Published:Updated:

தனுஷ்கோடி மண்ணில் புதைந்த தினத்தன்று அரசுக்கு ஒரு கோரிக்கை!

தனுஷ்கோடி மண்ணில் புதைந்த தினத்தன்று அரசுக்கு ஒரு கோரிக்கை!
தனுஷ்கோடி மண்ணில் புதைந்த தினத்தன்று அரசுக்கு ஒரு கோரிக்கை!

தனுஷ்கோடி மண்ணில் புதைந்த தினத்தன்று அரசுக்கு ஒரு கோரிக்கை!

53 ஆண்டுகளுக்கு முன் உருக்குலைந்துபோன துறைமுக நகரமான தனுஷ்கோடியில், எஞ்சியிருக்கும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கும் சுதந்திரத்துக்குப் பின் இந்தியர்களுக்கும் பிரதான துறைமுக நகராக விளங்கியது தனுஷ்கோடி. வெள்ளையர்களின் நாடு பிடிக்கும் ஆசைக்கு பெரும் உதவியாக இருந்த துறைமுகமாகவும் விளங்கியது. விமான சேவைகள் மேம்படாத காலத்தில், பிழைப்புக்காக நாடு விட்டு நாடு செல்லும் தொழிலாளர்களுக்கான எளிய வழியாகவும் இருந்தது தனுஷ்கோடி. இலங்கை என்ற மலைப்பகுதியை பொன்விளையும் பூமியாக மாற்றுவதற்காக ஆயிரமாயிரம் இந்தியர்களை அடிமைகளாக இலங்கைக்குக் கொண்டு செல்ல துணையாக இருந்ததும் இந்தத் தனுஷ்கோடி துறைமுகம்தான்.

இத்தகைய பல வரலாற்றுப் பதிவுகளுக்குச் சான்றாகத் திகழ்ந்து விளங்கிய தனுஷ்கோடி துறைமுக நகரத்தை ஒரே இரவில் புரட்டிப் போட்டது ஆழிப்பேரலை. 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களையும், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பயணித்த நூற்றுக்கணக்கான மாணவர்களையும் ஒரு சேர கடலுக்குள் ஜல சமாதி ஆக்கியது அந்தக் கோர புயல்.

மனித உயிர்களை மட்டுமல்லாது கால்நடைகள், துறைமுகக் கட்டடங்கள், ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள், நிர்வாக அலுவலகங்கள், ஆயிரக்கணக்கானக் குடியிருப்புகள் என எதனையும் விட்டு வைக்காமல், தனது கோரப் பசிக்கு ஆட்படுத்திய ஆழிப்பேரலையின் வேகத்துக்கு மிச்சமாக நின்றது சிதிலமடைந்த கட்டடங்கள் சில. புயலுக்குப் பின் மனிதர்கள் வாழத் தகுதியற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது தனுஷ்கோடி. அன்றிலிருந்து மக்கள் நடமாட்டமின்றி இருந்துவந்த தனுஷ்கோடி சில ஆண்டுகளுக்குப் பின் சுற்றுலாத் தளமாக மாறிப்போனது.

ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாடு மற்றும் வெளி மாநிலச் சுற்றுலாப் பயணிகள் புயலின் எச்சமாக நின்ற கட்டட இடிபாடுகளை தனுஷ்கோடிக்குச் சென்று பார்த்து வியந்து செல்கின்றனர். சாலைகள் ஏதும் இல்லாத நிலையில் புதையும் மணலின் ஊடாகவும், கடல் அலைகளின் தாலாட்டுடனும் ஃபோர் வீல் வாகனங்களில் சாகசப் பயணம் செய்து தனுஷ்கோடி புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி எஞ்சியிருக்கும் மிச்சங்களை யாத்திரைவாசிகள், சுற்றுலாப் பயணிகள் கண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி வரை போடப்பட்ட சாலையின் பயனாக தனுஷ்கோடி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

53 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ஏற்பட்ட  இடிபாடுகளில் இன்றும் எஞ்சியிருப்பது தேவாலயம், விநாயகர் கோயில், அஞ்சலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட சில கட்டடங்கள் மட்டும்தான். இந்த அடையாளச் சின்னங்கள் வருடங்கள் செல்லச் செல்ல மேலும் சிதிலமடைந்து வருகின்றன. இவை தவிர இந்தக் கட்டடங்களில் உள்ள கற்களைப் பெயர்த்து எடுத்து 'ராமர் பாலம் அமைத்த' மிதவைக் கற்கள் எனச் சொல்லி வியாபாரமும் நடக்கிறது. இதனால் வரும் காலங்களில் தனுஷ்கோடி என்ற துறைமுக நகரத்தின் அடையாளமாக கடலையும் அதைச் சார்ந்த கரையோர மணலையும்தான் காட்ட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து தனுஷ்கோடிக்கு சாலை அமைத்த மத்திய அரசு, தனுஷ்கோடியில் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் புயல் அடையாளச் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிதிலமடைந்த கட்டட இடிபாடுகளை பழைமை மாறாமல் புதுப்பித்து எதிர்கால தலைமுறையினரின் பார்வைக்குக் காட்சிப் படுத்தவும் முன் வர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு