Published:Updated:

பிளாஸ்டிக் தடையை மகாராஷ்டிரா மக்களால் சமாளிக்க முடிகிறதா, கள நிலவரம் என்ன?

பிளாஸ்டிக் தடையை மகாராஷ்டிரா மக்களால் சமாளிக்க முடிகிறதா, கள நிலவரம் என்ன?
பிளாஸ்டிக் தடையை மகாராஷ்டிரா மக்களால் சமாளிக்க முடிகிறதா, கள நிலவரம் என்ன?

மகாராஷ்டிராவின் பிளாஸ்டிக் தடைச் சட்டம் பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்வினைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதிலிருக்கும் தடைகளைப் புரிந்து அதற்குத் தகுந்தவாறான வழிமுறைகளைக் கண்டறியவேண்டும்.

ஜூன் 23 முதல், மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திலிருக்கும் மகாராஷ்டிரா மாநிலம் ஒற்றைப் பயன்பாடு உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக்குகளையும் தடைசெய்தது. தடையை மீறிப் பயன்படுத்துபவர்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஆரம்பகட்டமாக மக்கள் கைப்பிடி வைத்த, கைப்பிடியில்லாத என்று எந்த வகை பிளாஸ்டிக் பைகளையும் பயன்படுத்துவதில்லை. கடைகளிலும் பாலிதீன் பைகளை தவிர்த்துவிட்டுக் காகிதங்களிலேயே பேக்கிங் செய்து தருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் இதற்கான முன்னறிவிப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஜூன் 23 முதல் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருள்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் அவர்களிடமிருக்கும் பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்திவிட்டு, உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் அதற்கான மாற்றை முன்வைக்கவேண்டும். அந்த மாற்று பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்குமாறு இருந்திடவேண்டும். சூழலியலாளர்கள் அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்றனர். பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் இது பிற்போக்குத்தனமான திட்டமென விமர்சித்தனர். பிளாஸ்டிக்கின் அதீதப் பயன்பாட்டையும் மீறி இந்தத் தடைச்சட்டம் சாத்தியமாகுமா என்ற கேள்வி அனைவரிடமும் தோன்றியது. ஆனால், அதன் தொடக்கமாக அம்மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை மக்கள் முற்றிலுமாகத் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர். எங்கேனும் ஒருசிலர் பயன்படுத்தினால் அபராதத்துக்கு ஆளாகின்றனர்.

இதனால் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் பெருமளவில் பாதிக்கப்படுமென்று ஆரூடம் சொல்லப்பட்டது. பெரும்பாலான மக்கள் வேலையிழக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகலாம். அதனால் வெளிப்படையாக பிளாஸ்டிக் தடையில் தளர்வுகளைச் செய்யாவிட்டாலும், முற்றிலுமாக அனைத்து பிளாஸ்டிக் பயன்பாடுகளையும் தடைசெய்யவில்லை. முதற்கட்டமாக பிளாஸ்டிக் பைகளையும், பாலிதீன் பேக்கேஜ் ஷீட்டுகளையும் தவிர்த்துள்ளனர். அவற்றைப் பயன்படுத்துவதை மக்களும் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர். இவற்றுக்கு மாற்றாகக் கடைகளிலும் சந்தைகளிலும் காகிதங்களில் சுருட்டிக் கொடுப்பது, காகிதப் பைகளில் வழங்குவது, 2 ரூபாய்க்குத் துணிப் பைகளை வழங்குவதென்று மாறிவருகின்றனர். மக்களும் தாங்களே கையோடு பைகளைக் கொண்டுசெல்லவும் பழகிக் கொண்டுவருகின்றனர்.

பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்றினை எளிமையாகக் கண்டடைந்துவிடலாம். அதுவே பிளாஸ்டிக் தட்டுகள், ஸ்பூன்கள், பிளாஸ்டிக் பேக்கிங் ஷீட்டுகள் போன்றவற்றிற்கான மாற்று அவ்வளவு சுலபமல்ல. பிளாஸ்டிக் வணிகர்கள் சூழலியல் பாதிப்புகளை விளைவிக்காத மக்கக்கூடிய பொருள்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கின்றனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட அந்த வகை ஸ்பூன் 2 ரூபாய். பிளாஸ்டிக் 30 பைசா. பிளாஸ்டிக் தட்டு 50 பைசா, அதுவே மக்கக்கூடிய சீனத் தட்டுகள் 3 ரூபாய். பாக்கு மரப் பொருள்களின் உற்பத்தி இந்தியாவில் போதுமான அளவு இல்லாததால் அதை அதிகளவில் மகாராஷ்டிர மாநிலம் சீனாவிடமிருந்து உற்பத்தி செய்துவருகிறது.

இந்த விலை எளிய மக்களுக்குச் சற்று அதிகம்தான். இருந்தாலும் அதீதப் பயன்பாடு அதீத உற்பத்திக்கும், அதுவே விலை குறைவதற்கும் வழிவகுக்குமென்று ஆர்வலர்களால் கணிக்கப்படுகின்றது. எந்தவொரு முயற்சியும் தொடக்கத்தில் கடினமாகவே இருக்கும். அதை அரசாங்கம் முன்னெடுக்கும் விதமும் கையாளும் பக்குவமுமே அத்திட்டத்தின் நன்மையை மக்களிடத்தில் கொண்டுசேர்க்கும் ஆயுதங்கள். அதை மகாராஷ்டிர அரசும், அரசு அதிகாரிகளும் எப்படிக் கையாளுகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பெரும்பாலான வணிகர்களும், பேக்கேஜிங் பொருள்களைத் தயாரிப்பவர்களும் இதுபோன்ற சூழலியலுக்குக் கேடுவிளைவிக்காத பொருள்களை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் எதிர்வினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த முடிவால் சில உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு எந்த முதலீடுகளையும் மகாராஷ்டிராவில் செய்யக் கூடாதென்று முடிவெடுத்துள்ளனர். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகச் சீனாவிலிருந்து தற்போது இறக்குமதி செய்யப்படும் பொருள்களால் அவர்கள் 15,000 கோடி ரூபாய் வரை லாபமடைவார்களென்றும் அதே அளவு இந்திய பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் நஷ்டத்தைச் சந்திக்குமென்று பேக்கேஜிங் சார்ந்த தொழிற்சாலை மற்றும் வணிகர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர். இதன்மூலம் முன்னேறப் போவது இந்தியப் பொருளாதாரமல்ல, சீனப் பொருளாதாரம் தானென்றும் அவர்கள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலைகள் அமைக்கப்படாதவரை பிளாஸ்டிக் மாசுபாட்டினை முற்றிலுமாக ஒழிக்கமுடியாது என்பதே அவர்களின் முன்னெடுப்பாக உள்ளது.

அவர்களின் கூற்றுப்படி பார்த்தாலும், பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலைகள் சீனாவில் 600 இடங்களில் உள்ளன. அதுவே இந்தியாவில் ஆறே இடங்களில்தாம் உள்ளன. இந்த முரண்பாட்டினையும் இந்தியா சரிசெய்து கொள்ளவேண்டும். மகாராஷ்டிர அரசும் அதற்கான தீர்வாக பிளாஸ்டிக் கழிவுகளை மக்களிடமிருந்து முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கு சில வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. மக்களால் வாங்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாக்கெட்டுகளைத் திரும்பக் கொடுத்து அதற்கான விலையில் சிறு பகுதியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைத் திரும்பத் தருவோருக்கு ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் வீதம் தருகிறார்கள். அந்தத் திட்டத்தில் சில நடைமுறைச் சிக்கல்களும் காணப்படுகின்றன. திரும்பப் பெறப்படும் பிளாஸ்டிக்குகளை என்ன செய்வது யாரிடம் கொடுப்பதென்ற கேள்விகளை வியாபாரிகள் கேட்கிறார்கள். இதற்குத் தீர்வாகச் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான ஆலைகளை அம்மாநில அரசு நிறுவவேண்டும்.

பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் இயந்திரம்

பிளாஸ்டிக் தடைச் சட்டம் குறித்து பூனேவில் சில ஆண்டுகளாக வசித்து வரும் தமிழக இளைஞர் திரு.நவீன் அவர்களை விசாரித்தோம். ``அனைவருக்கும் இது புதிதாகத்தான் உள்ளது. சந்தைகளில்கூடக் காகிதங்களிலேயே மடித்துக் கொடுக்கிறார்கள். யாரும் பாலிதீன் பைகளைப் பயன்படுத்துவதில்லை. சூப்பர் மார்க்கெட்களிலும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளையே பயன்படுத்துகிறார்கள். நகராட்சி நிர்வாகமும் இதுவரை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கே சேகரித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்."

மஹாராஷ்டிராவின் பிளாஸ்டிக் தடைச் சட்டம் பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்வினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதிலிருக்கும் தடைகளைப் புரிந்து அதற்குத் தகுந்தவாறான வழிமுறைகளைக் கண்டறியவேண்டும். அதுவே ஜனவரி 1, 2019 முதல் தமிழகத்தில் அமல்படுத்தவிருக்கும் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தமுடியும். தமிழக அரசும் முன்னதாகவே பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலைகள் நிறுவுவதற்கான வசதிகளைச் செய்யவேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு