Published:Updated:

குடிநீர்த் தொட்டிக்குள் கிடந்த அதிகாரியின் பிணம்! - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 4

கலிஃபோர்னியா மாகாணத்தின் தண்ணீர் பஞ்சம் அங்குள்ள மக்களை அடுத்த சில ஆண்டுகளில் கேப் டவுனின் ஜீரோ டே நிலைமைக்குக் கொண்டு செல்லலாமென்ற சூழலில் உள்ளது.

குடிநீர்த் தொட்டிக்குள் கிடந்த அதிகாரியின் பிணம்! - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 4
குடிநீர்த் தொட்டிக்குள் கிடந்த அதிகாரியின் பிணம்! - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 4

"டெட் பாடி எவ்வளவு நேரமாக தண்ணீருக்குள் கிடந்தது?"

" 10 மணிநேரமாக..."

"அப்படியா..." (சிந்திக்கிறார்...) "சரி இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மொத்த தண்ணீரையும் திறந்துவிடுங்கள்."

"மொத்தமாகவா...!  57 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வீணாக்குவதா!"

சுத்திகரிப்பு நிலைய தலைமை அதிகாரியின் சிந்தனையற்ற பேச்சைக் கேட்ட நியூ ஜெர்ஸி நீர் மேலாண்மையின் தலைமை அதிகாரியால் ஆத்திரத்தை அடக்கமுடியவில்லை. அனல் கக்கும் பார்வையோடு கேட்டார், "10 மணிநேரமாக ஒரு மனிதப் பிரேதம் தண்ணீருக்குள் கிடந்துள்ளது. அதை எப்படி உங்களால் சுத்திகரிக்கப்பட்டதென்று சொல்லமுடிகிறது?"

"வேண்டுமானால் மீண்டுமொருமுறை சுத்திகரிப்பு செய்துவிடுவோமே!"

Photo Courtesy: Mark Mueller

"உடலின் வாயுக்கள் மொத்தமும் வெளியேறிய பிறகே அது தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கும். அப்படி மூழ்கும் உடலிலிருக்கும் திரவங்கள், கழிவுகள் அனைத்தும் வேளியேறி உடல் மக்குவதற்கான செயல்பாடுகள் துவங்கும். அந்தக் கழிவுகளோடு விஷத்தன்மை நிறைந்த கடுமையான வேதியியல் பொருட்களும், வாயுக்களும் கூடவே வெளியாகும். இவற்றை எந்த அதிநுட்பமான சுத்திகரிப்பு முறையாலும் உங்களால் சுத்திகரிக்க முடியாது. உடனடியாக மொத்த நீரையும் வெளியேற்றுங்கள். இந்த நிலையத்திலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்படும் பகுதியில் வாழும் மக்களிடம் அடுத்த இரண்டு நாட்களுக்குக் குடிநீரைச் சூடாக்கிக் குடிக்கச் சொல்லுங்கள்."

விளக்கம் குடலைக் குடைந்து குமட்ட வைத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் புரிந்தது அனைவருக்கும். சுத்திகரிப்பு நிலைய தலைமை அதிகாரியின் கட்டளைக்குக் காத்திராமல் அனைவரும் அடுத்து செய்யவேண்டியதைத் தொடங்கினார்கள். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரி தனது விசாரணையைத் தொடங்கினார். அதன் முதல்படியாக அவருக்குத் தெரியவேண்டியது, "யாரிந்த அங்காரா?"

கீதா அங்காரா. சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவர். 43 வயதான நீரியல் வேதியியலாளர். நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் (Organic Chemistry) தொடர்பான தனது முனைவர் படிப்பை முடித்தவர். கொலை செய்யப்படுவதற்குமுன் 12 ஆண்டுகளாக நியூ ஜெர்ஸிக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கிக்கொண்டிருந்த பஸாயிக் பள்ளத்தாக்கு குடிநீர் ஆணையத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் (Passaic valley water treatment plant) பணிபுரிந்து கொண்டிருந்தார். 2004-ம் ஆண்டு அந்நிலையத்தில் 70 மில்லியன் டாலர்களுக்கு தரம் உயர்த்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அச்சமயத்தில் நீர் சுத்திகரிப்பிற்குக் குளோரின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு, ஓசோன் சார்ந்த முறையைப் பின்பற்றத் தொடங்கினார்கள். அதே சமயத்தில் கீதா அங்காராவிற்குத் தலைமை வேதியியலாளராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை வரையறுத்த குடிநீரின் தரத்தைக் கவனித்துக்கொள்வதே அவரது முக்கியமான பணி. அத்தோடு புதிதாக அமைக்கப்பட்ட ஓசோன் ஜெனரேட்டர்களின் செயல்பாட்டைக் கண்காணிப்பதும், தண்ணீர் குழாய்களைக் கவனித்துக் கொள்ளவதும் அவரது மற்றைய பணிகள். 

சம்பவம் நடந்த நாளன்று அவர் குடிநீர் குழாய்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக முதன்மையான தொட்டியின்மேல் ஏறியுள்ளார். அவரைக் காணாமல் பணியாளர்கள் தேடியபோது, பரிசோதனைக்காக நீர் மாதிரிகளைச் சேகரிக்கும் கண்ணாடிக் குடுவைகள் தொட்டியின் மேல் உடைந்து சிதறிக் கிடப்பதைக் கண்டுள்ளனர். தொட்டியின் மூடியில் தாழ்பாள்கள் திறந்தும், போல்டுகள் இல்லாமலும் இருந்துள்ளது. இவற்றைக் கவனித்ததும் மீட்புப் பணியாளர்களை வரவழைத்துத் தேடியுள்ளனர். தொட்டியின் அடியில் அவரது ரேடியோ கருவியும், குறிப்பேடும் கிடந்துள்ளது. உடலைக் காணவில்லை. அது நீரின் வேகத்தில் அடுத்திருந்த தொட்டிக்குச் சென்றுவிட்டது. அங்காராவுடன் பணிபுரிந்தவர்களின் வாக்குமூலப்படி கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது அவர்தான் மற்றவர்களைவிட அதிக ஈடுபாட்டுடன் இருந்ததாகத் தெரிகிறது.

அவரது கணவரிடம் விசாரித்துள்ளார்கள். அங்காரா இறப்பதற்கு ஒரு வாரத்திற்குமுன் அதீதக் குளோரின் பயன்பாட்டால் குடிநீர் பிங்க் நிறத்தில் மாறிவிட்டதாகவும் அதனால்தான் அந்த முறையை மாற்றுவதற்காக அதிகம் முனைந்ததாகவும் கூறியுள்ளார்.

தி ரிப்பில் எஃபக்ட் (The Ripple Effect: Fate of freshwater in the 21st century) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் அலெக்ஸ் ப்ருடோம் இந்தக் கொலைவழக்கு சம்பந்தமாக அவர் எதிர்கொண்ட ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளார். அவரது காரை எடுப்பதற்காகப் பார்க்கிங் லாட்டிற்குச் சென்றபோது அங்கு நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த மாஃபியா குழுக்கள் பேசிக் கொண்டிருந்தனர். அங்காராவின் செயல்பாடுகள் அவர்களை எந்தளவிற்குப் பாதித்தன என்பதைப் பற்றியும் அது இனியில்லாததைப் பற்றியும் அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார். 

நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குளோரின் சப்ளையைச் செய்துகொண்டிருந்தது அந்த மாஃபியாக் குழுக்களைச் சார்ந்தவர்களே. அங்காரா தனது முயற்சியின் மூலமாக குளோரின் பயன்பாட்டை நிறுத்திவிட்டு அதைவிடச் சிறந்த நடைமுறைக்குக் கொண்டுசென்றது அவர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. அங்காரா குளோரின் பயன்பாட்டை நிறுத்தியதற்குக் காரணம், அது நீரின் தரத்தைச் சரிசெய்வதற்குப் பதிலாக பாதிக்கத் தொடங்கியுள்ளது. அத்தோடு அப்பகுதி மக்களும் அரசாங்க நீரைவிட அதிகமாகத் தனியார் குடிநீரைச் சார்ந்திருப்பதற்கும் இதுவே காரணம். அதனால் குறைவான செலவில் தரமான குடிநீரை வழங்குவதற்கான முறையைப் பரிந்துரைத்துள்ளார். இதுபோன்ற பிரச்னைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதைவிட அதைவிட எளிமையான, தரமான முறைக்கே மாறிவிடுவதை உசிதமாக அவர் கருதியுள்ளார்.

ரிப்பிள் எஃபெக்ட் (Ripple Effect)

அங்காராவின் மேற்சொன்ன செயல்கள் அப்பகுதியில் தண்ணீரில் வருமானம் கண்டுகொண்டிருந்த மாஃபியா குழுக்களைப் பாதித்துள்ளது. ஆகவே அவர்கள் இதைச் செய்திருக்கலாம். அதே சமயம் அவர்கள்தான் கொன்றிருக்க வேண்டுமென்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. அதனால், மேற்கூறிய அனைத்துமே நடந்த சம்பவங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளோடு தொடர்புடையவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை வைத்து உருவான சந்தேகங்களாகவே குற்றவியல் கோட்பாடுகளாகவே நின்றுவிட்டன. அந்தச் சுத்திகரிப்பு நிலையம் வெளியாட்கள் யாராலும் நுழையாதபடி பாதுகாப்பானது. எனவே, அதற்குள் பணிபுரியும் யாரேனும்தான் கொன்றிருக்க முடியுமென்ற கண்ணோட்டத்தில் காவல்துறை விசாரித்தனர். நடந்து 13 ஆண்டுகள் கழிந்த நிலையில் இதுவரையில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவம் தண்ணீர் மீதான வியாபாரப் பார்வையின் பிரம்மாண்டமான விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு உதாரணம் மட்டுமே. அமெரிக்க மாகாணங்களில் தண்ணீர் வியாபாரமாகி வருமானமாக்கப் பட்டுப் பல வருடங்களாகிவிட்டது. அங்கு மக்களுக்கான நீர் விநியோகம் அரசின் கைகளிலிருந்தாலும், அங்கிருக்கும் தனியார் தண்ணீர் நிறுவனங்கள்தான் பெரும்பாலான குடிநீர் சேவையைச் செய்துகொண்டிருக்கிறது. இந்த நிலை மாறிவிடாமல் பார்த்துக்கொள்வதில் அவர்கள் மறைமுகமாகப் பெருஞ்சிரத்தையோடு பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். 

உதாரணமாக, கலிஃபோர்னிய மாகாணத்தில் நெஸ்ட்லே (Nestle)) என்ற தண்ணீர் நிறுவனம் அங்கு பாயும் சாக்ரமெண்டோ (River Sacramento) என்ற நதியிலிருந்து அதிகமான நீரை உறிஞ்சி மினரல் வாட்டராகச் சந்தைகளில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்நதியிலிருந்து மட்டும் நாளொன்றுக்கு அவர்கள் 17000 லிட்டர் தண்ணீர் எடுக்கிறார்கள். அதற்கு அவர்கள் செலுத்தவேண்டிய தொகையில் 65% மட்டுமே செலுத்துகிறார்கள். மீதம் தண்ணீர் சட்டவிரோதமாக அவர்களால் திருடப்படுகிறது.

நெஸ்ட்லே நிறுவனம் சாக்ரமெண்டோ நதியில் நீர் எடுப்பதற்கான ஒப்பந்தம் 1988-ம் ஆண்டோடு முடிவடைந்துவிட்டது. இருந்தும் அவர்கள் அந்நதியிலிருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அப்பகுதி நிர்வாகிகளும் அவர்களிடம் கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கண்டித்தும் நிர்வாகத்தின் ஊழல்களைக் களையவேண்டுமென்றும் அப்பகுதி சமூக, சூழலிய ஆர்வலர்களும் மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே நீர் பற்றாக்குறையால் திண்டாடிக் கொண்டிருக்கும் கலிஃபோர்னிய மக்களுக்கு மாகாண நிர்வாகம் அளந்துதான் நீரை விநியோகித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களது நீரையே எடுத்து அவர்களுக்கே விலைக்குக் கொடுத்து நெஸ்ட்லே நிறுவனம் லாபத்தால் கொழுத்துக் கொண்டிருக்கிறது.

கலிஃபோர்னியா மாகாணத்தின் தண்ணீர்ப் பஞ்சம் அங்குள்ள மக்களை அடுத்த சில ஆண்டுகளில் கேப் டவுனின் ஜீரோ டே நிலைமைக்குக் கொண்டு செல்லலாமென்ற சூழலில் உள்ளது. இந்நிலையில் அவர்களுக்கான தண்ணீர் விநியோகத்திற்கு சாக்ரமெண்டோ நதியிலிருந்து 7-10% மட்டுமே எடுக்கப்படுகிறது. ஆனால், 70% நீரை நெஸ்ட்லே நிறுவனம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்மூலம் அவர்கள் உற்பத்தி செய்யும் மினரல் வாட்டர் பாட்டில்களையே மக்கள் வேறு வழியின்றி வாங்கவேண்டிய நிலைக்குச் சென்று கொண்டுள்ளனர். நெஸ்ட்லே நிறுவனம் அந்த ஒரு நதியிலுருந்து அதிகபட்சமாக 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தேவைக்குத் தகுந்த நீரின்றி பற்றாகுறையில் தவித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன. இது நிச்சயமாகப் பொருளாதார வன்முறையாகவே பார்க்கப்பட வேண்டும். ஆனால், கலிஃபோர்னியா மாகாணம் அவர்களுக்கான அனுமதியை வழங்கியதோடு அதற்கு ஆதரவும் தருகிறது.

இந்தப் பிரச்னை மற்றுமொரு சிக்கலுக்கும் வழிவகுக்கும். அமெரிக்காவின் மொத்த உணவு உற்பத்தியில் குறிப்பிடக்கூடிய பங்கு வகிக்கிறார்கள் கலிஃபோர்னிய விவசாயிகள். கடந்த 900 ஆண்டுகளில் பார்த்திராத அளவிற்குக் கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். விலைகொடுத்து வாங்கமுடியாத காரணத்தால் அவர்களே சட்டவிரோதமாகப் போர்வெல் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரைப் பயன்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவலம் என்னவென்றால், அவர்களும் தற்போது தண்ணீர்த் திருடர்களாகவே பார்க்கப்பட்டுக் கண்டிக்கவும் தண்டிக்கவும் படுக்கிறார்கள்.

கலிஃபோர்னிய மக்களின் பற்றாக்குறையைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது அந்த ஒரு நிறுவனம் மட்டுமில்லை. தண்ணீர் விநியோகக் குழாய்களைத் துளைத்துத் திருடுகிறது சில மாஃபியா கும்பல்கள். தேவைக்குக் குறைந்த அளவையே நிர்வாகம் விநியோகிக்கிறது. அதிலும் பாதியை இவர்கள் திருடிவிடுவதால். போதுமான நீரின்றி மக்கள் அவதிப்படுகிறார்கள். அச்சமயத்தில் இவர்கள் உள்ளே புகுந்து திருடிய நீரை அதிக விலைக்கு விற்றுக் காசு பார்க்கிறார்கள். இதுபோன்ற சிலரை மாகாண நிர்வாகிகள் கையும் களவுமாகப் பிடித்த நிகழ்வுகளுமுண்டு. அதற்காகவே 24 மணிநேரமும் உஷார் நிலையிலிருக்கும் தனிப்படையும் அமைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைவிட கலிஃபோர்னியாவின் நிறுவனங்கள் எடுக்கும் தண்ணீரைப் பாதுகாப்பதே முதலும் முக்கியமுமான தேவை. அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். அல்லது தவிர்த்துவிட்டார்கள்.

Photo Courtesy: Ed Joyce

அமெரிக்காவின் தண்ணீர் சார்ந்த குற்றங்கள் நியூ ஜெர்ஸி, கலிஃபோர்னியா என்ற இரன்டு மாகாணங்களில் மட்டும் நடப்பதன்று. அந்நாட்டின் வடகிழக்குப் பகுதிகளிலும், மேற்குப் பகுதிகளிலும் அதிகமாகவே நடந்துகொண்டிருக்கின்றன. உதாரணமாக, கிழக்குக் கடற்கரை மாகாணமான மேரிலாந்தில் (Maryland) வாஷிங்டன் புறநகர் மேலாண்மை வாரியப் புள்ளிவிவரத்தின்படி தங்கள் விநியோகக் குழாய்களை உடைத்துத் திருடும் மாஃபியாக்களிடம் வருடத்திற்குச் சுமார் 548,884,708 லிட்டர் தண்ணீரை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். கீதா அங்காரா கொலைசெய்யப்பட்ட நியூ ஜெர்ஸியிலும் தண்ணீர் கொள்ளைகள் நடந்துகொண்டு தானிருக்கின்றன. அரசு விநியோகிக்கும் குடிநீர் தரமான முறையிலிருந்தால் அவர்களின் தண்ணீர் வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடும். ஆனால், அரசுக் குடிநீர் விநியோகம் தரமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே கீதா அங்காரா முயற்சி செய்தார்.

தண்ணீர் உலகெங்கும் செல்வத்தைக் கொட்டிக் கொடுக்கும் வியாபாரமாக மாறிக்கொண்டிருக்கிறது. பொலிவியாவின் மொத்த நீரையும் பெக்டெல் நிறுவனம் தனியார் மயமாக்கியதும் அதனால் விளைந்த மக்கள் புரட்சியுமே நம்முன் இருக்கும் வரலாற்று ஆதாரங்கள்.
அனைவருக்குமான சமமான பங்கீட்டு முறையை நிலைநிறுத்துவதே தண்ணீர் மேலாண்மையின் முக்கியமான பணி. அதற்காகக் குழாய்களை முறையாகப் பராமரிக்கவேண்டிய நிர்வாகங்கள் அதை மிகப் பழமையானதாக அனைவரும் எளிதில் சேதப்படுத்தும் விதமாக வைத்திருக்கிறார்கள். அத்தோடு, நிறுவனங்களின் அதீதத் தண்ணீர் சுரண்டலைக் கண்டுகொள்ளாமலும் இருப்பதன் மூலம் அரசுகளும் மறைமுகமாகத் தனியாரின் "தண்ணீரை லாபமாக்கும்" கொள்கையை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தைப் பொருத்தவரை மக்களின் தேவையையும் பொருளின் பற்றாக்குறையையும் வைத்தே அந்தப் பொருளின் விலை அதிகமாவதும் குறைவதும் நிர்ணயிக்கப்படுகிறது. அனைத்தையுமே பணமாக, முதலீடாக, லாபமாகப் பார்க்கும் இத்தகைய முதலாளித்துவச் சிந்தனை பூமியின் அடிப்படை உயிராதாரமான தண்ணீரையும் அதே பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஓரிடத்தில் தண்ணீர் தீர்ந்துவிட்டால் அவர்கள் அடுத்த பகுதியைச் சுரண்டச் சென்றுவிடுவார்கள். ஆனால், அங்கு வாழும் மக்களின் நிலை?

- தொடரும்