Published:Updated:

எவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி!

எவரெஸ்ட் உலகின் மிக உயரமான  சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி!
எவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி!

2016 கணக்கின்படி 11,793 கிலோகிராம் மனிதக் கழிவுகளை ஷெர்பா பழங்குடியினர் அகற்றியுள்ளனர். இந்தக் கழிவுகளும் குப்பைகளும் எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் எவ்வித பாதுகாப்புமின்றி புதைக்கப்படுகின்றன.

மே 29, 1953. அன்று வெள்ளிக்கிழமை. உலகின் மிக உயரமான மலைச்சிகரத்தின் உச்சியை எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நோர்கேவும் முதன்முதலாக அடைந்த நாள். அதுவரை மனிதர்கள் பலரின் மலை உச்சியை அடையும் முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்துள்ளன. முழுக்கப் பனிபடர்ந்த இமயமலையின் ஒருபகுதியாய் இருக்கும் அந்த உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இப்போதுவரை அவ்வளவு எளிது கிடையாது. மூச்சை உள் இழுத்துக் கொண்டு பல நொடிகளுக்கு அப்படியே இருங்கள்... எவ்வளவு காற்றை உள் இழுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு உள் இழுத்துக் கொள்ளுங்கள்... சில, பல நொடிகளுக்குப் பின் மெதுவாக வெளிவிடுங்கள்.. மீண்டும் மெதுவாக உள் இழுங்கள். இப்படி எவ்வளவு நேரம் செய்ய முடியும்?? இயல்பான சுவாசித்தலைவிட பல மடங்கு கஷ்டமானது இது. எவரெஸ்ட் மலையேறத் தொடங்கும்போதே இப்படித்தான் இருக்கும். மைனஸ் டிகிரி குளிரில் மலையேற்றத்தில் இன்னும் பல உடல் சோர்வுகள் வரும். இதையெல்லாம் மீறி மலையேறக்  கடுமையான பயிற்சிகள் தேவை. 1953 க்குப் பிறகு எவரெஸ்ட் மலையேற்றம் பெரும் வணிகமயமாக மாறிவிட்டது. எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நோர்கேவும் மலையேறிய காலகட்டத்தில்  போதிய வசதிகள் இல்லாததால் பல உயிரிழப்புகளும் நேர்ந்தது. தற்போது பல குழுக்கள் எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டேயிருக்கிறது. இமயமலை அடிவாரத்தில் இருக்கும் நேபாளம், திபெத் போன்ற நாடுகளும் எவரெஸ்ட் மலையேற்றத்தை ஊக்குவிக்கின்றனர். மனிதர்கள் எங்குச் சென்றாலும் தடமாகக்  கால்தடத்தை மட்டும் விட்டு வாருவதில்லை கூடவே குப்பைகளையும் விட்டு வருகிறார்கள். இதற்கு விண்வெளி கூட ஒரு எடுத்துக்காட்டு. எவரெஸ்ட் மலையும்  தற்போது மாபெரும் குப்பை மேடாகக்  காட்சியளிக்கிறது. உலகின் மிக உயர்ந்த இடத்தின் குப்பைத் தொட்டி இது எனச்  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.  

கடந்த அரை நூற்றாண்டாகப் பெருகி வரும் மலையேற்றத்தால் எவரெஸ்ட் மலையில் குப்பைகள் டன்கணக்கில் சேர்ந்துள்ளன. 8848 மீட்டர் உயரமான சிகரத்தை அடையும் பாதைகள் முழுக்க மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட பொருள்களின் மீதம் குப்பையாக நிரம்பிக் கிடக்கின்றன. கூடாரங்கள், கைவிடப்பட்ட மலையேற்றக் கருவிகள், காலியான கேஸ் சிலிண்டர்கள், துணிகள், ஷீக்கள் என ஏகப்பட்ட குப்பைகளோடு மனிதக் கழிவும் எக்கச்சக்கமாய் இரைந்து கிடக்கின்றன. வருடத்துக்கு வருடம் மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 6400 மீட்டர் உயரத்தில் இருக்கும் இரண்டாம் கேம்ப் பகுதியில்தான் மிகமோசமாகக் குப்பைகள் சேர்ந்துள்ளன. ஒரு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 600 நபர்களுக்கு மேல் எவரெஸ்ட் உச்சியை எட்டுகிறார்கள். மேலும், எவரெஸ்ட் உச்சியை எட்டுவதற்காகவே பல்வேறு பயிற்சிகளைத்  தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. புவி வெப்பமாதலால் எவரெஸ்ட்டின் மேற்புறப் பனிப்பாறைகள் அதிகமாக உருக ஆரம்பித்திருக்கிறது. இதனால் மட்காமல் பனிப்பாறைகளில் புதைந்துள்ள குப்பைகளும் வெளியே வர ஆரம்பித்துள்ளன. ஏறக்குறைய 65 வருடங்களுக்கு முன் உள்ள குப்பைகளும் இப்படி ஒன்று சேர ஆரம்பித்துள்ளன.  

Photo :  David Liaño

நேபாளம், திபெத் இரு நாடுகளும் எவரெஸ்ட் குப்பைகளை சுத்தம் செய்ய பல்வேறுத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 1991ம் ஆண்டிலிருந்து நேபாளத்தின்  சகர்மாத் மாசுக்கட்டுப்பாட்டுக் குழு(Sagarmatha Pollution Control Committee) இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நேபாளத்தில் மலையேறும் குழுவினர் மலையேறுவதற்கு 4000 டாலர் குப்பை வைப்புத் தொகையாகக் கட்ட வேண்டும். அவர்கள் மலையேறிவிட்டு கீழே வரும்போது குழுவில் உள்ள ஒவ்வொருவரும் 8 கிலோ அளவுக்குக் குப்பைகளை மேலிருந்து எடுத்து வந்தால் அந்த வைப்புத் தொகை திருப்பியளிக்கப்படும். மாறாக, திபெத்தில் மேலிருந்து குப்பைகளைக் கீழே கொண்டுவராவிட்டால் ஒரு கிலோவுக்கு 100 டாலர் அபராதமாக விதிக்கப்படும். கடந்த 2017 ம் ஆண்டு முழுவதும் ஏறக்குறைய 25 டன் குப்பையை நேபாளத்தில் மலையேறுபவர்கள் கீழே கொண்டுவந்துள்ளனர். இது இரண்டு அடுக்கு பேருந்துக்குச் சமம் என சகர்மாத் மாசுக்கட்டுப்பாட்டுக் குழு கூறியுள்ளது. இந்த வருடத்தில் இன்னும் நிறைய குப்பைகளைச் சுத்தம் செய்திருப்பார்கள் எனக் கூறுகிறது அந்தக் குழு. வருடா வருடம் சேரும் குப்பைகளில் இது மிகச்சிறிய அளவுதான். இன்னும் டன்கணக்கில் குப்பைகள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. சீனாவின் பங்குக்கு 8.5 டன் குப்பைகளை இந்த வருடம் சுத்தம் செய்துள்ளது.

மலையேறுபவர்களில் பாதிப் பேரே இந்தக் கட்டுப்பாடுகளை மதிக்கின்றனர். பெரும்பாலானோர் வைப்புத் தொகையைப் பெரிதாகக் கருதுவதில்லை. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக 20,000 டாலரிலிருந்து 1,00,000 டாலர் வரை செலவு செய்யும் அவர்களுக்கு வைப்புத்தொகை இழப்பெல்லாம் பெரிதில்லை. மேலும், பலர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சரி கட்டி விடுகின்றனர். ``ஒரு வாரத்தில் இருமுறை எவரெஸ்ட் சிகரம் ஏறி பெண்மணி சாதனை" , ``எவரெஸ்ட் சிகரத்தில் திருமணம் செய்த ஜோடி" எனத் தொடர்ந்து செய்திகளைப் பார்த்திருப்போம். அவை எல்லாவற்றுக்கும் பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் எவரெஸ்ட் மலையேற்றம் அதிகமாகப் பெருகியுள்ளது. அதனால் அனுபவமற்ற மலையேற்றக்காரர்களும் அதிகமாக வருகின்றனர். அவர்கள் குறைந்த செலவில் எவரெஸ்ட் ஏற உதவும் ஏஜெண்டுகளை அணுகுகின்றனர். இதனால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் குப்பைகளை கையாளத் தெரியாமல் அதிகமாக எவரெஸ்ட்டில் சேர்க்கின்றனர். 

Phot : AFP

மலையேறுபவர்களுக்கு பக்கபலமாக இருப்பது இமயமலை அடிவாரத்தில் வசிக்கக்கூடிய ஷெர்பா பழங்குடியின மக்கள். அவர்கள்தாம்  வழிகாட்டியாகவும் இருக்கின்றனர். முன்பு மலையேறுபவர்களும் தங்களுடைய சுமைகளைத் தூக்கிச் செல்வது வழக்கம். ஆனால், இப்போது அத்தனை சுமைகளையும் ஷெர்பாக்களே சுமந்து வருகின்றனர்.  அதனால் அவர்களால் குப்பைகளை சுத்தம் செய்து கீழே கொண்டு  வர முடியாது. 2016 கணக்கின்படி 11,793 கிலோகிராம் மனிதக் கழிவுகளை ஷெர்பா பழங்குடியினர் அகற்றியுள்ளனர். இந்தக் கழிவுகளும் குப்பைகளும் எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் எவ்விதப் பாதுகாப்புமின்றி புதைக்கப்படுகின்றன. பெருமழையும் வெள்ளமும் வரும்பொழுது இமயமலையிலிருந்து வரும் நதிகளில் கலந்து மிகப்பெரிய மாசுபாட்டை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர். அதனால் இதனை உயிரிவாயுவாக மாற்றும் முனைப்பில் அமெரிக்காவைச் சார்ந்த பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இமயமலையைத் தங்களின் வாழ்வின் அங்கமாகவும் சாமியாகவும் பார்க்கும் ஷெர்பா பழங்குடியின மக்கள் இதையெல்லாம் வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இமயமலையைச் சுற்றியிருக்கும் எந்த நாட்டு அரசும் இதனைப் பெரிய பிரச்னையாகக் கருதி செயல்படவில்லை. தொடர்ந்து குப்பைகள் சேருவதும் வாடிக்கையாகத்தான் நிகழும். ஷெர்பாக்களும் வேறுவழியில்லாமல் சுமை தூக்கிச் செல்வார்கள்.
 

அடுத்த கட்டுரைக்கு