Published:Updated:

தண்ணீர் மாஃபியா... கறுப்புச் சந்தையில் களைகட்டும் புதிய வியாபாரம்! #WaterMafia

தண்ணீர் மாஃபியா... கறுப்புச் சந்தையில் களைகட்டும் புதிய வியாபாரம்! #WaterMafia
தண்ணீர் மாஃபியா... கறுப்புச் சந்தையில் களைகட்டும் புதிய வியாபாரம்! #WaterMafia

தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகிவரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நகராட்சி மற்றும் குடிநீர் வாரியங்கள் தற்போது பயன்படுத்திவரும் தண்ணீர் விநியோகக் குழாய்கள் பல

தண்ணீர்... "21-ம் நூற்றாண்டின் உலக அரசியலில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைப் புறந்தள்ளி தண்ணீரே மூலமாக விளங்கும்."

இது பல்வேறு பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்பட்டுச் சில ஆண்டுகள் ஆகிவிட்டன. உண்மைதான். உலகின் நன்னீர் இருப்பு குறைந்துகொண்டே வருகிறது. பூமி ஒன்றும் சுரண்டச் சுரண்டச் சுரந்துகொண்டேயிருக்கும் அட்சய பாத்திரமல்ல. எண்ணெய் வளம், எரிவாயு, கனிம வளங்களைப் போலவே தண்ணீர் இருப்பும் குறையக்கூடியது தான். இருந்தும் இத்தனை வருடங்களாகத் தண்ணீர் சுரந்துகொண்டே இருந்ததற்குக் காரணமும் இல்லாமலில்லை. மற்ற வளங்கள் மீண்டும் உடனடியாகப் புதுப்பிக்க முடியாதவை. ஆனால், தண்ணீர் புதுப்பிக்கத் தகுந்தவை. காலநிலை மாற்றங்கள், தொழிற்சாலைகளால் மாசடைதல், குறைவான உற்பத்தியும் அதீதப் பயன்பாடும், நிலத்தடி நீர் தரம் குறைந்து உவர்ப்படைவது போன்றவை தண்ணீர் இருப்பில் பாதியைப் பயனற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தண்ணீர் கிடைப்பதற்கான வழி அனைவருக்கும் எளிமையாக வாய்ப்பதில்லை. நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் கிட்டதட்ட எதற்குமே முறையான தண்ணீர் வழங்கல் திட்டங்கள் இருப்பதில்லை. அதே சமயம், தொழிற்சாலைகள் வியாபார நிறுவனங்கள் போன்றவற்றிற்கு அரசாங்கம் விதித்த நீர் பயன்பாட்டு அளவு அவர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை.
தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாகிவரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நகராட்சி மற்றும் குடிநீர் வாரியங்கள் தற்போது பயன்படுத்திவரும் தண்ணீர் விநியோகக் குழாய்கள் பல வருடங்கள் பழைமையானவை. இருப்பினும், அதன்மூலம் ஓரளவுக்காவது மக்களுக்குத் தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்திச் செய்துவருகிறது மாநகராட்சி. ஆனால், தண்ணீர் திறந்துவிடப்பட்டு குழாய் வழியாகப் பயணித்து மக்களை வந்துசேரும்போது அதில் பாதி மட்டுமே இருக்கிறது. புது டெல்லிக்கு நகராட்சிக் குடிநீர் வாரியம் நாளொன்றுக்கு 786.6 மில்லியன் லிட்டர் திறந்துவிடுகிறது. 1.7கோடி பேர் மக்கள்தொகை வாழும் தலைநகரத்திற்கு இவ்வளவு குடிநீர் விநியோகம் முறையாகத் திறந்துவிடப்படுகிறது.


கங்கை, யமுனை, சட்லஜ். இந்த மூன்று நதிகளிலிருந்து புதுடெல்லிக்கான தண்ணீர் எடுக்கப்படுகிறது. தொழில்மயமாக்கலால் இவை மூன்றுமே மாசடைந்திருந்தாலும், இன்னும் குடிப்பதற்குத் தகுந்த நீராதாரம் இவற்றிலிருந்து கிடைக்கிறது. இந்த மூன்று நதிகளின் மூலம் பாரிஸ், ஜெனீவா போன்ற நகரங்களில் திறந்துவிடும் தனிமனிதருக்கான தண்ணீர் விநியோக அளவை விட அதிகமாகவே திறந்துவிட முடியும். ஆனால், அதில் மக்களைப் போய்ச்சேருவது வெறும் 40% தண்ணீர் மட்டுமே. மீதி 60% தண்ணீர் அதன் குழாய் வழிப்பாதையிலேயே கடத்தப்படுகிறது. திறந்துவிடப்படுவதே குறைவான அளவு, அதிலும் பாதிக்குமேல் திருடப்படுகிறது. இதை யார் செய்வது? எதற்காகச் செய்கிறார்கள்? உண்மையில் தண்ணீர் திருடப்படுவதாகச் சொல்லமுடியுமா? தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவானது தானே, அதை எடுப்பதை எப்படித் திருட்டு என்று சொல்லமுடியும்?

மேற்கண்ட அனைத்துக் கேள்விகளுக்குமான விடைகளைத் தேடுவதற்குமுன் இந்தப் பிரச்னைகளை அதிகமாகச் சந்தித்துவரும் நைஜீரியாவில் தண்ணீர் திருட்டு உருவான வரலாற்றையும், அது ஏற்படுத்திய தாக்கத்தையும் பற்றிச் சிறிது அலசிப்பார்ப்போம்.

19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இங்கிலாந்தின் காலனிப் பகுதியாக இருந்தது நைஜீரியா. 20-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், மலேரியா போன்ற கொடிய நோய்கள் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்த காலகட்டம். நோய்களைச் சமாளிப்பதற்கும், மேன்மேலும் மக்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பதைத் தடுப்பதற்கும் இங்கிலாந்து ஒரு திட்டத்தை செயல்படுத்தியது. செல்வச்செழிப்பு மிக்க ஆரோக்கியமான மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து வைப்பது. அதாவது பணக்காரர்களை மட்டுமே காப்பாற்றுவது. அப்போதைய அரசாங்கத்தைப் பொறுத்துவரையிலும் அவர்களே மனிதர்கள். அந்த "மனிதர்கள்" கூட்டத்தில் நைஜீர்யர்கள் மிகச் சொற்பமே. மொத்த நைஜீரியாவும் சுகாதாரமான வாழிடமின்றி, சுத்தமான குடிநீர், கழிவுநீர் மேலாண்மைத் திட்டம் போன்ற எதுவுமில்லாமல் மிக மோசமான நிலையில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 1960-ம் ஆண்டில் நைஜீரியா சுதந்திரமடைந்தது. இருப்பினும் அவர்களது நீர் மேலாண்மை மற்றும் நீர் விநியோகத் திட்டங்களில் எந்தவித முன்னேற்றமும் இதுவரை தென்படவில்லை. சுதந்திரமடையும்போது, நைஜீரியாவின் லாகோஸில் (Lagos) வெறும் 10% நகரவாசிகளுக்கு மட்டுமே நகராட்சிக் குடிநீர் விநியோக இணைப்புகள் உள்ளன. மற்ற பகுதிகளில் மாசடைந்த சிற்றோடைகள், பங்கிட்டுக் கொள்ளும் குடிநீர்க் குழாய்கள், கிணறுகள் போன்றவற்றால் மட்டுமே நீர் தட்டுபாடு சமாளிக்கப்பட்டது. கழிவுநீர் மேலாண்மை அதைவிட மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது. வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால் கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படுவதற்கான செயல்களை செய்வதற்கான முயற்சிகளைக்கூட நைஜீரிய அரசாங்கம் எடுக்கவில்லை.

Photo Courtesy: Pakistan Today

சுதந்திரத்திற்குப் பிறகான அரசாங்கம் நீர் மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளையும் குறைபாடுகளையும் சரிசெய்யாதது மட்டுமின்றி, மேன்மேலும் மோசமடையவும் வழிவகுத்தது. 20-ம் நூற்றாண்டில் குடிநீர் விநியோக இணைப்புகள் 10%-ஆக இருந்தது 5%-ஆகக் குறைந்துவிட்டது. ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான மக்களுக்கே முறையான கழிவுநீர் மேலாண்மை வசதிகள் இருக்கின்றன. அதாவது உயர்தர மனிதர்களுக்கும், உயர்தர உணவகங்களுக்கும் மட்டுமே அது செய்துதரப்பட்டுள்ளது. நைஜீரியாவின் 2017-ம் ஆண்டு ஆய்வுப்படி அந்நாட்டின் மக்கள் தொகையில் 69% பேர் சுத்தமான குடிநீர் பெறுவதாகக் கூறியுள்ளது. ஆனால், அதில் 57% பேர் கிராமப்புற மக்கள். நகரவாசிகளில் வெறும் 11% பேர் மட்டுமே அதில் அடக்கம். சுத்தமான குடிநீர் கேள்விக்குறியாகிய சூழலில் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்ய முளைத்தவர்கள் தான் இந்த தண்ணீர் மாஃபியாக்கள். இவர்கள் மக்களின் நலனுக்காக எதையும் செய்வதில்லை. அரசாங்கக் குழாய்கள், ஆறுகள், ஏரிகள், சட்டவிரோதமாக வெட்டப்பட்ட கிணறுகள் மூலமாகச் சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுத்து அவற்றை அதிக விலைக்கு விற்கிறார்கள். தனியார் நீர் விநியோக நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் சிலர் அரசாங்க அனுமதியோடு குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து விற்கிறார்கள். அதே சமயம், அவர்களால் அனைவருக்கும் கொடுக்க முடிவதில்லை. காரணம் தண்ணீர்த் திருட்டு. தண்ணீர் இருப்பில் பாதிக்கும் மேல் இவர்கள் திருடிவிடுகிறார்கள். அதையே மக்களிடம் அதிக விலைக்குக் கொண்டு சேர்க்கிறார்கள். சட்டவிரோதமாகத் திருடப்படும் தண்ணீரை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசேர்க்கிறார்கள்.


டாங்கர் லாரிகளைப் பயன்படுத்தி உள்ளூர் ஆட்களை வேலைக்கு அமர்த்தி இதை ஒரு பெரிய நெட்வொர்க் அமைத்துச் செய்துகொண்டிருக்கிறார்கள் இந்த வாட்டர் மாஃபியாக்கள். அவர்கள் விற்கும் தண்ணீரின் விலை, சந்தை விலையைவிட 8 மடங்கு அதிகம். தண்ணீருக்கான பாதையே இல்லாத பகுதிகளிலும், நீர் முற்றிலும் மாசடைந்த பகுதிகளிலும் வாழும் மக்களைக் குறிவைக்கும் இவர்கள் தண்ணீர் மூலமாகக் கள்ளச்சந்தைப் பொருளாதாரத்தில் மாஃபியாக்களாகக் கொடிகட்டிப் பறக்கிறார்கள். தண்ணீருக்காகவே தனது வருமானத்தில் பெரும்பங்கைச் செலவிட வேண்டிய சூழலில் வாழும் மக்களைக் இவர்கள் குறிவைக்கிறார்கள். தண்ணீரைத் திருடவதால், முறையாக விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கும் கூட தேவையான நீர் கிடைப்பதில்லை. மணல் திருட்டு மூலமாக ஆற்று மணல் முழுவதையும் சுரண்டி ஆற்றையே அழித்த நமது நாட்டில் நாளை இவர்களைப் போல் தண்ணீர் மாஃபியாக்களும் பெருமளவில் பெருகி தண்ணீர் வளத்தையும் அழித்துவிட வாய்ப்புகள் அதிகம்.

ஆம், மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் கடந்த பத்து ஆண்டுகளாகவே தண்ணீர்த் திருட்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கம் இன்னும் இதைத் திருட்டு என்று குறிப்பிடக்கூட இல்லை. அவை நாடு முழுவதும் பரவ வெகுகாலம் தேவையில்லை. அவர்களுக்குத் தேவையெல்லம் வெற்றிடமே. அதாவது அரசாங்கம் முறையான தண்ணீர் விநியோகத்தைச் செய்யாமல் பெரும்பாலான மக்களைத் தவிக்கவிட வேண்டும். இவர்கள் அந்த வெற்றிடத்தில் தங்கள் மாஃபியாக்களை இட்டு நிரப்பிவிடுவார்கள். அவர்கள் விளிம்புநிலை மக்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்று மட்டுமே.

"உனக்கு நீர் வேண்டுமா? மாசடைந்த, கழிவுகள் கலந்த நீரை எடுத்துப் பயன்படுத்திக்கொள். ஆனால், சுத்தமான தண்ணீர் வேண்டுமா? பணத்தோடு வா..."

அடுத்த கட்டுரைக்கு