Published:Updated:

"லோக்கல் அரசியலில் நங்காஞ்சி ஆற்றை தூர்வாராமல் இருக்கிறார்கள்!" - தவிக்கும் அரவக்குறிச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"லோக்கல் அரசியலில் நங்காஞ்சி ஆற்றை தூர்வாராமல் இருக்கிறார்கள்!" - தவிக்கும் அரவக்குறிச்சி
"லோக்கல் அரசியலில் நங்காஞ்சி ஆற்றை தூர்வாராமல் இருக்கிறார்கள்!" - தவிக்கும் அரவக்குறிச்சி

"லோக்கல் அரசியலில் நங்காஞ்சி ஆற்றை தூர்வாராமல் இருக்கிறார்கள்!" - தவிக்கும் அரவக்குறிச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு நல்லா பெய்ஞ்சு, எல்லா அணைகளும் நிரம்பி தமிழகத்தில் உள்ள எல்லா ஆறுகளிலும் தண்ணீர்வரும் சூழல் ஏற்பட்டிருக்கு. ஆனா, கரூர் மாவட்டத்தில் ரெண்டு பேரூராட்சிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குக் குடிநீர் ஆதாரமாக இருக்கிற நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர்வராத சூழல் ஏற்பட்டிருக்கு. அதற்குக் காரணம் மனிதர்களின் ஆக்கிரமிப்பு, அதிகளவில் கலக்கும் சாக்கடை, சீமைக் கருவேல மரங்கள் மண்டி ஆற்றின் நீரோட்டத்தைத் தடுக்கும் நிலை மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் சிதிலமடைந்தது போன்றவைதாம். 

குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் காவிரி, அமராவதி ஆறுகளின் பாசன வாய்க்கால்களைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. ஆனால், அரசியலில் அவரின் போட்டியாளரான செந்தில்பாலாஜி தொகுதியில் இந்த ஆறு வருவதால், நங்காஞ்சி ஆற்றைத் தூர்வாராமல் அம்போன்னு விட்டுட்டாங்க" என்று பொங்குகிறார்கள் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிவாசிகள்.

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய இரண்டு பேரூராட்சிகள் மற்றும் அவற்றில் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் `மழை பெய்தால்தான் விவசாயம் உண்டு' என்று வானம்பார்த்த மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிகளை உரசியபடிச் செல்லும் நங்காஞ்சி ஆறுதான். ஆனால், இந்த ஆற்றின் கரைகள் மற்றும் தண்ணீர் செல்லும் பாதைகளில் அதீத ஆக்கிரமிப்பு காரணமாக நங்காஞ்சி ஆறு கடுமையாகச் சிதைந்துவிட்டது. அதேபோல் பள்ளப்பட்டி பகுதியில் 2,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசனம் அளித்துவந்த 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைக்கா ஏரியும், பூலாம்வலசுவில் தொடங்கி அரவக்குறிச்சிவரை வந்து, அங்கே நங்காஞ்சி ஆற்றில் கலக்கும் நஞ்காஞ்சி ஓடையும்தான், இந்தப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது என்ன நிலைமை?

இதுபற்றிப் பேசிய அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அரவக்குறிச்சி ஒன்றியத் தலைவர் ஆறுமுகம், ``பத்து வருடங்களுக்கு முன்புவரை இந்த மூன்று நீர்நிலைகளும் எங்க பகுதிக்கு நீர் ஆதாரத்தைக் கொடுத்து வந்தன. நங்காஞ்சி ஆறு

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடுங்கிற கிராமத்துல மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகுது. அங்கே இருந்து திண்டுக்கல் மாவட்டம் எடையக்கோட்டையில் கீழ் இறங்கி, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சின்னு ஓடி, நாகம்பள்ளி அருகே அமராவதி ஆற்றில் கலக்குது. இந்த ஆற்றை நம்பித்தான் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பேரூராட்சிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதி மக்களின் நீர் ஆதாரம் இருந்தது. இந்த ரெண்டு பேரூராட்சிகளிலும் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிரிக்கச் செய்தார்கள். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்திலேயே இந்த ஆற்றின் குறுக்கே அடுத்தடுத்து எட்டுத் தடுப்பணைகள் கட்டப்பட்டதால், இந்த ஆற்றில் தண்ணீர் வருவது குறைந்தது. அதேபோல் நங்காஞ்சி ஆற்றை ஆங்காங்கே கரூர் மாவட்டத்தில் பலர் ஆக்கிரமிப்பு செய்தனர். மனிதக் கழிவுகள், குப்பைகளைப் போடும் இடமாக மாற்றினார்கள். இதனால் ஆறு முழுக்கப் பல கிலோமீட்டர் தூரத்துக்குச் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி தடுப்பணைகள் சிதிலமடைஞ்சு, அவற்றிலிருந்து தண்ணீர் கசியத் தொடங்கியது. மீறி ஆற்றில் தண்ணீர் வந்தால்கூட, தடுப்பணைகளில் உள்ள ஓட்டைகள் வழியே கசிஞ்சுப் போகிறது. இதனால் இந்த இரண்டு பேரூராட்சிப் பகுதிகளிலும் 1,500 அடிக்கு போர் போட்டாலும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது. தடுப்பணைகளில் தண்ணீர் நிற்காமல் கசிஞ்சுப் போவதால், இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை. இப்ப 1700 அடிக்கு போர் போட்டால்தான் தண்ணீர் கிடைக்குது. அதேபோல் பள்ளப்பட்டி பேரூராட்சி நிர்வாகமே நங்காஞ்சி ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவது, ஆற்றின் கரைகளில் பொதுக்கழிப்பறை கட்டுவது, சுடுகாடுகள் அமைப்பதுன்னு ஆற்றை ஆக்கிரமிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

இதனால், இந்த ஆறு முழுவதுமாக உருக்குலைஞ்சுப் போயிடுச்சு. `இந்த ஆற்றில் சாக்கடையைக் கலக்கவிடாமல் செய்து, ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றைத் தூர்வாரி செப்பனிடுவதாக வாக்குறுதி கொடுத்து, ஓட்டுவாங்கி எம்.பி. தேர்தலில் ஜெயித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. ஆனால், அடுத்த எம்.பி. தேர்தலே வரப்போவுது. அவர் சொன்னபடி இந்த ஆற்றைச் சரிபண்ணலை. அதேபோல், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி, அமராவதி ஆறுகளின் கிளை வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களைப் பலகோடி ரூபாயில் தூர் வாருகிறார்கள். இதைக் கண்காணிக்க தனி ஐ.ஏ.எஸ் அதிகாரியையே நியமித்துள்ளார்கள். ஆனால், இரண்டு பேரூராட்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு நீராதாரமாக இருக்கிற நங்காஞ்சி ஆற்றைத் தூர்வார அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், இந்த ஆறு பாயும் அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அமைச்சரின் எதிரணியில் உள்ள செந்தில்பாலாஜி என்பதால்தான். இந்த ஆற்றைச் சீரமைக்காமல் விட்டதால், இந்தமுறை அதிகளவு மழைபெய்தும் எங்க பகுதிக்குத் தண்ணீர்வராத சூழல் ஏற்பட்டிருக்கு. இதை உடனே தூர்வாரலேன்னா, பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் முகமது ஜக்காரியா கூறுகையில், ``அதேபோல் பூலாம்வலசிலிருந்து வரும் நங்காஞ்சி ஓடை அரவக்குறிச்சியில் நங்காஞ்சி ஆற்றில் கலக்கிறது. அரவக்குறிச்சிக்கு மேற்கே இரண்டு கிலோமீட்டருக்கு முன்புவரை நாற்பது அடி அகலத்தில் வரும் அந்த ஓடையானது அதன்பிறகு நாலு அடி அகலமாகச் சுருங்கி விடுகிறது. இதற்குக் காரணம் பலருடைய ஆக்கிரமிப்புதான். தவிர, பெரும்பாலான வீடுகளின் கழிவுநீரும் இந்த ஓடையில் கலக்கிறது. இதனால் ஊர் எல்லைவரை, இந்த ஓடையில் நல்ல தண்ணி வரும். அதன்பிறகு சாக்கடையாகவே பயணிக்கிறது. இது அரசின் வருவாய்த் துறை ஆவணங்களின்படி, நங்காஞ்சி ஓடை என்றும், 40 அடி அகலம் உடையது என்றும்தான் உள்ளது. இதுசம்பந்தமான அத்தனை ஆவணங்களையும் திரட்டி விட்டோம். இந்த ஓடையை மீட்க சட்டப்போராட்டம் நடத்தலாம்ன்னு இருக்கோம். அதேபோல் பள்ளப்பட்டி பேரூராட்சியானது, 50 ஆயிரம் மக்களைக் கொண்ட, தமிழக அளவில் உள்ள பெரிய பேரூராட்சிகளில் ஒன்றாகும். அந்தப் பேரூராட்சிக்குக் குடிதண்ணீர் பஞ்சம் வராமல் பார்த்துக் கொண்டது ஊர் எல்லையில் இருக்கும் குப்பைக்கா ஏரிதான். 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி, கடந்த பத்து வருடங்களுக்கு முன்புவரை பள்ளப்பட்டிக்குக் குடிநீர் ஆதாரமாகவும் இருந்ததோடு, 2000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் பாசனம் அளிக்கும் நீர்நிலையாகவும் இருந்தது. ஆனால், இந்த ஏரியைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பலரும் ஆக்கிரமிப்பு செய்து பிளாட் போட்டு விற்கத் தொடங்கினர். இப்போது 95 சதவிகிதம் ஏரியை முற்றிலுமாக ஆக்கிரமித்து மனைகளாக மாற்றி விற்றுவிட்டார்கள். இதுவும் எல்லா அரசாங்கப் பதிவேடுகளிலும் குப்பைக்கா ஏரின்னுதான் இருக்கு. இதுசம்பந்தமான அத்தனை ஆவணங்களையும் பலரின் மிரட்டலையும் மீறி சேகரித்துவிட்டோம். இப்படி மூன்று நீர்நிலைகளையும் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் 1700 அடிக்கும் கீழே போய் விட்டது. இந்த நிலை தொடர்ந்தால் இந்தப் பகுதியே பாலைவனமாகும் சூழல் ஏற்படும்" என்று எச்சரித்தார்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் பேசினோம். நாம் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்ட அவர், ``இப்போதைக்குக் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ், காவிரி மற்றும் அமராவதி ஆறுகளின் கிளை வாய்க்கால்களைத் தூர் வாரத்தான் நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். நங்காஞ்சி ஆற்றைத் தூர்வார நிதி ஒதுக்கவில்லை. ஒருவேளை அடுத்தமுறை நங்காஞ்சி ஆற்றைத் தூர்வார பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கலாம். அப்போது, நஞ்காஞ்சி ஆறு தூர் வாரப்படும். மற்றபடி, நங்காஞ்சி ஆறு தூர்வாருவதில் எந்த அரசியல் காரணங்களும் இல்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு