Published:Updated:

``கேட்டது 25-ம் தேதி... கிடைத்தது 26-ம் தேதி!” - ஒரே நாளில் அனுமதியளிக்கப்பட்ட 8 வழிச்சாலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``கேட்டது 25-ம் தேதி... கிடைத்தது 26-ம் தேதி!” - ஒரே நாளில் அனுமதியளிக்கப்பட்ட 8 வழிச்சாலை
``கேட்டது 25-ம் தேதி... கிடைத்தது 26-ம் தேதி!” - ஒரே நாளில் அனுமதியளிக்கப்பட்ட 8 வழிச்சாலை

நிலம் கொடுக்கும் விவசாயிகள் பலரும் தங்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். அதில் பெரும்பாலானவை "காவல்துறையினர் தங்களை அச்சுறுத்துவதாகவும் தரக்குறைவாக நடத்துகிறார்கள்" என்பதாகத்தான் இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேலம் எட்டுவழிச் சாலை குறித்து நேற்று 22.7.2018 சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஜனகராஜன், அண்ணா பல்கலைக்கழக நகரக் கட்டமைப்பு பொறியியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சுப்ரமணியன், சட்ட ரீதியிலான விஷயங்கள் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பொறியாளர் சுந்தர்ராஜன் மற்றும் நிலம் கொடுக்கும் விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். 

அக்கூட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பிரச்னைகள், திட்டத்தின் செயலாக்க அறிக்கையில் இருக்கும் அதிகமான பிழைகள், தமிழக அரசின் அராஜக நடவடிக்கைகள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. 

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் பேசும்போது, ``பிப்ரவரி மாதம் 22-ம் தேதி தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. சென்னை - சேலம் இடையே போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும் அதிகமான வாகனங்கள் செல்வதற்காகவும் புதிதாக எட்டுவழிச் சாலை அமைக்க பத்திரிகைச் செய்தி மூலமாக மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதில் ஆச்சர்யமான விஷயம், பிப்ரவரி 25-ம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கேட்டபோது, 26-ம் தேதி மத்திய அரசு உடனடியாக அனுமதி கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் விவசாயம் குறைந்துகொண்டு வரும் சூழலில் தமிழக மக்களுக்கு இத்திட்டம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இது அரசின் அராஜகப் போக்கைத்தான் காட்டுகிறது" என்றார்.

அண்ணா பல்கலைக்கழக நகரக் கட்டமைப்பு பொறியியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சுப்ரமணியன் பேசும்போது, "ஒரு நெடுஞ்சாலை அமைக்க வேண்டுமானால் பொருளாதார ரீதியான ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கை என முறையான இரண்டு ஆய்வுகள் அவசியம். இந்த இரண்டு ஆய்வுகளையும் சட்டப்படி நடத்தியே ஆக வேண்டும். பொருளாதார ரீதியான ஆய்வின்படி எந்தத் திட்டம் எதிர்காலத்தில் முழுமையான பலனைக் கொடுக்கும் என்று ஆராய வேண்டும். எந்த வழித்தடம் சிறந்ததாக இருக்கிறது என்று ஆய்வுகள் நடத்தி, அதில் சிறந்த சாலையைத் தேர்வு செய்ய வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் உடனடியாக ஒரு திட்டத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். முதலீடு செய்யும் 10,000 கோடிக்கு இத்திட்டம் உகந்ததா என்பதைக் கவனிக்க வேண்டும். 10,000 கோடியை வங்கியில் செலுத்தினால் வரும் வட்டி விகிதத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். முக்கியமாக 1988-ம் ஆண்டு கொண்டுவந்த இந்தியன் ரோட் காங்கிரஸ் விதிகளின்படி அமைக்க வேண்டும். இரண்டாவதாகச் சுற்றுச்சூழல் தாக்கீடு ஆய்வு செய்ய வேண்டும். எந்தப் பாதையில் சுற்றுச்சூழலுக்குக் குறைவான பாதிப்புகள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நிலம், நீர், காற்று, காடு, மண் எனப் பல சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வளவு அவசரமாக ஒரு திட்டத்தை ஏன் நிறைவேற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. நெடுஞ்சாலை அமைக்கும்போது அனைத்துச் செயல்முறைகளையும் இந்தியன் ரோட் காங்கிரஸ் விதிகளின்படி அமைக்க வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் இத்திட்டம் கேள்விக்குறியாகத்தான் இருக்குமே தவிர முழுமையடையாது. இத்திட்டத்தைப் பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுகள் விதிகளை மதிக்கவில்லை" என்றார். 

தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஜனகராஜன், "பசுமை வழிச்சாலை என்று எந்த அர்த்தத்தில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதைப் 'புதிரான சாலை' என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய திட்டத்தை நிறைவேற்ற ஏராளமான ஆய்வுகள் செய்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு இத்திட்டத்தை விளக்கியிருக்க வேண்டும். திட்டத்தைப் பற்றிய சாத்தியக்கூறு அறிக்கை (feasibility report) ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு மாவட்டத்தின் தகவல்கள் மட்டுமே இருக்கின்றன. இப்படி வெளியிடப்படுவது சாத்தியக்கூறு அறிக்கை கிடையாது. சாத்தியக்கூறு அறிக்கை என்பது ஒரு திட்டம் உண்மையிலே சாத்தியமா, இதனால் பலன் கிடைக்குமா எனப் பல தகவல்கள் இடம்பெற வேண்டும். அதுபோன்ற எந்தத் தகவல்களும் இத்திட்டத்தில் சொல்லப்படவில்லை. சட்டம் சொல்கிற வகையிலாவது சாலையை அமைக்க இருக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. இது மக்களுக்கான சாலை அல்ல... கார்ப்பரேட்டுகளுக்கான சாலை. விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றுக்கும் நன்மை தருவதாக ஒரு திட்டம் இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று விடுபட்டாலும், அது மொத்த சூழ்நிலையையும் சீர்குலைக்கும். உடனடியாக நிலத்தை எடுத்துக்கொண்டு பணம் கொடுத்தால் என்ன செய்வான். அந்தப் பணம் எவ்வாறு அவனுக்குக் கைகொடுக்கும். நிலம் கொடுக்கும் விவசாயிக்கு நிச்சயமாக மாற்று வாழ்வாதாரம் அமைத்துக் கொடுக்க வேண்டும். முக்கியமாக அவனுக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும். இவை எதையும் பற்றித் தமிழக அரசு கவலை கொள்ளவில்லை.

இந்தியாவில் அதிகமாகக் கட்டப்பட்ட அணைகளால் 1.3 கோடி மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் முழுமையான இழப்பீடு போய்ச்சேரவில்லை. மாற்று இடம் கொடுப்பது என்றால், வேறு ஓர் இடத்தில் கொண்டுபோய் அவர்களை விடுவது அல்ல. அது ஒரு செயல்முறை... இடம் மாறுபவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் நிலையான வாழ்வாதாரத்தை முழுமையாகச் செய்து கொடுக்க வேண்டும். இதுவரைக்கும் செய்து வந்த திட்டத்துக்கும் அதைச் செய்யவில்லை. இனிமேல் வரப்போகும் திட்டங்களுக்கும் செய்வார்களா என்று தெரியாது. நிலம் கையகப்படுத்தும்போது மக்களை உணர்வுபூர்வமாகக் கையாள வேண்டும். ஒரு விவசாயிக்கு தெரிந்தது விவசாயம் மட்டும்தான். அதைச் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. இந்தச் சாலையால் விவசாயியின் வாழ்வாதாரமே முழுமையாகப் பாதிக்கப்படப்போகிறது. இதுதவிர, சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும்" என்றார். 

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் பேசும்போது, "இத்திட்டத்துக்கான கொள்கைகளை எங்கிருந்து வகுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி சூழலியலைப் பாதுகாப்பது அரசின் முக்கியமான கடமையாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த 20 வருடங்களில் இங்கு செயல்படுத்தப்பட்ட விஷயங்கள் எதிலும் அது பின்பற்றப்படவில்லை. உலக மயமாக்கலுக்குப் பின்னால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாமே அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாகவே இருக்கிறது. உலகமயமாக்கல் ஆரம்பித்து இப்போது 25 வருடங்களாகிவிட்டன. இப்போதுதான் அதன் பாதிப்பை உணரத் தொடங்கியிருக்கிறோம். இது பன்னாட்டு நிறுவனங்களின் உயர்வுக்காக மட்டும்தான். இனி இத்திட்டம் மூலம் அமைக்கப்படும் சாலைகளைத்  துறைமுகத்துடனும் விமான நிலையத்துடனும் இணைக்கப்போகிறார்கள். நாட்டின் உற்பத்தி பெருகினால் நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றலாம். நம்முடைய சூழலை மாசுபடுத்தாத தொழில்கள் வரப்போகின்றனவா என்று கேட்டால், அதுவும் கிடையாது. இங்கே இருக்கும் இயற்கை வளங்களை எடுத்து முழுமையான பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்து கொள்கிறார்கள். இதனால் உள்நாடு பயனடையப் போகிறதா என்று கேட்டால் கிடையாது. அதிக உற்பத்தியால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் மட்டும்தான் நமக்கே தவிர, அதிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் நமக்குக் கிடைக்காது. முதலில் இத்திட்டம் மக்களுக்கானதா என்பதை ஆய்வு செய்து, மக்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். பொதுக் கருத்துக்கணிப்பு நடத்தி 80 சதவிகித மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அத்திட்டம் நிறைவேற்ற வேண்டும். நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தையும் இழப்பீடு கொடுப்பதற்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தையும் கையாள்கிறார்கள். இதுதான் இப்போதுள்ள பிரச்னைகளுக்கு முக்கியமான காரணம். இதற்கான காரணங்களைக் காட்டித்தான் நாங்கள் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம். இப்படி முரண்பட்ட சட்டங்களின் இடையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்றார். 

இதையடுத்து நிலம் கொடுக்கும் விவசாயிகள் பலரும் தங்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். அதில் பெரும்பாலானவை, "காவல்துறையினர் தங்களை அச்சுறுத்துவதாகவும் தரக்குறைவாக நடத்துகிறார்கள்" என்பதாகத்தான் இருந்தது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு