Published:Updated:

”அந்தப் புகை இருக்கே... அதுதாம்ல பெரிய சீக்கு!” - ஒரு தூத்துக்குடிக்காரனின் அனுபவம் #BanSterlite

”அந்தப் புகை இருக்கே... அதுதாம்ல பெரிய சீக்கு!” - ஒரு தூத்துக்குடிக்காரனின் அனுபவம் #BanSterlite
”அந்தப் புகை இருக்கே... அதுதாம்ல பெரிய சீக்கு!” - ஒரு தூத்துக்குடிக்காரனின் அனுபவம் #BanSterlite

”அந்தப் புகை இருக்கே... அதுதாம்ல பெரிய சீக்கு!” - ஒரு தூத்துக்குடிக்காரனின் அனுபவம் #BanSterlite

ப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நானும் எனது தம்பியும் எப்போதும் அப்பாவின் பைக்கில்தான் தூத்துக்குடியில் இருக்கும் எங்கள் பள்ளிக்குச் செல்வது வழக்கம். எங்கள் கிராமத்திலிருந்து தூத்துக்குடி நகரம் 21 கிமீ தள்ளி இருந்தது. தினமும் அப்பாவுடன் வண்டியில் செல்லும்போது அந்தப் பாதையில் இருக்கும் வியப்புகளும் சந்தேகங்களுமே அப்பயணத்தின் பேசுபொருள். இப்போதும் அப்படித்தான். அந்தப் பாதையில் நான்கைந்து ஊர்களும் வானம் பார்த்த கரிசல் காடுகளும்தான். திடீரென சாலையின் நடுவே ஓடும் கீரிப்பிள்ளைகளுக்கும் காடைகளுக்கும் கௌதாரிகளுக்கும் வழிவிட்டு அவற்றை எங்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டுத்தான் பயணம் தொடரும். கரிசல் காடுகளில் அகவித்திரியும் மயில்கள் நிறைந்த அந்தப் பாதையில் பயணிப்பது கொஞ்சம் சுவாரசியமானது. 

அன்றைக்குக் கிளம்ப லேட்டாகிவிட பள்ளியின் ரெண்டாவது பெல்லுக்காவது போய்விட வேண்டுமென அந்தக் குறுக்குப்பாதையை அப்பா தேர்ந்தெடுத்தார். அந்தப் பாதையும் கரிசல் காடுகளால் நிரம்பியதுதான். ஆனால் முந்தைய பாதையைப்போல ரம்மியமானதாய் இல்லை. அந்தப் பாதையில் இருந்த கிராமங்கள் மனிதர்கள் இருந்தும் ஏதோ கைவிடப்பட்ட இடங்களைப் போன்ற உணர்வைத் தந்தன. தெற்கு வீரபாண்டியபுரத்தை தாண்டியபோதுதான் அந்த பேக்டரி கண்ணில் பட்டது. தூரத்தில் இருந்து பார்த்தபோது மலைபோல குவிக்கப்பட்டிருந்த கறுமணல் வியப்பையும் உற்சாகத்தையும்தான் தந்தது. ஆனால் அது விளையாட்டுக்கான மணல் இல்லை என்பது அப்பா சொல்லியபோதுதான் தெரிந்தது. ஸ்டெர்லைட்டின் திடக்கழிவுகள்தான் அந்த கறுமண் மலை. 

ஸ்டெர்லைட் அருகில் செல்ல செல்ல எங்களால் இயல்பாய் மூச்சுவிட முடியவில்லை. என்னைவிடத் தம்பி ரொம்பவே தெவங்கிப்போனான். அந்த இடத்தை வேகமாகத் தாண்டி வந்தவுடன் சுவாசித்த மூச்சுக்காற்றின் அனுபவம் இன்றும் நினைவில் இருக்கிறது. இப்படித்தான் விவரம் தெரிந்த வயதில் ஸ்டெர்லைட் எனக்கு அறிமுகமானது. ஓரிரு வாரங்கள் கழித்து மீண்டும் ஸ்டெர்லைட் வழியே செல்லும்போது முன்னேற்பாடாய் மூக்கை மூடிக்கொண்டேன் ஆனாலும் அந்தப் புகையின் நெடி சுவாசப்பைக்குள் போவதை உணர முடிந்தது. 

பள்ளிநாட்களில் நண்பர்கள் பலரும் ஸ்டெர்லைட்டை ஒட்டி நிறைய விசயங்களைப் பேசிக்கொள்வோம். அவற்றைப் பற்றி பேசும்போது மர்மக்கதைகளைப் பேசுவதைப் போன்று இருக்கும். " ஏலே அங்க வேலைப் பார்த்தாலே நோய்லாம் வருமாம், அந்தப் புகை இருக்கே அதுதாம்ல இருக்குறதுலேயே பெரிய சீக்கு, அவ்ளோ ஈஸியாலாம் ஸ்டெர்லைட்டுக்குள்ள விடமாட்டானுவலாம் நிறைய செக்கிங்குலாம் இருக்குமாம்ல" எனப் பலரும் தங்கள் பங்குக்கு கேள்விப்பட்ட தெரிந்த பல கதைகளைச் சொல்லுவோம். எங்கள் பள்ளி ஸ்டெர்லைட்டிலிருந்து ரொம்ப தூரத்தில் இருப்பதாக எல்லோரும் நினைத்துக்கொண்டு ஆசுவாசமாய் அக்கதைகளை ஃப்ரீ பிரியட்களில் சுவாரசியமாகப் பேசிக்கொண்டோம். 

ஆனால் வளர வளர ஸ்டெர்லைட்டிலியே வேலைக்குச் சென்றுவிடலாம் நல்ல சம்பளத்துடன் நம்மூரிலேயே செட்டிலாகிவிடலாம் என வருங்கால கணக்குகள் பலருக்குள்ளும் ஓடியது. " எங்க மாமா அங்கதான் என்ஜினியரா இருக்காரு, காலேஜ் படிச்சிட்டு அங்க வேலைக்கு போய்டுவேன் மாமா பார்த்துக்குவாறு" என்ற பேச்சுகளை பள்ளியில் சரளமாக கேட்க முடிந்தது." ஏய் எப்பா அவன் ஸ்டெர்லைட்டுக்கு வேலைக்கு போறாம்பா" என சில பெருமிதக்குரல்களும் எங்கள் கிராமத்தில் கேட்க முடிந்தது. 

ஸ்டெர்லைட்டை மையமாக வைத்து ஷிப்பிங் துறை தூத்துக்குடியில் நன்றாக வளர்ந்ததால் பலரும் ஷிப்பிங் வேலைக்குச் செல்ல ஆசைப்பட்டனர். ஏதோ ஒரு வகையில் ஸ்டெர்லைட் பயன்படும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்ததால் அதற்கு எதிராக அவ்வப்போது நடைபெற்ற போராட்டங்கள் மக்களின் கவனத்திற்கு பெரியளவில் வரவில்லை. அதுவரை சிறிய அளவில் கண்டன போராட்டமாக நடந்துவந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் 2010-ம் ஆண்டு கலெக்டர் ஆபிஸை இழுத்து மூடும் அளவுக்கு வளர்ந்தது. அதே ஆண்டில் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உத்தரவு வந்தது. உத்தரவு வந்த ஒரு மாதத்திலேயே ஸ்டெர்லைட்டை மீண்டும் இயக்கலாம் என்ற மறு உத்தரவும் வந்து பேக்டரியும் இயங்க ஆரம்பித்தது. 

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கும்போதெல்லாம் எங்கள் பள்ளிக்கு தரைதளம் அமைத்துக்கொடுத்த ஸ்டெர்லைட்டிற்கு நன்றி, எங்கள் கோயிலுக்கு நன்கொடையளித்த ஸ்டெர்லைட்டிற்கு நன்றி என பல்வேறு பேனர்களையும் காணலாம். "ஸ்டெர்லைட்டுனால என்னப்பா வந்துடப்போவுது" என ஆதரவுக்குரல்களும் ஆங்காங்கே கேட்கும். "கோடி கோடியா இலாபம் பார்க்குறவன் அதுல இருந்து சின்னதா செலவு பண்றான். இதுல என்ன இருக்கு" என்ற எதிர்வாதமும் கேட்காமல் இல்லை. 

காலம் செல்ல செல்ல ஸ்டெர்லைட் பாதை பழகிப்போன ஒன்றாக மாறிவிட்டது. அந்த கிராமங்களைப் பார்க்கும்போது பரிதாப உணர்வும் ஸ்டெர்லைட்டைக் கடக்கும்போது மூக்கை மூடிக்கொள்ளுவதும் வழக்கமாய் இருந்ததுமந்த கிராமங்களின் வழியே செல்லும்போது தண்ணீரில்லாத பெரிய குளங்களும், கிணறுகளும், கண்மாய்களும் இன்னும் மூடப்படாமல் அப்படியே இருக்கும். மழை பெய்ந்து தண்ணீர் நிரம்பி முன்பு போல் விவசாயம் செய்துவிடமாட்டமா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடுதான் அந்தக் கிணறுகளும் குளங்களும். விவசாயம்தான் கையை விட்டுப் போனதென்றால் அந்த கிராமத்து மக்கள் பெரும்பாலானோரின் உடல்நலத்தையும் அந்த நச்சு மண்ணும் காற்றும் பிடுங்கி விட்டது. பலரின் தோல்கள் என்னவென்று சொல்லத் தெரியாத நோய்கள் பாதிக்கப்பட்டது. பலரும் கேன்சர் நோயாளிகளாக தூத்துக்குடி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இன்னும் கொஞ்ச வருடங்களில் உண்மையிலேயே கைவிடப்பட்ட இடங்களாக அந்தக் கிராமங்கள் மாறினாலும் ஆச்சரியமில்லை. அந்தக் கிராமங்களுக்கு செல்லும் போதெல்லம் சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டிதான் நினைவுக்கு வரும். 

செய்திகளில் திருநெல்வேலியில் பலத்த மழை எனப் பார்க்கும்போதெல்லாம் தூத்துக்குடி வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும். எங்கள் ஊரின் அருகே வரைக்கும் வரும் மழை மேகங்கள் இங்கே மட்டும் மழையைப் பொழியாது கலைந்துவிடும். ஏறக்குறைய இதுதான் சின்ன வயதிலிருந்து மழை பற்றி என் மனதிற்குள் பதிந்திருக்கும் சித்திரம். மழை விடுமுறை என்பது கூட அநேக நேரங்களில் கனவுதான். 

தூத்துக்குடியில் மழையின் அளவு குறைய குறைய ஸ்டெர்லைட்டின் கறுமண் குவியலும் புகையின் வீச்சும் அதிகமானது எதேச்சையாக நிகழ்ந்தது என நம்ப முடியவில்லை. ஸ்டெர்லைட்டை விட்டு கொஞ்சம் தூரமாக இருந்த கிராமங்களிலும் கடந்த 15 வருடங்களில் விவசாயம் அருகிவிட்டது. வானம் பார்த்த கரிசல் பூமிகளான அவற்றுக்கு மழையைத்தவிர வேறு வழியில்லை. கரிசல்காட்டின் மயில்களையும் கீரிப்பிள்ளைகளையும் காடைகளையும் கௌதாரிகளையும் முன்பு போல் பார்க்க முடிவதில்லை. 2015 சென்னை வெள்ளத்தின்போது தூத்துக்குடியில் பெருமழை பெய்தபோதும் நிலத்தடி நீரைத் தேக்கி வைக்க முடியவில்லை. அந்த மழை முடிந்த மே மாதத்திலேயே தண்ணீர் பஞ்சம் வந்தது. 

கடைசியாக 2013-ல் ஸ்டெர்லைட்டின் நச்சுக்காற்று தூத்துக்குடி நகரத்தின் பல பகுதிகளுக்கும் பரவியது. அப்போதும் ஸ்டெர்லைட் மூடப்படவில்லை. அடுத்த வருடத்தோடு அதன் குத்தகை காலம் முடிகிறது. இன்னும் ஸ்டெர்லைட்டை அனுமதித்தால் நல்ல தண்ணீருக்கும் காற்றுக்கும் ஒவ்வொருவரும் மெஷின் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த மூன்று கிராமங்களும் அத்திப்பட்டியைப் போன்று காணாமலே போய்விடும் என்ற பட்டறிவிற்கு பின்னே மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டம் நிகழ்ந்திருக்கிறது. அதே நேரம் ஸ்டெர்லைட்டைத் தாண்டி தொடர்ச்சியான தாதுமணல் கொள்ளையும் கெமிக்கல் தொழிற்சாலையின் கழிவுகளும் அனல்மின் நிலையங்களின் விவசாய நில அழிப்பும் தூத்துக்குடியை வாழத்தகுதியற்ற இடமாக மாற்றி வருகிறது. இந்த மாபெரும் போராட்டத்தின் மூலம் மற்றவற்றிற்கும் ஸ்டெர்லைட் அளவிற்கு இடம் கொடுக்காமல் இருப்போம் என ஸ்டெர்லைட்டிலிருந்து 14 கிமீ தூரத்தில் இருக்கும் வறண்டக் கிராமத்துக்காரனாய் நம்புகிறேன்.

அடுத்த கட்டுரைக்கு