Published:Updated:

அழிந்துவரும் கடலடி மழைக்காடுகள்... பாதுகாக்கப்படுமா பவளப்பாறைகள்?

அழிந்துவரும் கடலடி மழைக்காடுகள்... பாதுகாக்கப்படுமா பவளப்பாறைகள்?
அழிந்துவரும் கடலடி மழைக்காடுகள்... பாதுகாக்கப்படுமா பவளப்பாறைகள்?

ரைக்கடலில் இருக்கும் ஆழமில்லா நீர்ப்பரப்பில் வளரும் கடற்காடுகள் அவை. நிலப்பரப்பில் உள்ள மழைக்காடுகளைப் போலவே, இது கடலடி மழைக்காடுகள். மழைக்காடுகள் என்றவுடன், இதுவும் மழை வரக் காரணமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. இந்தக் காடுகள் மழைக்கு வழிவகுக்காது. ஆனால், நில மழைக்காடுகளுக்கு இருக்கும் தன்மை ஒன்று இவற்றுக்கும் உள்ளது. அது பல்லுயிர்ச்சூழல். மழைக்காடுகளில் வாழும் உயிரினங்களின் பன்மைத்தன்மை சுற்றுச்சூழலுக்கு எத்தனை ஆரோக்கியமானதோ, அத்தனை ஆரோக்கியமானது இந்த கடலடிப் பவளப்பாறைகளின் பல்லுயிர்த் தன்மை. அது மட்டுமல்ல பொருளாதாரத்திலும் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆம், சுமார் 500 வகையான மீன் இனங்களுக்கு இன்றியமையாத வாழ்வாதாரமாக இவை அமைந்திருக்கின்றன. அனைத்துமே மீன் வர்த்தகத்தில் பங்கு வகிக்கும் உள்நாட்டு மீன் இனங்கள்.

இவற்றைப் பற்றி அறிந்துகொள்ள கொஞ்சம் கற்பனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் மாட்டிக்கொண்டு ஆழமற்ற கடல் பகுதிக்குச் சென்று பார்ப்போமே!

வண்ணமயமான மீன்கள் நிறைந்து இருந்த அந்தப் பகுதியின் தரைப்பகுதியில் நிறைந்திருந்தன பவளப்பாறைகள். ஒரே பாறையில் பலவகை வண்ணங்கள். பச்சையென்ன மஞ்சளென்ன இளஞ்சிவப்பு நிறமென்ன. நீந்துவதை மறந்து அவற்றைத் தொட்டுப் பார்க்கத் தோன்றுகிறதா? இப்படியாக பல நிறங்களோடு கயிறுகளைப் போல் வளைந்தும் நீண்டும் பல கிளைகளாகப் பிரிந்தும் தரை முழுவதும் படர்ந்து வளர்ந்திருந்த அவற்றைச் சுற்றி, திரும்பும் திசையெல்லாம் வெவ்வேறு வகை மீன்கள் வெவ்வேறு நிறங்களில் வெவ்வேறு வடிவங்களில் கண்களைப் பறிக்கிறது. இச்சமயத்தில் நமக்கொரு கேள்வி தோன்றலாம். இத்தனை நிறங்கள் இதற்கு எப்படிக் கிடைத்தது?

அதற்குக் காரணம், அப்பாறைகளைச் சார்ந்து வாழும் மஞ்சள் பாசிகள் (Zooxaanthallae). பெயர் மஞ்சள் பாசிகள்தான், ஆனால் அவற்றுக்கு மஞ்சள் நிறம் மட்டும் சொந்தமென்றில்லை. பவளப் பாறைகளைச் சார்ந்து இவை வாழ்கின்றன என்று சொல்வதும் தவறு. இரண்டுமே இணைத்திற உறவுக்காரர்கள் (Symbiotic relations). அதாவது நீயின்றி நானில்லை, நானன்றி நீயில்லை என்பது போல இணைபிரியாதவர்கள். பவளப்பாறைகளின் மேற்புற திசுக்களில் வாழும் இந்தப் பாசிகள் ஒளிச்சேர்க்கையின் மூலம் தேவையான உணவை சமைத்துத் தானும் வாழ்ந்து, பவளங்களுக்குத் தேவையான புரதம், கால்சியம் போன்றவற்றைத் தந்து வாழவைக்கிறது. அதற்குக் கைம்மாறாக பாசிகள் ஒளிச்சேர்க்கை செய்வதற்கான ஊட்டச்சத்துக்களையும் கரிம வாயுவையும் பவளங்கள் தருகின்றன. இவ்வாறாக வாழும் இவற்றால் சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களை முழுமையாகத் தாங்க முடியாது. அப்படி நேரடித் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான கவசமாக இந்த வண்ணங்களைப் பாசிகள் பவளங்களின் உடலில் உருவாக்குகின்றன. இதன்மூலம் தன்னையும் காத்து தன் நண்பனையும் காத்துக்கொள்கிறது. அத்தோடு நின்றதா? தான் வாழ்வது மட்டுமின்றி இவை இரண்டும் தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் நீர்வாழ் உயிரினங்கள் பலதும் வாழ்வதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்து அவற்றையும் வாழவைக்கின்றன.

கற்பனையில் கடலுக்குச் சென்று பார்க்கும்போது மேற்கூறிய வகையில்தான் அவற்றின் தோற்றம் இருக்கும். ஒளிப்படத்தைப் பார்த்துவிட்டு கற்பனை செய்துபார்த்த நாம், வருங்காலத்தில் அந்த அழகு ததும்பும் காட்சிகளை ஒளிப்படங்களில் மட்டுமே பார்க்க முடிகிற நிலை ஏற்படலாம். அந்த நிலை வெகுதூரத்தில் இல்லை. நிஜத்திலேயே ஒருநாள் ஆக்ஸிஜன் சிலிண்டர் மாட்டிக்கொண்டு கடலுக்குள் சென்றுபாருங்கள். பல வண்ணப் பாறைகளும் இருக்காது, பல வகை மீன்களும் இருக்காது. அந்தத் தாவரங்களின் வெளுத்துப்போன எலும்புகள் மட்டுமே எஞ்சி நிற்கும். மீன்கள்? ஆங்காங்கே ஐந்தாறு மீன்களைக் காணலாம். மனிதன் இயற்கைக்குச் செய்த கொடூரமான இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்று.

பொய்யான நம்பிக்கை ஒன்று பொதுவெளியில் சுற்றித்திரிகிறது. பவளப்பாறைகள் அழிந்துவிட்டால் அவை கரைந்துவிடும் அல்லது அங்கேயே விழுந்து துகள்களாகிவிடும். எனவே, தோற்றம் மாறாமல் இருப்பவை அனைத்தும் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதுதான் அந்தக் கூற்று. உண்மை என்னவென்றால் பவளங்கள் அழிவதற்கு முதல் அடையாளம் தன் நிறங்களை இழப்பது. அதற்கு பவள நிறமாற்றம் என்று பெயர் (Coral Bleaching). இரண்டாவது அவ்விடத்தின் பல்லுயிர்ச் சூழலை இழப்பது. இறுதியில் சொச்சமாக மிஞ்சுவது அவற்றின் எலும்புகள் மட்டுமே. இந்த எலும்புகளைத்தான் இன்னும் வாழ்கிறது என்று கூறுகிறார்கள். பற்பல வண்ணங்களோடு வளமையாக வாழ்ந்த பகுதிகள் இன்று சுடுகாடுகளாகி வருகின்றன.

மக்கள் தொகை எண்ணிக்கை உயர்வதால் உணவுத்தட்டுப்பாடு உயர்கிறது என்று கூறி வெளிநாட்டு வர்த்தகத்திற்காக நிகழ்த்தப்படும் அதீத மீன்பிடித்தலை நியாயப்படுத்தும் சிலர், சில வழிமுறைகளை மட்டும் கையாண்டால் நன்றாக இருக்கும். மீன்கள் அனைத்தையும் இன்றே பிடித்துவிடாமல் இனப்பெருக்கத்திற்குச் சிலவற்றை விட்டுவைக்கலாம். கரைக்கடல்களில் இயந்திரப் படகுகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். முக்கியமாக டிராலர்கள். அந்த டிராலர்கள் இருக்கும் மீன்கள் மொத்தத்தையும் ஒன்றுவிடாமல் சுரண்டி எடுப்பதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் மீன்குஞ்சுகள், மீன் முட்டைகளைக் கூட விட்டுவைப்பதில்லை என்பது தான் கொடுமை. இதற்கும் பவளப்பாறைகளின் அழிவிற்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் இருக்கிறது. கரைக்கடலில் வாழும் மீன் வகைகள்தான் பவளப் பாறைகளுக்கு ஊட்டச்சத்துகள் கிடைப்பதற்கு முக்கியமானவை. அது மட்டுமின்றி மற்றொரு அவலம் என்னவென்றால், டிராலர்கள் துடைத்தெடுக்கும் போது சில சமயங்களில் பவளப்பாறைகள் உடைந்துபோய் விடுகின்றன. ஒருவேளை இதைப் பார்த்துத்தான் சிலர் அதன் அழிவிற்கு அடையாளமாக மேற்கூறிய காரணங்களைச் சொன்னார்களோ என்னவோ? இதுபோக கடலில் செல்லும் கப்பல்கள் வெளியிடும் எண்ணெய்க் கழிவுகள் நீரின் கனிமத் தன்மையை மட்டுப்படுத்திவிடுவதால், அவற்றுக்குத் தேவையான கனிமங்கள் நீரிலிருந்து கிடைப்பதில்லை. அதிகமாகக் கேட்டுப் புளித்துப்போன வார்த்தை, உலக வெப்பமயமாதல். ஆனால் அதைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் யாவும் பயனற்றுப் போகும் அளவிற்கு, ஒரு சாரார் வெப்பமயமாதலை மேன்மேலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் கடல்நீரின் தட்பவெப்பநிலை மாறுவதும் பவளப் பாறைகளின் வாழ்வைச் சிக்கலாக்கிவிட்டது. இவை எல்லாம் போதாது என்று, பவளப்பாறைகளுக்கு இப்போது புதுப்பிரச்னை ஒன்று கிளம்பியிருக்கிறது.

காற்றுவெளியில் அதிக அளவில் கரிம வாயுக்கள் கலப்பது போலவே, கடற்பரப்பிலும் கரிம வாயு அதிகளவில் கலந்துகொண்டிருக்கிறது. இதனால் நீரின் சமநிலை பாதிக்கப்பட்டு அதில் வாழும் உயிரினங்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. பவளப்பாறைகள் அடிப்படையிலேயே உணர்ச்சி மிகுந்தவை. சிறிய மாற்றங்கள் கூட அவற்றைப் பாதிக்கப் போதுமானது. அப்படியிருக்க இந்த அதீத கரிமவாயு கலப்பினால் கடலின் அமிலத்தன்மை அதிகமாவது, மஞ்சள் பாசிகளின் ஒளிச்சேர்க்கை செயல்பாடு பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது. பாசிகள் அழியும்போது அதன் இணை மட்டும் பார்த்துக்கொண்டா இருக்கும். அதுவும் அழிந்துவிடுகிறது. மஞ்சள் பாசிகளின் ஒளிச்சேர்க்கைச் செயல்பாட்டிற்கு கரிம வாயு வேண்டும் என்றும் அதை பவளங்கள் நீரிலிருந்து எடுத்து வழங்குகிறது என்றும் மேலே கூறினீர்கள். இப்போது அதே கரிம வாயு அவற்றின் அழிவிற்கு வழிவகுக்கிறது என்று கூறுகிறீர்களே என்ற கேள்வி எழுகிறதா? ஒளிச்சேர்க்கைக்கு கரிம வாயு தேவை என்பது உண்மைதான். அதுவே அளவுக்கு மீறினால்? நீரின் அமிலத் தன்மையை அதிகப் படுத்தும் அளவிற்கு இருந்தால்?

ஒரு திரவத்தின் காரத்தன்மைக்கும் அமிலத்தன்மைக்கும் பி.ஹெச் (pH) என்றொரு அளவுகோல் உண்டு. பி.ஹெச் அளவு 7க்கு கீழே இருந்தால் அது அமிலம், மேலே இருந்தால் காரம். கடலில் தற்போது  பி.ஹெச் மதிப்பு 6 ஆக இருக்கிறது. இத்தகைய சூழலைத் தாங்கிக்கொண்டு வாழ்வது அவற்றால் இயலாத காரியம். தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து, கடலில் ஏற்படும் தூய்மைக்கேடுகளைச் சரிசெய்யவில்லை என்றால் அடுத்த 50 ஆண்டுகளில் பவளப்பாறைகள் உலகம் முழுவதும் மொத்தமாக அழிந்துவிட வாய்ப்புகள் உள்ளது.

முன்னெடுப்பு என்று மட்டும் சொன்னால் எப்படி? என்ன வகையான முன்னேற்பாடுகள்?

முடிந்தவரை மிகவும் குறைவான அளவே கரிம வாயுக்களை நாம் வெளியேற்ற வேண்டும். காற்றிலும் கடலிலும் சேரும் வாயுக்களில் நமது பங்கு மிக மிகக் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். அதற்கான முன்னெடுப்பாக நாம் உண்ணும் உணவுகளில் கார்பன் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்வோம், மின்தேவைகளைக் குறைத்துக் கொள்வது, வாகனங்களை தேவையற்ற நேரங்களில் பயன்படுத்தாமல் இருப்பதுபோல் நம்மால் முடிந்த சில சிறிய பங்கினை அளிப்போம். மீனவர்களும் கடல்வாழ் உயிர்களுக்கு பங்கம் விளைவிக்காமல் அவர்களது தொழிலை முன்னேற்ற வழிதேட வேண்டும். பாரம்பரிய மீனவர்கள் அதைப் புரிந்துதான் நடந்துகொள்கிறார்கள். ஆனால் தொழில் சார்ந்து மீனவத் துறைக்குள் சென்றவர்கள் தான் நேரவிருப்பவற்றைப் பற்றி முழுமையாக அறியாமல் தவறிழைக்கின்றனர். அவர்கள் சூழ்நிலை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ள வேண்டும். அரசாங்கம் ஆராய்ச்சித் துறைக்கு, இதுவரை கலந்த மாசுருவாக்கும் வாயுக்களின் அளவைக் குறைப்பதற்கான ஆய்வு செய்வதற்கும், மாசு ஏற்படுத்தாதவாறு மாற்று வழியைக் கண்டுபிடிப்பதற்கும் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும்.

மீன் வளம், சுற்றுலாத் தளம் என்று பல வகைகளில் பொருளாதாரத்தில் பங்கு வகிக்கின்றன பவளப்பாறைகள். ஆனால் அதையும் தாண்டி அது பல்லுயிர்ச் சூழல் நிறைந்த அழகான தனி உலகம். அழிப்பதற்கு சில கனங்களே போதும், அதையே மீட்டுறுவாக்கம் செய்ய அரும்பாடுபட வேண்டும். அதைப் புரிந்துகொண்டு அற்புதங்கள் நிறைந்த கடலடி மழைக்காடுகளைக் காப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம்.