Published:Updated:

"6 மாதத்திற்குள் 3 கோடி பேர் பலி... பயோவார் அபாயமா?!" - பில்கேட்ஸ்

1918 ஆம் ஆண்டில் மர்ம காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் ஐந்து கோடி மக்கள் பலியாகினர். அதெபோன்று வருங்காலத்திலும் பெயர் தெரியாத மர்ம காய்ச்சலால் உலகம் முழுவதும் மூன்று கோடி மக்கள் ஆறு மாதத்திற்குள் பலியாவார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை மேற்கோள் காட்டி "மூன்று கோடி மக்களைக் கொல்லும் சக்திக்கு எதிராக உலக நாடுகள் மக்களைப் பாதுகாக்கும் அவசர நிலையினை உணர வேண்டும். ஒருவேளை உயிரியல்ரீதியான அச்சுறுத்தல்களைப் புரிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார் பில்கேட்ஸ்.

"6 மாதத்திற்குள் 3 கோடி பேர் பலி...  பயோவார் அபாயமா?!" -  பில்கேட்ஸ்
"6 மாதத்திற்குள் 3 கோடி பேர் பலி... பயோவார் அபாயமா?!" - பில்கேட்ஸ்

"கால்ரா, கால்ரா" என கவுண்டமணி சொல்லச் சொல்ல செந்தில் வேகமாகச் சைக்கிள் அழுத்தும் நகைச்சுவைக் காட்சி நியாபகம் இருக்கிறதா? அதில் கவுண்டமணியின் காலில் ரத்தம் வருவதற்குக் கூட காலராதான் காரணம் எனச் செந்தில் சொல்ல ஊரே காலராவிற்கு பயந்து காலி செய்து ஓடும். உண்மையில் அப்படி காலராவிற்குப் பயந்து ஊரையே காலி செய்துவிட்டுப் போன கிராமங்களின் கதைகளை நமது தாத்தா, பாட்டிகள் சொல்லக் கேட்டிருப்போம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுக்க வரலாற்றில் தொற்றுநோய்களும் மர்மக் காய்ச்சல்களும் மனித இனத்தை நிறையவே துரத்தியிருக்கிறது. அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முன்னே ஏகப்பட்ட மக்கள் அந்நோய்களுக்குப் பலியாகினர். போலியோ, சின்னம்மை இன்னும் பல நோய்களை முற்றிலும் அழிக்க ஐம்பது, அறுபது வருடங்கள் ஆகின. இன்னும் பல மர்ம காய்ச்சல்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் போராடிக் கொண்டுதானிருக்கின்றன. வரலாற்று அனுபவங்களின்படி இப்போதும் புதிய நோய்கள் உருவாகி உலகம் முழுவதும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இதைத்தான் உலகின் மிக முக்கிய தொழிலதிபரான பில்கேட்ஸும் சொல்லியிருக்கிறார். அடுத்த நூற்றாண்டுக்குள் தொற்றுநோய்கள் மனித இனத்தை எளிதாகப் பாதிக்கும் என்கிறார் பில்கேட்ஸ். 

கடந்த ஏப்ரல் மாதம் மாசசூசெட்ஸ் மெடிக்கல் சொசைட்டி மற்றும் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் ( Massachusetts Medical Society and the New England Journal of Medicine ) நடத்திய தொற்றுநோய்கள் குறித்த கருத்தரங்கில் வருங்காலத்தில் மனித இனத்திற்குச் சவாலாக அமையக் கூடிய தொற்றுநோய்கள், மர்ம காய்ச்சல்கள் குறித்துப் பேசியுள்ளார். போலியோ, மலேரியா போன்ற நோய்களில் இருந்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்றிவிட்டோம். ஆனால் தொற்றுநோய்களுக்கு எதிரான முன்தயாரிப்பில் நாம் பின்தங்கியே இருக்கிறோம் எனத் தொற்றுநோய்கள் குறித்து சொல்கிறார் பில்கேட்ஸ். புதிய புதிய நோய்க்கிருமிகள் தினமும் உலகில் தோன்றிக்கொண்டுதானிருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் பயங்கரமான நோய்களாக மனிதர்களுக்குப் பரிச்சியமாவதில்லை. இப்போதிருக்கும் சூழலில் தனிமனிதர்களோ அல்லது சிறு சிறு குழுக்களோ நோய்களை ஆயுதமாக்க முடியும். பில்கேட்ஸின் கருத்துப்படி சிறு சிறு நகரங்களில் இருப்பவர்கள் கூட உலகையே அச்சுறுத்தக்கூடிய நோய்களை உருவாக்கிப் பரப்ப முடியும். உலகத்தின் எல்லைகள் எல்லாம் சுருங்கிவரும் வேளையில் எல்லோரும் கண்டங்கள் தாண்டிப் பயணிப்பது சாதரணமாகிவிட்டது. இந்நிலையில் இதுபோன்ற சாத்தியக்கூறுகளை மிகக் கவனமாக கையாள வேண்டும். 

1918 ஆம் ஆண்டில் மர்மக் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் ஐந்து கோடி மக்கள் பலியாகினர். அதேபோன்று வருங்காலத்திலும் பெயர் தெரியாத மர்மக் காய்ச்சலால் உலகம் முழுவதும் மூன்று கோடி மக்கள் ஆறு மாதத்திற்குள் பலியாவார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை மேற்கோள் காட்டி "மூன்று கோடி மக்களைக் கொல்லும் சக்திக்கு எதிராக உலக நாடுகள் மக்களைப் பாதுகாக்கும் அவசர நிலையினை உணர வேண்டும். ஒருவேளை உயிரியல்ரீதியான அச்சுறுத்தல்களைப் புரிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார் பில்கேட்ஸ். சின்னம்மைத் தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் இராணுவப்படைகள் நோயைக் கட்டுப்படுத்த போராடின. அதுபோன்ற தொற்றுநோய்களுக்கு எதிரான போரை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்கிறார் பில்கேட்ஸ். அதேநேரத்தில் முந்தைய நிலைமையைவிட இப்போது கொஞ்சம் சிறப்பான முன்னேற்பாடுகளுடன்தான் இருக்கிறோம். மர்மக் காய்ச்சல்களை உடனடியாக கண்டறிவதில் தாமதம் ஏற்படும்போதுதான் மக்களைக் காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்படும் மர்மக் காய்ச்சல்களை எதிர்க்கும் விதமாகத் தடுப்பு ஊசியினைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளது பில்கேட்ஸின் அறக்கட்டளையான பி மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ( Bill and Melinda Gates Foundation). இந்த முயற்சிக்காக 1,20,00 டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்கள் மற்றும் பல்வேறு நோய்களைப் பற்றி பில்கேட்ஸ் பேசியிருப்பது குறீப்படத்தக்கது. 

உலகில் பல்வேறு மக்களைப் பாதித்த வைரஸ்கள் பரவுவதற்கு முன்பே பில்கேட்ஸ் அதுகுறித்த எச்சரிக்கைகளைக் கொடுத்திருக்கிறார். முக்கியமாக எபோலா வைரஸ் ( Ebola Virus) உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தும் முன்னரே பில்கேட்ஸ் இதுபற்றி பயத்தைத் தெரிவித்திருந்தார். தற்போது இந்தியாவின் அச்சுறுத்தலாக இருக்கும் நிபா ( Nipah) வைரஸ் குறித்தும் பில்கேட்ஸ் முன்பே பேசியிருக்கிறார். உலகம் முழுவதும் நிறைய மருத்துவ அறக்கட்டளைகளின் மூலம் இதனை தெரிந்துகொள்வதாகக் கூறும் பில்கேட்ஸ் போன்ற பெரும் முதலாளிகள்தான் இந்த நோய்களையே பரப்புகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழும்புகின்றன. ஆனாலும் தற்போதிருக்கும்நிலையில் நமக்கேத் தெரியாமல் நம் மீது பயோ வார் ( Bio War) நடத்தப்படலாம். அப்படி எதுவும் நிகழ்ந்தால் கூட நமக்குத் தெரியாது..