Published:Updated:

சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையாள்வதில் இந்தியாதான் மோசம்! - இதெல்லாம் பெருமையா பாஸ்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையாள்வதில் இந்தியாதான் மோசம்! - இதெல்லாம் பெருமையா பாஸ்?
சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையாள்வதில் இந்தியாதான் மோசம்! - இதெல்லாம் பெருமையா பாஸ்?

சுற்றுச்சூழலுக்கும் சமூகப் பொருளாதாரத்துக்கும் என்னப்பா சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு வாழும் சாட்சியங்களாக நிற்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

சுற்றுச்சூழல் சீர்கேடு. சமீப காலங்களில் மக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். அது வெறும் சொல்லல்ல. பல்லாயிரம் மக்கள் தங்கள் வாழிட இழப்பு மற்றும் சமூகப் பொருளாதாரப் பின்னடைவுகளால் அனுபவிக்கும் வலிகளையும் வேதனைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் முக்கியப் பிரச்னை. `சுற்றுச்சூழலுக்கும் சமூகப் பொருளாதாரத்துக்கும் என்னப்பா சம்பந்தம்' என்று கேட்பவர்களுக்கு வாழும் சாட்சியங்களாக நிற்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். அதைப்போல் உலகளவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் விளையும் பாதிப்புகளும் அதனால் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களும் கடந்த பத்தாண்டுகளில் முன்னெப்போதையும் விட அதிகமாகியிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மொத்தம் எத்தனை பிரச்னைகள் சுற்றுச்சூழல் சார்ந்தும் அதனால் விளையும் சமூகப் பாதிப்புகளையும் மையமாகக் கொண்டது என்பதை உலகச் சுற்றுச்சூழல் நீதி அட்லஸ் (Environment Justice Atlas) என்ற அமைப்பு ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதன்படி உலகளவில் சுமார் 2446 பிரச்னைகளும், அதில் இந்தியாவில் மட்டும் தற்போது 222 சுற்றுச்சூழல் சார்ந்த மக்கள் போராட்டங்களும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் சமயமே எங்காவதொரு மூளையில் அடுத்த பிரச்னைக்கான அடித்தளம் இடப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

நீரியல் மேலாண்மை, கழிவு மேலாண்மை போன்ற அடிப்படைப் பிரச்னைகளில் தொடங்கி மரபுசார் எரிசக்திகளால் விளையும் பாதிப்புகள், காலநிலை மாற்றத்தின் அதீத விளைவுகள், பல்லுயிர்ச் சூழல் இழப்புகள், நில, நீர் மாசுபாடுகளும் அதனால் விளையும் உடற்கோளாறுகளும் என்று பிரச்னைகளுக்கான காரணங்கள் நீண்டுகொண்டே போகின்றன; அவற்றை உருவாக்கி உற்பத்தி செய்துகொண்டிருக்கும் விதிகளைச் சரியாகக் கடைப்பிடிக்காத தொழிற்சாலைகளின் எண்ணிக்கையைப் போலவே.

தூத்துக்குடி தாமிர ஆலையில் தொடங்கி, தொழிற்சாலைகளின் நலனுக்காகவே தியாகம் செய்யப்பட்ட நகரமான எண்ணூர், சரியான கழிவு மேலாண்மைத் திட்டமின்றிச் சூழலை அழித்துக்கொண்டிருக்கும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, இரும்புத்தாது வெட்டியெடுக்கும் சுரங்கத்துக்கு எதிராக 11 வருடங்களாகப் போராடிவரும் திருவண்ணாமலையின் கவுத்தி-வேதியப்பர் மலைகளைச் சுற்றியுள்ள மக்கள் என்று இந்தியாவின் 222 சூழலியல் பிரச்னைகளில் தமிழகத்தில் மட்டும் 13 பிரச்னைகள் இடம்பெற்றுள்ளன.

``ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் நீதி அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் நடத்திய ஆய்வுகள் சிறப்பானதுதான். ஆனால் இந்தியாவின் மக்கள் தொகையும் அதன் விரிந்த நிலப்பரப்பும் அவர்களுக்குக்கூடத் தெரியாத இன்னும் பல சூழலியல் பிரச்னைகளைக் கொண்டிருக்கலாம். 222 என்ற எண்ணிக்கை தரவில் பதிவு செய்யப்பட்டது மட்டுமே. தரவு என்றுமே முழுமையடைவதில்லை" என்கிறார் உலகளவில் இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த திரு. ஜோன் மார்டினெஸ் அலையர் ( Prof. Joan Martinez Alier).


இத்தகைய பிரச்னைகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் தோற்றங்களுக்குக் கூறப்படும் முக்கியக் காரணம் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவை முக்கியப் பங்காற்றுகின்றன என்பதுதான். உதாரணமாக ஜார்கண்டில் இருக்கும் ஜரியா நிலக்கரிச் சுரங்கம் 1800களில் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை தேசப் பொருளாதாரத்தின் மைல் கல்லாக அனைவரும் கொண்டாடினார்கள். ஆனால், 1916லிருந்து இன்றுவரை அதாவது கடந்த 100 வருடங்களாக அந்தச் சுரங்கத்தில் நிலத்தடித் தீ விபத்துகள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அதைச் சரிசெய்ய அச்சுரங்கத்தின் நிறுவனர்களோ அரசாங்கமோ போதுமான முயற்சிகளை இதுவரை எடுக்கவில்லை. அதனால் ஏற்படும் காற்று மாசுபாடுகள் அந்தப் பகுதி மக்களைப் பல தலைமுறைகளாக இன்னும் வதைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதைப்போல பல்லாண்டு காலமாக நிகழ்ந்துவரும் சுற்றுச்சூழல் சுரண்டல்களும் அதன் பாதிப்புகளும் பற்றிய விழிப்பு உணர்வு சமீப காலங்களில்தான் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. அதன் விளைவாக மக்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகவும் சில தன்னார்வலர்களின் வழிகாட்டுதல்களோடும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதன் பலன்களை அனுபவிக்கும் காலம்தான் நமது கண்முன் தென்படும் தூரத்தில் இல்லையோ என்ற பயம் தோன்றுகிறது. ஆம், இந்தியா அதிலும் பின்தங்கியே நிற்கின்றது.

உலகப் பொருளாதார மன்றம் யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களோடு இணைந்து நடத்திய ஆய்வில், சுற்றுச்சூழல் தொர்பான பிரச்னைகளைச் சமாளிப்பதிலும் அதற்குத் தீர்வு காண்பதிலும் உலக அளவில் இந்தியா 177வது இடத்தில் இருக்கிறது. அதிக தூரமில்லை. கடைசியிலிருந்து 4வது இடம்தான். சரியான முறையில் பிரச்னைகளைச் சரிசெய்வதில் முதலிடத்தில் இருப்பது சுவிட்சர்லாந்து. கடைசி இடத்தில் இந்தியாவைத் தொடர்ந்து காங்கோ குடியரசு, பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்காவில் ருவாண்டாவுக்கு அருகில் இருக்கும் புருண்டி(  Burundi) என்ற ஒரு நாடு கடைசி இடத்திலும் இருக்கின்றன. அதாவது மூன்றாம் உலக நாடுகளின் நிலையை விடவே வளரும் நாடான இந்தியா தனது சுற்றுச்சூழல் பிரச்னைகளை மிக மோசமான முறையில் கையாண்டுகொண்டிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு முன்பே இருந்ததைத் தொடர்ந்து 2010 ம் ஆண்டு இந்திய அரசு தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தை நிறுவியது. அதன்மூலம் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இயலும் என்று நம்பியது. அதுவும் ஆற்றுமணல் எடுப்பதற்குத் தடை விதித்தது, டெல்லியில் ஒலி மாசு குறைவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது, மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர்ச் சூழலை பாதுகாக்க முனைந்தது, சுற்றுச்சூழல் சீர்கேடுகளை விளைவிக்கும் பல்வேறு நிறுவனங்களுக்குத் தடை விதித்தது மேலும் இதுபோன்ற சிலவற்றைச் செய்தது.


ஆயினும், அதன் முயற்சிகள் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் சூழலியல் அநீதிகளைக் குறைத்தபாடில்லை. பிரச்னை, சுற்றுச்சூழல் பிரச்னைகளின் மீதான இந்திய அரசாங்கத்தின் பார்வையில் இருக்கிறது. பொருளாதார முன்னேற்றமும் சுற்றுச்சூழல் முக்கியத்துவமும் எதிரெதிர் திசையில் இருக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள நமது அரசாங்கம் தவறிவிட்டது. 

இந்தியாவில் சட்டங்களும், உரிமைகளும் சரியாகவே வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், சட்டங்கள் வெறும் ஆயுதங்களே. அந்த ஆயுதங்களைச் சரியான முறையில் பயன்படுத்தும் ஆட்சியாளர்கள்தாம் அதற்கு வாய்க்கவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு