Published:Updated:

மெக்சிகோவின் நகரங்களைச் சுத்தப்படுத்துறது யார் தெரியுமா?

மெக்சிகோவின் நகரங்களைச் சுத்தப்படுத்துறது யார் தெரியுமா?
மெக்சிகோவின் நகரங்களைச் சுத்தப்படுத்துறது யார் தெரியுமா?

ஒரு காலத்தில் உலகின் மிகத் தூய்மையான நகரம் என்ற பெயரைக்கொண்டது `மெக்சிகோ நகரம்', 1992-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி, `உலகின் மிகவும் மாசடைந்த நகரம்' என்ற அவப்பெயரைத் தன் தலையில் சுமந்தது. 1950-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட தொழில் மயமாக்குதல் போன்ற ஒரு சில நிகழ்வுகள்தாம் இந்த மோசமான மாற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மக்கள் சுவாசிக்கும் காற்று மிகவும் மாசடைந்ததால், ஓர் ஆண்டுக்கு 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரை இழந்துள்ளனர். இதே நிலைமை தொடர்ந்தால், நாடே சுடுகாடாகும் என்பதை உணர்ந்து பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு இழந்த தங்களது எழிலை மீட்டெடுக்க முயற்சி செய்கின்றது மெக்சிகோ. இதற்கான பல்வேறு சட்டத்திருத்தங்கள் மேற்கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மெக்சிகோ நகரில் உள்ள தனியார்த்துறை ஒன்று, இந்தப் பிரச்னைக்கு இயற்கை முறையில் தீர்வுகாண வழிவகை செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்குப் ``பசுமை வழித்தடம்" என்று பெயரிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது. பொதுவாகச் சாலைகளின் இருபுறத்தில் மரங்கள் நடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இவர்கள் சற்று வித்தியாசமாக, நகரில் உள்ள மேம்பாலம் அனைத்திலும் சிறு மரம், செடிகளை நட்டுவைக்கும் முறையைக் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் 6,00,000 சதுர அடிகள் வரை செடிகளை நட்டுவைத்துச் செங்குத்தாகப் பூங்காவை நிறுவியுள்ளனர். இந்தப் புதிய திட்டத்துக்கு மெக்சிகோ நகர மக்களிடையே அமோக வரவேற்பு அளித்துவருகின்றனர்.

இந்தத் திட்டத்தை நிறுவி இயக்கிவரும் பெர்னாண்டோ இதுபற்றி கூறுகையில், ``2.2 கோடி மக்கள் வாழும் மெக்சிகோ நகர் எப்போதும் கூட்ட நெரிசலுடனே காணப்படுகிறது. அவர்கள் சுவாசிக்கும் காற்றை இயன்ற அளவு தூய்மையானதாக்க இந்த முயற்சியைக் கையிலெடுத்தோம். இந்தத் திட்டத்தின் மூலம் 1000-க்கும் மேற்பட்ட மேம்பாலத் தூண்களைப் பயன்படுத்தி மெக்சிகோ நகரின் காற்று மாசு அடைவதைத் தடுத்துத் தூய்மையான காற்றை உற்பத்தி செய்ய முயன்று வருகிறோம். இத்திட்டத்தின் மூலம் ஓர் ஆண்டுக்குச் சுமார் 25,000 பேருக்குச் சுவாசிக்க ஆக்சிஜன் வாயு உற்பத்தியாகிறது. அதுமட்டுமல்லாமல் 27,000 டன் அளவில் தீங்கு விளைவிக்கும் மாசடைந்த காற்றையும் 5000 கிலோ தூசையும் அச்செடிகொடிகள் உறிஞ்சுகின்றன. இச்செடிகளுக்கு நீர்ப்பாய்ச்ச குடிநீரைப் பயன்படுத்தாமல் இயற்கையாகப் பொழியும் மழைநீரை மட்டுமே பயன்படுத்துகிறோம். செங்குத்தாக நாங்கள் இந்தப் பூங்காவை நிறுவியுள்ளதால் மழைநீரைப் பயன்படுத்துவதில் சிரமம் சற்று குறைவாக உள்ளது" என்கிறார்.

மேலும் தங்கள் திட்டத்தை விவரிக்கும் அவர், ``இந்தத் திட்டத்தில் புது தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தியுள்ளோம். செடிகள் நட்டு வைக்க நாங்கள் மண்ணுக்குப் பதிலாக, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன படுக்கையை உருவாக்கியுள்ளோம். மண்ணிற்குள்ள அதே அடர்த்தியை இதிலும் காணப்படுவதால்,பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இவ்வாறு இயற்கை நிறைந்த காட்சிகள் கண்ணில் தெரிவதால் அவசர அவசரமாகப் பணிக்குச் செல்லும் மக்கள், மன உளைச்சலால் பாதிப்படைவதை சற்று குறைக்க முடியும். மேலும் இதற்கான செயல்முறைகளைச் செய்ய ஆட்கள் தேவைப்படுவதால் இதன் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுகிறது. தங்கள் மறுவாழ்வுக்காகச் சிறைக்கைதிகளும் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்" என்றார்.

சில தொழில்நுட்ப வளர்ச்சி, இயற்கைச் செல்வங்கள் பலவற்றின் அழிவுக்கு வழிவகுத்துவரும் நிலையில், இதுபோன்ற புதுமையான திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்படைவது மட்டுமல்லாமல் மக்கள் இயற்கையான காற்றை சுவாசிக்கவும் நல்ல வழி அமைகிறது. சமீபத்தில் உலகின் மாசடைந்த 20 நகரங்கள் பட்டியலை உலகச் சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய இன்னலான சூழ்நிலைக்கு ஆளாகியுள்ள நிலையில். மெக்சிகோவில் கொண்டுவரப்பட்டது போன்ற புதிய திட்டத்தைக் கொண்டுவந்தால்தான் வருங்காலச் சந்ததியினருக்கு வாழும் இடமாக இந்தப் பூமியை மாற்ற முடியும் என்பதை நம் அரசும் மக்களும் உணர வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு