Published:Updated:

பாகிஸ்தானில் 3 ஆண்டுகளில் காடுகளான வறண்ட மலைகள்..! இந்தியர்களின் கவனத்துக்கு...

பாகிஸ்தானில் 3 ஆண்டுகளில் காடுகளான வறண்ட மலைகள்..! இந்தியர்களின் கவனத்துக்கு...

மரங்களை அழிப்பது என்பது இயற்கையின் மீது மனித இனம் நிகழ்த்தக்கூடிய மிக முக்கியமான வன்முறை.

பாகிஸ்தானில் 3 ஆண்டுகளில் காடுகளான வறண்ட மலைகள்..! இந்தியர்களின் கவனத்துக்கு...

மரங்களை அழிப்பது என்பது இயற்கையின் மீது மனித இனம் நிகழ்த்தக்கூடிய மிக முக்கியமான வன்முறை.

Published:Updated:
பாகிஸ்தானில் 3 ஆண்டுகளில் காடுகளான வறண்ட மலைகள்..! இந்தியர்களின் கவனத்துக்கு...

மனிதன் நாகரிகம் அடையத் தொடங்கியதிலிருந்தே இயற்கைமீது வன்முறை செலுத்தத் தொடங்கி விட்டான். ஆரம்பத்தில் தேவைக்காக இருந்த விஷயங்கள் எல்லாம் காலப்போக்கில் வணிகத்துக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் மாற ஆரம்பித்தன. பிரச்னை தொடங்கியது. மரங்களை அழிப்பது என்பது இயற்கையின் மீது மனித இனம் நிகழ்த்தக்கூடிய மிக முக்கியமான வன்முறை. தேவைகளை மீறி வணிகமயமும் மற்றவையும் மரம் வெட்டுவதைச் சர்வதேசச் சந்தையாக மாற்றியுள்ளது. காடுகள் அழிப்பு இங்குதான் தொடங்குகிறது. ஆனால், நமது அண்மை நாடான பாகிஸ்தானில் ஒரு மாபெரும் முன்னெடுப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான ஹெரோஷாவின் பெரும்பாலான நிலப்பரப்புகள் 2015க்கு முன்பு வரை வறண்ட மலைகள்தாம். ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது பாகிஸ்தான் மக்களை மட்டுமல்ல உலகையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. மில்லியன்கணக்கான மரங்கள் அங்கு நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. காடுகளை அழிப்பதற்கு எதிராகப் போராட ஒரு காட்டையே உருவாக்கிவருகின்றனர் பாகிஸ்தான் மக்கள். ஹெரோஷா பகுதியில் 2015 லிருந்து 2016க்குள் 16,000 தொழிலாளர்கள் 9,00,000 மரக்கன்றுகளை நட்டு காடாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவை அனைத்துமே வேகமாக வளரக்கூடிய யூகலிப்டஸ் வகை மரங்கள். கைபெர் பக்துன்க்வா ( Khyber Pakhtunkhwa) மாகாணத்தின் பல்வேறு இடங்களில் கடும் உழைப்போடு இந்த மரம் நடும் வேலை நடந்து வருகிறது.. 

``அந்த நிலப்பரப்பு இதற்கு முன்பு முற்றிலும் வறட்சியின் நிலமாக இருந்தது. ஆனால், தற்போது வளம் கொழிக்கும் பகுதியாக மாறியுள்ளது” என்கிறார் வனத்துறை மேலாளர் பெர்வைஸ் மனன்(Pervaiz Manan). சில வருடங்களுக்கு முன்பிருந்த புகைப்படங்களையும் தற்போதுள்ள புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த வறட்சியை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் எனவும் சொல்கிறார். அந்தப் புதிய மரங்கள் அப்பகுதிக்கே புத்துயிர் ஊட்டி வருகிறது. இயற்கைச் சீற்றங்களையும் காலநிலை மாற்றங்களையும் எதிர்கொள்ள இந்த மரங்கள் உதவியாய் உள்ளன. மலைப்பகுதியின் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. அதிகப்படியான வெள்ள ஓட்டத்தைக் குறைக்கிறது. மரங்களின் வளர்ச்சிக்குப் பிறகு மழைப்பொழிவும் நன்றாக உள்ளது என்கிறார் வனத்துறை மேலாளர் பெர்வைஸ் மனன். 

அங்கிருக்கும் ஊர்வாசிகளும் இதைப் பொருளாதாரப் பலனாகப் பார்க்கின்றனர். இந்தக் காடுகளின் மூலம் வருமானம் வரும் என்றும் எதிர்பார்க்கின்றனர். முன்பு சும்மா கிடந்த நிலம் இன்று பயனுள்ளதாக மாறியுள்ளது என மகிழ்ச்சியடைகின்றனர். கைபெர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்குப் பகுதியின் பல்வேறு பள்ளத்தாக்குகள் 2006 லிருந்து 2009 வரை பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், இப்போது இந்தப் பகுதி முழுவதும் அன்னாசி மரங்களும் மரக்கன்றுகளும் காட்சியளிக்கின்றன. இந்தப் பகுதி வந்தால் நீங்கள் ஒரு மரக்கன்றை நடாமல் செல்ல முடியாது. ஹெரோஷா பகுதியிலும் ஸ்வாட் பள்ளத்தாக்கிலும் தொடர்ந்து நிறைய மரங்கள் வளர்க்கப்படுவதற்கு பில்லியன் மரங்கள் சுனாமி (Billion Tree Tsunami) எனும் அரசின் முன்னெடுப்புதான் முக்கியக் காரணம். கைபெர் பக்துன்க்வா மாகாணம் முழுவதும் 42 வகையான 300 மில்லியன் மரங்களை நட்டு வளர்ப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறது இந்தத் திட்டம். மேலும் 150 மில்லியன் மரங்களானது நில உரிமையாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. காடுகளை மீளுருவாக்கம் செய்வதில் இன்னும் 730 மில்லியன் மரங்களை வளர்க்கலாம் என இந்தத் திட்டம் கூறுகிறது. ஏறக்குறைய மொத்தக் கணக்கு 1.2 பில்லியன் மரங்கள் எனத் திட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர். 

இந்தத் திட்டம் தொடர்பான பல்வேறு தகவல்களும் அவர்களுடைய இணையத்தில் இருக்கிறது. இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் (International Union for Conservation of Nature(IUCN) ) இத்திட்டத்தினையும் அதற்கான செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளது. இந்த அமைப்பினை பசுமை என்ஜிஓ (Green NGO) என்றும் பலரும் குறிப்பிடுவதுண்டு. இந்தத் திட்டம் முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது. இவ்வளவு அதிகமான மரத்தை நட்டு காடுகளை மீளுருவாக்கம் செய்வது என்பது நிஜத்தில் முடியாத காரியம் என்றனர். அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரையின் படி 12% காடுகள் பாகிஸ்தானில் இருக்க வேண்டும். ஆனால், வெறும் 5.2% மட்டுமே பாகிஸ்தானில் காடுகளாக இருக்கின்றன. 

கடந்த 60 வருடங்களில் பாகிஸ்தானின் சிந்து நதிக்கரையில் அமைந்திருந்த 60 சதவிகிதக் காடுகள் அழிந்து போய்விட்டன. தொடர்ச்சியாகச் சிந்து நதியில் நீர்வரத்து குறைந்ததும் 1980களில் நிகழ்ந்த அதிகப்படியான மரங்கள் வெட்டப்பட்டதும் காடுகள் அழிந்துபோனதற்கு முக்கியக் காரணம். பில்லியன் மரங்கள் சுனாமி திட்டம் நவம்பர் 2014ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக கைபெர் பக்துன்க்வா மாகாண அரசு 160 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து இத்திட்டத்தினை செயல்படுத்திப் பல்வேறு பராமரிப்புகளைச் செய்து வருகின்றனர். 2020க்குள் முழுவதுமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். கைபெர் பக்துன்க்வா மாகாணமானது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் (Pakistan Tehreek-e-Insaf) எனும் அரசியல் கட்சியால் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கட்சி முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் தலைமையில் இயங்கி வருகிறது. அடுத்த வருடம் பொதுத்தேர்தல் வரவிருப்பதால் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (Pakistan Muslim League-Nawaz (PML-N)) கட்சிக்கு இது நெருக்கடி கொடுக்கக்கூடியது. இந்தத் தேர்தலில் சுற்றுச்சூழல் பிரச்னைகள் முக்கியப் பங்கு வகிக்கும் என அனைவராலும் சொல்லப்படுகிறது. இம்ரான் கான் சுற்றுச்சூழல் தொடர்பான வாக்குறுதிகளைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார். 

காடுகளை மீளுருவாக்கம் செய்யும் இந்தத் திட்டம் அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது என ஒருபுறம் சொல்லப்பட்டாலும் பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் இதனை வரவேற்கின்றனர். மக்கள் பலரும் இதில் தன்முனைப்பாகப் பணியாற்றுகின்றனர். மொத்தத்தில் இயற்கையை மீட்டுருவாக்கம் செய்வதுதான் வருங்காலத்தின் தேவையாக இருக்கும் என்பதை பாகிஸ்தானின் மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.

Photos : AFP