Published:Updated:

நெருங்கும் 'நீலம்’ புயல்: தொலைத் தொடர்பு, மின் இணைப்பு பாதிக்கப்படலாம்

நெருங்கும்  'நீலம்’ புயல்: தொலைத் தொடர்பு, மின் இணைப்பு பாதிக்கப்படலாம்
நெருங்கும் 'நீலம்’ புயல்: தொலைத் தொடர்பு, மின் இணைப்பு பாதிக்கப்படலாம்
நெருங்கும்  'நீலம்’ புயல்: தொலைத் தொடர்பு, மின் இணைப்பு பாதிக்கப்படலாம்

சென்னை/நெல்லூர்: புயல் சேதங்களினால் ஏற்படும் பாதிப்புகளை  எதிர்கொள்ள தமிழக மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் அரசு நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டு, மீட்பு குழுக்கள் தயார்  நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள 'நீலம்’ புயல்,வங்கக் கடலில் சென்னைக்கு தென் கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில்  மையம் கொண்டிருந்த நிலையில், சென்னையை நோக்கி வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இது வடக்கு மற்றும் வட மேற்காக நகர்ந்து, கடலூருக்கும் நெல்லூருக்கும் இடையே,  சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 12 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும்  புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், தமிழகத்தின் வடபகுதிகளிலும் புதுச்சேரியிலும் மணிக்கு 45 முதல் 65 கிலோ  மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், ஆந்திராவின் தெற்கு பகுதியிலும் இதே  அளவு காற்றின் வேகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

##~~##
இதன் காரணமாக கடல் மிக அதிக கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் யாரும் கடல்  பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மீட்புக் குழு உஷார்

புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு  சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு  வழித்தடங்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதால், நிலைமையை உடனடியாக சீர் செய்ய  இரு மாநிலங்களிலும் உள்ள கடலோர மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டு, ,மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

தீயணைப்பு வீரர்கள்,போலீசார் அடங்கிய மீட்பு படையினர் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளனர்.
 
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மழை பெய்து வருகிறது.நேற்று பகலில் விட்டு விட்டு பெய்த மழை இரவில் கொட்டித்தீர்த்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
 
புயல் கரையை கடக்கும் போது சென்னையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.புயல் தாக்கினால் அதனை எதிர்கொள்வதற்காக சென்னையில் தீயணைப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
 
33 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் 1,300 வீரர்களும் பணயில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விடுமுறையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
 
புயலால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய சென்னை மாநகர போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர்.அனைத்து உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீஸ்காரர் வரை அனைவரும் 24 மணி நேரமும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.போலீசாரும் பைபர் படகுகளுடன் மீட்பு பணியில் ஈடுபட காத்திருக்கிறார்கள்.

தொலைத் தொடர்பு, மின் இணைப்பு பாதிக்கப்படலாம்

மேலும் புயல் தாக்கும்போது வீசும் பலத்த காற்று காரணமாக  மின் கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்து விழலாம் என்பதால் தொலைத் தொடர்பு, மின் இணைப்பு பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.