Published:Updated:

அச்சுறுத்தும் அரசாங்கம்... அசராத சூழலியலாளர்கள்... முகிலன் கைதுக்குப் பின்னிருக்கும் சூது! #SaveEnvironmentalists

அச்சுறுத்தும் அரசாங்கம்... அசராத சூழலியலாளர்கள்... முகிலன் கைதுக்குப் பின்னிருக்கும் சூது! #SaveEnvironmentalists
அச்சுறுத்தும் அரசாங்கம்... அசராத சூழலியலாளர்கள்... முகிலன் கைதுக்குப் பின்னிருக்கும் சூது! #SaveEnvironmentalists

ந்த ஆண்டின் தொடக்கத்தில் "குளோபல் விட்னெஸ்" எனும் அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அது உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. "உலகம் முழுக்க சுற்றுச்சூழலுக்காகவும், ஆதிவாசிகளுக்காகவும் அரசுகளையும், பெரு நிறுவனங்களையும் எதிர்த்துப் போராடிய சூழலியலாளர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்" என்று சொல்லி அதற்கான தரவுகளையும், ஆதாரங்களையும் வெளியிட்டது. 2015யில் உலகம் முழுக்க 185 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2016ம் ஆண்டில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று சொன்னது அந்த அமைப்பு. கூடவே, 2017ல் இன்னும் அதிகப்படியான கொலைகள் நடக்கும் என்ற அனுமானத்தையும் அந்த அமைப்பு சொன்னது.  இதைத் தொடர்ந்து பிரபல ஊடக நிறுவனமான "தி கார்டியன்" இந்த அமைப்போடு இணைந்து சூழலியலாளர்களின் கொலைகளைப் பதியத் தொடங்கியது. இந்த ஆண்டு இதுவரை உலகம் முழுக்க 134 சூழலியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

உலகம் முழுக்க எந்தெந்த நாடுகளில் அரசுகளும், பெருநிறுவனங்களும் கைகோர்த்து இயற்கை வளங்களைச் சூறையாடுகின்றன, அதை எதிர்த்துப் போராடுபவர்களை படுகொலை செய்கின்றன என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரேசில், கொலம்பியா, மெக்ஸிகோ, ஹண்டுராஸ், நிகாரகுவே, பெரு போன்ற நாடுகள் இருக்கும் இந்தப் பட்டியலில் மிக முக்கிய இடம் இந்தியாவிற்கும் உள்ளது. 

"நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எதிராக எந்தப் போராட்டங்கள் நடந்தாலும், அதை யார் நடத்தினாலும் அவர்களை மூச்சுத் திணற வைத்து போராட்டத்தை ஒடுக்க வேண்டுமென்பதை இந்திய அரசாங்கம் நேரடியாகக் காவல்துறைக்கே உத்தரவிட்டிருக்கிறது. மற்ற நாடுகளில் சூழலியலாளர்களைக் கொல்வது கூலிப்படையாக இருக்கிறது. இந்தியாவில் காவல்துறையே இந்தக் கொடூர நடவடிக்கையில் ஈடுபடுகிறது."  இந்தியாவின் நிலை குறித்து அந்த அமைப்பின் அறிக்கை இதைத்தான் சொல்கிறது. 

2016 ல் இந்தியாவில் பதியப்பட்ட சூழலியலாளர் கொலைகள் 16. இந்த ஆண்டு இதுவரை 10 பேர் என்ற கணக்கைச் சொல்கிறது "குளோபல் விட்னெஸ்" மற்றும் "தி கார்டியனின்" அறிக்கை. 

மலேசியாவின் பில் கயோங், ஹண்டோரஸின் பெர்தா காசரெஸ், மெக்ஸிகோவின் இஸிட்ரோ பால்டெனிக்ரோ, தான்சானியாவின் வேய்ன் லாட்டர் எனச் சில முக்கியச் சூழலியலாளர் கொலைகளை நம் விகடன் தளத்திலும் பதிவு செய்திருந்தோம். இப்போது இந்த அறிக்கைகளின் முன் அறிமுகத்தோடு கட்டுரையைத் தொடங்குவதற்கான முக்கியக் காரணம் சூழலியல் போராளி முகிலனின் கைது. 

18-09-2017 அன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடக்கும் நிலத்தடி நீர் கொள்ளைக்கு எதிராக ஒரு போராட்டத்தை அறிவிக்கிறது திருநெல்வேலியைச் சேர்ந்த "நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு இயக்கம்". மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தஞ்சம் புகும் போராட்டம் அது. அந்தப் போராட்டத்தில் முகிலன், சுப. உதயகுமாரன் போன்ற சமூக ஆர்வலர்கள் பங்கேற்கிறார்கள். காலையில் போராட்டம் தொடங்கியதுமே கைது செய்யப்படுகிறார்கள். வழக்கம்போல் ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். பின்பு, மாலை 6.30 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள்.

ஶ்ரீவைகுண்டத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு நண்பரோடு பைக்கில் போய்க் கொண்டிருந்திருக்கிறார் முகிலன். இரவு நேரம் நெடுஞ்சாலை ஓரம் பைக்கை நிறுத்தி சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களின் அருகே ஒரு டாடா சுமோ வந்து நிற்கிறது. அதில் காவல் என்ற சிகப்பெழுத்து எங்குமில்லை. அதிலிருந்து மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் இறங்குகிறார்கள். என்ன ஏது என்ற கேள்வியைக் கேட்காமல் முகிலனின் சட்டையைப் பிடித்து இழுக்கிறார்கள். 

"யார் நீங்கள்? என்ன வேண்டும்?" என்ற கேள்விக்கு,

"நாங்கள் போலீஸ். உங்களைக் கைது செய்கிறோம்."

"வாரண்ட் காட்டுங்கள்."

"முடியாது". 

இந்த உரையாடல் முழுமையாக முடிவதற்குள்ளாகவே முகிலன் சுமோவில் ஏற்றப்படுகிறார். இரவு முழுக்க 5 இடங்களுக்கு மாற்றி, மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறார். 19ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நாங்குநேரி நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகிறார்.

முகிலனை பைக்கில் அழைத்துச் சென்றவர் பதற்றமாகி தோழர்களுக்குத் தகவலைத் தெரிவிக்கிறார். முகிலனின் குடும்பத்திற்கும் செய்தி போகிறது. யார் கொண்டு சென்றார்கள், எங்கு கொண்டு சென்றார்கள் என்பது தெரியாமல் அத்தனை பேரும் பெரும் அவஸ்தையில் அன்றைய இரவு முழுக்க பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். முகிலனுக்கு கொலை மிரட்டல்களும், அவரைக் கொலை செய்யும் முயற்சிகளும் இதுவரை எத்தனையோ தடவைகள் வந்திருக்கின்றன. 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 70 பேர் கொண்ட கும்பல் முகிலனை சராமரியாகத் தாக்கியது. ஒரு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்து வந்தார். கடந்த ஆண்டும் கூட மணல் மாஃபியாக்கள் அவரைக் கொலை செய்ய முயற்சிகளை மேற்கொண்டன. இப்படியாக, ஒவ்வொரு நாளும் மரணத்தைத் தொட்டுக்கொண்டேதான் பயணிக்கிறார். 

முகிலனின் நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும் மறுநாள்தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியே கிடைக்கிறது.  திருமுருகன் காந்தி 100 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளிவந்த செய்தி மக்களைச் சென்றடைவதற்குள்ளாக தமிழகத்தில் மணல் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்துப் போராடி வரும் முகிலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முகிலனை சமீபத்தில் நேரில் சென்று சந்தித்து வந்திருக்கிறார்  "காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச்" சேர்ந்த ராஜேஸ்வரி. அவரிடம் பேசினோம்...

"அலங்காநல்லூர்ல நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முகிலன் தாக்கப்பட்டார். காவல்துறையின் அராஜகத்தை விவரித்து அன்றே மாவட்ட கலெக்டருக்கு ஒரு 18 பக்க அறிக்கையைக் கொடுத்தார். கூடவே, ராஜேஷ்வரன் தலைமையிலான விசாரணைக் குழுவுக்கு அதை அனுப்பி வைத்திருந்தார். அந்த விசாரணை அடுத்த வாரம் வரவிருக்கும் நிலையில் அவரின் கைது பெரிய சந்தேகத்தைக் கிளப்புகிறது. அந்த விசாரணைக்கு அவர் ஆஜரானால் காவல்துறையின் உண்மை முகம் வெளிவரும். அதனால் இவர் கைது செய்யப்பட்டிருக்கலாம். இல்லையென்றால், ஏதோ பழைய கூடங்குளம் வழக்கை இப்போது தோண்டியெடுத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்னவிருக்கிறது? அவர் தொடர்ந்து செயல்பட்டால் யாருக்கெல்லாம் சிக்கல் வருமோ, அந்த மணல் மாஃபியாக்கள் அவரை எப்படியாவது அடக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அதன்  ஒரு பகுதிதான் இந்தக் கைது நடவடிக்கை." என்று ஆதங்கத்தோடு சொல்லி முடிக்கிறார். 

கைது செய்யப்படுவதற்கு முன்னர் "நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு இயக்கம்" நடத்திய போராட்டத்தில்தான் முகிலன் பங்கேற்றிருந்தார். அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த ராஜாவிடம் பேசினோம்...

"தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் மிக மோசமான நிலத்தடி நீர் கொள்ளை நடக்கிறது. ஒருவருக்கு 10 சென்ட் இடம் சொந்தமாக

இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் அவர் 5 போர்வெல்களை அமைப்பார்கள். கோலா, ஸ்டெர்லைட், ஸ்பிக் போன்ற நிறுவனங்களுக்கு அதிலிருந்து தண்ணீர் எடுக்கிறார்கள். ஒரு லாரிக்கு 1200 ரூபாய் வரைத் தருவார்கள். ஒரு நாளைக்குச் சாதாரணமாக 50 லாரிகள் அந்த இடத்திலிருந்து தண்ணீர் எடுக்கும். மிகச் சாதாரணமாக ஒருநாளைக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வரும். நிலத்தடி நீரும் கொள்ளை போகிறது, அரசிற்கான வருமானமும் போகிறது. எங்களின் போராட்டம் அரசிற்கும், இயற்கைக்கும் ஆதரவான போராட்டம். இந்த விஷயங்களுக்காகத்தான் முகிலன் அவர்கள் வந்தார். ஆனால், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பவர்களெல்லாம் நிம்மதியாக இருக்கிறார்கள், அதை எதிர்ப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சிறைக்குப் போவதற்கு முகிலன் பயப்படுகிறவர் அல்ல. ஆனால், எந்த வாரன்ட்டும் இல்லாமல் விதிகளை மீறி, ஏதோ கொலை குற்றவாளியை அழைத்துச் செல்வதுபோல் கொண்டு சென்று அவமரியாதை செய்வதுதான் மிகப் பெரிய வன்முறை..." என்கிறார். 

இந்திய தேசத்தில் வேறெந்த விஷயத்திற்காகப் போராடுவதைக் காட்டிலும் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடுவது மிகப் பெரிய அச்சுறுத்தலானது. நதிகள் மீட்புப் பயணத்தின்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சத்குரு ஜக்கி வாசுதேவே "மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடினால் என்னைக் கொன்றுவிடுவார்கள்" என்று சொல்லியிருக்கிறார். அந்தளவிற்கு அச்சுறுத்தலானப் போராட்டம் அது. மணல் கொள்ளைக்காக தனியாளாகப் போராடி நடுத்தெருவில் வெட்டிசாய்க்கப்பட்ட வேலூர் தணிகாசலத்தின் மரணம் கூட மக்களைச் சென்றடையவில்லை. இப்படி, போராளிகள் இருந்த தடமில்லாமல் அழித்தொழிக்கப்படுகிறார்கள். 

போராட்டத்தில் முகிலனோடு பங்கெடுத்திருந்த சுப.உதயகுமாரிடம் பேசினோம்...

"இது மிகப் பெரிய அராஜகம். காலையிலிருந்து போராட்டத்தில் ஒன்றாகத்தான் இருந்தோம். மண்டபத்தில் காவல்துறைதான் எங்களைக் கைது செய்து அடைத்திருந்தது. அப்போதே அவருக்கான வாரன்ட்டை காண்பித்து கைது செய்திருக்கலாம். அதைச் செய்யாமல், இரவு நேரத்தில் ரோட்டில் சட்டையைப் பிடித்து இழுத்து கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களை எந்த நேரமும் அச்சத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் நிறைய முயற்சிகளைச் செய்கிறது. எதுவாகவும் இருக்கலாம், யாரையும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சர்வாதிகார நினைப்பில் இந்த அரசாங்கம் நடந்துக் கொண்டிருக்கிறது." 

"குளோபல் விட்னெஸ்" அமைப்பைச் சேர்ந்த பென் லீதர் இப்படியாகச் சொல்கிறார்..

"இந்தப் போராளிகளின் கதைகள் ஒவ்வொன்றும் பயங்கரமானதாய் இருக்கின்றன. தங்கள் நிலத்தையும், சூற்றுச்சூழலையும் காத்திடப் போராடும் அனைத்துப் போராளிகளுமே தங்களை ஆளும் அரசுகளாலும், பணம் கொழித்துப் போயிருக்கும் பெரு நிறுவனங்களாலும் நசுக்கப்படுகிறார்கள். 

இயற்றிய சட்டங்களை அரசுகளே தைரியமாக மீறுகின்றன. இந்தப் போராளிகளை யார் பாதுகாக்க வேண்டுமோ, அவர்களே இவர்களை அழிக்கிறார்கள். இருந்தும் இவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். யாருக்காக இவர்கள் போராடுகிறார்களோ அந்த மக்கள்... அவர்களுக்கே கூட இது புரிவதில்லை. ஆனால், இந்தப் போராளிகள்தான் எதிர்கால சந்ததியினருக்கு இந்த உலகை உயிர்ப்போடு கொடுக்கக் கூடியவர்கள்.

முகிலனின் கைது “சரி” என்று சொன்னாலும் சரி... “சரியில்லை” என்று சொன்னாலும் சரி... எதுவாக இருந்தாலும் பொதுத்தளங்களில் இந்தவிஷயங்களை நாம் விவாதிக்க முன்வர வேண்டிய அவசியம் இருக்கிறது. உரையாடலை நடத்த விரும்புபவர்கள் உங்கள் கருத்துகளைப் பகிரலாம்.