Published:Updated:

160 வகை பறவைகள், 62 வகை பட்டாம்பூச்சிகள் - கோவைவாசிகளே... சிங்காநல்லூர் குளத்துக்கு ஒரு விசிட் அடிக்கலாமா?

160 வகை பறவைகள், 62 வகை பட்டாம்பூச்சிகள் - கோவைவாசிகளே... சிங்காநல்லூர் குளத்துக்கு ஒரு விசிட் அடிக்கலாமா?
160 வகை பறவைகள், 62 வகை பட்டாம்பூச்சிகள் - கோவைவாசிகளே... சிங்காநல்லூர் குளத்துக்கு ஒரு விசிட் அடிக்கலாமா?

160 வகை பறவைகள், 62 வகை பட்டாம்பூச்சிகள்,  396 வகை தாவரங்கள் அவற்றில் 200 மூலிகை செடிகள்,  22 வகை பாலூட்டிகள் மற்றும் பல்வேறு வகையிலான பூச்சிகள் இவற்றுக்கெல்லாம் வாழ்வாதாரமாக இருப்பது கோவை சிங்காநல்லூர் குளம். பொதுவாக குளங்கள் இருக்கும் பகுதிகளில் இவையெல்லாம் இருப்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், ஒரு பெரு நகரத்துக்குள் இவையெல்லாம் ஒருசேர காண்பது மிகவும் அரிது.

இதனால்தான், கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 19 குளங்களில் சிங்காநல்லூர் குளம் பல்லுயிர் பெருக்கத்துக்கான ஆதாரமாக உள்ளது. இந்தக் குளம் 16-ம் நூற்றாண்டில் சோழர்களால், 288 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. நொய்யலை ஆதாரமாகக் கொண்ட இந்தக் குளம், நகரமயமாதலினால் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது.

தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களில் இருந்துவரும் கழிவு நீர் நேரடியாக இந்தக்குளத்தில்தான் கலக்கிறது. கோவை நகரின் முக்கியப் பகுதியாக இருப்பதால் சமூக விரோதிகளும் தங்களது பங்குக்கு இந்தக் குளத்தை நாசப்படுத்தினர். இதற்கெல்லாம் மத்தியில், சிங்காநல்லூர் குளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு 720 வகையிலான பல்லுயிர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, சிங்காநல்லூர் குளத்தை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், சிங்காநல்லூர் குளத்தை பராமரித்து, அதை பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவும் வகையில், "நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தினர்" களப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், ஐ.டி ஊழியர்கள் இந்த அமைப்பில் உள்ளனர்.

க்யூப் அமைப்பின் கௌரவத் தலைவராக இருக்கும் கோவை மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயனிடம் பேசினோம்,

'சிங்காநல்லூர் குளத்தை, சூழல் நட்புரீதியாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிங்காநல்லூர் குளத்தில் ஏற்கெனவே பனை மரத்துக்கான நர்சரி அமைத்துள்ளோம். அடுத்ததாக, நாட்டு மரங்களுக்கான நர்சரி அமைக்க உள்ளோம். அதேபோல, பறவைகள் அதிகம் வருவதால், அவற்றுக்கு Bird Watching tower அமைக்க உள்ளோம்' என்றார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பி.ஹெச்.டி படித்துவரும் மாணவி கலைவாணி கூறுகையில்,' குளம் என்பது வெறும் தண்ணீர் சேகரித்து வைக்கும் தொட்டி மட்டும் இல்லை. அதை நம்பி ஏராளமான பல்லுயிர்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. அவற்றை பாதுகாத்து, சிங்காநல்லூர் குளத்தை கால்நடை நிலத்துக்கு மாதிரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் களப்பணியில் இறங்குவோம். தனி மற்றும் மியா வாக்கி முறையில் என்று இரண்டு வகையில் மரம் நட்டுள்ளோம். அவற்றுக்கு தண்ணீர் விடுவது, தாவரங்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்வோம். அவற்றை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு இதை கொண்டு செல்வோம். பள்ளி மாணவர்களுக்கு, வகுப்பறையிலும், பவர் பாய்ன்ட் மூலமாக பாடம் எடுப்பார்கள். அவற்றை இங்கு நேரடியாகவே காணலாம். ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நகருக்குள் ஒரு குறுங்காடு அமைப்பதுதான் எங்களது லட்சியம். குளத்தை பராமரிப்பது, எந்தெந்த இடங்களில் மரம் நடவேண்டும், பல்லுயிர்களுக்கு எது சிறந்தது, என்பதை கற்று, அதை செயல்படுத்தி வருகிறோம்.

நகரத்தில் உள்ள சுற்றுச்சூழல்களைப் பாதுகாப்புது குறித்து, ஃபொலோஷிப் வழங்குவது தொடர்பாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தோம். அதன்படி, எங்களுக்குவந்த தலைப்புகளில் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இரண்டு மாணவர்களுக்கு ஃபெலோஷிப் வழங்கியுள்ளோம்" என்றார்.

தனியார் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணிபுரிந்துவரும் ராஜகுரு கூறுகையில், "நா விருதுநகர்காரன். சின்ன வயசுல இருந்தே சுற்றுச்சூழல் மேல ஆர்வம் அதிகம். கோயம்புத்தூர்ல வேலைக்கு வந்தப்பறம், நானே தனியா மரம் நட்டுட்டு இருந்தேன். கொஞ்ச நாள்ல க்யூப் அமைப்போட அறிமுகம் கிடைச்சுது. ஆரம்பத்துல மியா வாக்கி மரம் மேல எனக்குப் பெரிய விருப்பம் இல்ல. ஆனா, குறுகிய காலத்துல நல்ல வளர்ச்சி, அதுலேயே நிறைய பறவைங்க வரப்பத்தான் அதோட அருமை தெரிஞ்சுது.

அரிய வகை நன்னீர் ஆமைங்க, வெளிநாட்டுல இருந்துவரும் பறவைங்க, அழிவின் விளம்புல இருக்கற பறவைங்க இங்க நிறைய வரும். இதையெல்லாம் பார்க்கறப்பத்தான், இத பராமரிக்கறணும்ங்கற வெறி அதிகமாகும். ஒரு மரத்துக்கு 40 லிட்டர் தண்ணீ விடுவோம். தண்ணீ விடறதுக்கே ஒரு நாள் போயிடும். என்கூட வேலை செய்யறவங்களையும், களப்பணிக்கு அழைத்துப் போய்டுவேன்.

இதைப்பார்த்துட்டு, இப்ப எங்க ஊர்லயும் மியா வாக்கி மரம் நட, முயற்சி பண்ணிட்டு இருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, இங்கு கட்டடக் கழிவுகள் அதிகமாக இருந்துச்சு. இப்ப மியா வாக்கி மரங்கள், புதர்கள் அதிகமாகிருக்கு. நம்ம கிராமத்துல குளங்கள் எப்படி இருக்குமோ, அப்படித்தான் சிங்காநல்லூர் குளம் இருக்கு. குளங்கள் குறித்து மக்களுக்கு இன்னும் நிறைய விழிப்பு உணர்வு வேணும்" என்றார்.

இப்படி வளங்கள் நிறைந்த சிங்காநல்லூர் குளத்தில், அணில் வேட்டை, பறவைகள் வேட்டை போன்ற சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தடுத்து, இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு