Published:Updated:

50 ஆண்டுகளுக்கு முன்பு வறண்ட பூமி... இப்போது 5500 ஏக்கர் செழுமையான காடு!

50 ஆண்டுகளுக்கு முன்பு வறண்ட பூமி... இப்போது 5500 ஏக்கர் செழுமையான காடு!
50 ஆண்டுகளுக்கு முன்பு வறண்ட பூமி... இப்போது 5500 ஏக்கர் செழுமையான காடு!

1969லிருந்து இன்று வரை டேவிட்டின் கடின உழைப்பில் 5500 ஏக்கர் நிலப்பரப்பு பரந்த காடாகப் பல உயினங்களுக்கும் பறவைகளுக்கும் ஏன் மனிதர்களுக்குக் கூட அடைக்கலமாக இருக்கிறது. காடு என்பது வெறுமனே மரங்கள், செடிகள் நிறைந்தது மட்டுமல்ல பல்வேறு உயினங்களும் அவற்றுக்கான வாழ்முறையும் சூழல் சங்கிலியும் கொண்டதுதான் காடு. இத்தகைய விஷயங்களைக் கருத்தில் கொண்டு உயிர்பல்வகைத் தன்மைக்காக சில வேலைகளைச் செய்துள்ளார் டேவிட். அவற்றில் ஒன்றாக 1998ல் மூன்று குகைகளை உண்மையான குகைகளைப் போலவே உருவாக்கியுள்ளார்.

ன்னுடைய கல்லூரிக் காலங்களில் வீடு வீடாக ஏறி இறங்கி வேக்குவம் கிளீனர்களை (vacuum cleaners) விற்கத் தொடங்குகிறார் அந்த மனிதர். கல்லூரி முடித்த பின்னரும் அதே வேலையில் இன்னும் கடினமாக உழைக்கிறார். சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அவரைக் கிண்டலாகவும் விநோதமாகவும்தான் பார்த்தார்கள். ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? அதுவும் வீடு வீடாகச் சென்று வேக்குவம் கிளீனர்களை விற்கும் சேல்ஸ்மேன் வேலையில்? ’அலுவலகத்துக்குள்ளேயே உட்கார்ந்து நோகாமல் வேலை செய்யலாமே?’ எனப் பலரும் அறிவுரை கூறினார்கள். ஆனால், தினமும் 40 மைல் தூரம் பயணம் செய்து பள்ளிக்குச் சென்ற அவருக்கு இந்தக் கடின உழைப்பு தேவையாய் இருந்தது. விரைவிலேயே சர்ச் சிக்கன் (Church's Chicken) எனும் முக்கியமான நிறுவனத்தைக் கட்டியெழுப்பி அதற்குத் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். நாம் பார்க்கப் போவது இந்த வெற்றிக் கதை அல்ல. இதைவிட அதிகமான உழைப்பும் பொறுமையுமாக தனி ஒருவனாகக் காட்டினை வளர்த்தெழுப்பிய கதை. 

அவர்தான் அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் பிறந்த டேவிட் பம்பெர்கெர் (David Bamberger). சிறுவயது முதலே ஏழ்மைச் சூழலில் வளர்ந்தவர். அமெரிக்காவின் சர்ச் சிக்கன் நிறுவனத்தின் வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டுள்ளார். அத்தனை வருடங்கள் கடினமாக உழைத்ததில் 40 வயதுகளிலேயே கோடிக்கணக்கில் சொத்து, ஆடம்பர வாழ்க்கை என செட்டிலாகிவிட்டார். அதன்பின் எல்லோரும் செய்வது இருக்கும் சொத்துகளை கூட்டிக் கொள்வதாகத்தான் இருக்கும். ஆனால், டேவிட்டின் பயணம் முற்றிலும் யாரும் எதிர்பார்க்காதது. 1969ல் டெக்ஸாஸ்(Texas) மாகாணத்தின் ஜான்சன் சிட்டிக்கு (Johnson City) அருகில் உள்ள மலைப்பகுதியில் ஒன்றுக்கும் உதவாத 5500 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். அதை மறுசீரமைத்து காடுகளை உருவாக்குவதே அவரது எண்ணம். அப்போதும் அவர் தொழிலதிபர்தான். 500 அடி ஆழத்துக்கு ஏழு கிணறுகளை வெட்டியும் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. அந்தப் பகுதியே எதற்கும் உதவாத புதர்களை உடைய வறண்ட நிலப்பரப்பு. அதன்பிறகு அங்குள்ள புதர்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக அகற்றினார். இதற்கிடையில் சர்ச் சிக்கன் நிறுவனமும் நன்றாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய 1600 கிளைகளைத் திறந்தனர். 1974-ம் ஆண்டு முழுவதுமாக சர்ச் சிக்கன் நிறுவனத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தன் பங்குகளை விற்றுவிட்டு வறண்ட நிலத்தில் வனத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். 

புதர்களை அகற்றியபின் தங்களுடைய பாரம்பர்யமான புல் வகைகளை வளர்க்க ஆரம்பித்தார். மேலும், நூற்றுக்கணக்கான மரங்களை நட்டுப் பராமரிக்க ஆரம்பித்தார். இரண்டரை வருடங்கள் கழித்து இயற்கை வசந்தகாலத்தை அந்நிலப்பரப்புக்குக் கொடையாக அளித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு வசந்தகாலங்களை அந்நிலப்பரப்பு கடந்திருக்கும். 1969லிருந்து இன்று வரை டேவிட்டின் கடின உழைப்பில் 5500 ஏக்கர் நிலப்பரப்பு பரந்த காடாகப் பல உயினங்களுக்கும் பறவைகளுக்கும் ஏன் மனிதர்களுக்குக் கூட அடைக்கலமாக இருக்கிறது. காடு என்பது வெறுமனே மரங்கள், செடிகள் நிறைந்தது மட்டுமல்ல பல்வேறு உயினங்களும் அவற்றுக்கான வாழ்முறையும் சூழல் சங்கிலியும் கொண்டதுதான் காடு. இத்தகைய விஷயங்களைக் கருத்தில் கொண்டு உயிர்பல்வகைத் தன்மைக்காக சில வேலைகளைச் செய்துள்ளார் டேவிட். அவற்றில் ஒன்றாக 1998-ல் மூன்று குகைகளை உண்மையான குகைகளைப் போலவே உருவாக்கியுள்ளார். அப்பகுதியில் காணப்படும் மெக்சிகன் வௌவால்களுக்கு (Mexicon Bats) இந்தக் குகைகள் உறைவிடமாக இருக்கும் என்ற காரணத்தால் உருவாக்கினார். ஆனால், குகை உருவாக்கிய சில வருடங்கள் எதுவும் அதற்குள் வரவில்லை. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கிய வௌவால்கள் இப்போது வருடந்தோறும் கோடைக்காலத்தில் அதிக எண்ணிக்கையில் வந்துவிடுகின்றன. ஏறக்குறைய 40,000 வௌவால்களுக்கு கோடைக்காலத்தில் இதுதான் வீடு. 

இன்னும் கேட்க கேட்கப் பல சுவாரஸ்யங்களைத் தருகிறது டேவிட்டின் காடு. அதற்கு அவர் சூட்டியிருக்கும் பெயர் சேலா, பம்பெர்கெர் ராஞ்ச் (Selah, Bamberger Ranch). சேலா(Selah) என்பதற்குப் பொருள் முழுதுமாக நிறுத்து, பாதியில் நிறுத்து, உன்னைச் சுற்றிப் பார்க்கும் அனைத்துக்கும் எதிர்வினையாற்று என்பதே. சின்ன வயதில் பாசுரங்களில் படித்ததைக் காட்டுக்குப் பெயராக்கியுள்ளார். சின்ன வயதில் அவரது அம்மாவின் வார்த்தைகளும் அவர் படித்த ப்ளசன்ட் வேலி (Pleasant Valley) எனும் புத்தகமும்தான் இயற்கையின் மீதான அதீத ஈடுபாட்டுக்குக் காரணம். இயற்கையோடு இணைந்து செயல்பட வேண்டுமே அன்றி அதை எதிர்த்து இல்லை என அடிக்கடி அவரது அம்மா சொல்வதுதான் டேவிட்டின் இந்த உழைப்புக்கு உந்துதல். 50 வருடங்களுக்கு முன்பு எவரும் விரும்பாத, சொட்டுத் தண்ணீரில்லாத சேலா இப்போது 213 பறவை இனங்களின் கூடாரம். அதுமட்டுமல்ல ஆறு வகையான கற்றாழைகள், 28 வகையான பாலுட்டிகள், 12 வகையான பூச்சிகள், 23 வகையான பாம்புகள், 117 வகையான மரங்கள் என நுண்ணுயிரிலிருந்து மலைச்சிங்கம் வரை ஒரு உயிர்க்கோளத்தை தன்னுள் கொண்டுள்ளது. ஏழுக் கிணறுகளைத் தோண்டியும் கிடைக்காத நீர், இன்று நிலத்தின் மேற்பரப்பில் குளமாக, ஏரியாக 27 வடிவங்களில் சேலாவில் இருக்கிறது. 

ஆண்டுக்கு 3000க்கும் மேற்பட்டோர் இந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க வருகின்றனர். பல்வேறு பயிலரங்குகளும் முகாம்களும் நடத்தப்படுகிறது. தன்னைப் போல நிலம் வைத்திருப்பவர்கள் பலருக்கும் காடு உருவாகுவது குறித்த விழிப்பு உணர்வைக் கொடுக்கிறார் டேவிட் பம்பெர்கெர். இங்கு வரும் பலருக்கும் அழிவுநிலையில் இருக்கும் டெக்ஸஸ் ஸ்னோபெல் (Texas Snowbell) போன்ற அழிவுநிலையில் இருக்கும் பல மரங்களைக் குறித்த தகவல்களைச் சொல்லி அவற்றை வளர்க்கச் சொல்கிறார். வாழ்நாள் முழுக்க காடுகள் பாதுகாப்பு நிலத்தைச் சரியாக பயன்படுத்துவதைப் பற்றி விழிப்பு உணர்வு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் டேவிட். நீங்கள் பணக்காரர் என்பதால் இதெல்லாம் எளிதில் உங்களுக்குச் சாத்தியம், பணமில்லாதவர்கள் என்ன செய்வது? என்ற விமர்சனமும் டேவிட் மீது வைக்கப்படுகிறது. அதற்கு அவர் சொல்லும் பதில் எல்லோரையும் சிந்திக்க வைக்கக்கூடியது. 

உங்களுக்கு புல்டோசர் தேவையில்லை. உங்களிடம் இருக்கும் சின்னக் கோடாரிகளும், மண்வெட்டிகளும், சின்னச் சின்ன சாமான்களும் தள்ளுவண்டிகளும்கூட போதும் உங்களிடம் இருக்கும் நிலத்தை மறுசீரமைக்க. இந்தக் கருவிகளைக்கூட புதிதாக வாங்க வேண்டாம். ஏற்கெனவே பயன்படுத்தியதைக்கூட வைத்து வேலை செய்யலாம். சிறிய நிலத்தைச் சீரமைத்தால்கூட போதுமானது. விவசாய நிலங்களும் காடுகளும் வேகமாக அழிந்து வரும் நிலையில் நிலத்தைச் சீரமைத்து அவற்றில் எதையாவது விதைப்பது என்பது காலத்தின் தேவை.

இந்தப் பூமியிலிருக்கும் எல்லோருக்குமே நிலம்தான் வாழ்வு.

அடுத்த கட்டுரைக்கு