Published:Updated:

உலகுக்கு அதிக ஆக்சிஜன் தரும் கடல்களுக்கு... நன்றி! #WorldOceansDay

உலகுக்கு அதிக ஆக்சிஜன் தரும் கடல்களுக்கு... நன்றி!  #WorldOceansDay
உலகுக்கு அதிக ஆக்சிஜன் தரும் கடல்களுக்கு... நன்றி! #WorldOceansDay

நம் பூமி நான்கில் மூன்று பகுதி கடல் பரப்பால் நிறைந்துள்ளது  80 விழுக்காடு பிராண வாயுவை மனிதனுக்கு கடல்தான் தருகிறது, பூமியின் நுரையீரல் என்று கடலைச் சொல்லலாம். நாம் சுவாசிக்கும் காற்றில் பெருமளவை, மரங்களைவிடவும் கடலே உற்பத்தி செய்கிறது. நமக்குத் தேவையான பெருமளவு உணவு, மருந்துகள், உயிரின வளம் கடலிடமே இருக்கிறது. இத்தகைய பெரும் அருமைகளைக் கொண்ட `உலக கடல் தினம்' இன்று

நம் பூமி நான்கில் மூன்று பகுதி கடல் பரப்பால் நிறைந்துள்ளது. மனிதனுக்கு 80 விழுக்காடு ஆக்சிஜனை கடல்தான் தருகிறது. பூமியின் நுரையீரல் என்று கடலைச் சொல்லலாம். நாம் சுவாசிக்கும் காற்றில் பெருமளவை, மரங்களைவிடவும் கடலே உற்பத்தி செய்கிறது. நமக்குத் தேவையான பெருமளவு உணவு, மருந்துகள், உயிரின வளம் கடலிடமே இருக்கிறது. இத்தகைய பெரும் அருமைகளைக் கொண்ட `உலகப் பெருங்கடல் தினம்' இன்று.

பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் கண்களைக் கடல் வளம் உறுத்தியது, இதன் விளைவாகப் பாய்மரப் படகுகள் உலாவந்த கடலில் பகாசுர கப்பல்கள் அணிவகுத்தன.  கொஞ்சம் கொஞ்சமாக பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாக கடல் மாறியது. மொத்த கடல் மீன் வளத்தில் 52 சதவிகிதம் சுரண்டப்பட்டுவிட்டது. கடலையே நம்பி இருந்த பழங்குடியின மக்களின் கடலும் கடல்சார் நிலமும் பறிக்கப்பட்டன. எனவே, உலகமயச் சுரண்டலின் கரங்கள் உலகளாவிய அளவில் விரிந்து பரந்து கிடக்கும்போது அதை எதிர்க்கும் போராட்டமும் உலகளாவிய அளவில் தேவை என்று உணர்ந்தனர். எனவே, கடல் உலகின் பொதுச் சொத்து. அதை சிலரின் ஏகபோக உரிமைக்கு அனுமதிக்க முடியாது என்ற குரல் உலகம் முழுவதும் ஒலிக்கத் துவங்கியது,

கடல் அன்னையின் அடி மடியினை அறுக்கும் அந்தக் கரங்களுக்கு எதிராக எழுந்த குரலின் ஓசை குறித்து இங்கே விவரிக்கிறார் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல்.

``1992 ஜூன் மாதம் 8-ம் தேதி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் புவி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் மனிதச் சமூகத்துக்குக் கடல் வழங்கும் எண்ணற்ற செல்வங்களை இனங்கண்டு, உலகக் கடல் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதனடிப்படையில் 2009-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதியிலிருந்து உலகப் பெருங்கடல் நாளைக் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்தது.

 உலகின் கடல்களால் நாம் பெறும் பயன்களை அளவிட்டுப் பார்க்கவும், அவை நமக்கு வழங்கும் கடல் உணவு வகைகள், மீன்கள், செல்லப் பிராணிகள், மதிப்புமிக்க பொருள்களையும், அவற்றின் பயன்களையும் நினைத்துப் பார்க்கவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. புவியின் மேற்பரப்பிலுள்ள கடல்கள் தனித்தனியானவை எனக் கருதப்பட்டாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல், இந்து மகா கடல், அண்டார்டிக் கடல், ஆர்டிக் கடல் என ஐந்து பெருங்கடல்கள் உலகில் உள்ளன.

கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் பெருங்கடல்களின் சிறிய பகுதிகள் அழைக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர நிலத்தால் சூழப்பட்ட சில பெரும் உப்பு நீர்நிலைகளும் நம் உலகில் உள்ளன (காஸ்பியன் கடல், சாக்கடல்).கப்பல் போக்குவரத்து, மீன்பிடித்தல், எண்ணெய் எடுத்தல், துறைமுகக் கட்டுமானம், கடலில் பிளாஸ்டிக் முதலிய குப்பைகளைக் கொட்டுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் கடல்களின் சீரழிவுக்கு முக்கியக் காரணங்கள்.

குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளின் அணுக் கழிவின் பெரும்பகுதி கடலில்தான்  கொட்டப்படுகிறது, அளவுக்கு அதிகமான மீன் இனங்களைப்  பன்னாட்டு பகாசுர மீன்பிடி கப்பல்கள் வரைமுறையற்ற வகையில் பிடிப்பதாலும் பெரும்பாலான கடல் உயிரினங்கள், மீன்களின் தொகை அதிவேகமாகக் குறைந்துவருகிறது. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல்,  காடுகளின் அழிப்பு போன்ற சூழல் பிரச்னைகளின் வரிசையில் இன்று பலராலும் பேசப்படும் மிக முக்கியமான பிரச்னையாக மிகை மீன்பிடி கருதப்படுகிறது.

தொன்று தொட்டு நடைமுறையிலிருந்து வந்த மீன்பிடிக் கைத்தொழில், வர்த்தகமயம் ஆக்கப்பட்டு வந்ததனால் உருவாகிய விளைவே இந்த மிகை மீன் பிடியாகும்.இதன் காரணமாக 2050-ம் ஆண்டளவில் உலகின் மீன் வளம் தீர்ந்துபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடல்கள் சில நேரம் பெரும் இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தினாலும்கூட, கடல்களால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்கள் அளவிட முடியாதவை. மீனவர்களுக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கைக்கும் கடல்கள் இன்றியமையாதவை. நாம் சுவாசிக்கும் தூயக் காற்றையும், ஊட்டமிகு உணவையும் வழங்கும் கடல்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும், சாதாரண மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன. கடல்வழி பல நாடுகளுக்குப் பயணிகள் பயணிக்கவும், சர்வதேச வர்த்தகப் பாதைகளாகவும் கடல்கள் விளங்குகின்றன. இப்படிப் பல்வேறு வகைகளில் மக்களின் வாழ்க்கையில் கடல் வளங்கள் மிக முக்கியப் பங்கை ஆற்றுகின்றன.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கடல் வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலோரப் பகுதிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளிடையே நடக்கும் வர்த்தகமும், மக்களின் போக்குவரத்தும் அந்த நாடுகளின் பொருளாதார மற்றும் நாகரிகத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்திருக்கின்றன. சமீப காலமாக கடற்கரைப் பகுதிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில், கடல் சார்ந்த பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

கனடா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், டென்மார்க், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மிக நீளமான கடற்கரை பகுதிகளைக் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் முதல் பத்து நாடுகளுக்குள் அடங்குகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகள் முதல் இருபது நாடுகளுக்குள் இடம்பெறுகின்றன. இந்த நாடுகளில் கடல் வளத்தின் மூலம் பொருளாதாரப் பயன்களை அடைவதற்கான வாய்ப்புகள் பெரும் அளவில் உள்ளன.

இதையெல்லாம் தாண்டி, நமக்கு தனிமை தேவைப்பட்டால் நம் கால்கள் முதலில் செல்ல விரும்பும் இடம் கடற்கரைதானே?

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பெருங்கடல்கள், சிறு கடல்களின் பெருமையை இந்தத் தருணத்தில் நினைவுகூர்வோம். ஏகாதிபத்திய சுரண்டலிருந்து மீனவப் பழங்குடிகளின் சொத்தான கடலை பாதுகாக்க உறுதி ஏற்போம்'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு