Published:Updated:

நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 2 #Neutrino

நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 2 #Neutrino
News
நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 2 #Neutrino

அம்பரப்பர் மலைப் பகுதியில் மொத்தம் ஏழு மலைகள் இருக்கின்றன. சின்னபொட்டிபுரம், பெரியபொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், டி.புதுக்கோட்டை, குப்பனசாரிபட்டி  ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்கு இந்த ஏழு மலைகள் தான் குல தெய்வம்.

"ஜக்கம்மா... தாயே... காப்பாத்தும்மா...

அழியப் போகும் அம்பரப்பர் மலைய...

ஜக்கம்மா...தாயே...காப்பாத்தும்மா..." 

டுமையான வெயிலில் ஆடு, மாடுகளை அம்பரப்பர் மலையில் மேய்த்துவிட்டு ஊர் திரும்பியிருந்தனர் சிலர். பலதரப்பட்ட கூலி வேலைகளை முடித்துவிட்டு வந்திருந்த ஒரு பெண்கள் கூட்டம், இரவுக்கு சோற்றை உலையில் வைத்துவிட்டு வந்து உட்கார்ந்திருந்தது. முடியப்போகும் அந்த நாளின், கடைசி சரக்குகளை ஏற்றிக் கொண்டு அம்பரப்பர் மலையை நோக்கி  மணல் லாரியும், தண்ணீர் லாரியும் புழுதி கிளப்ப அந்தக் கிராமத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தக் கட்டுமானம் தொடங்கப்பட்டதிலிருந்தே, கிராம மக்கள் மாலை நேரங்களில் கூடி, தங்கள் குல தெய்வத்தை வேண்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அம்பரப்பர் மலை இவர்களுக்கு குல தெய்வம். மலையின் உச்சியில் ஒரு கோவிலும், மலையடிவாரத்தில் ஒரு கோவிலும் இருக்கின்றன. 

அம்பரப்பர் மலைப் பகுதியில் மொத்தம் ஏழு மலைகள் இருக்கின்றன. சின்னபொட்டிபுரம், பெரியபொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், டி.புதுக்கோட்டை, குப்பனசாரிபட்டி  ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்கு இந்த ஏழு மலைகள் தான் குல தெய்வம். மலையடிவாரத்தில், ஒரு சிறிய ஓலைக் குடில் ஒன்று உள்ளது. அந்தக் குடிலில் ஏழு மலைகளைக் குறிக்கும் விதமாக ஏழு நடுகற்கள் இருக்கின்றன. இந்த மலையை உடைக்கப் போகிறார்கள் என்றதும், இந்த மக்களுக்கு... அது என்ன திட்டம்? அது என்ன செய்யும்? என்ற கேள்விகள் எல்லாம் இரண்டாம்பட்சமாகத் தானிருந்தன.

தாங்கள் தெய்வமாக வழிபடும் மலையை, தங்கள் தெய்வம் குடி கொண்டிருக்கும் மலையை உடைக்கப் போகிறார்கள் என்ற கோபம் தான் முதற்கட்டத்தில் எழுந்தது. மேலும், இந்த மலைகள் அவர்களின் வாழ்வாதாரம். பலரும் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் பகுதி இந்த மலைகள் தான். 

ஒரு தேசத்தின் அறிவியல் ஆராய்ச்சி குறித்து பேசுமிடத்தில், ஒரு சில கிராமத்தைப் பற்றியும், அவர்களின் கலாசார, பண்பாட்டு முறைகள் குறித்தும், அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும், இறை நம்பிக்கைக் குறித்தும் பேச வேண்டியது அவசியம் தானா? என்ற கேள்வி எழலாம். 

ஆம்...பேசத் தான் வேண்டும் என்கிறார்கள் ஒருசாரார். இந்திய தேசத்திற்கே பெரிய அடையாளமாகவும், பொருளாதார ரீதியில் பெரும் லாபத்தை ஈட்டித் தரக்கூடிய "சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை", இந்தியாவின் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் இந்துக்களின் நம்பிக்கை காயப்படும் என்ற நல்ல நோக்கிற்காக, அந்தத் திட்டத்தை செயல்படுத்த மறுத்த மத்திய அரசு இருக்கும்பட்சத்தில்... அம்பரப்பர் சாமியின் வாழ்விடத்தை உடைத்து, பெயர்த்து எடுப்பதை அனுமதிக்க முடியாது என்ற குரல்களும் பொட்டிபுரம் பகுதியில் கேட்கத்தான் செய்கின்றன. 

சரி... இந்தக் கூற்றுகள் எல்லாம் விவரம் தெரியாத, விவரம் புரியாத கிராமத்து மக்களின் கேள்விகளாகவே இருக்கலாம். உல்ஃப்கேங் பாலியின் சுவிட்சர்லாந்த் ஆய்வுக் கூடத்தில் தொடங்கிய நியூட்ரினோவின் வரலாற்றுக்கு முன், தேனி அம்பரப்பர் மலைப் பகுதி மக்களின் இந்தக் கருத்துக்கள் விளையாட்டுத்தனமாக, வேடிக்கையாக தெரியலாம். இருந்தாலும், எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ள முனையும் போது, அதன் அத்தனைக் கோணங்களையும் பார்க்க வெண்டியது அவசியமாகிறது. அதன் பொருட்டே, இந்தக் கருத்துக்களை இங்கு பதிந்துள்ளேன். 

"ஐ.என்.ஓ" (INO) தொடக்கமும், தொடர்ந்த சர்ச்சைகளும் :  

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவைச் சேர்ந்த, பொட்டிபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அம்பரப்பர் மலையில், இந்தியாவின்  நியூட்ரினோ ஆராய்ச்சி மையமான ஐ.என்.ஓவிற்கு (India Based Neutrino Observatory), 1-06-2011 அன்று சுற்றுசூழல் அனுமதி வழங்கியது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். அதாவது, திட்டம் தொடங்க பச்சை கொடி காட்டப்பட்டது. 

அதே சமயத்தில், சூழலியலுக்குப் பெரும் சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்திற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மதுரை உயர்ந்தீமன்ற கிளையில் வழக்குத் தொடுக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. 

நியூட்ரினோ குறித்த ஆவணங்களை ஆராயத் தொடங்குகிறார்கள் சூழலியலாளர்கள். 

"இந்தியாவிலிருக்கும் அணு உலைகளிலிருந்தும், இன்னும் பிற இடங்களிலிருந்தும் அணுக் கழிவுகளைக் கொண்டு வந்து இங்கு கொட்டப் போகிறார்கள்..." என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிரசாரம் செய்தார்கள் சூழலியலாளர்கள். 

" அணுக்கழிவா? கிடையவே கிடையாது. இது நியூட்ரினோ ஆராய்ச்சி மையம். இங்கு அதெல்லாம் செய்ய வாய்ப்பே இல்லை." என்று சொல்லி, நியூட்ரினோ குறித்த விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்தனர் ஆராய்ச்சியாளர்களும், அதிகாரிகளும். 

தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ஒரு ஆவணத்தை சுட்டிக் காட்டினார்கள் எதிர்ப்பாளர்கள். 

பொதுவாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்திற்கு கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற, மொத்தம் 12 பிரிவுகள் இருக்கின்றன. இதில் ஐ.என்.ஓவை பிரிவு 1 (E) யின் கீழ் பதிந்திருந்தார்கள். அது அணுக்கழிவு மற்றும் அணுக்கழிவு மேம்பாட்டுத் திட்டங்களுக்கான பிரிவு. அதன் அடிப்படையில் தான், "அணுக்கழிவு கொட்டப் போகிறார்கள்" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஐ.என்.ஓ அதை மாற்றியும் கூட, இன்றும் பலர் அணுக்கழிவு தான் இங்கு கொட்டப்போகிறார்கள் என்ற தவறான பிரசாரத்தைத் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

"அணுக்கழிவு பிரிவில் இதைச் சேர்த்தது ஒரு எழுத்தர் பிழை (A Clerical Error)" என்று சொல்லி, அடுத்ததாக  பிரிவு 8-யின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்கிறது ஐ.என்.ஓ. பிரிவு 8 என்பது, ஒரு பொதுவான கட்டடத்திற்கான அனுமதி கோரும் பிரிவு. அதாவது அங்கு 2.5கிமீ சுரங்கம் தோண்டும்  நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அல்ல... ஒரு சாதாரண கட்டடம் கட்ட வேண்டும் என்றால் அனுமதி கோரும் பிரிவு தான் " 8 ". 

இதற்கிடையில், பிப்ரவரி 14, 2015 அன்று "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பின் சார்பாக சென்னையில் இருக்கும், "தேசிய பசுமைத் தீர்ப்பாயம் - தென்மண்டல பிரிவில்" நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக ஒரு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்கிறார்கள். 

அந்த வழக்கு எதன் அடிப்படையில் போடப்படுகிறது என்றால்...

" 2010யில் ஐ.என்.ஓ, ஒரு "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு"  அறிக்கையைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அதை கோவையைச் சேர்ந்த "சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம்" மேற்கொண்டது. இதில் இரண்டு பிரச்னைகள். 

ஒன்று, "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு" அறிக்கையைத் தயாரிப்பதற்கான மத்திய அரசின் அங்கீகாரம் சலீம் அலிக்கு கிடையாது. 

மற்றொன்று, "நியூட்ரினோ ஆய்விற்காக தோண்டப்படும் சுரங்கத்தினால்...அதற்கு வைக்கப்படும் வெடிகளால்... வெடிகள் உடைத்து நொறுக்கும் பாறைகளால்... (Blasting Impact) என்ன மாதிரியான சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்படும் என்பதை ஆராய வேண்டும். ஆனால், எங்களால் அதை செய்ய இயலாது. நாங்கள் அதைச் செய்யவில்லை " என்று சலீம் அலியின் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனில், 2.5 கிமீ சுரங்கம் தோண்ட,பல்லாயிரம் கிலோ வெடி மருந்துகள் கொண்டு,  6 லட்சம் டன் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படும் இந்தத் திட்டத்தினால் ஏற்படும்  "Blasting Impact" குறித்த எந்த ஆய்வுகளுமே இது நாள் வரை மேற்கொள்ளப்படவில்லை. 

சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற, மொத்தம் இருக்கும் 12 பிரிவுகளையும் செக்‌ஷன் A மற்றும் செக்‌ஷன் B என்று இரண்டாகப் பிரிக்கிறார்கள். செக்‌ஷன் B என்பது சாதாரணமான கட்டடங்களுக்குரிய பிரிவு. செக்‌ஷன் A என்பது சூழலியல் சிக்கல்களை ஏற்படுத்தலாம் அல்லது கவனத்துடன் பரீசிலிக்க  வேண்டிய கட்டடங்களுக்கான பிரிவு. இதில், நியூட்ரினோ திட்டத்தை செக்‌ஷன் B பிரிவில் தான் விண்ணப்பித்திருந்தது ஐ.என்.ஓ. இந்தச் சட்டத்தின் பொது விதி என்பது..." சில திட்டங்கள் செக்‌ஷன் B பிரிவில் வந்தாலும் கூட, திட்டத்தின் இடம் தேசிய பூங்காக்களுக்கு அருகில் அமைந்திருந்தால் அதை செக்‌ஷன் Aஆவாக கருத வேண்டும்" என்று இருக்கிறது. நியூட்ரினோ ஆய்வகத்தைப் பொறுத்தவரை, அது கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவிலிருந்து 4.5 கிமீ தூரத்திலேயே அமைந்திருக்கிறது. 

அதனடிப்படையில், பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் "இந்தத் திட்டத்தை கண்டிப்பாக செக்‌ஷன் A பிரிவில் தான் சேர்க்க வேண்டும். எனவே திட்டத்தை மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்யுங்கள்" என்று சொல்லி 20-03-2017 அன்று திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம். 

இதற்குப் பிறகு, ஐ.என்.ஓ மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்து (இந்த முறையும் செக்‌ஷன் B பிரிவில் தான் விண்ணப்பித்தது) பல சட்ட சிக்கல்களை கடந்து...இறுதியாக, மத்திய நிபுணர் குழு (Expert Appraisal Committee) அளித்த பரிந்துரையின் பேரில்... "நியூட்ரினோ திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதி, உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும்" என்று 26-03-2018 அன்று உத்தரவிட்டது மத்திய அரசு. 

இத்தனைத் தடைகளைக் கடந்து, இன்று திட்டத்திற்கான அனுமதி கிடைத்துவிட்டது. "நியூட்ரினோ"  எந்த வகையிலும், மனிதர்களுக்கோ பிற உயிரினங்களுக்கோ ஆபத்து விளைவிக்கும் ஒரு துகள் அல்ல என்பதை இந்திய விஞ்ஞானிகளும் தொடர்ந்து விளக்கி வருகின்றனர். உலக ஆராய்ச்சியாளர்களும் அதை நிரூபித்து உள்ளனர். இருந்தும், இன்றும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணம் தான் என்ன? 

"நியூட்ரினோ ஆபத்து இல்லை. ஆனால், நியூட்ரினோவைக் கொண்டு இவர்கள் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி யாருக்காக? எதற்காக ? என்பதெல்லாம் எங்களுக்கு அச்சத்தைக் கொடுக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவின் ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்துடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை இந்திய அரசு ஏன் பகிரங்கமாக ஒத்துக் கொள்ளாமல் மறைக்கிறது? நியூட்ரினோவின் இந்த ஆராய்ச்சியே அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்து வெடிக்கச் செய்வதற்கும், செயலிழக்கச் செய்வதற்கும் என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை என்று முழுவதுமாக மறுத்திட முடியாது... " என்று நியூட்ரினோ திட்டத்தின் மறுபக்கத்தை உடைக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜன்.