகையாளரிடமிருந்து போன்கால் வந்தது...

" கலை... ஆந்திரா நதிநீர் இணைப்புக் குறித்தக் கட்டுரையை முடித்துவிட்டீர்களா ? "

" இன்னும் முழுமையாக முடிக்கவில்லை..."

" முதலில் நான் அனுப்பும் இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள். உங்கள் பதிவில் இதையும் இணைத்துக் கொள்ளுங்கள்... "

வழக்கமாக எவ்வளவு பெரிய விஷயமானாலும், குரலில் எற்ற, இறக்கங்கள் இல்லாமல் பேசும் அந்த நண்பரின் குரலில் அன்று அத்தனை உணர்ச்சிகள்.

" இது நான் செய்தது கிடையாது. என்னுடைய இன்னொரு நண்பர் இயக்கியது. கூறப்பட்டிருக்கும் அத்தனையும் உண்மை. அதே சமயம் அத்தனை அதிர்ச்சியானதும் கூட... "

" சரி... பார்க்கிறேன்."

 நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. சில நிமிடங்களிலேயே அந்த ஆவணப்படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். படம் பார்க்க, பார்க்க மழையின் சத்தம் காதில் விழவில்லை.

ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தின் கதிரி எனும் பகுதியின் சமீப கால வறட்சிக் கதைகளைச் சொல்லியது அந்த ஆவணப்படம். வறட்சி என்றால்... தண்ணீர் இல்லை, உணவில்லை என்ற கதையல்ல... அதையும் தாண்டியது. வறட்சியால் எத்தனைக் குழந்தைகள் கடத்தப்படுகின்றன, எத்தனைக் குழந்தைகள் அனாதைகளாக்கப்படுகின்றன, எத்தனை பெண்கள் பாலியல் தொழிலுக்கு நகர்த்தப்படுகிறார்கள் என்ற விவரங்களை உள்ளடக்கியது. ஒரு வறட்சியின் மறுபக்கத்தை அதிர்ச்சியோடு பதிவு செய்திருந்தது. 

தண்ணீரில்லை... விவசாயம் செய்ய முடிவதில்லை. விவசாயம் இல்லாததால் உணவுத் தயாரிப்பும் இல்லை, விலை கொடுத்து வாங்க காசும் இல்லை. காசில்லாததால், படிக்கப் போக முடிவதில்லை. பணம் சம்பாதிக்க பெற்றோர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர பிள்ளைகள் தனியாக வீட்டிலிருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி சில தரகர்கள் உள் புகுந்து டீனேஜ் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர். கணவனற்ற பெண்கள், வேலைத் தேடி இடம்பெயரும் போது அவர்கள் தவறான கைகளில் விழுந்து பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படுகின்றனர். 30 களின் தொடக்க வயதிலிருக்கும் லட்சுமியின் கதை அப்படியானது தான்... பிள்ளைகளைக் காப்பாற்ற ஒரு தரகர் வேலை வாங்கித் தருவதாக சொன்னதை நம்பி டெல்லிக்குப் போகிறார்.  அங்கு அவர் பாலியல் விடுதியில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார். 

"சார்...கொடுமையா இருக்கும் சார். வலி தாங்க முடியாது. அவங்க சொல்றத செய்யலைன்னா மிளகாய்ப் பொடியைத் தடவி விட்ருவாங்க. ஒவ்வொரு நாளும் உயிர் போய், உயிர் வரும். பிள்ளைகளுக்காகப் பொறுத்திட்டிருந்தேன். ஒரு கட்டத்துல அதுவும் முடியாம ஊருக்கே திரும்பிட்டேன். இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம போராடிக்கிட்டிருக்கேன்..."

அங்கு நிகழும் கதைகளின் சிறுதுளி இது. பெற்றோர்கள் இல்லாததால் தவிக்கும் குழந்தைகள் கடுமையான மனநல பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டால் பல குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமிருக்கும் முதன்மையான மாவட்டங்களில் அனந்த்பூர் ஒன்று. சமீபகாலங்களில் நாளொன்றுக்கு 25 ஹெச்.ஐ.வி நோயாளிகள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். 

கடந்த சில மாதங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறைச்சிக் கூடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. பல கிராமங்களில் பெரியளவில் இடப்பெயர்வு நடந்துள்ளதால் ஆளரவமற்று இருக்கின்றன கிராமங்கள். இந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடிநாதம்  " நீரின்மை ". வெடித்துக் கிடக்கும் அந்த நிலங்களில் சிறிதளவேனும் நீர்ப் பாய்ந்திருந்தால் இத்தனைப் பெரிய அழிவு அங்கு நடந்திருக்காது. இந்த வறட்சியின் வலியோடு நம் கதையைத் தொடங்குவோம்... 

"வரலாற்று பகீரதா கங்கையை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்... நவீன பகீரதா (சந்திரபாபு நாயுடு) கோதாவரியை கிருஷ்ணாவுக்குக் கொண்டு வந்து புது வரலாறு படைத்துள்ளார் ",  " நாடே போற்றும் நதிநீர் இணைப்பு - சாதித்துக் காட்டிய சந்திரபாபு நாயுடு", " ஆந்திராவை வறட்சியிலிருந்து மீட்டெடுத்த புனிதர் "... இப்படியான செய்திகள் சமீபகாலங்களில் சமூகவலைதளங்களிலும், செய்திகளிலும் தொடர்ந்து வந்துக் கொண்டேயிருந்தன. இந்தியாவின் அத்தனை சூழலியலாளர்களும் நதிநீர் இணைப்பை எதிர்க்கும் சூழலில், ஆந்திராவில் இரண்டு முக்கிய நதிகளை இணைத்து, பல நூற்றாண்டுகால வறட்சிக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மைதானா என்ற தேடலில் தொடங்கியது இந்தப் பயணம். 

போலவரம் , பட்டீசீமா, கிருஷ்ணா, கோதாவரி, சந்திரபாபு நாயுடு.... இந்தப் பயணத்தில் நாம் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இவையாகத் தானிருக்கும். அடிப்படை செய்தி இது தான்... " கிருஷ்ணா மற்றும் கோதாவரியை இணைத்து ஆந்திரத்தின் வறட்சிக்கு தீர்வு கண்டார் சந்திரபாபு நாயுடு " .  

சென்னையிலிருந்து ஆந்திராவை நோக்கியப் பயணம் தொடங்கியது. தமிழகத்தில் இயங்கும் சூழலியலாளர்களிடம் இந்த நதி நீர் இணைப்புக் குறித்த பெரிய தரவுகள் இல்லை. நம்மிடமும் பெரிய தொடர்புகள் இல்லை. களம் கண்டு விஷயங்களை ஆராயும் முனைப்போடு போய்க் கொண்டிருந்த போது, தமிழ் எழுத்துக்கள் மறைந்து தெலுங்கு எழுத்துக்கள் நிறைந்திருக்கும் பலகைகளைப் பார்க்கத் தொடங்கினோம். ஆந்திராவுக்குள் நுழைந்துவிட்டோம்.  இன்று மாலைக்குள் நாம் அடைய வேண்டிய ஊர் விஜயவாடா. இடையே ஒரு தாபாவில் உணவுக்காக நிறுத்தினோம். வெளியே பெரிய தொட்டியில் நீரை எடுத்துக் குளித்துக் கொண்டிருந்தார்கள் சில லாரி டிரைவர்கள்.அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு ரொட்டிகளைப் பிய்த்து, பச்சை மிளகாயோடு சேர்த்து கடித்துக் கொண்டிருந்தனர் சில டிரைவர்கள். அந்தக் கொளுத்தும் வெயிலிலும் எப்படி பச்சை மிளகாயைக் கடித்துக் கொண்டிருந்தார்கள் என்ற ஆச்சர்யம் எழுந்தது. 

எங்களுக்கு ரொட்டிகளை வைத்தது ஒரு ஆந்திரப் பெண் தான். அவரிடம் கிருஷ்ணா - கோதாவரியை இணைத்த பட்டீசீமா திட்டம் குறித்துக் கேட்டேன்...

"எங்க பாபுகாரு தேவுடு மாதிரி. அவரு எது செஞ்சாலும் மக்களோட நல்லதுக்குத் தான். பாருங்க இன்னிக்கு கின்னஸ் ரெக்கார்ட்டெல்லாம் பண்ணியிருக்காரு.  இந்தியாவுலேயே யாரும் செய்யாத நதிநீர் இணைப்ப செஞ்சிருக்காரு."

"நல்லதும்மா... உங்களுக்கு அதனால நல்லது நடந்திருக்குன்னா சந்தோஷம். இப்போ இந்தப் பக்கம் உங்களுக்கு ஒண்ணும் தண்ணீர்ப் பிரச்னை இல்லையே?"

"முழுசா இல்லைன்னு சொல்ல முடியாது. கஷ்டந்தான். மழை இல்ல. பாபுகாருன்னால மட்டும் என்ன செய்ய முடியும். ஆனால், போலவரம் மட்டும் முடிஞ்சுடுச்சுன்னா ... மொத்த ஆந்திரத்துக்கும் தண்ணீர் பிரச்ன தீர்ந்திடும்ன்னு சொல்லியிருக்காரு..." என்று சொன்னபடியே அந்தத் தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த டிரைவர்களிடம் , தங்கியதற்கும், குளித்தற்கும் காசு வசூலிக்க நகர்ந்தார். 

" இயற்கையின் அனைத்துப் படைப்புகளுக்குமான அடிநாதம் நீர் தான் ." 
                                                                                               - லியனார்டோ டாவின்சி. 

 தகிக்கும் வெயிலில் விஜயவாடாவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். இடையே சூழலியலாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களைத் தொடர்பு கொண்டோம்...

" ஆந்திராவோட நதிநீர் இணைப்புத் திட்டத்தில் என்ன செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஓர் அடிப்படையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நதிகள் ஒவ்வொன்றும் தாங்களாகவே இணைக்கப்பட்டுத் தானிருக்கின்றன. அதை மீறி நாம் செயற்கையாக இதை இணைப்பது பெரும் கேடு விளைப்பதாகும். நதிகளை இணைப்பது ஒன்றும் இருப்புப்பாதை போடுவது போல் அல்ல. சில நதிகள் கீழ் இருக்கும், சில நதிகள் மேட்டிலிருக்கும். நம் பூமி ஒன்று சமமானது அல்ல .  இதை மீறி இதை இணைப்பது என்பது பெரிய வன்முறை. 

ஒவ்வொரு நதியும் ஒரு வாழிடம். அதை எப்படி இணைக்க முடியும். அந்த உயிர்ச்சூழலே பாதித்துவிடாதா ? .

மேலும், வட இந்தியாவில் நதிகள் உருவாவது இமயமலை பனிகளில். தென்னிந்தியாவிலும் அனைத்து நதிகளும் காட்டிலிருந்து தான் உருவாகிறது. நாம் காட்டை அழித்ததால் தான் இங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துக் கொள்ளாமல் நதிநீரை இணைப்பது சில காலங்களுக்கு வேண்டுமென்றால் பலன் கொடுக்கலாமே தவிர, இதனால் ஏற்படும் பாதிப்புகள் கணக்கிட முடியாத அளவிற்கு இருக்கும். இதற்கெல்லாம் எளிய தீர்வாக உள்ளூர் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு, ஏரி, குளங்களைப் பாதுகாப்பது, மரங்களைப் பாதுகாப்பது போன்ற விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் " என்று காட்டமாகச் சொல்லி முடித்தார். 

ஒரு பக்கம் சூழலியலாளர்கள் நதிநீர் இணைப்பைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், ஆந்திர அரசோ அதைத் தன் ஆகப்பெரும் சாதனையாக முன்னிறுத்தி விளம்பரங்களைக் கொடுக்கிறது. பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டத்தால் ராயலசீமா பகுதி முழுக்கவே பசுமையாக மாறியிருப்பதாக ஆந்திர அரசு சொல்கிறது. ஆனால், வறட்சியின் அனாதைகளையும், அகதிகளையும் அதிகம் கொண்டிருக்கும் ஆனந்த்பூர் மாவட்டம் ரயலசீமாவின் பிரதான பகுதி. நதி நீரை இணைத்தால் சூழலியல் சீர்கேடு ஏற்படும் என்பது உண்மையா ? , கடந்த வருடம் ஜூலை 6 ஆம் தேதி, சந்திரபாபு நாயுடு பட்டீசீமா திட்டத்தைத் தொடங்கிவைத்த போது, கிருஷ்ணாவும், கோதாவரியும் இணைந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன என்பது உண்மை தானா ?, போலவரம் இணைப்புத் திட்டத்தால் 2 லட்சம் ஆதிவாசிகளின் வாழ்வும், வாழிடமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பது உண்மைதானா ? அல்லது இதையெல்லாம் கடந்து, இதுவரை உலகில் எந்த அரசும், எந்த நாடும் செய்திராத சாதனையை முதல்வர் சந்திரபாபு நாயுடு சாதித்துக் காட்டியுள்ளாரா? இப்படியான பற்பல கேள்விகளோடு ஆந்திரப்பிரதேசத்தின் புதிய தலைநகரான அமராவதி நகரில் காலடி எடுத்து வைத்தோம். 

" நதிகளின் மீதான அக்கறை என்பது நதி குறித்தானது அல்ல. அது மனித இதயத்தைச் சார்ந்தது ."
                                                                                                                                                                - ஷோஸோ தனாகா. 

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உதவியாளரைத் தொடர்புக் கொண்டு, அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அமராவதி நகரில், ஆந்திரப் பிரதேசத்தின் தலைமைச் செயலக வாசலில் காத்திருந்தோம். 

" சார்... இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபிஸ் வந்திடுவாரு. வந்ததும், அவரிடம் பேசிவிட்டு உங்களுக்குக் கூப்பிடுறேன். கொஞ்சம் காத்திருங்க..." என்று சொன்னார்.

வெயில் குறைந்திருந்த அந்தக் காலை நேரத்தில் முதல்வரை சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்திருந்தோம். அப்போது, திடீரென அந்தப் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது... 

                                                                                                                                                                                          ( உண்மைத் தேடலாம் ) 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு