Published:Updated:

நதிகள் மீட்புப் பயணத்தை எதிர்க்க சூழலியலாளர்கள் அடுக்கும் காரணங்கள்..!

நதிகள் மீட்புப் பயணத்தை எதிர்க்க சூழலியலாளர்கள் அடுக்கும் காரணங்கள்..!
நதிகள் மீட்புப் பயணத்தை எதிர்க்க சூழலியலாளர்கள் அடுக்கும் காரணங்கள்..!

நதிகள் மீட்புப் பயணத்தை எதிர்க்க சூழலியலாளர்கள் அடுக்கும் காரணங்கள்..!

ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் ஒரு சேர சந்தித்தபடியே மகாராஷ்டிரத்தைக் கடந்து குஜராத்தை எட்டியுள்ளது ஜக்கியின் "நதிகள் மீட்பு" பயணம். பயணம் தொடங்கியதும் தேசிய நதிகள் இணைப்புக்கு பிரதமர் மோடி 5.5 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது, சர்தார் சரோவர் அணையைத் திறந்தது என கடந்த சில நாள்களாக நீரும், நீர் சார்ந்த அரசியலுமாகவே அதிகம் செய்திகளில் இடம்பெற்றுள்ளன. உலக அரசியலில் "நீர் அரசியல்" பிரதான இடம் பிடித்திருக்கும் இன்றையச்  சூழலில், நீர் தொடர்பான எந்தச் செய்திகளையும், நிகழ்வுகளையும் கூர்ந்து கவனிப்பதும், அதை அலசி ஆராய்வதும் மிகவும் அவசியமான ஒன்றாக  இருக்கிறது.

நீர் ஆதாரங்களை அழித்த, அழித்துக்கொண்டிருக்கும் ஓஎன்ஜிசியும், அதானியும் "நதிகள் மீட்பு" பயணத்தில் கைகோத்திருப்பது பெரும் சந்தேகத்தைக் கிளப்புவதாக சூழலியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அதுகுறித்த ஈஷாவின் பதிலும் கேள்விக்குள்ளாகவே இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பயணத்தின் இறுதியில் அரசிடம் 14 அம்ச கோரிக்கை முன்வைக்கப்படும், அது ஒரு சட்ட வரைவாக கொண்டு வரப்படும். அதற்கான மக்கள் விருப்பத்தை தெரிவிக்கும் வகையில், ஒரு... ஒரேயொரு மிஸ்டுகால் கொடுத்தால் போதும் என்ற பிரசாரம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அந்த 14 அம்ச கோரிக்கை என்னவென்பது இதுவரை மக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை. அது இன்னும் முழுமையாக தயார் செய்யப்படவே இல்லை என்கிறது ஈஷா. அப்படியென்றால், என்ன கோரிக்கை என்பதே தெரியாமல் ஜக்கி மீதான அபிமானத்தால் மட்டுமே மக்கள் மிஸ்டு கால் கொடுத்து நதிகளை மீட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் ஜக்கியின் இந்த முன்னெடுப்புகளுக்கு பின்னணியில் பல அரசியல் இருப்பதாக குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர் சில சூழலியலாளர்கள்...

நக்கீரன் :

ஜக்கியின் நதிகள் மீட்பு பயணத்தை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் ?

"ஏனென்றால் இது முழுக்கவே அபத்தங்களின் கூடாரமாக இருக்கிறது. வெறும் விளம்பரங்களாக இருக்கிறது. இதனால் எந்த நன்மையும் சாமானிய மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. நதிகளை மீட்க என்ன செய்ய வேண்டும்? முதலில் நம் நதிகளையும், அதன் வழித்தடங்களையும் கண்டறிய வேண்டும். அதுவே இன்று ஆக்ரமிப்புகளாலும், மணற்கொள்ளையர்களாலும் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கின்றது. அதை எதிர்க்க வேண்டும். ஆற்றின் இரு கரைகளிலும் ஒரு கிமீ தூரத்துக்கு மரங்கள் நடுவதால் மட்டும் என்னவாகிவிடும்? ஐயா இங்க நதியே இல்லையே... அதுவும் காவிரி டெல்டா பகுதிகளில் ஆற்றை ஒட்டி 100 மீட்டர் தூரத்துக்குள்ளாகவே ஊர் வந்துவிடும். ஆற்றை ஒட்டிதான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர் ஒரு கிமீ தூரத்துக்கு மரங்களை நட வேண்டும் என்கிறார். அப்போது அவர்களை எல்லாம் எங்குப் போகச் சொல்வது? விவசாய நிலங்கள் இருக்கின்றன... அதை என்ன செய்வது ?

ஆறுகளை மீட்க நாம் முதலில் செய்ய வேண்டியது சோலைக்காடுகளை மீட்பதுதான். மழைக்கான முக்கிய ஆதாரமாக இருப்பது சோலைக்காடுகள்தான். ஆனால், அந்த சோலைக்காடுகளை அழித்துதான் பல மலைகளில் பெரு நிறுவனகள் டீ எஸ்டேட்களை உருவாக்கியிருக்கின்றன. சாமானிய விவசாயிகள் தங்கள் இடத்தில் பயிர்களை விடுத்து, மரங்களை நட வேண்டும் என வற்புறுத்தும் ஜக்கி ஏன் எஸ்டேட்களை அழித்து அதில் மரங்களை நட வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை? இவரின் பிரசாரம் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இருபக்கமும் மரங்கள் நடுவதாம். அதனால் மழை வருமாம். நதிகள் மீட்கப்படுமாம். இதற்கு கூட்டு அதானியும், ஓஎன்ஜிசியும்.”

விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிர்களை விடுத்து, மரங்களை நட வேண்டும். விவசாயிகளையும் பெருநிறுவனங்களையும் ஒன்றிணைத்து பதப்படுத்தும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, பழச்சாறுகள் உற்பத்தி செய்யலாம். இதன்மூலம் பெரும் வளர்ச்சியை விவசாயிகளுக்கு ஏற்படுத்த முடியும் என்ற ஒரு திட்டத்தை முன்வைக்கிறாரே?

"அந்தத் திட்டத்தால் பயன்பெறப்போவது விவசாயிகள் அல்ல. பெருநிறுவனங்கள்தான். இதை நான் இரண்டாம் பசுமைப் புரட்சியாகத்தான் பார்க்கிறேன். இந்த நுண் அரசியலை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். பசுமைப் புரட்சியின்போது பல பெரு நிறுவனங்கள் செயற்கை உரத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன. இன்று பசுமைப் புரட்சி பெரும் வீழ்ச்சிக் கண்ட நிலையில் அந்த நிறுவனங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவர்கள் கொண்டிருக்கும் அந்த மூலப் பொருள்களைக் கொண்டு பதப்படுத்துதலுக்கான மருந்துகளை செய்ய முடியும். அதேசமயத்தில் பெப்ஸி, கோக் போன்ற கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனிகளுக்கான ஆதரவும் மக்கள் மத்தியில் தொடர்ந்து குறைந்து வருகின்றன. எனவே, அவர்கள் அனைவரும் இனி வரும் ஆண்டுகளில் பழச்சாறு விற்பனையில்தான் கவனம் செலுத்த உள்ளனர். இந்தப் பழங்கள் அவர்களுக்காகத்தான் போகும். 

இதை நான் ஆதாரமற்று பேசவில்லை. சமீபகாலங்களில் பஞ்சாபில் இது நடந்துள்ளது. கோதுமை விளைவிக்கப்பட்ட நிலங்களில் இன்று எலுமிச்சைப் பயிரிடப்பட்டுள்ளது. அது முழுக்க முழுக்க பெப்ஸி நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. சரி... விவசாயிகள் பயிரிடுகிறார்கள். பழங்களை அறுவடை செய்கிறார்கள். பழச்சாறு கம்பெனிகளுக்கு அதை அனுப்புகிறார்கள். கைகளில் ஏதோ ஒரு லாபத்தைப் பார்க்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்... இந்தப் பழங்களை ஜூஸாக்கும் நிறுவனங்கள் மற்றும் பதப்படுத்துதல் நிறுவனங்கள் (Food Processing Unit) 300கிமீ தூரத்துக்கு ஒன்று அமைக்கப்படும் என்று சொல்கிறார்கள். அவர்கள் எங்கிருந்து தண்ணீரை எடுப்பார்கள்? ஆற்றிலிருந்துதானே? அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? என் தண்ணீரை எடுத்து, என் பழங்களை எடுத்து பழச்சாறாக்கி அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். இதுதான் நடக்கும்."

யுவான் சுவாங் அந்தக் காலத்தில் இந்தியா வந்தபோது "உலகிலேயே இந்தியர்கள்தான் புத்திசாலிகள். அதற்கு காரணம் அவர்கள் தட்டுகளில் 35% பழங்கள் இருக்கின்றன." என்று சொன்னதாகவும் நம் உணவுப் பழக்கத்தில் நிறைய பழங்களைச் சேர்க்க வேண்டும். மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கிறாரே ?

"இதுவும் எளியவர்களின் தட்டில் கை வைக்கும் பா.ஜ.க-வின் கொள்கையை தூக்கிப் பிடிப்பதுதான். மக்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டுமென்பது மறுக்க முடியாதது. ஆனால், அது பழங்களில் மட்டும்தான் இருக்கிறது என்று சொல்வது சரியல்ல. நம் ஊரில் அந்தந்தப் பகுதிகளில், அந்தந்த மண்ணில் கிடைக்கும் உணவுகளைத்தான் மக்கள் உண்டு வாழ்ந்தனர். மீன், இறால் போன்ற உணவுகளை கடற்கரை மக்கள் அதிகம் சாப்பிட்டு வந்தனர். ஆனால், தரமான மீன்களும், இறால்களும் இன்று வெளிநாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீனவர்களே கூட அந்த மீன்களையும், இறால்களையும் சாப்பிடுவதில்லை.

இன்று பழங்களின் விலைகளைப் பாருங்கள். ஒரு சாமானியனின் தட்டில் பழங்களை வைத்து சாப்பிட்டு விட முடியுமா? எங்கள் சிறுதானியப் பயிர்களை இங்கு முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு வெறும் அரிசியை மட்டும் திங்க வைத்தது யார்? சிறுதானியங்களில் இல்லாத சக்தியா? 

நமக்கும் தேநீருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அது வெள்ளைக்காரன் கொண்டு வந்தது. ஆனால், இன்று அந்த டீக்காக வெள்ளைக்காரன் அழிச்சதவிடவும் பல மடங்கு காடுகளை அழித்து  எஸ்டேட்களை உருவாக்கியிருக்கோம். அதையெல்லாம் குறித்து ஏன் ஜக்கி பேச மறுக்கிறார்? " என்ற கேள்வியோடு முடிக்கிறார் நக்கிரன்.

பியூஷ் மானுஷ்:

"இந்த தேசம் சந்தித்ததிலேயே இதுதான் மிகப் பெரிய நிலக்கொள்ளைச் செயலாக இருக்கும். மரம் நடுகிறேன், நதிகளை மீட்கிறேன் என்கிற பெயரில் பெரிய அளவிலான நிலங்களை ஜக்கி பிடுங்கப் பார்க்கிறார். மரங்களை நதிகளின் ஓரம் நடுவதே பெரிய பிழைதான். புறம்போக்குகளில் மரம் நடுவது வரை சரி. நதிகளின் ஓரம் மரங்களை அதிகளவு நட்டால் சில உயிர்ச்சூழல் சிக்கல்களை அது ஏற்படுத்தும். வன விலங்குகள் ஆற்றை அடைய முடியாதபடிக்கு அது ஒரு தடுப்பு வேலியாக அமைந்துவிடக் கூடும். 25 கோடி மரங்களை நடுவதாகச் சொல்கிறார். இதற்கு பல லட்சம் ஏக்கர் நிலங்கள் தேவைப்படும். தோராயமாக ஒரு ஏக்கரில் 250லிருந்து 300 மரங்கள் வரைதான் நட முடியும்."

ஆனால், மரம் நடுவது நல்லது தானே?

"மரம் நடுவது மட்டுமே நல்லது அல்ல. மரம் நட்டு அதைப் பாதுகாத்து வளர்ப்பதுதான் நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக மரங்களை எங்கு நடுகிறோம் என்பது மிக முக்கியம். வறண்டப் பகுதிகளிலும், புறம்போக்குகளிலும் மரங்கள் நடுங்கள் தப்பில்லை. நதியின் ஓரமிருக்கும் இயற்கையான புல் தரைகளை அழித்து மரங்கள் நடுவது முரண். ஜக்கி அவர்கள் அடிப்படையாக ஒன்றை புரிந்துகொள்ள வேண்டுகிறேன். 

நதிகள் என்பது நீரை எடுத்துச்செல்லும் கருவிதான் (Water Carriers). அவை நீர் உற்பத்தி நிலையங்கள் கிடையாது (Not water Producers). நதிகளில் நீர் நன்றாக ஓட வேண்டுமென்றால் அதில் சரியான அளவில் மண் இருக்க வேண்டும். நதிகளை மீட்க நாம் முதலில் அதைத்தான் உறுதிசெய்ய வேண்டும். கூடவே, நதிகளிலிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, குப்பைகள் கொட்டப்படாமல் தடுப்பது, கழிவுகள் சேராமல் பார்த்துக்கொள்வது என இதுபோன்ற விஷயங்களால்தான் நதிகளை மீட்க முடியுமேதவிர மரங்கள் நடுவதால் அல்ல. நீர் ஆதாரத்தைப் பெருக்க வேண்டும், நீரை சேமிக்க வேண்டுமென்றால் காடுகளைக் காப்பாற்றுங்கள். காட்டை அழித்து ஆசிரமங்களை உருவாக்குவதை நிறுத்துங்கள். மலைகளைக் குடைந்து பெரிய, பெரிய கற்களை எடுப்பதை நிறுத்துங்கள், உள்ளூர் நீர்நிலைகளை சுத்தப்படுத்துங்கள், தூர்வாருங்கள். இதெல்லாம் செய்வதை விட்டுவிட்டு, அதானியோடு சேர்ந்துகொண்டு நதிகளை மீட்கிறேன் என்று சொல்வது சரியா?

நுகர் வாழ்க்கையை குறைத்தால்தான் நதிகளைக் காப்பாற்ற முடியும். ஆனால், அதை ஜக்கியால் ஒருபோதும் செய்ய முடியாது. ஏன் அவர் சீடர்களுக்கு நுகர் வாழ்க்கையைக் குறைக்கச் சொல்லி அறிவுறுத்தலாமே? வாழ்க்கையைத் தேவைகளின் அடிப்படையில் வாழ வேண்டும், ஆடம்பரத்தின் அடிப்படையில் அல்ல என்பதை அவர் பிரசாரம் செய்யலாமே? ஒருவர் வாழ ஆயிரம் சதுர அடி வீடு போதுமென்றால் , ஆயிரம் சதுர அடியில் வீட்டைக் கட்டினால் போதும்தானே? இந்த நுகர் வாழ்க்கைக்கு எதிராக அவர் ஏன் பேசுவதில்லை? ஏனென்றால், அவரே அந்த நுகர் வாழ்க்கையின் முன்னோடிதான். தண்ணீர்ப் பிரச்னைக்கு எதிரானது இந்த நுகர் வாழ்க்கைதான். அதைக் குறைத்தாலே இயற்கையை மீட்டெடுத்து விடலாம். அதை ஜக்கி ஆமோதிப்பாரா? " என்ற கேள்வியோடு முடிக்கிறார் வறண்ட தருமபுரி நிலத்தில் காட்டை வளர்த்த சூழலியலாளர் பியூஷ்மானுஷ்.

இது தொடர்பாக வாசகர்களின் கருத்துகள் கமெண்ட்டில் வரவேற்கப்படுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு