Published:Updated:

“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு!” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi

“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு!” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi
“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு!” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi

“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு!” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோடி ‘புயல்’ நினைவுகள் #Dhanushkodi

ன்னைக்கு சாயந்திரத்திலிருந்தே காத்து வழக்கத்து மாறா வீசிட்டிருந்துச்சு. ராத்திரி ஏழோ, எட்டோ இருக்கும். திடீர்னு காத்து வேகம் இன்னும் அதிகமாச்சு. இங்கே காத்து அடிக்கிறது சகஜமா இருந்தாலும், ஏன் இம்புட்டு வேகமா அடிக்குன்னு யோசிச்சு சனங்கள் சுதாரிக்குறதுக்குள்ளே தடதடன்னு கடல் தண்ணி குடிசைகள்ல ஏற ஆரம்பிச்சது. சிமிலு வௌக்கை தூக்கிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக செதறி ஓடினோம். ரெண்டு பக்கமும் கடலு. ராத்திரி நேரம். எங்கிட்டு ஓடுறதுனு யாருக்குமே தெரியலப்பு. ஊருக்குள்ளே இருந்த பெருசுங்க, 'எளவட்டங்க எப்படியாச்சும் தப்பிச்சு ஓடிப்புடுங்கடே'னு கத்துனாங்க. அதுக்குள்ள எம்புட்டோ நடந்து முடிஞ்சிருச்சு. பொறந்து ஆத்தா மடியில் கெடந்ததைவிட கடல் மடியில் தவழ்ந்ததுதான் அதிகம். ஆனா, எங்க சனத்துவ மேல என்ன கோபமோ தெரியல, கடலம்மாவே எங்க வாழ்க்கைய, ஒட்டுமொத்த ஊர அழிச்சிப்புட்டா” என்கிற பூமயிலு பாட்டியின் கண்களில் தெரியும் மிரட்சி, தனுஷ்கோடி என்ற மாபெரும் வணிக நகரத்தை கடல்கொண்டுபோன வரலாற்றை உயிர்ப்போடு எடுத்துக்காட்டுகிறது. 

ராமேஸ்வரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனுஷ்கோடி, 1964 டிசம்பர் 23-ம் தேதி, கோரப்புயலில் சிக்கி, சின்னாபின்னமானது. அதன் மிச்சங்களாக நின்றுகொண்டிருக்கும் சில நினைவுச் சின்னங்களோடு உயிர்ப்போடு நிற்கிறார் பூமயிலு. 

“இருவத்தி ரெண்டாந்தேதி திங்கள் கெழமைய்யா. எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு. அப்போதான் ஜெமினி கணேசனும் சாவித்ரியும் இங்கே வந்திருந்தாங்க. நான் வயசுக்கு வந்து, பாவாடை சட்டையோடு சுத்திட்டிருந்தேன். சினிமா நடிகருங்க வந்திருக்கிறதை கேள்விப்பட்டு, மத்தியானம்போல அக்கம் பக்கத்துல உள்ளவங்களோடு சேர்ந்து பார்த்துட்டு வந்தேன். ஊரு முழுக்க சூறக் காத்து இருந்தப்பவும் சனங்க சாவித்ரி பத்தி பேசிட்டு இருந்துச்சுங்க. ‘பட்டணத்திலிருந்து வந்திருக்காங்க. காத்து அசுரத்தனமா வீசுது. எப்படி    பத்திரமா போய் சேரப்போறாங்களோ'னு கவலைப்பட்டாங்க. அந்த நேரத்துல சிலோன்ல மாட்டிக்கிட்ட என் அண்ணனையும் அப்பாவையும் நெனச்சு நான் வருத்தத்துல கெடந்தேன்.

ராவு இருட்ட இருட்ட கடல் தண்ணி மேல ஏற ஆரம்பிச்சது. கூரையெல்லாம் பிச்சுட்டுப் போகுது. என் அம்மாவுக்கு ரொம்ப பயம். ஊரு சனங்க மேடான எடத்தைப் பார்த்து ஓடினாங்க. ஆனா, என் அம்மா அவங்க பின்னாடி போகலை. உடுத்தியிருந்த பாவாடை சட்டையோடு தம்பியையும் தங்கச்சிகளையும் கையில் புடிச்சுட்டு தண்ணிக்குள்ளே நடந்துபோக ஆரம்பிச்சோம். கரையில நிக்கும்போது காத்து தள்ளிக்கிட்டே இருந்துச்சு. தண்ணிக்குள்ளே எந்தத் திசையில போறோம்னு வௌங்கலை. வலது பக்கமும் எடது பக்கமும் கடலு. எங்க அம்மா ஏதோ ஒரு அனுமானத்துலதான் கூட்டிக்கிட்டு நடந்துச்சு. கொஞ்சம் பாதை மாறியிருந்தாலும் கடலுக்குள்ளே போயிருப்போம். சொந்தம் பந்தம் யாரு வந்துட்டிருக்கா, தோழிங்க யாரு தப்புனாங்கன்னு எதுவுமே தெரியலே. ராமேஸ்வரத்திலிருந்து அடிக்கடி நடந்தே தனுஷ்கோடிக்குப் போயிருக்கிறதால இடுப்பு அளவு தண்ணியில் தட்டுத் தடுமாறி ராமேஸ்வரம் போயிட்டோம். அங்க ரயில்வே ஸ்டேசன், சத்திரம் சாவடின்னு தங்கினோம். சாப்பாடு இல்லாம, உடுத்தத் துணி இல்லாம கோயில்ல வாங்கி சாப்பிட்டுக்கிட்டு திரிஞ்சதை நெனைச்சா இப்பவும் உசுரு ரணமா வலிக்குதுய்யா” என்கிறார் வேதனை நீங்காத குரலில்.

தனுஷ்கோடியில் புயல் வந்து ஊர் அழிந்த வரலாறு தெரியும். அந்தப் புயலில் தப்பி, அகதிபோல சுற்றித் திரிந்து, மீண்டும் தனுஷ்கோடிக்கே பிழைக்க வந்திருக்கும் பூமயிலு பாட்டி ஆச்சர்யத்தின் உச்சம். 

“புயலு நின்னதுக்கு அப்புறம் கொஞ்ச நாளு கழிச்சு, என் அம்மா எங்கள கூட்டிக்கிட்டு திரும்பவும் தனுஷ்கோடிக்கே போயிடுச்சு. தப்பிப் பொழைச்ச ஒருத்தர், ரெண்டு பேரும் எங்களோடு வந்தாங்க. அரசாங்க அதிகாரிங்க வந்து, 'இனிமே நீங்க இங்கே இருக்கக் கூடாது. உங்களுக்கு நடராசபுரத்துல எடம் ஒதுக்கி இருக்கோம்'னு சொன்னாங்க. எங்க பொழப்பே பொறந்து வளர்ந்த இந்த மண்ணுலதானே கெடக்கு. இங்கேயே மீன் புடிச்சுக்கிட்டு, சிப்பி பொறுக்கிட்டு, கௌரவமா வாழ்ந்துப்போம். இந்தக் கடலுல காத்து அதிகமா அடிச்சா, அந்தக் கடலுல மீனு புடிப்போம். எனக்கு இப்போ என்ன வயசு ஆகுதுனுகூட தெரியலே. எல்லாரும் 'கெழவி கெழவி'னு கூப்புடுதுங்க. ஆனாலும், நான் இன்னும் கொமரி மாதிரிதான் சுத்திட்டிருக்கேன். என் வீட்டாலுக்கு சொவமில்லே. நடக்க முடியாது. மூணு ஆம்பளப் பசங்களும், ரெண்டு பொம்பளைப் புள்ளங்களும் இருக்காங்க. ஆனாலும், இதுவரை யார்கிட்டேயும் ஒரு பைசாவுக்கு கை நீட்டினதில்லே. நானே சிப்பி பொறுக்கி அவரைக் காப்பாத்தறேன்.

வெயிலு, மழ, புயலு, சூறாவளி எது வந்தாலும் இந்த ஊரை விட்டுப் போகாம கெடக்குறோம். அரசாங்கம் கொடுக்கும் சலுகை முறையா கிடைக்குறது இல்லே. ஆனாலும், ஒரு வாய் கஞ்சி நிம்மதியா குடிக்க முடியுதுன்னா, அதுக்கு இந்த மண்ணும் எங்க கடலம்மாவும்தான்யா காரணம். வெளியிலிருந்து வர்றவங்களுக்கு வேணும்ன்னா இது மனுசங்க வாழத் தகுதி இல்லாத ஊரா இருக்கலாம். எனக்கும் எங்க சனத்துக்கும் இதுதாம்யா ஒலகம்”.

அடுத்த கட்டுரைக்கு