Published:Updated:

``டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு!” - கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்டுமா?

டிமிட்ரி போர்கப்பல் மூழ்கியபோது அக்கப்பலுக்குள் 200 டன் அளவிற்குத் தங்க நாணயங்களும், தங்கக் கட்டிகளும் 5,500 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதன் தற்போதைய மதிப்பு 133 பில்லியன் டாலர் என்றும் வதந்திகள் நூறு ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

``டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு!” - கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்டுமா?
``டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு!” - கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்டுமா?

புதையல்களைத் தேடி பயணிக்கும் குழுக்களையும் நபர்களையும் வரலாற்றுச் சம்பவங்களாகவும் கற்பனைக் கதைகளாகவும் நிறையவே கேள்விப்பட்டிருப்போம். அதில், புதையல் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்பது மர்மமாகவே இருக்கும். இப்போதைய டிஜிட்டல் யுகத்திலும் புதையல்களைத் தேடி பலரும் பயணித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். கடலுக்கடியிலும் புதையல் தேடிச் சென்ற கதைதான் இது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கடியில் மூழ்கிப் போன ரஷ்ய போர்க்கப்பலை கடந்தவாரம் கண்டுபிடித்துள்ளது ஷினைல் குரூப் எனும் தென்கொரிய நிறுவனம். ”போர்க்கப்பலுக்கும் புதையலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்கிறீர்களா? நூறு ஆண்டுகளுக்குப் பின் அதனை ஏன் தேடி கண்டுபிடிக்க வேண்டும்?” என உங்களுக்குத் தோன்றும் கேள்விகளுக்கு ஒரே பதில் தங்கம். போர்க்கப்பலில் மதிப்பிலடங்கா தங்கம் இருக்கிறதாம். 

5800 டன் எடையுடைய அந்த ரஷ்ய போர்க்கப்பலின் பெயர் டிமிட்ரி டன்ஸ்கோ (Dimitri Donskoii). நல்ல தரமான கவசமுடைய போர்க்கப்பலாக அதனை உருவாக்கியிருந்தனர். 1905 ஆம் ஆண்டு நடைபெற்ற சுஷிமா போரில் (Battle of Tsushima) எதிரிகளின் தாக்குதலில் ஏற்பட்ட அதிகமான சேதத்தால் மூழ்கியது. அப்போதைய ஜப்பானிய பேரரசுக்கும் ரஷ்ய பேரரசுக்கும் இடையே நடைபெற்ற போர்தான் அது. மூழ்கிய இந்த போர்க்கப்பலானது கடந்த வாரம் ஜூலை 15 ஆம் தேதி கொரியா தீபகற்பத்தின் கிழக்கே 75 மைல் (120 கி.மீ) தொலைவில் உள்ள தென் கொரிய தீவு உல்லுங்குடோவின்(Ulleungdo) கடற்கரையிலிருந்து 0.8 மைல் (1.3 கிமீ) தொலைவில் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஷினைல் குரூப்( Shinil Group) என்று அழைக்கப்படும் தென்கொரிய காப்புக் குழு தலைமையிலான ஒரு சர்வதேச கூட்டமைப்பு மூலம் இந்தத் தேடுதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. கடலுக்கடியில் 1400 அடி ஆழத்தில் ரஷ்ய போர்க்கப்பலைக் கண்டுபிடித்துள்ளனர். 

டிமிட்ரி டன்ஸ்கோ, கிபி 1881 ஆம் ஆண்டு கட்டமைக்கத் தொடங்கி 1885 ஆம் ஆண்டு முதன்முறையாக கடலில் செலுத்தப்பட்டது. ரூசோ - ஜப்பானிய போரில் முக்கிய பங்கு வகித்தது. தென்கொரியத் தீவான உல்லுங்குடோவிற்கு வந்ததும் கப்பலில் இருந்த அனைவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்து நீந்திவிட்டனர். அந்தப் பிரம்மாண்ட போர்க்கப்பல் அங்கேயே மூழ்கிப்போனது. அதனுடன் சில மர்மங்களும் மூழ்கி வதந்திகளாக நூற்றாண்டு கடந்தும் அந்த கப்பலைத் தேட வைத்திருக்கிறது. டிமிட்ரி போர்கப்பல் மூழ்கியபோது அக்கப்பலுக்குள் 200 டன் அளவுக்குத் தங்க நாணயங்களும், தங்கக் கட்டிகளும் 5,500 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதன் தற்போதைய மதிப்பு 133 பில்லியன் டாலர் என்றும் வதந்திகள் நூறு ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. 133 பில்லியன் டாலரை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 6 லட்சம் கோடியைத் தாண்டும். இவ்வளவு பெரிய புதையலை எடுக்க பல்வேறு தனியார் அமைப்புகளும், நிறுவனங்களும் முயன்று வந்தன. தற்போது திவாலான நிலைமையில் இருக்கும் டோங்கா கட்டுமான நிறுவனம் 2000களின் தொடக்கத்தில் டிமிட்ரியை மீட்பதற்கான முயற்சிகளை எடுத்தது. ஆனால் வெற்றியடையவில்லை. 

டிமிட்ரி டான்ஸ்கோய் போர்க்கப்பல் 12க்கும் மேற்பட்ட பீரங்கிகள், 500 மாலுமிகள் மற்றும் 1,600 டன் நிலக்கரி ஆகியவற்றைக்  கொண்டு சென்ற, தடிமனான கவசமுடைய கப்பல். எனவே அதில் 200 டன் தங்கத்தை வைத்திருப்பதற்கான இடம் இருந்திருக்கும் என சில வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர். இது தற்போதைய தென்கொரியாவின் மத்திய வங்கியில் இருக்கும் தங்கத்தின் இருப்புகளைவிட இரண்டு மடங்கு அதிகம். ரோபாக்களை கடலின் ஆழத்திற்கு அனுப்பியதன் மூலம் அவை எடுத்த புகைப்படங்களை வைத்தே ரஷ்ய போர்க்கப்பலைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களில் இருந்த போர்க்கப்பல்களில் இருந்த ரஷ்ய எழுத்துக்களும் குறியீடுகளும் அதன் கட்டமைப்பும் டிமிட்ரியை உறுதிப்படுத்தியுள்ளது. சீனா, கனடா மற்றும் இங்கிலாந்தில் இருந்து நிபுணர்கள் இந்த மீட்புக்குழுவில் இணைந்துள்ளனர். கப்பலிலிருந்து அதிகமான புதையலை சேகரிக்கவும் ரஷ்ய அரசுக்கு அதில் பாதியை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர் மீட்புக்குழுவினர். 

இந்தத் திட்டங்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கடலில் இருந்து கப்பலை மீட்பதற்கு முன்பாக தென்கொரிய அரசிடம் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது தென் கொரியாவின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சகம் (South Korea’s Ministry of Maritime Affairs and Fisheries). தென்கொரிய திட்டங்களின்படி விபத்திற்குள்ளான கப்பலை மீட்பதற்கு முன்பு அதில் 10% இழப்பீடாகக் கட்ட வேண்டும். புதையல் இருக்கிறதோ இல்லையோ ஷினைல் குரூப் நிறுவனம் அந்த தொகையினைக் கட்ட வேண்டியது அவசியம். இன்னும் கடலுக்கடியில் போனால்தான் தங்கம் இருக்கிறதா இல்லையா எனத் தெரியும்.. கடலில் மூழ்கிய கப்பல்கள் கிடைப்பது வரலாறு முழுக்க இருக்கிறது. டைட்டானிக் மாதிரியான சம்பவங்கள் உதாரணம். ஆனால் புதையல் என்பதுதான் இதில் ஆச்சரியம்.

தங்கம் லட்சியம்... ஒரு ஹாலிவுட் படம் நிச்சயம்.