Published:Updated:

``பூச்சி ஜோசியம்... காண்டா மிருக வண்டு அதிசயம்!” -இந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம்

ஒரு காண்டாமிருக வண்டினால், அதன் எடையைவிட 850 மடங்கு எடையைத் தூக்க முடியுமாம். அது, ஒரு மனுஷன் 7 யானையைத் தூக்குவதற்கு சமம். வியப்பா இருக்குல" என்று அவர் சொல்லி முடிக்கையில் அந்த வண்டு 850 அடி உயரமாகத் தெரிந்தது.

``பூச்சி ஜோசியம்... காண்டா மிருக வண்டு அதிசயம்!” -இந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம்
``பூச்சி ஜோசியம்... காண்டா மிருக வண்டு அதிசயம்!” -இந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம்

 ``இந்தியாவின் முதல் பூச்சிகள் அருங்காட்சியகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்கிறது கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பூச்சிகள் அருங்காட்சியகம். பூச்சிகள் என்று சொன்னதுமே ஏற்படும் அருவெறுப்பை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு படியுங்கள். ஏனென்றால், வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் 6,991 சதுர அடியில் தமிழக அரசின் 5 கோடி ரூபாய் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பூச்சிகள் அருங்காட்சியகம் ஓர் அபூர்வம். 

அருங்காட்சியகம் என்றவுடன் அலுப்பூட்டும் வடிவமைப்பில் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். அருங்காட்சியகத்தின் வெளித்தோற்றமே நம்மை அசர வைக்கிறது அவ்வளவு அழகு. பார்வையாளர்களின் வசதிக்காக தானியங்கி நுழைவுச் சீட்டு வழங்கும் எந்திரமும் நுழைவாயிலில் இருக்கிறது. மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக அருங்காட்சியகம் முழுக்க சாய்வு தளம் அமைக்கப்பட்டிருக்கிறது, பூச்சி அருங்காட்சியகம் என்றவுடன் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். jurassic park’ ஏற்படுத்தும் பிரமிப்பைவிட இங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உயிரினங்கள் ஏற்படுத்தும் பரவசம் அலாதியானது. முதல் அரங்கத்தின் நடுவில் பிரமாண்டமான (violin mantis) பூச்சியின் மாதிரி வடிவம் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பூச்சியின் கழுத்து, இசைக்கருவியான வயலினை  ஒத்து இருப்பதால், இப்பூச்சிக்கு violin mantis என்று பெயர் வந்ததாம். பார்வையாளர்களைத் தோழமையுடன் வரவேற்கும் இந்தப் பூச்சியைப் பார்த்து `வாவ்' சொல்லாமல் நகர முடியவில்லை.

அரங்கம் முழுக்க, இன வாரியாக அடுக்கப்பட்ட பூச்சிகளின் பெயர்களை தங்களுக்குள் சொல்லிச் சிலாகிக்கிறார்கள் பூச்சியியல் துறை மாணவர்கள். இந்திய வரைபட வடிவம், வண்டு வடிவம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இலட்சினை வடிவம், வண்ணத்துப் பூச்சியின் வடிவம் பூச்சிகளை ஓவியம் போல காட்சிப்படுத்தியிருப்பது மனதைக் கவர்கிறது. ``பயிர் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் predators வகை பூச்சிகள், அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள், மண்ணைப் பதப்படுத்த உதவும் பூச்சிகள், துப்புரவு செய்யும் பூச்சிகள் எனக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பூச்சிகளை இதற்கு முன்பு பூச்சிகளின் மீது தவறான அபிப்ராயம் கொண்டவர்கள் பார்த்தால் குற்ற உணர்வால் தவிப்பார்கள் என்பது சத்தியம். உலகின் உயரிய இனம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மனிதனால் செய்ய முடியாத உதவிகளைப் பூச்சிகளால் செய்ய முடியும்.

அப்பேர்பட்ட பூச்சிகளைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்வதற்காக பூச்சிகளைப் பற்றிய ஏராளமான நூல்கள், பூச்சிகளை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படங்களின் பட்டியல்கள், பூச்சிகளால் உருவாக்கப்பட்ட வியக்கவைக்கும் கலைப்பொருள்கள் என அருங்காட்சியகத்தின் ஒவ்வோர் அடியும் அற்புதங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறன. அருங்காட்சியகத்தின் முடிவில்  செயற்கை நீரூற்றுடன் பட்டாம்பூச்சிகளுக்காக `குவி  மாடம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில், சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளுடன் நம் மனதும் பறந்துவிடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக `பூச்சி ஜாதகம்’ உங்களை வியப்பில் ஆழ்த்திவிடும். ஆம், பூச்சி ஜாதகம் பார்க்க நீண்ட வரிசையில் அலைமோதுகிறார்கள் மாணவர்கள். உங்களுடைய பெயரையும் பிறந்த தேதியையும் சமர்ப்பித்தால், உங்கள் குணத்தை ஒத்த பூச்சியை அடையாளம் காட்டுகிறது கணினித் திரை.

 பூச்சிகள் அருங்காட்சியகம் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மாணவியான வி.காவியாவிடம் பேசினோம், ``நாங்க வேளாண் கல்லூரி மாணவர்கள். அதனால அடிப்படையிலேயே பூச்சியியல் படிச்சிருக்கோம். என்னதான் ஏட்டில் படிச்சாலும் இந்த மியூஸியத்துல எங்களுக்கே தெரியாத பல ஆச்சர்ய தகவல்கள் அடங்கியிருக்கு. எவ்வளவு  பூச்சிகள் இருக்குனு பாருங்களேன். ஒவ்வொன்றும் தனி அழகு. உத்துக் கவனிச்சா, இந்த உலகத்துல தப்பிப் பிழைப்பதற்காக ஒவ்வொரு பூச்சியும் பிரத்யேக உடலமைப்பும் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். ஒரு காண்டாமிருக வண்டினால், அதன் எடையைவிட 850 மடங்கு எடையைத் தூக்க முடியுமாம். அது, ஒரு மனுஷன் 7 யானையைத் தூக்குவதற்கு சமம். வியப்பா இருக்குல" என்று அவர் சொல்லி  முடிக்கையில் அந்த வண்டு 850 அடி உயரமாகத் தெரிந்தது. 

இங்கு இருக்கும் 80,000-க்கும் மேற்பட்டப் பூச்சிகளைச் சேகரிக்க மேற்கொள்ளப்பட்ட சாகசக் கதைகளைக் கேட்டால் உடல் சிலிர்க்கிறது. இந்தியா முழுக்க இருக்கும் பல்கலைக்கழகங்கள், insectorium, பூச்சியியல் ஆய்வகங்கள் எனப் பல இடங்களுக்கு இதற்காக அலைந்து திரிந்திருக்கிறார்கள். பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் ஆய்வகத்தில் சொற்ப அளவே இருக்கும் அரியவகைப் பூச்சி ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு பயணம் செய்து அந்த ஆய்வகத்தை அடைந்தால் அந்தப் பூச்சியின் முன்னங்காலில் இருக்கும் மெல்லிய கொம்பு  உடைந்திருந்ததாம். அதனால், அந்த specimen நிராகரிக்கப்பட்டதாம். இப்படிப் பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் அசராமல் பூச்சிகளைத் தேடியிருக்கிறார்கள். அதிகாலை 2 மணிக்கு மட்டுமே வெளியே வரும் பூச்சியைப் பிடிப்பதற்காக இரவு முழுக்க அசையாமல் அடர்ந்த காட்டில் நின்ற கதையையும், ஆர்வ மிகுதியால் யானை சானத்தில் இருந்த வண்டை வெறும் கையால் எடுத்த நிகழ்வும், நம் ஆட்காட்டி விரல் அளவே இருக்கும் பூச்சியைப் பிடிப்பதற்காக, நெடுநாள்கள் ஜீப்பில் அலைந்த கதையும்  கேட்கும்பொழுது இந்தப் பூச்சிகள் அருங்காட்சியகம் எவ்வளவு சிரத்தையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.