Published:Updated:

எந்த மாசும் இல்லாத ஒரு நகரம்... பிலிப்பைன்ஸின் கனவு நிறைவேறுமா? #NewClark

எந்த மாசும் இல்லாத ஒரு நகரம்... பிலிப்பைன்ஸின் கனவு நிறைவேறுமா?  #NewClark
எந்த மாசும் இல்லாத ஒரு நகரம்... பிலிப்பைன்ஸின் கனவு நிறைவேறுமா? #NewClark

மனிலாவிலிருந்து 75 மைல் தூரத்தில் மாசில்லாத நகரத்தைக் கட்டமைக்க திட்டம் வகுத்துள்ளனர். அதற்கு நியூ கிளார்க்(New Clark) என்று பெயரிட்டுள்ளனர். 14 பில்லியன் செலவில் இந்த நகரத்தைக் கட்டமைக்கின்றனர்.

உலகமயமாக்கலுக்குப் பின் கிராமங்கள் பிழைப்பதற்கு லாயக்கில்லை என்ற கருத்து பலரது மனதிலும் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் நகரங்களில் மக்களின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது. அதிகாரவர்க்கத்தினர் நகரங்களை ஒழுங்காகக் கட்டமைக்காதது மக்களைப் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கியது. மழை வந்தால் தத்தளிப்பதும், வெயிலில் வெந்து சாவதும் நகரங்களில் இயல்பாகிவிட்டது. தொழில்வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என நகரங்கள் தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இது போதாது என்று நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுகிறோம் என்று இன்னும் மக்களை இன்னலுக்கு உள்ளாக்குவதும் நடக்கிறது, சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத ஒரு நகரத்தை உருவாக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு விடை தேடி கிளம்பியுள்ளது பிலிப்பைன்ஸ். மாசில்லாத நகரம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பிலிப்பைன்ஸ். 

தெற்காசியாவில் காணப்படும் தீவு நாடு பிலிப்பைன்ஸ். உலகிலேயே மோசமான போக்குவரத்தை உடைய நகரம் பிலிப்பைன்ஸின் தலைநகரான மனிலாதான்(Manila). பனிப்புகையும் மக்கள் நெருக்கமும் பிலிப்பைன்ஸின் முக்கியமான பிரச்னை. உலகின் பெருநகரங்கள் பலவற்றுக்கும் இருக்கக்கூடிய பிரச்னைதான் மனிலாவின் பிரச்னையும். மனிலாவில் ஒரு சதுர மைல் பரப்புக்கு 1,07,000 பேர் உள்ளதாக ஒரு கணக்கு தெரிவிக்கிறது. இது நியூயார்க்கின் மக்கள் அடர்த்தியைவிட அதிகம். நியூயார்க்கின் சதுர மைல் பரப்புக்கு 27,000 பேர் இருக்கின்றனர். 13 மில்லியன் மக்களுக்கு மேல் மனிலாவில் வசிக்கின்றனர். இதற்கு மாற்றாக மாசில்லாத நகரத்தைக் கட்டமைக்கும் முயற்சியில் பிலிப்பைன்ஸ் அரசு இறங்கியுள்ளது. மனிலாவிலிருந்து 75 மைல் தூரத்தில் மாசில்லாத நகரத்தைக் கட்டமைக்க திட்டம் வகுத்துள்ளனர். அதற்கு நியூ கிளார்க்(New Clark) என்று பெயரிட்டுள்ளனர். 14 பில்லியன் செலவில் இந்த நகரத்தைக் கட்டமைக்கின்றனர். இதற்குமுன் நகரத்தைக் கட்டமைக்கும்போது நடந்த தவறுகளை இதில் செய்யக் கூடாது என முனைப்புடன் செயல்படுவதாகத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்கள் சொல்கிறார்கள். 

ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்கள், பசுமை வெளிகள், குறைந்த செலவில் கட்டக்கூடிய கட்டடங்கள், பெரிய பெரிய மைதானங்கள், காம்ப்ளெக்ஸ்கள், மூன்றில் ஒருபகுதி பசுமைவெளிகளாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இதற்கான நிதி உதவியைத் தனியாரும் அரசும் சேர்ந்து செய்யும் எனவும் கூறியுள்ளது. புதிய நகரத்தில் 20 இலட்சம் மக்கள் வாழ முடியும். மான்ஹாட்டன் நகரத்தைவிடப் பெரிய பரப்பளவில் இந்த நகரம் அமையவுள்ளது. நியூ கிளார்க்கானது நிர்வாகத்துக்காக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. வேளாண்மை, தொழிற்துறை, அரசுத்துறை, கல்வி, பொழுதுபோக்கு. இதன் மூலம் நிர்வாக வசதியை இன்னும் மேம்படுத்தலாம். நகரத்தில் பெரும்பாலான வெளிகளில் அமைக்கப்படும் பசுமை வெளிகள் கார்பன் வெளியீட்டைப் பெருமளவில் கட்டுப்படுத்தும். கட்டடங்களானது தொழில்நுட்ப உதவியுடன் ஆற்றலையும் தண்ணீரையும் தேவையான அளவுக்குப் பயன்படுத்துமாறு கட்டமைக்கப்பட்டிருக்கும். வேளாண் தொழிற்பூங்காக்களையும் நகரம் கொண்டிருக்கும். மனிலாவின் சகோதர நகரமாக உருவாக்கப்படுவதன் மூலம் அதன் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என முயல்கின்றனர். 2022 ல் ஆரம்பிக்கப்படும் கட்டுமானம் 20 - 30 ஆண்டுகளில் முடிக்கப்படலாம் என நம்பப்படுகிறது. 

மாசில்லாத நகரத்தை உருவாக்குதில் நடைமுறைச் சவால்கள் நிறைய உள்ளன. மனிலாவிலிருந்து மக்களை நியூ கிளார்க் நகரத்துக்குக் குடியமர்த்துவது, இவ்வளவு பெரிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தேவைப்படும் கால அளவு அதிகம். மேலும் இதற்கு தேவைப்படும் மனித ஆற்றலும், மற்ற ஆற்றலும் அதிகமானது. இதையெல்லாம் பொருளாதார அளவில் தன்னிறைவு அடையாத பிலிப்பைன்ஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறது? அதையும் மீறி கடன்பெற்று இதனைச் செய்தால் அதுவும் கடைசியில் மக்கள் தலையில் வந்தே விழும். தனியார்களுக்குத் தாரை வார்த்தலில் மக்கள் நலன் இருக்குமா என்ற கேள்வியும் எழும்? சீனாவின் மான்ஹாட்டன் என்ற பெயருடன் உருவாக்கப்பட்ட ஜியங்லோ பே ( Xiangluo Bay) வானது பாதியிலே கைவிடப்பட்டது. பெரிய பெரிய கட்டடங்களுடன் அப்படியே மக்கள் இல்லாமல் கிடக்கிறது. இதுபோன்று பல திட்டங்களை பல்வேறு நாடுகளும் தொடங்கியுள்ளனர். மாசில்லா நகரத்தை உருவாக்குவது நல்ல முயற்சிதான். ஆனால் அதைவிட எளிதாகச் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பல்வேறு விஷயங்களையும் தனிமனித அளவில் செய்ய வேண்டும். பெரிய பெரிய விஷயங்களை முன்னெடுப்பதை விட சிறிய செயல்களில் பலவற்றைச் செய்யலாம். 
 

அடுத்த கட்டுரைக்கு