Published:Updated:

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 6

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 6

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 6

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 6

ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 6

Published:Updated:
ஆந்திர நதிநீர் இணைப்புத் திட்டம் - வெற்றுக் கூச்சலா, வெற்றிப் பாய்ச்சலா ? - அத்தியாயம் 6

              அத்தியாயம் -06- மீசையில்லா சந்திரபாபு, குறுந்தாடியில்லா எடப்பாடி..!

அமைச்சரின் உதவியாளர் வீட்டிற்கு கிளம்பிவிட்டார். அமைச்சர் தன்னுடைய கடைசி மீட்டிங்கில் இருந்தார். முடிந்ததும் உள்ளே நுழைந்தோம். யார் எனக் கேட்டார். விவரம் சொன்னதும், முதலில் கடுப்பாகிவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"யாரைக் கேட்டு வந்தீர்கள்? யாரிடம் அனுமதிப் பெற்றீர்கள்? நான் ரொம்ப சோர்வாக இருக்கிறேன். இப்போது பேச முடியாது" என்று கோபப்பட்டார். பின்னர், அவராகவே சமாதானமாகி எங்களை உள்ளறையில் காத்திருக்கச் சொன்னார். அப்போது அமைச்சரின் நண்பர் ஒருவர் அங்கு உட்கார்ந்திருந்தார். முன்னந்தலை வழுக்கை. வாயில் பாக்கு. வயிற்றில் பெரிய தொப்பை. கோடுபோட்ட லினென் சட்டை. கைகளில் மின்னும் தங்கம். ஆறு விரல்களில் தங்க மோதிரம். கழுத்தில் தங்கச் சங்கிலி.

"எங்கே தமிழ்நாடா? "

"ஆமாம்"

"உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாது?"

" என்னாச்சு? "

"என்னய்யா நடக்குது உங்க ஊர்ல? உருப்படியான சி.எம் இல்ல. ஆட்சி நடத்தாம சண்டைப் போட்டுட்டிருக்கீங்க. அதுமட்டுமில்லாம, ஹைவே போர்ட்டுல இருக்குற ஹிந்தி எழுத்துகள கருப்பு மை போட்டு அழிக்கிறீங்களாம்மே? அறிவிருக்கா இல்லையா உங்களுக்கு "

"ஒரு மொழிய வற்புறுத்தி திணிக்கும் போது அத..."

"சும்மா பேசாதீங்க... ஹிந்தி தெரியாததால தான் உங்க ஊர்ல யாரும் உருப்படுறதில்ல. நடிகர்கள நம்பியே அரசியல் பண்றீங்க. அறிவிருக்க யாராவது கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணுவாங்களா? நடிகனுங்கள நம்புற வரைக்கும் தமிழ்நாடெல்லாம் உருப்படாது. எங்க ஆந்திராவுக்கு வந்து செய்தி எடுக்குறத விட்டுட்டு முதல்ல உங்க ஊர் ஜனங்களுக்கு அறிவ ஊட்டுங்க..."

" சார்... ஆந்திராவுல மட்டும் என்ன நடக்குதுன்னு நினைக்குறீங்க"

"ஆந்திராவப் பத்திப் பேச உனக்குத் தகுதி இல்லை"

"தமிழ்நாட்டப் பத்தி பேச உனக்கு அருகதை இல்லை"

வாக்குவாதம் சண்டையாக மாற இருந்த நிலையில் ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் திரு.தேவனேனி உமாமகேஸ்வர ராவ் உள் நுழைந்தார். ஒரு நொடி ஆச்சர்யத்தோடு எங்களைப் பார்த்துவிட்டு பேச அழைத்தார். போலவரம் திட்டத்தின் மாதிரி இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று...

"போலவரம் மற்றும் பட்டீசீமா திட்டங்கள் மொத்த இந்தியாவிற்குமான முன்மாதிரி திட்டங்கள். இது எங்கள் முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்களின் நேரடிப் பார்வையில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்திய தேசத்தில் எந்த முதல்வராவது மாதத்திற்கு ஒருமுறை திட்டத்தைப் பார்வையிட நேரில் வருவார்களா? எங்கள் முதல்வர் வருகிறார். மேலும், ஒவ்வொரு வாரத்தின் திங்கட்கிழமையும் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் திட்டம் குறித்துப் பேசுகிறார். ஏற்கெனவே ஆந்திரத்தின் பல இடங்களின் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. இந்தத் திட்டம் மட்டும் முழுமையாக முடிந்துவிட்டால், உலகிற்கே எடுத்துக்காட்டாக ஆந்திரா திகழும்" என்று வேகவேகமாகப் பேசியவர் எந்தக் கேள்விக்கும் இடமளிக்காமல் நம்மை வழியனுப்பினார்.

வெளியே வந்தோம். அமைச்சர் நம்மைக் கேள்வியே கேட்கவிடவில்லை என்ற கோபத்தில் எங்கள் குழு இருந்தது. ஆனால், இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஓர் அமைச்சரை ஓர் ஊடகம் அரைநாளில் அங்குப் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் அது சாத்தியம் தானா என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

அது மட்டுமில்லாமல், இங்கு இன்னொரு முக்கிய விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். போலவரம் திட்டத்தைப் பார்க்க எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்தாலும், அங்கிருக்கும் தலைமைப் பொறியாளர் மொத்த திட்டப் பகுதியைச் சுற்றிக்காட்டி விளக்கம் அளிக்கிறார். வருபவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கிறார்.  நாம் சென்றபோது, ஆந்திராவின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் அங்கு வர, அவருக்குப் போலவரம் திட்டம் குறித்த முழு விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்தப் பயணம் தொடங்கும் போது எந்தவித முன்முடிவுகளும் இல்லாமல்தான் கிளம்பினோம். இன்னும் சொல்லப் போனால், இந்தத் திட்டம் குறித்த பாராட்டுச் செய்திகளும், சாதனை அறிக்கைகளும் மட்டுமே நமக்கான தரவுகளாக இருந்தன. களத்தின் முதற்கட்ட ஆராய்ச்சிகளுமே கூட இந்தத் திட்டத்தின் பொருளாதார அரசியலை விமர்சித்ததே தவிர, இதன் சூழலியல் சிக்கல்களைப் பேசிடவில்லை. ஆனால், இன்னும் ஆழம் போக, போக கனன்று கொண்டிருக்கும் கள நிலவரம் தெரிய ஆரம்பித்தது. 

"நதிநீர் இணைப்பு என்பது ஒரு மாயை. அது கார்ப்பரேட் கயவர்களோடு இணைந்து , அரசாங்கம் செய்யும் சதியாட்டம். இது ஒரு போதும் நன்மையைத் தராது"

ஆந்திரத்தைவிட்டு கிளம்பும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. கோதாவரிக் கரையிலிருந்த ராஜேந்தர் சிங்கைத் தொடர்புக் கொண்டோம். உடனடியாக வரச் சொன்னார். அந்தக் காலைப் பொழுதில், கோதாவரியின் நதிக்கரையில் அவரைச் சந்தித்தோம். அவர் "ராலி ஃபார் ரிவர்ஸ்" (Rally for Rivers) பயணத்தின் ஒரு பகுதியாக அன்று விஜயவாடாவில் இருந்தார்.

( தெளிவிற்கு : சத்குருவின் ரேலிக்கும் இதற்கு ஏதொரு சம்பந்தமும் இல்லை. சத்குருவுக்கு முன்னரே ராஜேந்தர் சிங் இந்தப் பயணத்தைத் தொடங்கியிருந்தார். கூடுதல் தகவல் : ஜக்கியின் நதி மீட்புப் பயணத்திற்கு எந்த வகையிலும் ராஜேந்தர் சிங் ஆதரவு தெரிவிக்கவில்லை. சத்குரு அவரைச் சந்திக்க விரும்பியதால், ராஜேந்தர் சிங்கை அவரைச் சந்தித்தாக நம்மிடம் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் போனில் தெரிவித்தார் ராஜேந்தர் சிங்.) 

எல்லாவற்றையும் கடந்து அரசாங்கம் சொல்லுவது உண்மைதானா? நதிநீர் இணைப்பு தான் நம் பிரச்னைகளுக்கான ஒரே தீர்வா என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்தோம். 

"நதிநீர் இணைப்பு என்பது ஒரு மாயை. அது கார்ப்பரேட் கயவர்களோடு இணைந்து அரசாங்கம் செய்யும் சதியாட்டம். இது ஒரு போதும் நன்மையைத் தராது. ஒரு நதி என்பது வெறும் நீர் மட்டுமே அல்ல. அது ஓர் உயிர்ச்சூழல் மண்டலம். ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அதை ஒன்றோடொன்று இணைக்க முயற்சி செய்தால், அது இயற்கைச் சுழற்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இதை சொல்வதன் மூலம் நான் மொத்தமாக வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கவில்லை. சரியான பாதையில் வளர்ச்சியைக் கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

ராஜஸ்தானில் வந்து பாருங்கள். எந்த அரசின், எந்த நிறுவனத்தின் உதவியும் இல்லாமல், நானும் மக்களும் மட்டுமே சேர்ந்து இறந்துக் கிடந்த 8 நதிகளை உயிர்ப்பித்திருக்கிறோம். இயற்கையின் வளர்ச்சி, இயற்கையோடு இயைந்ததாக இருக்க வேண்டும். நதிகளை குளங்களோடு, ஏரிகளோடு, குட்டைகளோடு இணையுங்கள். நதிகளை நதிகளோடு இணைக்காதீர்கள். நம் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி ஒவ்வொரு கிராமத்திலும் நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். நம் தேசத்தின் தண்ணீர் பிரச்னை தீர்க்க முடியாதது அல்ல. ஆனால், எந்த அரசும் தீர்க்க முயற்சிக்கவில்லை என்பது தான் நிஜம்" என்று உணர்ச்சிப் பொங்க சொல்லி முடித்தார். அதே உணர்வோடு கோதாவரியும் அவருக்குப் பின்னர் ஓடிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.

சீறிப்பாய்ந்து ஓடும் கோதாவரி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருக்கும் பல பாலங்களைக் கடந்து சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தோம். சந்திரபாபு நாயுடுவும், அந்தப் பச்சை மலைகளும், வெடிச் சத்தங்களும், செம்மண் நிற கோதாவரியும், நீல நிற கிருஷ்ணாவும் நம் மனத்தில் தோன்றி மறைந்தன. நதிநீர் இணைப்புத் திட்டம் ஆந்திராவின் இன்றைய தண்ணீர் தேவையை ஓரளவிற்குப் பூர்த்தி செய்யலாம். ஆனால், அதற்காக நாம் அழிக்கும் இயற்கைவளங்களை திரும்ப உருவாக்கிட முடியுமா? அகதிகளாக்கப்படும் அந்த 2 லட்சம் ஆதிவாசிகள் என்ன ஆவார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக தங்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களை சூறையாடிவிட்டோம் என்று எதிர்கால சந்ததிகள் நம்மிடம் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது? ஆனால், இந்தக் கேள்விகள் எதுவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சலனப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. கடந்த ஆட்சியில் ஐ.டி துறை அவருக்கான பணத்தையும், தேர்தல் வெற்றியையும் கொடுத்தது. தற்போது தண்ணீர் தான் உலகப் பொருளாதாரத்தை ஆளப் போகிறது என்ற நிலையில் சந்திரபாபு நாயுடுவின் இந்த முன்னெடுப்புகளில் அரசியல் தெரிகிறதே தவிர, மக்களின் நலன் தெரியவில்லை. அதற்கு உதாரணமாக அவரின் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களும், இயற்கைக்கு விரோதமான திட்டங்களுமே முன் நிற்கின்றன. 

எல்லாம் முடிந்து தமிழக எல்லைக்குள் நுழைந்தோம். குறுந்தாடியில்லாத , மீசை வைத்த எடப்பாடி பழனிச்சாமியின் விளம்பர பதாகைகள் எங்களை இனிதே வரவேற்றன.

 -முடிந்தது-